முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் ஊடக வியாபாரம்: நக்கீரனின் பொருட்குற்றமும் லும்பன்கள் வழங்கும் உடனடி ’நீதி’யும்
மாயா
ஓடி ஓடி விளையாடு:
கார்த்திக் பாலா
‘அகநாழிகை’ பொன். வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை" - ஒரு பார்வை
ராமலக்ஷ்மி
குளியலறையில் ஒரு பூரான்........!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (12)
ராஜ்சிவா
வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்
எர்னஸ்டோ குவேரா
கவிதை
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
அபிலாஷ் கவிதைகள்
ஆர்.அபிலாஷ்
கைவிடப்பட்ட கடவுளர்
ஆத்மார்த்தி கவிதை
வண்ணமிசைக்கும் விழிச்சிறகுகள்
தேனு
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்
நியாபகமற்ற பொழுதுகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
அவள் அப்படித்தான்...
ஹேமா(சுவிஸ்)
சொல் உடைத்தல்
சந்திரா மனோகரன்
தேடல் வழியில்
வளத்தூர் தி.ராஜேஷ்
சிறுகதை
மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை)
அஸீஸ் நேஸின்
மண்சுவர்
அருண் காந்தி
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்..........கொஞ்சம் ஹெல்தியாய்.....
பத்மலஷ்மி
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (12)
ராஜ்சிவா

உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்த இந்தக் கணத்தில், உலக அழிவு பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். உலகம் அழியும் என்று நான் சொல்வதாக பலர் நினைக்கின்றனர். சிலர் நான் எழுதுவதில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து, உலகம் அழியும் என்று தீவிரமாக நம்பி, கொஞ்சம் பயம், கொஞ்சம் பதட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 2012 இல் உலகம் அழியும் அல்லது அழியாது என்னும் இருநிலைகளே தற்போது எங்கள் முன்னால் இருக்கிறது. உலகமே இரண்டாகப் பிரிந்து, இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏற்ப அவற்றிற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதில் ஏதாவது ஒரு முடிவைக் கொடுக்கும் நடுவராக நான் இருக்க முடியாது. ஆனால் இந்த இரு நிலைகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களுடன்  உங்களுடன் பகிர்பவனாக என்னுடைய பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

கடந்த தொடரில், 2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் (Milky way) மத்திய கோட்டை (Equator) அடைகிறது என்றும், கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐ அண்மிக்கிறது என்றும், இந்த நிகழ்வுகள் 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்லாமல் விட்டது ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா? பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், எங்கள் பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில்  (Alignment) வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுகிறது. 

இது மட்டுமல்ல 26000 வருடங்களின் ஆச்சரியங்கள். இன்னுமொன்றும் உண்டு. அதுபற்றி இப்போது  பார்க்கலாம். 

சின்ன வயதில் நீங்கள் பம்பரம் சுற்றி விளையாடியிருக்கிறீர்களா? அநேகமாக அந்தப் பாக்கியத்தைத் தவறவிட்டவர்கள் சினிமாவிலாவது பம்பரத்தின் பயன்களைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் ஒன்றைச் சுழல விட்டால், அது தன்னைத் தானே மிகவும் வேகமாகச் சுற்றும் அல்லவா? அப்போது பம்பரத்தில் நடைபெறும்  வேறு ஒரு செயலையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள். அதாவது பம்பரம் சுற்றும் போது, பூமியில் தொட்டுக் கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்க, மேற்பகுதி தலையை ஆட்டியபடியே சுற்றும். அப்படித் தலையாட்டும் பம்பரத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அதைச் சரியாகக் கவனித்திருப்பீர்கள் என்றால், அந்தத் தலையாட்டல், ஒரு கிடையான வட்டப் பாதையிலேயே இருக்கும்.

நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில் (degrees) சாய்ந்திருக்கும் விதமாக, ஒரு அச்சில் பம்பரம் போலச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும் பூமியும் ஒரு தலையாட்டலுடன்தான் சுற்றுகிறது. இந்தத் தலையாட்டலை  'பிரிசெஸன்' (Precession) என்கிறார்கள்.

