
வீடு என்ற கருத்தே கிராமங்களில் வழமையிலிருந்து வேறுபட்டது. வீட்டிற்கு முன்னால் தெரு அல்லது காலியிடமும் சேர்ந்துதான் வீடு என அறியப்பட்டது. வீட்டிற்குள்ளே முடங்கி எப்பொழுதும் கதவுகளை மூடித் தாழிட்டுக் கொள்வது கிராமங்களில் வழக்கினில் இல்லை. திறந்த கதவுகளின் வழியே கோழி, ஆடு, மாடு தாராளமாக உள்ளே நுழையும். சிலவேளைகளில் திருட்டு நாய் புகுந்து உணவைத் தின்றுவிட்டு ஓடிவிடும். காலையில் எழுந்து மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து, கூட்டிச் சுத்தமாக்கப்பட்ட வாசலில் தெளித்தால், அன்றையநாள் துலங்கும் என்பது நம்பிக்கை. ஓரளவு வசதியான வீடுகளில்தான் கல்மாவுப் பொடியினால் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிடுவார்கள். அன்றாடம் வயலில் உழைக்கக் கிளம்பும் பெண்களுக்குக் கோலம்போட நேரமிருக்காது. மாலைவேளையிலோ, வயல்வேலைகள் இல்லாத நாட்களிலோ பெண்கள் வீட்டு வாசலில் அமர்ந்து சொந்தக் கதை, ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். வீடு என்பது ஓலைவீடு அல்லது ஓட்டு வீடு அல்லது காரை வீடு எதுவாகிலும் பெண்களின் உலகம் தெருவாசலில்தான். வயதானவர்கள் வீட்டின் இருபக்கங்களிலும் உள்ள திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். திண்ணை என்பது தமிழர் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. வழிப்போக்கர்கள் திண்ணையில் உட்கார்ந்தால் ‘யார் எவர்' என்ற கேள்விகளுடன் ஒன்றும் சொல்லமாட்டார்கள். வீட்டின் பகுதியான திண்ணை, ஊர்க்காரர்களுக்கும் வழிப் போக்கர்களுக்கும் தங்கி ஓய்வெடுக்கும் இடமாக மாறுவது முக்கியமானது. வசதியான நிலக்கிழார்களின் வீட்டில் பெரிய கல் திண்ணை இருக்கும். மிட்டா மிராசு அல்லது நிலக்கிழார் பெரிய மர நாற்காலியில் ஒற்றையாக அமர்ந்து விசாரிப்பு அல்லது பஞ்சாயத்து பண்ணுவார். அதிகாரமையமாக மாறும் திண்ணை என்பது சாதிச் செருக்கு, ஆணவம், வன்முறை ஆகியவற்றுக்குக் களமாக விளங்கும். அங்கிருந்து பிறப்பிக்கப்படும் ஆணையினால் நசுக்குண்டோரர் சிந்திய ரத்தம் கிராமத்துத் தெருக்களிலும் வெளிகளிலும் இன்று கவிச்சியுடன் உறைந்திருக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களில் சித்தரிக்கும் கிராமம் பச்சைப் பசேலென்று அழகு கொழித்திட கண்களுக்கு விருந்தாக இருக்கும். எங்கள் ஊரான சமயநல்லூரின் வயல்வெளியை அக்டோபர் மாதத்தில், தள்ளி நின்று பார்த்தால் பச்சைக் கம்பளம் ஊரைச் சுற்றி விரிக்கப்பட்டது போன்று அற்புதமான காட்சியாகத் தோன்றும். பின்புலத்தில் வளமான வெற்றிலைக் கொடிக்கால்களும், ஓங்கி உயர்ந்த பசுமையான தென்னை மரங்களும் என இயற்கை வளம் பொங்கிடும். ஆனால் ஊருக்குள் வறண்ட மனிதர்களின் வக்கிரமான செயற்பாடுகளினால் எங்கும் அதிகாரத்தின் கரங்கள் படிந்திருக்கும். 1940களில் வேற்று சாதியினர் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த நீளமான அக்கிரகாரம், அறுபதுகளில் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலைக்குள்ளானது. சில அய்யர்கள் மெல்லச் சென்னையை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆதிக்கச் சாதியினர் வைத்ததுதான் கிராமத்தில் எழுதப்படாத சட்டங்களாக அமலில் இருந்தன. ஏப்பை சாப்பை, ஏமாளியாக விளங்கும் தலித்துகள், கைவினைச் சாதியினர் சிக்கினால் எந்தக் கூட்டத்திலும் வீர மறவர்கள் தங்களுடைய வாய்ச் சவடால்களையும் புஜ பலத்தையும் காட்டித் தினவெடுத்த தோள்களை அடக்க முயன்றனர். ‘நியாயம், அறம்’ போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் ஒடுக்குவது என்பதும் ஒடுங்கியிருப்பதுதான் தங்கள் வாழ்க்கை என்பதுமாக நம்பிக் கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனம் எங்கும் பரவியிருந்தது. ஒவ்வொரு மனித உயிரும் சாதியால்தான் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.
