
நேற்றுவரை போர்த்திக்கொண்ட
மாயையிலான...மாந்திரீகத்திலான
நாகரிகத்திலான அநாகரிகத்திலான
பல அடுக்குகளைத் தாண்டியேகிய
தேகம் இது
நகரைக் கடந்து அசப்போக்கிலொருநாள்
வெட்டவெளிக் காட்டுக்குள்
நிர்வாணமாய்த் திரிகையில்
எனக்குள்ளிருந்த குரோதங்களனைத்தும்
இறக்கை முளைத்து
நாராசமாய்ப் பேரொலியெழுப்பி
அத்தனை வனவிலங்குகளையும்
ஒரு கணம் நிலைகுலையச் செய்தன
எனது முந்தைய குரோதங்களின் பேரொலியைத்
தங்களுக்கான விதவிதமான உரையாடல்களால்
மனித மொழிகளுக்கப்பாற்பட்டு
மிகக் கச்சிதமாய் முடித்துக்கொண்டன
அவற்றோடூடாடுகையில்
நகரங்களைப் போலிராத
வனமே வாழ்க்கையான வடிவத்தில்
இம்மியும் பிறழாத
அவற்றின் மெய்ம்மையில்
என்னை நானே நுணுகிப் பார்க்கிறேன்
ovilak@yahoo.com