எங்கள் பூமி, பம்பரம் போல மிக வேகமாகத் தலையாட்டாமல், மிக மிக மெதுவாக அந்தத் தலையாட்டலைச் செய்கிறது. பூமியின் வடபகுதி, தனது அச்சில் ஒரு இடத்தில் ஆரம்பித்து, வட்டப் பாதையில் இந்தத் தலையாட்டலைச் செய்து, மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறது. அந்தத் தலையாட்டும் வட்டத்துக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா? 26000 வருடங்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

 

இந்த 'பிரிசெஸன்' (Precession) பூச்சியப் புள்ளியில் ஆரம்பித்து, 360 பாகையினூடாகச் சுற்றி மீண்டும் பூச்சியப் புள்ளியை அடைய, 26000 வருடங்கள் எடுக்கிறது. அதாவது ஒரு பாகை நகர, 72 வருடங்கள் எடுக்கிறது. அவ்வளவு மெதுவான தலையாட்டல். 

 "இந்தப் பிரிசெஸனில் அப்படி என்னதான் முக்கியம் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். மிகச் சரியாக 21.12.2012 அன்று, பூமி தனது பிரிசெஸனின் முழுச் சுற்றை முடித்துப் பூச்சியத்துக்கு வருகிறது என்பதுதான் இங்கு விசேசம். இந்த பூச்சிய நிலையை 'போலாரிஸ்' (Polaris) அல்லது 'போல் ஸ்டார்' (Pole Star) என்கிறார்கள். 

 

 

 

சரியாகக் கவனியுங்கள்......!

21.12.2012 அன்று, காலக்டிக் ஈக்வேட்டர் (Galactic Equvator) என்னும் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சூரியன் அடைகிறது. அதனால், பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும் 'மத்தியரேகை' என்னும் நேர் கோட்டில் வருகின்றன. அத்துடன் எங்கள் பூமியும் அதே நேர் கோட்டில் வருகிறது. அத்தோடு நிற்காமல், இந்தப் பிரிசெஸன் என்னும் தலையாட்டலின் பூச்சியப் புள்ளியான போலாரிஸையும், பூமி 26000 வருடங்களின் பின்னர் மிகச்சரியாக அடைகின்றது. அத்தோடு டார்க் ரிஃப்டையும் மிக அண்மிக்கிறது. 26000 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிக அற்புதமான ஒரு வானிலை வரிசையாக இதைக் கொள்ளலாம். இப்படி எல்லாமே சேர்ந்த ஒரு நிகழ்வு, அதுவும் மாயன் சொல்லிய 26000 வருடங்களில் நடைபெறுவது, ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. அப்படி இருக்க முடியாது என்னும் ஆச்சரியம்தான், எல்லோரும் இந்த விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்குக் காரணமாகிறது.

இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது, உலகம் அழியும் என்று நாம் ஏன் பயப்பட வேண்டும்? அப்படி உலகம் அழியும் அளவிற்கு என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு, பதில்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதைத் தெரிந்து கொள்வதற்கு, 'உலகம் அழியும்' 'உலகம் அழியும்' என்கிறோமே, அப்படி ஒரு அழிவு ஏற்பட்டால், அது எப்படி ஏற்படும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா

உலகம் அழிவது என்றால் அது இரண்டு விதத்தில்தான் அழிய முடியும். 1. சூரியன் அழிவதால் ஒட்டுமொத்தமாக அதனுடன் சேர்ந்து உலகமும் அழிய வேண்டும்.  2. உலகம் மட்டுமே அழிய வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களுமே உலக அழிவின் அடிப்படையாகின்றது. இங்கு இன்னுமொரு கேள்வியும் வருகிறது. உலகம் அழிவது என்றால், மொத்தமாக உலகமே வெடித்துச் சிதறி இல்லாமல் போகுமா? அல்லது உலகம் அப்படியே இருக்க, அதில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகுமா

 

மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்களை, பலவிதங்களில் ஆதாரபூர்வத்தோடு விளக்கி எம்மைத் தூங்கவே விடாமல் ஒரு சாரார் செய்து கொண்டிருக்க, இல்லை, இவையெல்லாம் பொய். அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று இன்னுமொரு சாரார் சொல்லிவருகின்றனர். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இதுவரை உலகம் அழியும் என பலமுறைகள், பல விதங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. அந்த நேரங்களிலும் அழியும், அழியாது என இரு நிலைப்பாடு இருந்தது. ஆனால் அப்போது, அவையெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், நம்பிக்கைவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்குமான விவாதங்களாக அவை அமைந்தன. ஆனால் 2012 இல் உலகம் அழியும் என்பதில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும் இருவருமே அறிவியலாளர்கள்தான். அழியும் என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். அழியாது என்று சொல்வதும் அறிவியலாளர்கள்தான். உண்மை இவர்கள் இருவருக்கும் இடையில் நின்று ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

முதலில் மேலே சொன்ன அந்த அற்புதமான நிகழ்வு நடை பெற்றால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பார்க்கலாம்.  