ஊருக்கு நடுவில் ஓரளவு வசதிபடைத்தவர்களும் ஊருக்குப் புறத்தே தலித்துகளும் கைவினைஞர்களும் வசித்து வந்தனர். எனினும் கிராமம் என்ற பரப்பில் எல்லோருடைய அடையாளங்களும் ‘இன்னார் பேரன், இன்னார் மகன்' என்று பதிவாகியிருந்தது. வீடு, வாசல், தெரு நம்முடையதாக இருந்தாலும் நிலக்கிழார், தெருவில் செல்லும்போது எழுந்து நிற்க வேண்டியது எழுதப் படாத சட்டம். பெண்கள் வீட்டு நிலைப்படியில் இயல்பாகக் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்து பேன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்கூடப் பதறியெழுவார்கள்.
கிராமத்து மந்தைகளில் நிற்கும் பெரிய மரங்களின் நிழலில் போடப்பட்டிருக்கும் பெரிய பட்டியக் கற்கள், சத்திரம், சாவடி என மாலை வேளைகளில் ஆட்கள் உட்கார்ந்திருப்பார்கள். அதிலும் கோடை காலத்தில் வயல்களில் வேலை எதுவுமில்லாதபோது, உச்சி வெயிலில் ஓய்வாகப் படுத்து, உட்கார்ந்து பெரிசுகள் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய பேச்சுகளில் அதிகாரமும் கேலியும் பொங்கும். வசதிக் குறைவானவர்களைத் துச்சமாகப் பேசுவார்கள். இளவட்டப் பயல்கள் ஏதாவது எதிர்த்துப் பேசினால், ‘போய் உங்காத்தாகிட்டே பாலு குடிச்சுட்டு வா' என்று கேலி பேசுவார்கள். ‘பால்குடி மறக்காத பயலுக எல்லாம் பேச வந்திட்டானுக பாரு' ‘நான் பார்க்க என்னிதைப் பிடிச்சுக்கிட்டு எழுந்து நின்ன பயல், என்கிட்டேயா எதிர்த்துப் பேசுறே'. என்று இளைஞர்களைத் துச்சமாகப் பேசுவதில் பெரிசுகளுக்குப் பெரும் மகிழ்ச்சி.
கிராமங்களில் பலருக்கும் பட்டப் பெயர் இருக்கும். சிலருக்கு உண்மைப் பெயரைவிடப் பட்டப்பெயரே பிரபலமாக இருக்கும். பட்டப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதானால் பெரும்பாலும் யாரும் கோபிக்க மாட்டார்கள். ஓரளவு மனப் பிறழ்வுக்குள்ளானவர்களை, அதையொட்டிய பட்டப் பெயரைச் சொன்னால் அசிங்கமாகத் திட்டுவார்கள். காரை வீட்டுக்காரர், ரைஸ்மில்காரர் மகள், ஒத்த வீட்டுக்காரர். . . இப்படி பல பெயர்கள். சிலரைச் சென்னம்பட்டியாள், கொந்தகைக்காரி எனப் பூர்வீக ஊர்ப்பெயரை வைத்துக் கூப்பிடுவார்கள். பெரிய மனிதர்கள் அல்லது நிலக்கிழார்கள் போன்றோரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருத்து நிலவியது. அண்ணாமலை என்பவரை ‘அன்னா' எனவும், சுந்தரேசன் என்பவரைச் ‘சுன்னா' என்று சொல்லுவார்கள். இதில் ‘சுன்னா' என்னும்போது எல்லோர் முகத்திலும் நமட்டுச் சிரிப்புப் பரவும். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் ’சுன்னா' அண்ணன் சொன்னார் என்று குறிப்பிடுவார்கள். சுன்னா என்பது ஆண்குறியையும் குறிக்கும் என்பது கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும்.
