முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
கறுப்புப் புரட்சி
இந்திரா பார்த்தசாரதி
புதிய விடியல்
வாஸந்தி
மார்க்சின் மறுபிறப்பு
சுகுமாரன்
பதற்றமாகும் நினைவு நாட்கள்
அ.ராமசாமி
போன மச்சான் திரும்பி வந்தான்!
இந்திரஜித்
பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்
ஆர்.அபிலாஷ்
கர்நாடக புத்திஜீவிகளும் தமிழக உணர்ச்சிப் பெருக்கும்
தமிழவன்
கனவு இல்லம்: கலைந்த கனவு
செல்லமுத்து குப்புசாமி
ராம் கோபால் வர்மாவின் ‘நிசப்த்’
யமுனா ராஜேந்திரன்
நடிப்பும் துடிப்பும்!
சுதேசமித்திரன்
உந்தன் கண்ணன் என்டே ஈசோ !
ஸ்ரீபதி பத்மநாபா
மௌனம் என்னும் புகலிடம்
பாவண்ணன்
சுஜாதா கொடுத்த சாக்லேட்
பாண்டியன்
கிராமத்துத் தெருக்களின் வழியே. . .
ந. முருகேசபாண்டியன்
காவி ராணுவம்
மனோஜ்
கவிதை
பிறகு ஏன் அழவேண்டும்?
இர.ஜெ.பிரேம்குமார்
நீ வந்து விட்டாய்
இன்பா சுப்ரமணியன்
துணைவரும் நிழல்
இவான்
திரையாலாகுவது...
லஷ்மி சாகம்பரி
என்றாள் காவ்யா
மதுமிதா
ஒற்றைக் கனவும், இரட்டைச் சிறகுகளும்
வே . முத்துக்குமார்
மழைக்கால டைரிக்குறிப்பு
ஞான தேஷிஹன்
அவனது கண்கள் வழியாக
ஹரன்பிரசன்னா
சிறுகதை
யதார்த்த மனுசி
கே.பாலமுருகன்
பொது
இது ஒரு தந்திரம்!
தமிழ்மகன்
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்
கழனியூரன்
புது நூல்
அமெரிக்க தேர்தல்
பாபுஜி
குளிர்கால கூட்டத்தொடர்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
கடித இலக்கியம்
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
கழனியூரன்
பழமொழிகளும் சொலவடைகளும்
'கி.ரா' - டாக்டர் அனந்தராமனுக்கு எழுதியது. . .
-
பொது
வாழை
சிவன்
கடிதங்கள்
சூஃபி சொன்ன கதை - பீவியும் பகவதியும்
ஹரன் பிரசன்னா
பதிவுகள்
நகர்வலம்
ஜெயகுமார்
சிற்றிதழ் பார்வை
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
-
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
-
போன மச்சான் திரும்பி வந்தான்!
இந்திரஜித்

தமிழ் முரசு அப்போது இரண்டு மாடி அலுவலகம். கிண்டல் செய்வதற்கு வசதியாக பக்கத்து அலுவலகமாக Singapore Casket இருந்தது. பணி அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே பிண அலுவலகம் இருப்பதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டே வேலை பார்க்க வேண்டும். நிறைய பேர் பணிக்காக சிங்கப்பூருக்கு வந்து பிணமாகும் நேரத்தில்தான் இந்தியாவுக்குத் திரும்பினர். காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து இரவு வரை வேலை பார்த்த பலரைத் தமிழ் முரசுக்குத் தெரியும். தமிழ் முரசு வாசகர்களுக்கு அவர்களில் ஒருவரைக் கூடத் தெரியாது.