பால்வெளி மண்டல மத்தியும், சூரியனும், பூமியும் இருக்கும் நேர் கோட்டுத் தன்மையினால், சூரியனுக்கு ஏற்படும் 'காஸ்மிக்' (Cosmic) கவர்ச்சி விளைவுகளால் உருவாகும் ஈர்ப்பு விசை மாற்றங்களால், பூமியின் அச்சுத் தடம் மாற வாய்ப்புண்டு. அதாவது இப்போது 23.5 பாகை சாய்வில், வடக்குத் தெற்காக இருக்கும் பூமியின் அச்சு, இடம்மாறி பூமியின் வடதுருவம், தென்துருவம் என வேறு ஒரு இடத்துக்கு மாறிவிடும். அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி (Ice) உருகி, பூமியே தண்ணீரில் மூழ்கிவிடும். இந்த விளைவுக்கு இந்தப் பிரிசெஸன் சுற்றுப் பூர்த்தியாகி போலாரிஸுக்கு வருவதுதான் காரணமாகவும் அமையலாம். அப்படி பூமியின் அச்சில் மாற்றம் ஏற்படால், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றக் கோள்களுக்கோ, அல்லது சூரியனுக்கோ எந்த அழிவும் வராது. பூமியில் உள்ளவை மட்டுமே தங்கள் அழிவுகளைச் சந்திக்கும்.

மேலும், பூமியின் அச்சுக்கு எதுவும் நடக்காவிட்டாலும், காஸ்மிக் கதிர்களின் அதிகபட்ச வீச்சுக்களால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும். அத்துடன் மின்காந்த விளைவுகள் உடைய கதிர்களின் தாக்கத்தால் பூமியின் உள்ள மின்சாரங்களும், சாதனங்களும் தடைப்பட்டு பூமியில் எதுவுமே இயங்காமல் நின்றுவிடும். இதற்குமேலும் உலகம் எப்படி அழியும் என்று சொன்னால் இன்று நித்திரை கொள்ள முடியாமல் போய்விடும். எனவே வாராவாரம் வரிசையாக அதைப் பார்க்கலாம். 

எது எப்படி இருப்பினும், ஆச்சரியகரமாக மாயன்கள் சூரியனின் அழிவு, பூமியின் அழிவு என இரண்டைப் பற்றியுமே மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். பூமி அழியும் என்னும் நம்பிக்கையை ஊட்டி, உங்களைப் பயமுறுத்துவது என் நோக்கமல்ல. மாயன்கள் பூமியின் அழிவு பற்றி, என்ன சொல்லி இருக்கிறார்கள்? ஏன் சொல்லி இருக்கிறார்கள்? என்பதை மாயன்கள் சார்பாக விளக்குவது மட்டுமே என் நோக்கம். அழிவு வரலாம். வராமலும் போகலாம். ஆனால் மாயன்கள், உலக அழிவு பற்றிச் சொல்லி இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஆனால் இவ்வளவு காலமும் அனைவரும், உலகம் அழியப் போகிறது என்று அலறிக்கொண்டிருக்க, தேமே என்று இருந்து கொண்ட நாஸா (NASA) ஏனோ திடீரென விழித்துக் கொண்டது. தனது இணையத் தளம் மூலமாக உலகம் அழியாது என்பதற்கு தன்சார்பாக பல விளக்கங்களையும் அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாஸாவின் நம்பகத்தன்மையில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று பார்க்கும் போது, அங்கே  தவறாக ஏதோ நெருடுவது போல இருப்பது என்னவோ உண்மை.

 

சமீபத்தில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட விக்கிலீக்ஸ் (Wikileaks) இன் யூலியன் அஸ்ஸாஞ்சை (Julian Assange) உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் முடக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி முடக்கப்பட்டதற்கு காரணமே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதுவுமல்ல, வேறு மிக முக்கியமான ஒன்றுதான் அதற்குக் காரணம் என தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதற்கும் உலக அழிவுக்கும் சம்மந்தம் இருக்குமோ என இப்போது பலர் நம்புகின்றனர்.  