கோபத்தில் யாரையாவது குறிப்பிடும்போது, ‘எடுவட்ட பயல், தட்டுக் கெட்ட பயல், வாக்கலங்கெட்ட கழுதை, தட்டுவாணி, அவிசாரி, முண்டை, கம்மனாட்டி, பாதகத்தி, எழவெடுத்தவள் போன்ற வசைச் சொற்களைப் பயன்படுத்துவார்கள்.
ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து இரு பெண்கள் சண்டை போடுவது என்பது சாதாரணமாகத் தெருவில் காணக்கூடிய காட்சியாக இருந்தது. எதிரெதிர் வீடாக இருக்கும். அல்லது பக்கத்துத் தெருவாக இருக்கும், சம்பந்தபட்டவர்களுடைய வீடுகள். சின்னப்பிள்ளைகள் அடித்துக் கொண்ட விவகாரம், கொடுக்கல்-வாங்கல், ஏதாவது சந்தேகம். . . இப்படிப்பட்ட பிரச்சினையை முன்வைத்துப் பெண்கள் ஒருவரையொருவர் அசிங்கமான சொற்களால் திட்டிக் கொள்வது, சில சமயங்களில் அரைமணி நேரம் கூட நடைபெறும். அதிலும் கிராமத்தில், ‘யாருடா கிடைப்பாள்.. . .சண்டையை ஆரம்பிக்கலாம் , என்பது போன்ற பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். இத்தகைய பெண்களைக் கண்டால் எல்லோரும் ஒதுங்கிப்போவார்கள்; நயந்து பேசி விலகிக் செல்ல முயலுவார்கள். அந்த மாதிரிப் பெண்களால் வீட்டுத் திண்ணையில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. தெருவில் போகிற வருகிறவர்களைப் பற்றிச் சாடையாக ஏதாவது குத்தலாகச் சொல்லுவார்கள். அப்பாவியான ஆண் போனால், ‘ம். . . ஜில்லா கலக்டரு கிளம்பிட்டாரு' என்று சொல்லிவிட்டு ‘தூ. . ’ வெனக் காரித் துப்புவார்கள். அதிலும் பெண்கள் யாராவது நன்கு தலைமுடியைச் சீவி, நல்ல உடை உடுத்தித் தெருவில் போனால், ‘ம். . .ஊர் மேயக் கிளம்பிடுச்சுக' என்று நக்கலடிப்பார்கள். யாராவது எதிர்த்துக் கேட்டால் அப்புறம் சண்டைதான். நீ அவனைப் போட்டு வைக்கப் படப்புல ஏறிக்கிட்டிருந்தவள் தானே உன் வவுசி தெரியாது?. . . ’ ‘ஆமா நீ என்னடி யோக்கியம் என் பண்ணைக்காரன் . . .யை ஊம்பிக் கிட்டிருந்தவள்தான. . . இப்படியான பேச்சுகள், உன் பு. . . . . யைக் கிழிச்சிடுவேன்; இப்ப பாருடி என் புருஷனை விட்டு உன்னைத் தூக்கிப்போட்டு நாக்குத் தள்ள... சொல்றேன். . .அப்பத்தான் உன் கூதிக் கொழுப்பு அடங்கும். . .’ Pral Sen - ஐ மையப் படுத்திய பேச்சுகள் பிறரைக் கேவலமாகத் திட்டப் பயன்படுத்தப்பட்டன. இந்த மாதிரியான வசவுப் பேச்சுகளை என் நினைவு தெரிந்த நாளிலிருந்து கேட்டிருக்கிறேன். அத்தகைய சொற்களை யாரும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ சண்டையில் ஏவி விடப்படும் பருண்மையான அஸ்திரங்களாகச் சொற்கள் மாற்றப்பட்டன. இருவீடுகளுக்கிடையில் நடைபெறும் வாய்ச் சண்டைகளில் அந்தந்த வீட்டுப் பெண்களில் சிலரும் துணையாகக் கலந்து கொள்வதுண்டு. பெண்களின் வாய்ச் சண்டைகளில் பெரும்பாலும் ஆண்கள் கலந்து கொள்வதில்லை. அப்படி ஏதாவது தவறிப் போய் சண்டையிடுகிறவளின் புருஷன் ஏதாவது இரண்டு வார்த்தைகள் திட்டிவிட்டால் போச்சு. . .‘போடா. . . பொண்டுக சட்டி. . .உன் வவுசி தெரியாது. . .என் தூமச்சீலை. . .பெண்டாட்டி கவுட்டுக்குள்ளே கிடக்கிற பய. . . அவ . . . .நக்குற பயலே' என்று பேச்சு எகிறிவிடும். அப்புறம் ஆணுக்கு மானமாவது. . .மரியாதையாவது. . . அடிதடி எனப் பிரச்சினை முற்றிவிட்டால், ‘பொம்பளை சண்டைக்கிடையில ஆம்பள நீ ஏன் போனே' என்றுதான் நியாயம் சொல்லுவார்கள். வறுமை, கடும் உழைப்பு, மாமியார் கொடுமை எனத் துயரப்பட்ட பெண்கள், சாதாரணமான சின்னப் பிரச்சினைகளுக்குக் கூடச் ‘சண்டைக் கோழி' யாகக் கொக்கரித்தனர். அவ்வாறு மோதினால்தான், பேசினால்தான் கிராமத்தில மானம் மரியாதையாவது மிஞ்சும் என்று பெண்கள் நம்பினர்.
