முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
2ஜி ஊழல்: சிதம்பரத்திற்கு த் தற்காலிக ஆறுதல், தி.மு.க.வின் அடங்காத கோபம்
மாயா
மெரினா ( திரை விமர்சனம்)
வித்யாசாகர்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (16) -
ராஜ்சிவா
செகாவின் 15 கதைகளும் தமிழ்ச்சூழலில் வாசக பிரசுரமும்
ஆர்.அபிலாஷ்
வெற்றிலைக்குறிப்புகள்
யா. பிலால் ராஜா
கவிதை
பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கோப்பை மழை இரவு..
இளங்கோ
காயம் ஒருநாள் காயும்
ராஜா
சிட்டுக் குருவியும் நானும்
ராஜ்சிவா
வீட்டுப் பூனை
ஐயப்பன் கிருஷ்ணன்
முத்தத்திற்குப் பின்பும் முத்தம்
ஆறுமுகம் முருகேசன்..
பாபி டால்
தனுஷ்
கனவுக்காரன்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
மௌனமாய் கடத்தப்படும் ரகசியத்தின் கால்கள்...
தேனு
இறுகப்பற்றியிருக்கிறேன்
ராம்ப்ரசாத்
எதுவும்
ரா.நாகப்பன்
சிறுகதை
அவனும் மனிதன்தான்
சந்தியா கிரிதர்
பொது
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (16) -
ராஜ்சிவாஇந்தத் தொடரை வாசித்து வரும் பலர், 'இப்படியும் இருக்குமா?' என்ற தங்கள் ஆச்சரியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த தொடரை வாசித்த ஒரு நண்பர், "இது நிறையக் கண் திறப்பைத் தருகிறது" என்றார். அவர் இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும், 'கண் திறப்பு' என்பதற்கும், இன்று நான் எழுதும் தொடரின் இந்தப் பகுதிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. கடைசித் தொடரில் நான் 'மாயன்களுக்கும், மேசனிக்ஸுக்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் வருகிறது என்று சொல்லி முடித்திருந்தேன். அந்தச் சம்பந்தமே ஒரு 'கண் திறப்பில்தான்' ஆரம்பமாகிறது என்றால், என் நண்பர் சொன்னது, என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு மேலும் கண் திறப்பைப் பற்றிச் சொல்லாமல் போனால் சட்டென்று மூடிவிட்டு ஓடிவிடுவீர்கள். எனவே அதைச் சொல்கிறேன்.

மேசனிக்ஸின் மிக முக்கியமான அடையாளம் (Symbol) என்பது, ஒரு பிரமிட்டின் உச்சியில், விழித்திருக்கும் ஒற்றைக் கண்தான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக வளர்ந்தது இந்த மேசனிக்ஸ் அமைப்பு. ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்குமே சம்பந்தம் இல்லாதது பிரமிட். உலகில், பிரமிட் என்பது விசேசமாக உணரப்பட்டது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று எகிப்து மற்றது மாயன்களின் பிரதேசம். அதிலும் குறிப்பாக, நான் முன்னர் சொல்லியிருந்த 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டில், 13 என்னும் இலக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் ஷிசேன் இட்ஷா, பூமியின் ஆரம்ப வரலாற்றை அப்படியே சொல்கிறது என்கிறார்கள். அதற்கமையவே அது கட்டப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பிரமிட்டில் உள்ள ஒன்பது அடுக்குகளையும், தனித் தனியாக 13 பிரிவாகப் பிரித்திருந்தார்கள் மாயன்கள். அவற்றை ஏழு பகல்கள், ஆறு இரவுகள் என மொத்தமாக 13 ஆகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் விபரத்தை இப்போது சொல்லப் போனால் நேர விரயம் அதிகமாகும் என்பதால் படம் தருகிறேன், அதன்மூலம் அது புரிகிறதா எனப் பாருங்கள். புரியாவிட்டாலும் ஒன்றும் பரவாயில்லை. எமக்குத் தேவை அந்த 13 ஆகப் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மட்டும்தான்.

