முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி

அவ அந்நியக்காரி; அதனாலே தான் மாமனையோ அத்தைக்காரியையோ கவனிக்க மாட்டேங்குறா. சொந்தபந்தத்திலயிருந்து ஒருத்தி வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா? ’ - இந்தப் பேச்சில் வரும் அந்நியம் என்ற சொல் அயல் நாடு , அயல் மாநிலம், வேறு மாவட்டம் என இடம் சார்ந்த அந்நியத்தைக் குறிக்கும் சொல் அல்ல. வேற்று மதம், வேறு சாதி அல்லது துணைசாதிகளில் மாறுபாடு என்பதான பண்பாட்டு அந்நியங்களையோ கூடக் குறிக்கவில்லை.

அந்நியம்’ -இந்தச் சொல் கிராமிய வாழ்க்கையில் உச்சரிக்கப்படும் நிலையில் மிகுந்த நெருக்கம் இல்லை என்ற அர்த்தத்திலேயே குறிக்கப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது.

ரத்த உறவு கொண்ட மாமன் மகள், அத்தை மகள் அல்லது அக்கா மகளைக் கல்யாணம் செய்து கொள்ளும் வழக்கம் கொண்ட சாதிக்குழுக்கள் அதிகம் நிரம்பிய இந்திய சமூகம், இந்தச் சொல்லைத் திருமணங்கள் சார்ந்த சொல்லாகவே அதிகம் பயன்படுத்துகின்றன. ஆனால் இன்று அந்நியமாக்குதல் அல்லது அந்நியமாதல் என்ற சொல் தத்துவம் சார்ந்த சொல்லாகவும், பொருளியல் சார்ந்த கலைச்சொல்லாகவும் தீவிரமான அர்த்தத்தளத்தில் பயன் பட்டு வருகிறது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, அதை ஆளுங்கட்சியாக மாற்றிய வரலாற்றிற்குத் தனது எழுத்தாலும் பேச்சாலும் பெரும் பங்களித்த அதன் சி.என். அண்ணாதுரை எழுதிய கதை ஒன்று இப்படி முடிகிறது:

ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?’ என்று கேட்டான் கரியன்

இல்லேடா கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா- அந்தப் பாடையிலே கட்ட" என்றான் செங்கோடன்

அலங்காரப்பாடையிலே செவ்வாழையின் துண்டு!

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும் மற்ற குழந்தைகளும் பின் பக்கம்

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான் - " எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று

" எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழை குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்துட்டோம் என்றான் கரியன்.

பாபம்! சிறுவன் தானே! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வசாதாரணச் சம்பவம் என்பதை.

கதையின் கடைசி வரியாக அண்ணா, ‘தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணம்என்று எழுதும் போது அதற்குள் ஒரு அந்நியமாக்கப் படும் நிகழ்வொன்றை சொல்லுகிறார்.

"கடையிலே செவ்வாழைச் சீப்பு அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பு முதலிலேயே தீர்த்துவிட்டான் - அவன் விற்றான் கடைக்காரனுக்கு - அவன் எதிரே ஏக்கத்துடன் நின்றான் கரியன்.

கரியன் - செங்கோடனின் மகன் தனது வீட்டுத்தோட்டத்தில் இருந்த செவ்வாழைப் பழங்களில் ஒன்றை வாங்கப் போன போது, " பழம் ஒரு அணாடா பயலே -காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமோ - போடா"

செங்கோடனின் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்து குலை தள்ளிய வாழைத்தாரிலிருந்து ஒரு பழத்தை வாங்கும் திராணியற்று - கையில் காலணா தான் இருக்கிறது; பழத்தின் விலையோ ஒரு அணா- விரட்டியடிக்கப் படுதல் தான் அந்த அந்நியமாதல் நிகழ்வு. இங்கே ஒரு பொருள் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு அதன் மேல் லாபம் என்ற ஒன்று ஏற்றப்படும் போது அதனை உற்பத்தி செய்தவனிடமிருந்து அந்நியமாக்கப் படுகிறது என்ற பொருளாதார கோட்பாட்டை எழுதிக் காட்டுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்த்துவதற்காகவே , "தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார் என்பதும் புரியப் பட வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ள அவர் எழுதியுள்ள செவ்வாழை என்ற கதையின் நிகழ்வு வரிசைகளுக்குள் நாம் செல்ல வேண்டும். அந்தக் கதை இப்படித் தொடங்கி நீள்கிறது:

செங்கோடன் , அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் கொல்லைப் புறம் சென்று செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப் பட்டு இருக்கிறதா என்று கவனித்து விட்டுத் தான் தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும்போதும் அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். கரியனிடம் - அவனுடைய முதல் பையன் காட்டியதை விட அதிகமான அன்பும் அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்று பொறாமை கூட ஏற்பட்டது குப்பிக்கு.