கிராமத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரிசுகள் அதிகாலையில் எழுந்து வைகை ஆற்றுக்குச் செல்லுவார்கள். கலங்கல் இல்லாத தெளிந்த தண்ணிரில் குளிப்பார்கள். இல்லாவிடில் தண்ணீர் வெளியேறும் வாய்க்காலுடன் பெரிய ஊற்றுத் தோண்டி, அதில் முங்கிக் குளிப்பார்கள். இத்தகைய ஊற்றுகள் பெரும்பாலும் ஆற்றுத் தண்ணீர் வருகிற வழியில், படித்துறையிலிருந்து ஒரு மைல் தூரமாவது தள்ளியிருக்கும். இதற்குக் காரணம் பெண்கள் யாரும் வந்து அந்த ஊற்றில் குளிக்கக் கூடாது என்பதுதான். அடுத்த நாள் காலையில் ஊற்றைப் பார்க்கும்போது, பெண்கள் குளித்திருக்கும் தடயம் எப்படியோ பெரிசுகளுக்குத் தெரிந்துவிடும். ‘வந்திட்டாளுக. . . கழுவிட்டுப் போயிட்டாளுக' என்று திட்டியவாறு, இன்னும் தள்ளிப் போய்ப் புதிய ஊற்றுத் தோண்டுவார்கள். பொதுவாகப் பெண்கள் இத்தகைய ஊற்றுப் பக்கம் போகவே மாட்டார்கள். கடுங்கோடையில், நீர் வறண்டிருக்கும்போது, வேறு வழியில்லாமல் ஊற்றில் குளிப்பார்கள். ஊற்றுகளுக்குக் குளிக்கப்போகும் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியாது. ‘பொம்பளைக என்னத்த வந்து ஊற்றில் கழுவிட்டுப் போயிட்டாக' என்று. ஏதோ மோசமானது; அருவருப்பானது; கெட்டது என்று புரிந்து கொள்ளுவார்கள். பெரிசுகளின் பேச்சுகளில் பெண்கள் பற்றிய பேச்சு வந்துவிட்டால் போச்சு. . . ‘கால் வழியே மூத்திரம் பெய்யுற பொட்டச்சி பேச்சைக் கேட்டுட்டு என்கிட்டே பேச வந்திட்டான்' என்று தன்னுடைய மகனைப் பற்றிப் பிறரிடம் சொல்லுவார்கள். ‘பொம்பளை பேச்சை நல்ல ஆம்பளைங்கிறவன் கேட்பானா’ என்பது பெரிசுகளிடையே நிலவிய வேதவாக்கு. பெண்கள் என்றாலே அருவருப்பிற்குரியவர்கள், கேவலமான ஜந்துக்கள் என்ற பிம்பம், இத்தகைய பெரிசுகள் மூலமாகவே சிறுவர்களின் மனத்தில் விதைக்கப்பட்டது. அது நாளடைவில் ஆழமாக வேரூன்றியது.