இந்த 13 இலக்கம் எப்படி மாயன்களுக்கு முக்கியத்துவமாக இருந்ததோ, அது போல அமெரிக்க ஒரு டாலரிலும் (One Dollar) அந்த 13 இலக்கம் முக்கியமானதாக இருந்ததை நாம் கடந்த தொடரில் அவதானித்திருந்தோம். ஆனால் அதில் அமெரிக்கக் கழுகின் உடம்பில் வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளைச் சரியாக நாம் கவனித்திருக்க மாட்டோம். அவையும் 13 கோடுகள் என்று நாம் கவனித்திருந்தாலும், அவை ஏழு வெள்ளைக் கோடுகளும், ஆறு கறுப்புக் கோடுகளுமாக இருக்கின்றன. இது மாயன்களின் பிரமிட்டில் உள்ளது போல, ஏழு பகல்களையும், ஆறு இரவுகளையும்  குறிப்பது போல இருக்கின்றன அல்லவா? இது எப்படி சாத்தியமாகியது? அத்துடன் நீங்கள் அந்த டாலரில் இன்னுமொன்றையும் கவனித்து வையுங்கள். அதன் விபரம் கீழே ஆராயப்பட்டாலும் இப்போதே அதைப் பார்த்து வைப்பது நல்லது. படத்தில் மொத்தமாக 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எப்படிப்பட்ட உருவத்தினுள் இருக்கிறது?  ஆறுகோண வடிவில் அமைந்த ஒரு வடிவத்தின் உள்ளே அல்லவா காணப்படுகிறது. இந்த ஆறுகோண வடிவத்தின் விசேசத்தைப் பின்னர் ஆராயலாம். 

இப்போது கூட, 'இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்' என்னும் மிக எளிமையான பழமொழி மூலம், நான் சொல்லும் மாயன் தொடர்பை நீங்கள் மறுக்கலாம். ஆகவே, இப்போ தருவதைப் பாருங்கள். மாயன்களின் பிரதேசமான 'மெசோ அமெரிக்க' (Mesoamerica) பிரதேசத்துக்கு சற்றுக் கீழே இருக்கும் நாடுதான் 'எக்வாடோர்' (Ecuador). மாயன் இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயம் எஞ்சிய மாயன்கள் இந்தப் பிரதேசங்களில்தான், ஓடிச் சென்று வாழ்ந்தார்கள். அந்த எக்வாடோரில் 300 அடி ஆழத்துக்குக் கீழே ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பிரமிட் போன்ற ஒரு கல், அவர்களைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது உங்களையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை. 


'அதே கண்கள்' என்று நாங்களும் அலறலாம் போல இருக்கிறது. ஆம்! அதே பிரமிட். அதன் உச்சியில் அதே கண்கள். அது மட்டுமல்ல, அந்தப் பிரமிட்டின் அடுக்குகளை எண்ணிப் பாருங்கள். அவை மொத்தமாக 13. இந்தப் பிரமிட் வடிவக் கல்லின் பெயர் 'லா மனே பிரமிட்' (La Mane Pyramid) என்பதாகும். இதற்கு மேலும், மாயனுக்கும், அமெரிக்க டாலருக்கும், மேசனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அவநம்பிக்கை என்பது நமது பிறப்பிலேயே அமைந்த ஒரு சுபாவம். யார், எதை, எப்படிச் சொன்னாலும் நம்ப மறுக்கும் சுபாவம் நமக்கு என்றுமே இருந்து வருகிறது. அதில் ஒன்றும் தப்பு கிடையாது. நம்பும் வரை புரிய வைக்க வேண்டியது என் கடமை. மிருகங்கள் போல காட்டுவாசிகளாக வாழ்ந்த மாயன்களை, நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த அமெரிக்க அரசாவது கண்டுகொள்வதாவது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு இன்னும் ஒரு முக்கிய உதாரணத்தைத் தந்துவிட்டு நகர்கிறேன். 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்த 'காப்பிடல் பில்டிங்' (Capitol building in Washington D.C.) என்பது கி.பி. 1793 களில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் வேறு யாருமல்ல, ஒரு டாலரில் அமர்ந்திருக்கும் அதே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டன்தான். இவர் மேசனிக்ஸ் அமைப்பின் மிகமிக முக்கிய உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். 

அந்த காப்பிடல்  பில்டிங்கின் பிரதான மண்டபத்தில், சுவரில் அமைந்திருக்கும் ஒரு சிலை அமைப்புத்தான் இன்று நம்மை ஆச்சரியப்படுத்தப் போகும் ஒன்று. அதை நான் வார்த்தைகளால் சொன்னால் புரியாது. நீங்களே படத்தில் பாருங்கள்.