'கேபிள்கேட்' (Cablegate) என்னும் பெயரால், 250000 அமெரிக்காவின் ராஜதந்திர அறிக்கைகளை அஸ்ஸாஞ் கணணி மூலம் கடத்தி வெளியிட்டார். அந்த அறிக்கைகளில் முக்கியமானதாக கருதப்பட்டது என்ன தெரியுமா? அயல் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுகள் (ufo) பூமிக்கு வந்திறங்கியது என்ற செய்திகள்தான். அத்துடன் இதவற்றை நாஸாவின் மூலம் ஆதாரத்துடன் அறிந்து கொண்ட அமெரிக்க அரசாங்கம், திட்டமிட்டு அனைத்தையும் மறைத்திருக்கிறது. கடந்த வருடங்களில் மட்டுமே 400க்கும் அதிகமான சம்பவங்கள் பறக்கும் தட்டுகள் பூமியில் வந்திறங்கியது சம்மந்தமான ஆதாரங்கள் அஸ்ஸாஞ் வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கின்றது. அதுவும் குறிப்பாக பிரித்தானியாவில் பறக்கும் தட்டுகள்  வந்திறங்கியது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களை அமெரிக்க 'கார்டியன்' (The Guardian) பத்திரிக்கைக்கு சாட் (Chat) மூலம் அஸ்ஸாஞ் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகளை ஐரோப்பாவின் மிகமுக்கிய பத்திரிக்கைகள் எல்லாமே தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. 

பறக்கும் தட்டுகள் பற்றி எப்போது அஸ்ஸாஞ் சொல்ல ஆரம்பித்தாரோ, அப்போதே அவரை நோக்கி பாலியல் குற்றச்சாட்டுகளும் பறக்கும் தட்டுகள் போல பறந்துவரத் தொடங்கின. அரசுகள் அனைத்தும் அவருக்கு எதிராகின. அரசுகள் அனைத்துக்கும் மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று அடைவதில் தயக்கம் இருக்கின்றது.  அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மக்களுக்கு அதியுயர் ஸ்தானத்தில் இருப்பவை அரசுகள்தான். அவற்றையும் விட சக்தி வாய்ந்த மனிதர்கள் வேற்று உலகில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் அரசுகளை மதிக்கமாட்டார்கள், கட்டுப்பட மாட்டார்கள். இதனால் நாடுகளின் சமநிலைகள் குளம்பிவிடலாம். எனவே அரசுகள் இப்படிப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு சென்றடையாமல் இரகசியமாகவே பாதுகாக்கின்றன. அப்படிப் பாதுகாப்பதில் மிக முக்கியமாக இந்த இருக்கும் ஸ்தாபனங்களில் ஒன்றுதான் நாஸா. 

நாஸா மறைத்த மிக முக்கியமான வேறு ஒன்றும் உண்டு. அது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள வேண்டியது அவசியமாகிறது. அதுகூட உலக அழிவோடு சம்மந்தப்பட்டதுதான்.

அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்ட ஸ்தாபனம்தான் 'நாஸா' (NASA-The National Aeronautics and Space Administration) என்பதாகும். இந்த நாஸா மூலம்தான் விண்வெளி வரலாற்றுக்குரிய 'மிகை அறிவை', மனித இனம் அதிக பட்சம் பெற்றுக் கொண்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. விண்வெளியை ஆராய நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவியுடன் கூடிய, செயற்கைக் கோள்தான் 'ஹபிள்' (Hubble) ஆகும். இந்த ஹபிள் தொலை நோக்கியால் பிரபஞ்சத்தின் பல உண்மைகளையும், இரகசியங்களையும் மனிதன் அறிந்து கொண்டான்.