*******************

 

 

மூத்த பயல் கரியன் செவ்வாழைக் குலை தள்ளியதும் ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான் என்று சொல்லுவான்.

ஒண்ணு கூட எனக்குத் தரமாட்டாயடா - நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன். கவனமிருக்கட்டும் - வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன். கவனமிருக்கட்டும்" - என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்.

கரியனின் தங்கை காமாட்சியோ , கண்ணைச் சிமிட்டிக் கொண்டே " உனக்கு ஒரு சீப்புன்னா எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றாவது பையன் முத்து, "சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க - ஆமா- பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துடுவாங்களோ, யாரு கண்டாங்க" என்று சொல்லுவான் - வெறும் வேடிக்கைக்காக அல்ல; திருடியாவது மற்றவர்களை விட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்து விட்டான்.

" இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா!" கரியன் கேட்பான் ஆவலுடன் செங்கோடனை,

" இரண்டு மாசமாகுமடா கண்ணு" என்று செங்கோடன் பதிலளிப்பான்.

 

 

செவ்வாழை குலை தள்ளியது- செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டு விட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையைப் பெருமையுடன்.

************************

 

 

ஒரு நிகழ்வு ஒரே வெளியில் நடந்து கொண்டிருந்தாலோ, அந்நிகழ்வில் பங்கெடுக்கும் பாத்திரங்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாலோ கதையாக மாறுவதில்லை. செவ்வாழைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் கதாசிரியர், பண்ணை பரந்தாம முதலியார் வீட்டைப் பற்றிய குறிப்பைத் தருவதன் மூலம் அதைக் கதையாக ஆக்குகிறார். அதுவும் செவ்வாழையையும் முதலியாரின் மருமகளின் வைரமாலையையும் ஒப்புமைப் படுத்தும் விதமாகப் பின்வரும் குறிப்புகளைத் தரும்போது கதை முரண் உருவாக்கப் படுகிறது.

பண்ணை பரந்தாம முதலியார் தமது மருமகப் பெண் முத்து விஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைரமாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைரமாலையைவிட விலை மதிப்புள்ளதாகத் தோன்றிற்று.

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர் தமது மருமகப் பெண் முத்து விஜயாவின் பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். பழம் தேவைஎன்று தோன்றாமலிருக்குமா? இரண்டு சீப்பு வாழைப்பழம் என்றார் பண்ணையார்.

" ஏனுங்க பழம் - கடையிலே நல்ல பழமே இல்லை - பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

" சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்? - வேறே நல்ல பழம் எங்கே இருக்கு!" என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள் சுந்தரம், " நம்ம செங்கோடன் கொல்லையிலே தரமா ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க - அதைக் கொண்டுகிட்டு வரலாம்" என்றான். சரி என்றார் பண்ணையார்

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு அன்னநடை நடந்து அழகு முத்துவிஜயா, அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பு முதலிலேயே தீர்த்துவிட்டான் - அவன் விற்றான் கடைக்காரனுக்கு - அவன் எதிரே ஏக்கத்துடன் நின்றான் கரியன்.

முதலாளியப் பொருளாதார முறையில் , உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பண்டமும் பொருளும் உற்பத்தியாளனிடமிருந்து அந்நியமாக்கப்படுகிறது என்பதைக் கார்ல் மார்க்ஸ் முக்கியமான கோட்பாடாக விவரிக்கிறார். அப்படி அந்நியமாக்கப்படும் சூழ்நிலைக்குக் காரணம் இடைத் தரகர்களும், லாபம் அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபார உத்திகளுமே என்கிறார். அவை கூர்மையடையும் நிலையில் அல்லது வளர்ச்சி அடையும் நிலையில் தொழிலாளர் வர்க்கம் தன்னுணர்வு பெற்ற வர்க்கமாக மாறிக் கோபம் கொள்ளும்; போராட்டத்திற்குத் தயாராகும் என்பது அவர் உருவாக்கிய சித்தாந்தம்.

சி. என். அண்ணாதுரை உருவாக்கிய திராவிட இயக்கம் இந்த நடைமுறையைப் பயன்படுத்திச் சமூக மாற்றத்தை உருவாக்க நினைக்கவில்லை என்பது வெளிப்படையான வரலாறு. பரப்பியத்தன்மை கொண்ட பேச்சுக்களாலும், சாத்தியங்களற்ற உறுதிமொழிகளை அளிப்பதன் மூலமும் மக்களின் திரட்சியை உருவாக்கி வழி நடத்தும் உத்தியையே அவை பின்பற்றுகின்றன. ஆனால் அவ்வியக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை தான் எழுத்தாளர் என்ற தன்னுணர்வின் போது மார்க்சின் அந்நியமாதல் சித்தாந்தத்தை அறிந்தவராகவும், அதைக் கலை இலக்கியத்தின் உள்ளடக்கமாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்தவராகவும் இருந்தார் என்ற உண்மையை இங்கே நினைவு படுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com