இதெல்லாம் எனக்கும் கேஷ்டனுக்கும் தெரியாது. நான் சித்தியவானில் இருந்து கேஷ்டனைப் பார்க்க ஜொகூருக்கு வந்திருந்தேன். ஒரு விளையாட்டாகத்தான் முரசுக்குப் போன் போட்டு அரசு இருக்கிறாரா என்று கேட்டேன். அரசு பேசினார். அவரைப் பார்க்கச் செல்வது என்று முடிவெடுத்தோம். கேஷ்டன் ஒருநாள் விடுமுறை போட்டுவிட்டு என்னோடு புறப்பட்டார். பைக்கில் வந்தோமா அல்லது பேருந்திலா என்று நினைவு இல்லை.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு சந்திப்பு. லெவண்டர் ஸ்ட்ரீட்டுக்கு வந்தால் அப்போதும் இப்போது போலவே எமினன்ட் பிளாஸா இருக்கும். அதைக் கடந்தால் ஒரு குறுக்குச் சாலை. வாகனங்கள் அதிகம் இருக்காது. ஒரு சீன முனைக் கடையில் பழைய மனிதர்கள் இருப்பார்கள். கேஷ்டனுக்குக் கோப்பி எனக்கு டீ. மூன்று மணிக்காக காத்திருந்து முரசை நோக்கி நடந்தோம். கதவைத் தட்டலாம் என்று கையை உயர்த்தியபோது ஏமாற்றம் ஏற்பட்டது. கதவு இல்லை. உள்ளே இடப்பக்கத்தில் ஆசிரியர் பிரிவு. அதற்கு ஒரு கண்ணாடி போட்ட கதவு. உள்ளே சென்று `அரசு?` என்றதும் நேமிநாதன் என்று ஒரு முதியவர் எழுந்து எங்களை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார். நெஞ்சு வரை சிலுவார் போட்டிருப்பார் நேமி. பெரும்பாலும் பளுப்புநிறம்தான். அதற்கு மேல் கொஞ்சம்தான் இடம் கிடைத்தது என்பது போல் சிணுங்கிக் கொண்டு வெள்ளைச் சட்டை. எண்பது வயது இருக்கலாம். கண்ணாடி கிடையாது. மை இல்லா வெள்ளைமுடி. கோசாவுக்குக் கணக்குப் பிள்ளையாக இருந்தவர். கோசா இறந்தபோது பதினொரு வாகனமும் ஏழு கட்டடமும் இருந்ததாகச் சொன்னவர் அவர்தான். ஆனால் அப்போது சொல்லவில்லை. அப்போது பேசாமல் எங்களை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்.

ஆசிரியர் பிரிவில் இருந்து இடப்பக்கத்தில் ஒரு கதவு திறக்கும். மிகவும் முக்கியமான கதவு. கழிவறைக்குப் போவதாக இருந்தால் அப்படித்தான் போக வேண்டும். அதைவிட முக்கியமாக அச்சுக் கோப்பவருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் இடையிலான வாசல் அது. அச்சுக் கோக்கும் இடத்தைப் பார்த்தோம். அது எண்ணெய்த் துரப்பன மேடை போல் இருந்தது. எண்ணெய்த் துரப்பன மேடை அப்படி இருக்காது. சுத்தமாக இருக்கும். ஆனால் இது நிஜமாக எண்ணெய்த் துரப்பன மேடை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது.

எழுத்து என்று அந்த இடத்துக்குப் பெயர் வைக்கலாம். எழுத்து என்பது எண்ணெயும் புகையும் கொண்டது. மிகவும் கறுப்பானது. வெள்ளையான எழுத்து என்பது ஒரு நோய் போன்றது. கறுப்புதான் எழுத்துக்கு மரியாதை. எங்கும் எழுத்துச் சிதறிக் கிடக்கும். ஒவ்வோர் எழுத்துக் கோப்பாளருக்கும் ஒரு சங்கப் பலகை உண்டு. அதில் கோக்க வேண்டிய எல்லா எழுத்துகளும் `எசமான்!` என்று கோப்பவரைப் பார்த்தபடி ஏங்கிக்கொண்டிருக்கும். காதர்தான் அதில் இளைஞர். அவருக்கே வயது நாற்பது என்றார்கள். தமிழைப் போலவே மூத்திருந்தது தமிழ் முரசின் அச்சுக்கோக்கும் பகுதி.

