முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்

விண்கலம் ஒன்றை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்ட ஒரு அறிவியலறிஞர் அதைப் பற்றி சமீபத்தில் பெருமிதமாகப் பேசினார். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட அந்தக் கணத்தில் தாய்மை உணர்வு அடைந்ததாக அவர் கூறினார். '10, 9, 8, 7...' என்று கவுண்ட் டவுன் இருந்த நேரம் ஒரு தாய் அடையும் பிரசவ வேதனையை அடைந்ததாக அவர் உணர்ச்சியுடன் விளக்கினார். ஒரு தாய் அடையும் உயர்ந்த அளவு வேதனை பிரசவ வேதனை என்றும், அதற்குப் பிறகு தாய் அடையும் மகிழ்ச்சி மட்டற்றது என்றும் அவர் பேசினார். ஒரு தாயின் பிரசவ வேதனையும் அதற்குப் பிறகு கிடைக்கும் மகிழ்ச்சியும் எந்த அளவுக்கு உயர்ந்தவை என்று உணர்ந்ததாகவும், தாய்மை எனும் உணர்வை தான் அடைந்ததாகவும் அவர் விளக்கினார். ஒரு தாய்க்கு தன் மகன் வெற்றியடையும்போது எத்தனை பூரிப்பு இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பேச்சில் உருவகம் தவிர்க்க முடியாதது. உருவகம் இல்லாத மொழி இல்லை. பல பழமொழிகள் உருவகமாகத்தான் இருக்கின்றன. கவிதை உருவக அடிப்படை கொண்டது. உருவகம் மட்டுமே கொண்ட பல கவிதைகள் உள்ளன. 'உருவகக் கவிஞர்கள்' என்ற தனி அடையாளம் கொண்ட கவிஞர்கள் உண்டு. உருவகத்தின் தளம் கவிதைக்கு கவிதை மாறுபடுகிறது. ஒரு கவிதையே உருவகமாகிவிடுவதுண்டு. உருவகமும் உண்மையும் கலந்து ஒரு கவிதை வடிவம் பெறுவதுண்டு. உண்மை உருவகம் போலத் தெரிவதுண்டு. உண்மையின் தூல வடிவங்கள் உருவகம் போல ஆவது உண்டு. கவிதை தரும் பொருள் உருவகமாகப் படிவதுண்டு. இந்தச் சாரங்கள் கவிதைக்கு மட்டும் அல்ல. எந்த ஒரு எழுத்துப் படைப்புக்கும் பொருந்தும். திரைப்படம் போன்ற கலை வடிவங்கள் பெரும்பாலும் யதார்த்தம் போன்ற சொல்லாடலைக் கொண்டிருந்தாலும் அவற்றையும் ஏதோ ஒன்றின் உருவகமாகக் கொள்ளலாம். சொல்லாடல்களே உருவகங்களாக ஆகிவிடுவதுண்டு. எல்லாச் சொல்லாடல்களும் உருவகங்களே. அல்லது குறியீடுகளே. ஒரு சொல்லாடலின் குறியீடும், உண்மையும், கற்பனையும் தொடர்ந்து கட்டுடைக்கப்பட வேண்டியதாக இருக்கின்றன. மனித வரலாறே கட்டுடைக்கப்பட வேண்டியதுதான். மனிதனின் உடல் வரலாறும், மன வரலாறும் கட்டுடைக்கப்பட வேண்டியதாக நீண்டுகொண்டிருக்கின்றன. கலைப்படைப்புகள் ஒரு வாழ்வின் குறியீடுகளாக, கற்பனைகளாக, உண்மைகளாக அமைந்து விடுகின்றன. உண்மை என்பதே குறியீடாகவும் கற்பனையாகவும் இருந்து விடுகிறது. தின வாழ்வில் பேசப்படும் மொழியும் இப்படித்தான் குறியீடாகவும் கற்பனையாகவும் இருக்கிறது.