படத்தில் உள்ளவர்கள் சுட்டிக் காட்டுவதும், வணங்குவதும் எதைத் தெரியுமா? சரியாகப் பாருங்கள். இன்று உலகம் அழியப் போகின்றது என்று மாயன் சொல்லும் அதே காலண்டர்தான் அதில் இருக்கிறது. மாயன் காலண்டரை இவ்வளவு முக்கியமாக இவர்கள் இங்கு ஏன் அமைக்க வேண்டும்? நன்றாக யோசியுங்கள்? இதை விட வேறு என்ன ஆதாரங்கள் உங்களுக்கு வேண்டும்? அதே கட்டடத்தின் மேலே சுவரின் உச்சியில் வரையப்பட்டிருக்கும் இன்னுமொரு சித்திரத்தையும் பாருங்கள். அதில், ஆறுகோண வடிவில் சுற்றிவரப் படங்களும், நடுவே கண் போன்ற அமைப்பில் ஜோர்ஜ் வாசிங்டன் பெண்களுடன் அமர்ந்திருப்பது போலவும் இருக்கிறது.  

கண் என்கிறோம், ஆறுகோண வடிவம் என்கிறோம் அப்படி என்னதான் இவை இரண்டிலும் முக்கியத்துவம் இருக்கிறது? இவற்றை மேசனிக்ஸ் ஏன் இவ்வளவு முக்கியத்துவப்படுத்துகின்றனர்? இந்தக் கேள்விகள் நம்மையறியாமலே நமக்கு ஏற்படுவதை, நாம் தவிர்க்க முடியாது. அதற்கு இந்த மேசனிக்ஸ் என்பவர்கள் யார், இவர்களின் New World Order என்னும் அமைப்பு என்ன என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். சொல்வதற்கு முன்னர் இன்னுமொன்றையும் சொல்லி விடுகிறேன். இதில் எந்தக் கருத்தும் என் சொந்தக் கருத்தல்ல.

இதைச் சொல்வதற்கு நான் பைபிளின் (Bible) பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்துவிட்டு அவர்களை ஏடன் (Eden) தோட்டத்தில் வசிப்பதற்கு விடுகிறார். அப்போது கடவுள் ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டி, "அந்த மரத்தில் உள்ள கனியை மட்டும் உண்ண வேண்டாம். அதை உண்டால் சாகவே சாவீர்கள்" என்று சொல்லி விட்டுச் செல்கிறார். ஆதாமும், ஏவாளும் கடவுள் சொன்னபடியே வாழ்கிறார்கள். அப்போது அங்கு வந்த 'சாத்தான் (Satan), "நீங்கள் அந்த மரத்தின் கனிகளைச் சாப்பிடுங்கள். அந்த மரத்தின் கனிதான், அறிவைக் கொடுக்கும் கனி. அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாகவே மாட்டீர்கள்" என்கிறான். சாத்தானை நம்பிய ஆதாமும், ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்கிறார்கள். அதை உண்டதால், அறிவையும் பெறுகிறார்கள். தாங்கள் இருவரும் அதுவரை நிர்வாணமாக இருப்பதைக் கூட, கனியை உண்டதால் பெற்ற அறிவின் மூலம்தான் உணர்கிறார்கள். அப்புறம் சாத்தானின் பேச்சைக் கேட்டு கனியை உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து கடவுளால், அவர்கள் விரட்டப்படுவது தனிக் கதை. 

மேற்படி பைபிள் கதையைப் படிக்கும் கிருஸ்தவர்கள் அந்தக் கதையை எடுக்கும் விதம் வேறு. ஆனால் சிலர் எடுத்த விதமே வேறு. அதாவது ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெறுவது கடவுளுக்கு ஏனோ பிடிக்காமல் இருந்தது. ஆனால் சாத்தானுக்கு மனிதன் அறிவைப் பெறுவது பிடித்திருந்தது. சாத்தான் மனிதர்களுக்கு உதவி செய்தான். அவன் சொன்னது போல, ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் சாகவும் இல்லை. இன்று இந்த அளவுக்கு மனிதன் அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறான் என்றால் அது சாத்தானால்தான். இந்த இடத்தில் கடவுள் மனிதர்களுக்கு எதிராகவும், சாத்தான் ஆதரவாகவும் இருந்திருக்கிறான். அதாவது கடவுள் சாத்தான் போலவும், சாத்தான் கடவுள் போலவும் இருந்திருக்கிறார்கள். அமைதி.... அமைதி... இதை நான் சொல்லவில்லை. சிலர் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் யாரென்று தெரிய வேண்டுமல்லவா? சொல்கிறேன்!

