
நடந்து கடந்த தருணங்களின் ஒற்றையடிப் பாதை..
ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்
நேற்றைய சத்தியங்களை
நினைவு கூறும் வார்த்தைகளைப் பதட்டத்துடன்
உனது விரல்கள் நெசவு செய்கிறது
திட்டமிட்டு வைத்திருந்த கனவுகளின்
அத்தனை ஜன்னல்களையும் திறந்து விடுகிறாய்
தும்மலுறச் செய்யும் காட்சிகள் மொத்தமும்
புழுங்கிச் சுழல்கிறது
வெளியேறும் ப்ரியமில்லாமல்
நடந்து கடந்த தருணங்களின்
ஒற்றையடிப் பாதையில்
நீயுமற்று நானுமற்று
வெகு காலமாகக் காத்திருக்கிறது
கால் தடங்கள்.
வரைபடம் கொண்டு வா..
இன்னுமொரு பயணம் போவோம்
இறுதியாக..
மலைச் சரிவொன்றில்
வேகமாக இறங்குவதையோ
மலை உச்சியிலிருந்து
எடையற்று உடல் வீழ்வதையோ
இந்தக் கவிதையில் எப்படிச் சொல்வது
வாழப் பழகிவிட்டதாக நம்பும்
நகர நெருக்கடியில் என்னிடம்
மலையுமில்லை உச்சியுமில்லை
இறுதியாக
நீ பரிசளித்த
ஒரு துயரத்தைத் தவிர
13வது குறிப்பு
உனது அழகைப் பற்றிய துண்டுக் குறிப்புகளை
உனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்
நேரில் சந்தித்தபோது சொன்னாய்
பட்டியலில் இடம்பெற்றிருந்த
13வது குறிப்பு
மிகவும் பிடித்தமானதென்று
ஓர் அடையாளத்துக்காக சுழியிடப்படும் எண்கள்
வழிபாட்டுக்குரிய கடவுளாக மாறுவதை
எந்த நூற்றாண்டிலும் நிறுத்த முடிவதில்லை
எனது வருகைக்குரிய குறிப்பு
வெகு நேரமாய் காத்திருக்கிறேன்
எனது வருகைக்குரிய
குறிப்பை
உனக்குத் தெரியப்படுத்தும் மனமற்று
வெறுமனே காத்திருக்க மட்டுமே
போடப்பட்டிருக்கும்
இந்த நாற்காலிகளைப் பிடித்திருக்கிறது
ஒரு வார்த்தை
ஒரு சமாதானத்துக்காக என்னை அழைத்திருந்தாய்
அச் சமரசத்துக்குரிய எல்லா
ஏற்பாடுகளுடன் காத்திருந்தாய்
எல்லாம்
ஒரு வழியாக முடிந்து
பரஸ்பரம் கோப்பையை உயர்த்தி
'சியர்ஸ்' சொன்னபோது
ஓர் அர்த்தமற்ற வார்த்தை தெறித்துத்
துள்ளியது நம் மேஜையில்