நேமி தலைமையில் குறுக்காக நடந்து ஈசான மூலையில் இருந்த படியில் ஏறினோம். சுழன்று மேலே செல்லும் படிக்கட்டு. அதில் சுழன்று மேலே போனபோது அங்கு பழைய பத்திரிகைக் கிடங்கு இருந்தது. மூன்று அறைகள் இருந்தன. அதில் ஓர் அறையில் அரசு இருந்தார்.

கேஷ்டனும் நானும் அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்தபோது கொஞ்சம் பேசிவிட்டுச் சில செய்திகளைத் தந்து மொழிபெயர்க்கச் சொன்னார். கேஷ்டன் நாற்காலியில் தூங்கிக் கொண்டிருக்க, நான் சுமாராக எழுதிக் கொடுத்தேன். நாளைக்கு வேலைக்கு வர முடியுமா என்று கேட்டார். எங்கே தங்குவது என்று யோசித்து அச்சுக் கோப்பாளர் தங்கசாமியோடு வாடகை அறையில் தங்கிக் கொண்டேன்.

எனக்கும் கேஷ்டனுக்கும் அரசைப் பிடித்துவிட்டது. அப்போது அரசுக்கு 63 வயது. மெகா இளைஞர். உயரமாக இருப்பார். மை போடாத முடிதான். சின்ன ஜீவனில் இருந்து மீசையைக் காணாத முகம். அப்போதெல்லாம் ஜிலெட்தான் ஒரே சவரக்கத்தி. சவரத்துக்குப் பின் சவரம் சவரத்துக்குப் பின் சவரம் என்று அடிக்கடி வானொலியில் விளம்பரத்துக்குப் பின் விளம்பரம் வரும். அரசு அப்படித்தான் இருந்தார். அது புதிது. கேஷ்டனுக்கும் எனக்கும் மீசை இருக்கும். அந்த நாட்களில் மீசை இல்லாதவரை ஆயிரத்தில் ஒருவராகவே பார்ப்போம்.

முகம், பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் அரசிடம் அதற்குமுன் நான் எங்கும் காணாத தெளிவைப் பார்த்தேன். பத்திரிகை ஆசிரியர் என்றால் ஏதோ பறிகொடுத்தவர் போல் சுணங்கிப் போயிருப்பார் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே. அரசு ஏதோ ஒரு வங்கி நிர்வாகி மாதிரி பளிச்சென்று இருந்தார். மனக்கவலை இல்லாத முகம்.

நான் அதற்கு முன்பே மலேசியாவில் பத்திரிகைகள் சிலவற்றில் எழுதியிருக்கிறேன். அட்ரா சக்கை அட்ரா சக்கை என்று குதிப்பார்கள். பதினெட்டு வயதில் உலகம் தெரியாது. கவலையின்றி எழுதலாம். யாதொன்றும் கவலை ஒன்றை நான் ஒன்றும் அறியாதவனாகவே இருந்தேன். எதுவானாலும் எழுதுவேன். அரசுதான் எனக்கு முதல்முறையாக முழுச்சுதந்திரம் தந்தார். ஞாயிறு முரசானாலும் சரி எந்த நிகழ்ச்சியானாலும் சரி நான் வைத்ததுதான் சட்டம்.

இது ஏதோ எனக்குக் கிடைத்துவிட்ட அங்கீகாரம் என்று நினைத்தேன். அப்படி அல்ல. அரசு பொதுவாகவே இளைஞர்களை உற்சாகப்படுத்த விரும்பினார். அதற்காக ஒரு தலைமுறையைப் பகைத்துக் கொள்ள அவர் தயங்கவில்லை.

மரபுக் கவிதை ஒன்றுதான் கவிதை என்று தமிழ் நேசனில் கிழடுகளை வைத்துக் கொண்டு மலேசியாவில் கூத்தடித்த மாதிரி தமிழ் முரசில் ஏய்க்க முடியவில்லை. அரசு இளைஞர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார்.