பெரும்பாலான ஆண்கள் கோவணம் அல்லது இடுப்பில் துண்டினைக் கட்டிக் குளிப்பார்கள். ‘அழுக்கு தீரக் குளித்தவனும் இல்ல, ஆசை தீரச் செஞ்சவனுமில்லே' என்று பாலுறவைப் பற்றிச் சொல்லுவார்கள். குளித்து முடித்தவுடன், நீருக்குள் நிர்வாணமாக நின்று, இடுப்பிலுள்ள துண்டை அவிழ்த்து, நீரைப் பிழிந்து விட்டு தலையைத் துவட்டுவார்கள். ‘ஆயிரம் பொம்பளை கிட்டே சாமானக் காட்டலாம், ஒரு ஆம்பளகிட்டே காட்டக் கூடாது' என்று சொல்லியவாறு துண்டை வேகமாக இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அதற்குள் கீழ்வானத்தில் சூரியக் கதிர்கள் ஒளிரத் தொடங்கியிருக்கும். ஏற்கனவே கட்டியிருந்த வேட்டியினை நீரில் அலசிப் பிழிந்து, அதன் இருமுனைகளையும் முதுகுக்குப் பின்னே விரித்துப் பிடித்தவாறு-காற்றில் உலர்த்தியவாறு- வீட்டை நோக்கிக் கிளம்புவார்கள். சிலர் நீரில் குழைக்கப்பட்ட திருநீற்றினை மூன்று விரல்களால் நெற்றி உடலெங்கும் பூசிக்கொண்டு, பளபளக்க நடந்து போவார்கள். விடிந்து எழுந்தால் யாருக்கு என்ன வில்லங்கம் செய்யலாம் என்று யோசித்தவாறு கண்களைத் திறக்கும் அயோக்கியர்கள், வயதான காலத்தில் திருநீற்றுப் பட்டையைத் தடவிக் கொண்டு நடந்து போவதை ஊரார் கேலியாகப் பார்ப்பார்கள்.
சிலர் எப்பொழுதும் கோழி இறகும் கையுமாகத் திரிவார்கள். இறகு இல்லாத போது தெருவில்போகும் கோழியை மெல்லப் பிடித்து இறகினைப் பிடுங்கிக்கொண்டு விட்டு விடுவார்கள். இறகின் நுனியை மட்டும் வைத்துக் கொண்டு பிற தூவிகளைப் பிடுங்கியெறிவார்கள். இறகின் நுனியை வாயில் வைத்து ஈரமாக்கி, அதனால் மெல்லக் காதுக்குள் நுழைத்து, இரு விரல்களால் மெல்லத் திருகுவார்கள். பிறரிடம் பேசிக்கொண்டே காது குடைவதில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். காதினை இறகினால் நுழையும்போது, கண்கள் சொக்கிக் காணப்படும். சிலருடைய வீட்டில் ஓட்டுத் தாழ்வாரத்தில் இறகுகளாகச் சொருகப்பட்டிருக்கும். ஓய்வு கிடைத்தவுடன் இறகை எடுத்துக் காதுக்குள் விட்டுக் கொண்டு, லேசாகத் தலையை ஆட்டியவாறு சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இன்னும் சிலர் சிறிய துணியின் நுனியை மெல்லத் திரித்து, மூக்கிற்குள் நுழைத்து ‘அச். . .அச்’ செனத் தும்மல்போடுவார்கள். மூக்கடைப்பு, சளியினால் தலை கனமாக இருக்கும்போது, தும்மினால் சளித்தொல்லை குறையும் என்பதற்காகத் தும்முவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மூக்குப் பொடியை மூச்சினுள் திணித்து மூக்கைத் தடவி விட்டுக் கொள்ளுவது பலரிடம் வழக்கமாக இருந்தது. யானைத்தந்தம், மாட்டுக் கொம்பு, தகரம் போன்றவற்றால் மூக்குப் பொடி டப்பாக்கள் பிரபலமாக இருந்தன. டப்பாக்களைக் கொடுத்து மூக்குப் பொடிகளை நிரப்பிக் கொள்வார்கள். எந்தவொரு கூட்டத்திலும் மூக்குப் பொடியை இரு கை விரல்களால் எடுத்து மூக்குக்குள் திணிப்பார்கள். T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி, N.V.S சண்முகம் பட்டணம் பொடி போன்ற மூக்குப் பொடிகள் மக்களிடையே பிரபலமாக இருந்தன. கடைகளில் சீனக் களிமண்ணால் ஆன ஜாடிகளில் மூக்குப் பொடிகளைக் கொட்டி வைத்திருப்பார்கள். அதிலிருந்து பொடியை எடுக்க நுனியில் சிறு குழியுடன் கூடிய இரும்புக் கரண்டி பயன்படும். சிலர் பொடி விற்கும் கடைகளில் ஓசி பொடி கேட்பார்கள். கடைக்காரர் தட்ட முடியாமல், கரண்டியில் பொடியை எடுத்து வேண்டாவெறுப்பாக நீட்ட, அதிலிருந்து ஒரு சிட்டிகையை எடுத்துக் கொண்டு ‘போதும். . . போதும்' என்று தலையை ஆட்டியவாறு, பொடியை மூக்குக்குள் திணிப்பார்கள்.