ஒரு விண்கலத்தைத் தயாரிக்கும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டிருக்கும். அது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்போது மன நெருக்கடி இருந்திருக்கும். அது தோற்று விடுமோ என்ற கவலை இருந்திருக்கும். அது வெற்றியடையும் போது வெற்றி உணர்வு வந்திருக்கும். சாதித்த திருப்தி கிடைத்திருக்கும். வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் இயல்புதான். ஆனால் வெற்றி என்பது மனித வரலாற்றை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போவதாக இருக்கிறது. வாழ்வின் இருளையும் மரணத்தின் இருளையும் அறியும் முயற்சியாக ஒவ்வொரு கண்டுபிடிப்பும் இருந்துவிடுகிறது. அது அறிவியல் வெற்றியாக இருந்தாலும், ஒரு விளையாட்டு வெற்றியாக இருந்தாலும் பெரும் மகிழ்ச்சியையும் சாதனை உணர்வையும் தந்துவிடுகிறது. உணர்வுகளின் அரசியல் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அறியாமல் இருக்கும் வரை மனித வாழ்வு நிச்சயம் கொண்டது போல் இருக்கும். தனிமனித வாழ்வாக இருந்தாலும், பொது வாழ்வாக இருந்தாலும், அது நிச்சயம் என்று உணர்ந்தால்தான் மரணத்தை தள்ளிப் போட்ட உணர்வு மனிதனுக்குக் கிடைக்கும்.

விண்கலத்தைத் தயாரிக்கும்போதும், ஏவும்போதும் அடைந்த உணர்வுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவை அதீத உணர்வுகளாக இருக்கும். அந்த உணர்வுகளை பல வகைகளில் ஒரு மனித மனம் பார்க்கக் கூடும். அந்த அறிவியலறிஞனின் மனித மனம் அந்த உணர்வை தாய்மையுடன் உருவகப்படுத்திவிட்டது. ஒரு பெண் கருவாகி பிரசவிக்கும் உணர்வை ஒரு ஆண் அனுபவிக்க முடியாது. கற்பனையும் செய்ய முடியாது. அது தாய்மை உணர்வு என்று மனித வரலாறு மொழிப்படுத்திவிட்டது. தாய் அடையும் தாய்மை உணர்வை தந்தை அறிய முடியாது. தந்தை அடையும் தந்தைமை உணர்வை தாய் அடைய முடியாது. அப்படி இருப்பது போல் கற்பனை செய்துகொள்ள முடியும். விண்கலம் ஏவப்படும்போது பிரசவ வேதனை அடைந்ததாக அந்த அறிவியலறிஞர் கூறினார். அந்த விண்கலத்தைத் தயாரிக்கும்போது என்ன உணர்வை அடைந்தாரோ. ஒரு தாய் தாய்மை எனும் உணர்வை அடைவதற்கு முன்னோடியான போக்குகளின் உணர்வை அந்த அறிவியலறிஞர் எப்போது அறிந்தாரோ. இந்த விவரணை மூலம் விண்கலம் தயாரிப்புப் பணி எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடப்படவில்லை. ஒரு உழைப்பாளி எந்த உழைப்பை வெளிப்படுத்தினாலும் அது உயர்ந்ததுதான். எந்த ஒரு உழைப்புக்கும் படைப்புக்கும் மனித வரலாற்றில் ஒரு இடம் உண்டு. ஒரு பங்கு உண்டு. அனைத்து மனிதர்களின் உணர்வுகளுக்கும் மனித வரலாற்றில் பெரும் பங்கு உண்டு. ஒன்றை இன்னொன்றாக மாற்றிப் பார்ப்பது மொழி. மாற்றிக் காட்டுவதை அனுபவிப்பது உணர்வு. மாற்றி மாற்றிக் காட்டி வாழ்வதே வாழ்வு. அந்த மாற்றங்களை வடிப்பதும் அந்த மாற்றங்களை ஆராய்வதுமாக வரலாறு போய்க்கொண்டிருக்கிறது.

அந்த விண்கலம் தன் காலத்திற்கு முன்னாலேயே தன் செயல்பாட்டை இழந்துவிட்டது. அதை அந்த அறிவியலறிஞர் எப்படி உணர்ந்திருப்பாரோ. தாய்மை உணர்வு என்ன ஆகியிருக்குமோ. தான் பெற்ற பிள்ளை தன் வினையாற்றி வெற்றி கொண்டுவிட்டது என்று நினைத்திருக்கலாம். வெற்றி கொண்ட பிள்ளை தன் 'விதி' தீர்ந்து வாழ்வை முடித்துக்கொண்டது என்று நினைத்திருக்கலாம். இனி அடுத்த பிள்ளை பெற வேண்டியதுதான். அடுத்த பிள்ளையும் தயாராக இருக்கிறது. அதுவும் விரைவில் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. மீண்டும் ஒரு 'பிள்ளைப்பேறு.' மீண்டும் ஒரு பிரசவம். மீண்டும் ஒரு தாய்மை உணர்வுக்கான வாய்ப்பு. அந்தப் பிள்ளையும் விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்தி மெதுவாக வாழ்வைத் தீர்த்துக் கொள்ளும். அந்த அறிவியலறிஞர் தொடர்ந்து பிள்ளை பெற்று சாதனைகளை நிகழ்த்த வைத்தால்தான் நாட்டில் அறிவியல் முன்னேறும். நாடு வல்லரசு ஆகும். நாட்டு மக்கள் எல்லாம் புது வாழ்வு பெறுவர்.