முடிவெடுத்தார் என்றுகூடச் சொல்ல முடியாது. எது இயல்பாக இருக்கிறதோ அதற்குத் தடையாக அவர் இருக்கவில்லை. அது அவ்வளவு சுலபம் அல்ல. அப்போதெல்லாம் தமிழ்ப் பத்திரிகை என்பது முதியோர் பேட்டை. தமிழ் நாட்டுச் செய்தியைப் போடுவதுதான் சிங்கப்பூரில் தமிழ் முரசின் முக்கியமான வேலையாக இருந்தது.

வெட்டிங் கட்டிங் ஒட்டிங் என்றுதான் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பெயர். தமிழ் நாட்டில் முதல்நாள் வரும் பத்திரிகை இரவோடு இரவாக வந்து வெட்டி ஒட்டப்பட்டு அச்சில் ஏற்றப்படும். வெட்டிங்கில் இருந்து எந்தச் செய்தியைப் போடலாம் என்பதைத் தீர்மானிப்பவர் முக்கியமான நிபுணராக இருப்பார். அந்தத் திமுககாரர்தான் தமிழகச் செய்திகளைத் தேர்வு செய்வார்.

அரசு 1988ல் ஆசிரியராக வருவதற்கு முன்பு தமிழ் முரசும் தி மு க பத்திரிகையாகவே இருந்தது. சென்னைக் கடிதம் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது. அவர் வந்து சென்னைக் கடிதத்தை நிறுத்தினார். திமுக என்று இல்லாமல் இரண்டு தரப்பையும் போட்டார். நெடுஞ்செழியன் உறவினர் என்பதால் அவர் அதிமுக சார்பு எடுப்பதாகக் குறைபட்டுக் கொண்டவர்கள் அனைவரும் திமுக காரர்கள்!

அன்று மலேசியாவைப் போலவே சிங்கப்பூரிலும் திமுககாரர்கள்தான் பத்திரிகையில் வேலை பார்ப்பார்கள். திமுககாரர்கள்தான் பத்திரிகை வாங்கிப் படிப்பார்கள். அதிமுக என்றால் சினிமா பார்க்கும் கூட்டம், திமுகதான் பத்திரிகை படிக்கும் கூட்டம் என்று திமுககாரர்கள் சொன்னார்கள். `போங்கய்யா!` என்று அரசு அவர் பாணியில் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டார்.

முரசு சிங்கப்பூரில் இருந்து வருகிறது என்ற உணர்வைப் புகுத்தினார் அரசு! சிங்கப்பூர்ச் செய்திகள் எல்லாவற்றையும் தராவிட்டாலும் முடிந்தவரை தர வேண்டும் என்று நினைத்தார். சிங்கப்பூர் இந்தியர்களின் சாதனைக் கதைகளைப் போட வேண்டும் என்று விரும்பினார். சிங்கப்பூரில் என்ன நடந்தாலும் அது பற்றிச் சொல்ல வேண்டும் என்பதே அவருடைய பத்திரிகைக் கொள்கையாக இருந்தது. நல்ல தலையங்கம் எழுதினார். தினமும் பத்திரிகையில் தலையங்கம் வந்த காலம் அது.

ஒரு முறை ஜாலான் பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் சிராங்கூன் ரோடு கறுப்பாக இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சைக்கு இடமானது. தமிழர்களை அவர் புண்படுத்திவிட்டார் என்றார்கள். அது பற்றி மறுநாள் அரசு தலையங்கம் எழுதினார். சிங்கப்பூர் சமுதாயம் குடியேறிகள் சமுதாயம், நாம் அனைவருமே குடியேறிகள்தான். அதை மறந்துவிடக்கூடாது என்று கடுமையாகத் தீட்டிவிட்டார். அப்படி அவர் கடுமையாக எழுதுவது அபூர்வம்.