ஆனாலும், விண்ணில் உள்ள அனைத்தையும் அறிந்து கொண்ட மனிதனுக்கு, ஒரு தவிர்க்க முடியாத சந்தேகம் தோன்றியது. மனிதனின் சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடிய கோடானு கோடி நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் மனிதன் பார்க்கும் அதே வேளையில், மனிதக் கண்ணால் பார்க்க முடியாத ஏதாவது, விண்வெளியில் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், தமக்கென சுயமான ஒளியைக் கொண்டிருப்பதால், தொலை நோக்கிக் கருவிகள் மூலம் அவற்றைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒளியே இல்லாத கோள்கள் அப்படி அல்ல. அவை இருட்டில் இருப்பதால், மனிதனால் கண்டு பிடிக்கப்படாமலே கோடிக் கணக்கில் விண்வெளியில் சுற்றித் திரிகின்றன. இப்படிப் பட்டவற்றைக் கண்டு பிடிப்பதற்கென்றே மிகுந்த செலவில், நாஸா ஒரு தொளைநோக்கிக் கருவியை கண்டுபிடித்தது. IRAS (Infrared Astronomical Satellite) என்று பெயரிடப்பட்ட அந்தத் தொலைநோக்கிக் கருவியைச் செயற்கைக் கோள் மூலம்,1983 ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி விண்வெளிக்கு அனுப்பியது. இந்தத் தொலைநோக்கிக் கருவி 'இன்பிரா ரெட்' (Infra Red) என்னும் கதிர்களைச் செலுத்தி, விண்ணில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அனைத்தையும் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது. நமது உடலில் 'எக்ஸ் கதிர்கள்' (X Rays) செலுத்தப்பட்டு, அது உடம்பை ஊடுருவி எலும்புகளைப் படம் பிடிப்பது போல, இந்தத் தொலைநோக்கிக் கருவியும், இன்பிரா சிவப்புக் கதிர்களைச் செலுத்தி விண்வெளியை ஆராய்ந்து படமெடுக்கிறது.

'IRAS' விண்வெளியை ஆராய்ந்த போது, தற்செயலாக கோள் ஒன்றைக் கண்டு பிடித்தது. எமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால், சிவப்பு நிறத்தில் ஒரு வட்ட வடிவமான கோள் போன்ற ஒன்றை அது படம் பிடித்தது. அந்தக் கோளை மேலும் ஆராய்ந்த போதுதான் நாஸாவுக்கு அந்தப் பயங்கரம் உறைத்தது. அதாவது அந்தக் கோள், மிகச் சரியாக எமது பூமியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்தப் பயங்கரம்.

'இது என்ன புதுக் கதை' என்று அதை மேலும் மேலும் ஆராய்ந்த நாஸா, திடீரென அந்தத் தொலை நோக்கிக் கருவியை விண்ணிலிருந்து கீழே இறக்கியது. தனது ஒட்டு மொத்தத் திட்டத்தையே இடை நிறுத்தி மண்ணுக்கு வந்தது IRAS. காரணம் கேட்டால், அந்தத் தொலை நோக்கிக் கருவி பழுதடைந்து விட்டதாக ஒரு காரணத்தையும் நாஸா சொன்னது. 

இந்த விசயம் பல அறிவியலாளர்களளுக்கும், மக்களுக்கும் நாஸாவின் மேல் சந்தேகம் ஏற்படக் காரணமாக அமைந்தது. நாஸா சொன்ன காரணங்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நாஸா எதையோ மறைக்கிறது என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றது அந்தச் சந்தேகம். ஆனால் நாஸாவோ அந்தத் தொலை நோக்கிக் கருவியைப் பாதுகாக்கும் குளிர்பதன வசதி கெட்டு விட்டதாகவும், அதனால்தான் அந்த தொலை நோக்கிக் கருவி மண்ணுக்கு இறக்க வேண்டி வந்தது என்றும் சளைக்காமல் சொன்னது.

உண்மையில் 'IRAS' கண்ட அந்தக் கோள்தான் என்ன? அந்தக் கோளைக் கண்டவுடன் ஏன் நாஸா தனது ஆராய்ச்சியையே இடை நிறுத்தியது? அப்படி என்னதான் அந்தக் கோளில் நாஸாவே பயப்படும்படியான பிரச்சனை உண்டு? இப்படிப்பட்ட பல கேள்விகளை பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கேட்கத் தொடங்கினர்.

 முடிவில் அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்தது. அந்த விடை 'சுமேரியர்' (Sumerian) என்னும் மிகப் பழமை வாய்ந்த ஒரு இனத்தின் கல்வெட்டுகளிலும் கிடைத்தது. விடை கிடைத்தாலும் அது பயங்கரமானதாகவே இருந்தது.

அந்தக் கோள்தான் நவீன விஞ்ஞானிகளால் 'ப்ளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயரிடப்பட்டதும், ஆதிகால மனிதர்களால் 'நிபுரு' (Niburu) என்று பெயரிட்டதுமான, பூமியில் வாழும் அனைவருக்கும் எமனாக வந்த கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இந்தக் கோள் பூமியை 21.12.2012 அன்று தாக்கும் என்பதுதான் மேலதிகமாக இதில் கிடைக்கப்பட்ட பயங்கரமான செய்தியுயாகும். 

நிபுரு (Planet X) பற்றி மேலும் அறிய, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com