குறியீடுகளால் நிறைந்த வாழ்வு குறியீடுகளால் நிறைவு பெறுகிறது. ஒரு திரைப்படம் என்ற குறியீடு யதார்த்தம் என்ற வகையில் எப்போதும் சேர்ந்து விடுகிறது. தாய்மை என்ற உணர்வு திரைப்படங்களில் நடிப்பாகக் கூட பல சமயங்களில் பதிவு ஆவதில்லை. 'ராம்' என்ற திரைப்படத்தில் தாயாக சரண்யாவும் மகனாக ஜீவாவும் நடித்தார்கள். திரையில் அவர்கள் தாய், மகன் என்ற உணர்வைத் தந்தது போல் இல்லை. அப்படி பார்வையாளர்கள்தான் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்குள் ஒரு நடிகன், நடிகை என்ற உணர்வுதான் திரையில் தெரிந்தது. பாச உணர்வைக் காட்டும்போதும் துரத்தி விளையாடும்போதும் ஒரு கதாநாயகன், கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொள்ளும் நடிகை என்றுதான் அவர்கள் திரையில் தெரிந்தார்கள். முக்கியமாக ஜீவா சரண்யாவை ஒரு சக வயது நடிகை போலத்தான் பாவித்து நடித்தார். 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' என்ற படத்திலும் அர்ச்சனாவும் தனுஷும் தாய், மகன் என்ற நடிப்பை முழுதுவதுமாகத் தரவில்லை. ஆடிப் பாடி கட்டி அணைத்துக்கொள்ளும் காட்சிகளில் ஒரு நாயகி நாயகனாக, ஒரு ஆண் பெண்ணாகத்தான் அவர்கள் நடித்தார்கள். இது போன்ற உணர்வுகளை அவர்கள் உணராமல் இருந்திருக்கலாம். இயக்குனர்கள் உணர்த்தாமல் போயிருக்கலாம். இயக்குனர்கள் உணர்ந்திருந்தால்தானே உணர்த்துவார்கள். பார்வையாளர்களும் இவற்றை உணரத் தவறியிருக்கலாம். தாய்மை என்று உணர்வு நடிப்புகூட ஆகாமல் போயிருப்பதற்கு இவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். நிஜ வாழ்வில் தாய்மை என்ற உணர்வு குறியீடுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்த மகளை, 'இது உங்கள் தங்கையா,' என்று மற்றவர் கேட்கும்போது பூரித்துவிடும் பல தாய்மார்கள் இருக்கிறார்கள். அங்கு தாய்மையும், தங்கைமையும் ஒன்றாய் நடிக்கப்படுகின்றன. வளர்ந்த மகன் தம்பியா என்று மற்றவர்கள் கேட்கும்போது தாய்க்கு ஒரு நடிப்பு சாத்தியம் ஆகிறது. தன் மகன் தன் வயதைவிட குறைவான வயதுகொண்ட ஒரு இளைஞன் என்ற உணர்வுதான் ஒரு தாயிடம் பதிலி செய்யப்படுகிறது. ஒரு பெண், ஒரு இளம் ஆண் என்ற நடிப்பு மனதில் உணர்வாய் உருப்பெறுகிறது.

உணர்வுகளின் அரசியல் குறியீடுகளால் நிறைந்தது. மனிதனுக்குள் ஆதி காலத்திலிருந்து துரத்தி வரும் உணர்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. நவீன காலம் என்பது உணர்வுகளின் குறியீடுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றாகத் தொடர்ந்து உருவகம் பெற்றுத்தான் வருகிறது. எத்தனையோ பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதற்குத் தாய்மை என்று பெயர் கொடுக்கப்பட்டுவிட்டது. எத்தனையோ அறிவியலறிஞர்கள் விண்கலத்தை ஏவுகிறார்கள். தாய்மை உணர்வை அடைந்ததாக கற்பனை செய்துகொள்கிறார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. தாய்மை உணர்வை ஒரு மனித இனம் அடைவதை எப்படித் தடுக்க முடியும்?

knijanthan@gmail.com

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com