மூக்குப் பொடியைப் போடுவதில் ஆண்-பெண் எனப் பால் பேதமில்லை. சிறுவர்கள் விளையாட்டாக மூக்குப் பொடியைப் போட்டுத் தும்முவார்கள். சிலர் மூக்குப் பொடியை எடுத்து உதட்டுக்கும் ஈறுக்குமிடையில் திணித்துக் கொண்டு, அவ்வப்போது எச்சிலை வெளியே துப்பிக் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து பொடிபோடும் சிலர் வீட்டிற்குள்ளே நுழையும்போதே ‘பொடி வாடை' முன்னே வரும். பொதுவாகக் கிராமத்தினர் பலருக்கு சைனசைட்டிங் எனப்படும் நீர்க் கோர்வை, மூக்கடைப்பு நோய் இருந்திருக்கவேண்டும். மூக்கினுள் திணிக்கப்படும் பொடியின் காரத்தினால் வடியும் நீரினால் தற்காலிகமாகக் கிடைக்கும் குணத்தினால், பலர் மூக்குப் பொடி பாவிக்கின்றவர்களாக மாறியிருந்தனர். ஆனால் தமிழ்ச் சமூகம் மூக்குப் பொடி போடுவதனைக் கெட்ட செயலாகப் பார்த்தது. மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்குப் பீடி, சிகரெட், பொடி போடுற வழக்கமெதுவும் கிடையாது என்று பதில் கிடைக்கும். அந்தக் காலத்தில் மதுப்பழக்கம் என்பது அபூர்வமானது.
வெற்றிலை, பாக்கை விரும்பி மெல்லுகிறவர்கள் கிராமங்களில் நிரம்ப இருந்தனர். வெற்றிலை போடுவதால் வரும் மெல்லிய கிக்கினுக்கு ஆணும் பெண்ணும் அடிமைப்பட்டிருந்தனர். வெற்றிலையில் இளசு வெற்றிலை, முரட்டு வெற்றிலை என இரு ரகங்கள் இருந்தன. இளசு வெற்றிலை விலை கூட, எனவே அதனை வசதியானவர்கள் பயன்படுத்தினர். வெற்றிலையை எடுத்து தொடையிலிருக்கும் வேட்டியில் தடவி, காம்பையும், நரம்பினையும் கிள்ளியெறிந்துவிட்டு, சுண்ணாம்பு தடவிப் போடுதல் பெருவழக்காக இருந்தது. சின்னப்பிள்ளைகள் வெற்றிலை போட்டால் கோழி முட்டிவிடும் என்று பெரியவர்கள் கேலி செய்வார்கள். கணவன் மனைவி சேர்ந்து வெற்றிலை போட்டுவிட்டு நாக்கை நீட்டி நன்கு சிவந்திருக்கிறதா என்று கண்களைத் தாழ்த்திப் பார்ப்பார்கள். நாக்குச் சிவந்திருந்தால் எதிரிலிருக்கும் கணவன்; மனைவி மீது ரொம்ப ஆசை என்று பேசுவார்கள். வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டால், கணவன் மனைவிக்கிடையில் அன்பும் காமமும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்தது.
பரம்பரைப் பகையாகக் கிராமங்களில் பங்காளிகளுக்கிடையில் இருந்து வரும் முரண்பாடு பேசித் தீர்க்கப்பட்டதன் அடையாளமாக வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்ளுவார்கள். கல்யாண வீடுகளில் திருமண நிச்சயம் ஆகிவிட்டதைத் தெரிவிக்க பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்வார்கள். திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சடிக்காதவர்கள், வீடு வீடாகச் சென்று வெற்றிலை பாக்கு தந்து கல்யாணத்திற்கு வருமாறு அழைப்பார்கள். கிராமத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காகக் காளையை வளர்ப்பவர் வீட்டிற்குக் கிராமத்தினர் சென்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது வழக்கிலுள்ளது.
கிராமம் என்ற ஒற்றைச் சொல் இன்று வெவ்வேறு அர்த்தங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. என்றும் கிராமம் மேன்மையானது என்ற புனைவினை விலக்கிவிட்டு நோக்கும்போது, வாழ்வின் பன்முகத் தன்மைகளை தரிசிக்கலாம்.
******