சாத்தானை வழிபடுபவர்களை 'லூசிபேரியன்' (Luciferien) என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் சாத்தான் என்று சொல்பவன் உண்மையில் கடவுளுடன் இருந்த ஒரு ஏஞ்சல் (Angel). அவன் பெயர் லூசிபெர் (Lucifer). இவனை வெளிச்சத்தின் கடவுள் என்றும் சொல்வார்கள். அதாவது அவனும் ஒரு கடவுள்தான் என்கிறர்கள். அதனால் இந்த லூசிபெர் என்பவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் அந்தச் சிலர். அவர்களைப் பொறுத்தவரை லூசிபெர் நன்மை செய்த ஒருவனே ஒழிய கெட்டவன் கிடையாது. நேர்மாறாக கடவுள்தான், மனிதர்களுக்கு, சாவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பயமுறுத்தி அறிவு கிடைக்காமல் தீமை செய்தவர். 

இந்த லூசிபெரை வழிபடுபவர்கள்தான் உலகத்திலேயே மிக வலிமையாக இருக்கும் மேசனிக்ஸ். இவர்களின் தொடர்ச்சிதான் நியூ வேர்ல்ட் ஆர்டர் என்னும் அமைப்பு. இதை நம்புவது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். 'அமெரிக்க ஜனாதிபதிகளும், உலகின் மிகமிகச் சக்தி வாய்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் மேசனிக்ஸ், நாம் சாத்தான் என்று சொல்பவனையா கடவுளாக வணங்குகிறார்கள்?' என்னும் கேள்வி உங்களுக்கு எழுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் இதுதான் மிகவும் ஆச்சரியமான உண்மை. இவர்களே 'புதிய உலகம்' என்பதினூடாக அனைத்து உலக மக்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். மதங்களாலும், மத உணர்வுகளாலும் ஊறிப் போன நமக்கு, இது வெறுப்பையே தரும். ஆனால் அவர்கள் சொல்வதோ வேறு. சரி, நம்ப முடியவில்லையா? இவர்களால் 'லூசிபெர் ட்ரஸ்ட்' (Lucifer Trust- Lucis Trust) என்ற ஒரு உதவும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த அமைப்பு ஐ.நா. சபையினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வளவு பலம். உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது இது. உலகின் முதல் பணக்காரராக இருந்த ரொக்கபெல்லர் (Rockefeller), ஹென்றி கிஸ்ஸிஞ்ஞர் (Henry Kissinger) ஆகியோர் கூட இந்த 'ட்ரஸ்ட்டில்' இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

சனிக்கிரகத்தை (Saturn) லூசிபெரின் இடமாகக் கருதுகிறார்கள் இவர்கள். Satan-Saturn என்னும் பெயர் ஒற்றுமையையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்த மதமும், சனியை தீமைக்கான கிரகமாக எடுப்பது இதனால்தான். இந்தச் சனிக்கிரகத்தை ஆறுகோண நட்சத்திரத்தாலும், கண் ஒன்றின் வடிவத்தாலும் ஆதிகால மக்கள் குறித்து வந்திருக்கிறார்கள். அப்படி ஏன் குறித்து வந்தார்கள் என்பதற்கான காரணம் சரியாகப் புரியாவிட்டாலும், சனிக்கிரகம் அதனைச் சுற்றியிருக்கும் வளையத்தினால் கண் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என நம்பப்பட்டது.  