அரசு அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுதும் போக்குடையவர் அல்ல. அவருக்கு கதை, கவிதை ஆகாது. அவரது எழுத்து முழுமையாக ஒரு செய்தியாளரின் எழுத்து.

ஒரு செய்தியை எப்படி எழுதலாம் என்று அரசு போல் கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்கள் குறைவு. செய்தியை வேகமாகவும் சரியாகவும் சொல்லிவிடுவார்.

நான் பதினெட்டு மாதமே முரசில் அவரோடு வேலை பார்த்தேன். கருத்துச் சுதந்திரத்தில் முழு நம்பிக்கை உள்ளவர் அரசு.

அவரைவிட கருத்துச் சுதந்திரத்தில் அதிக நம்பிக்கையும் வெறியும் கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்துச் சுதந்திரத்தில் மட்டுமே நம்பிக்கை உள்ளவர்கள். எதிரான ஒரு கருத்து வரும்போது வழக்குத் தொடுக்கிறேன் என்று மிரட்டுவார்கள். மாற்றுக் கருத்துகளுக்கு அரசு போல் இடம் தந்தவர்களை நான் பார்த்ததே இல்லை.

அரசு அண்மையில் மிகவும் ஒடுங்கிப் போனார். இரண்டு வருடத்துக்கு முன்பு அவரைப் பார்த்தேன். அவர் அல்ல. வேறு அரசாக இருந்தார். நான் 1989ல் பார்த்த அரசுதான் இப்போதும் என்னோடு இருக்கிறார்.

முரசு அலுவலகத்தின் வாசலில் ஒரு கோப்பி இயந்திரம் இருக்கும். காலையில் வந்ததும் ஒரு கோப்பி வாங்கிக் கொண்டு வருவார். வாங்க, போகலாம் என்று என்னையும் அழைப்பார். நாற்பது வயதிலேயே சீனி சாப்பிட்டால் செத்துவிடுவோம் என்று அஞ்சுவோரை இப்போது பார்க்கிறோம். ஆனால் 63 வயதில் அரசு அது பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதே இல்லை. இயந்திரத்திடம் கூடுதல் சர்க்கரை கேட்டு வாங்கிப் போட்டுக் குடிப்பார். `யார்யா சொன்னது சீனி சாப்பிடக்கூடாதுன்னு?` என்பார்.

காலையில் நடந்துவிட்டு பத்து மணிக்கு வேலைக்கு வந்து சேருவார். மத்தியானம் காரில் கோமலா விலாசுக்கு அழைத்துச் செல்வார்.

நான் முரசைவிட்டு நீங்கிய பிறகு ஒருநாள் அவருக்குப் போன் போட்டேன். அரசு இந்தோனேசியாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அவர் வந்ததும் உடனே கூப்பிட்டேன். எப்படிய்யா தெரிஞ்சது என்றார். தலையங்கம் படிச்சேன் என்றேன். அதே பழைய பலமான சிரிப்பு.

`போன மச்சான் திரும்பி வந்தான்!` என்று அன்று தலையங்கம் எழுதியிருந்தார்.

இப்போது அரசு போய்விட்டது காலையில் அன்பரசன் போன்போட்டுச் சொல்லித்தான் தெரியும். நானும் அன்பாவும் அரசைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தோம். உண்மையில் அரசைப் போய்ச் சந்திப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் பார்த்த அரசு வேறு. அந்தப் புகைப்படத்தை மாற்ற விரும்பவில்லை.

அரசு இரண்டு விதமான மனிதர். எல்லோரையும்போல்தான் என்று நினைக்கிறேன்.

லீ குவான் இயூ பற்றி அரசு சொன்னது அவருக்கும் பொருந்தும்.

எதிர்ப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட அதே தீவிரத்தோடு ஆதரிப்பவர்களிடம் மிகுந்த அன்பும் கருணையும் காட்டினார் வை திருநாவுக்கரசு.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com