சனிக்கிரகத்தின் அடையாளமாக இந்த ஆறுகோண நட்சத்திர அமைப்பையும், கண்ணையும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களே அவதானித்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இவர்கள் வெறும் கண்ணால் இதை அவதானித்தார்கள் என்ற ஆச்சரியம் எப்போதும் இருந்தது. ஆனால் இதற்கு மிகச் சமீபத்தில் விடை கிடைத்தது. நாஸாவினால் சனிக்கிரகத்தை ஆராய என அனுப்பப்பட்ட 'காஸ்ஸினி' (Cassini) என்னும் விண்கலம், சனிக்கிரகத்தைப் பலவிதங்களில், பல கோணங்களில் படங்களாக எடுத்து அனுப்பியது. அப்படி அது அனுப்பிய படங்களில், குறிப்பிட்ட இரண்டு படங்களைப் பார்த்து உலகமே பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்தது. "ஐயோ! இப்படியும் இருக்குமா? இதை எப்படி எமது மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்? " என்ற ஆச்சரியமும் வந்தது. நமது மூதாதையர்களின் அறிவைப் பற்றிய சந்தேகம் மேலும் அதனால் அதிகரிக்கவும் தொடங்கியது. சனிக்கிரகத்தின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் காஸ்ஸினி எடுத்த படங்களை நீங்களே பாருங்கள். 

கேத்திர கணிதத்தின் மூலம் மிகச் சரியாகக் கோடு போட்டு வரைந்தது போல, ஒரு ஆறுகோண வடிவம் சனிக்கிரகத்தின் வட துருவத்தில் காணப்பட்டது. நான்கு பூமிகளைத் தன்னுள் அடக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆறுகோண வடிவம், எல்லாப் பக்கங்களும் ஒரே அளவானதாக இருப்பது போல அமைந்திருக்கிறது. அதைவிட ஆச்சரியம், தென் துருவத்தில் கண் போன்ற வடிவமும் காணப்படுவதுதான். இது எந்த வகையான மர்மம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனிக்கிரகத்தின் வட துருவமும், தென் துருவமும் இந்த அமைப்புகளில் இருக்கின்றன என்று எப்படி ஆதிகால மனிதர்கள் கண்டுகொண்டார்கள்? யார் இவர்களுக்கு இதைச் சொன்னார்கள்? நிச்சயமாக வெறும் கண்களால் இதைப் பார்க்கவே முடியாது. அதிகம் ஏன்? தற்போது உள்ள நவீன தொலைநோக்குக் கருவிகளால் கூட அதை அவதானிக்க முடியாது. காரணம், இவை இரண்டும் அமைந்திருப்பது, நமது காட்சிகளிலிருந்து விலகிய துருவப் பகுதிகளில். 

சனிக்கிரகத்தில் மட்டுமல்ல, மேசனிக்ஸ் என்னும் ஆதிக்க சக்தியினால் இந்தக் கண்ணும், ஆறு கோணமும், பிரமிட்டும் அடையாளங்களாகவும், சின்னங்களாகவும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவை எங்கே யார் யாரால் சின்னங்களாக பாவிக்கப்படுகின்றன என்பதை இங்கு நான் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அவற்றை இணையம் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கே அளிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பிரபல கம்பெனிகளில் பல இவற்றை அடையாளங்களாக வைத்திருக்கின்றன.

மாயன்களின் பிரமிட்டை அடையாளமாக வைத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்த ஐரோப்பியர்கள், மாயன்களின் அறிவின் அடையாளங்கள் அழியவும் காரணமாக இருந்தார்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. மாயன்களின் அறிவுசார் சாட்சியங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டன. அப்படி அழிந்தவற்றில் எஞ்சியவை மிக மிகச் சொற்பமே! அந்தச் சொற்பத்திலேயே இவ்வளவு ஆச்சரியங்கள் மாயன்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அவை அழிக்கப்படாமல் முழுவதும் கிடைத்திருந்தால், என்ன என்ன அதிசயங்கள் எல்லாம் எமக்குக் கிடைத்திருக்குமோ....?

மாயன்களின் அறிவின் அடையாளமாக என்னதான் அழிந்தது? அவற்றை யார் அழித்தார்கள்? எஞ்சியவை என்ன? இந்தக் கேள்விகளின் விடைகளுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்.  

அடுத்த தொடரில் சந்திக்கும் வரை, மேசனிக்ஸின், 'பிரமிட் கண்கள்' உலகெங்கும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் ஊடுருவியிருப்பதைப் படங்கள்  மூலமாகப் பாருங்கள். சிலவற்றை மட்டும் தருகிறேன். மேலதிக படங்கள் விரும்புபவர்கள் எனக்கு ஈமெயில் அனுப்பவும். 

Cao Dai Tempel- Vietnam

Kington Parish Church- Jamica

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com