பிளாந்தையர் மில்லினியம் சிட்டிகளுள்(Millienium City) ஒன்றாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது என்ற தகவலுடன் என்னை அவர் என் அலுவலகத்தில் வந்து சந்தித்தார். யுஎன்-ஹாபிட்டடில்(Un-Habitat) முக்கிய பொறுப்பிலிருப்பவர்; பரபரப்பாக உலகை சுற்றிக் கொண்டிருப்பவர். மலாவியில் தங்கப் போவது நான்கே நாட்கள். அதில் இரண்டு மணி நேரங்கள் என்னுடனான் சந்திப்புக்கென ஒதுக்கி வைத்தார். பேசிக் கொண்டிருந்தோம்.
மில்லினியம் சிட்டி என்றால் என்ன? யுன் யுஎன்-ஹாபிட்டடின் நோக்கமென்ன?
சுருக்கமாகக் கூறினால் முன்னேறும், முன்னேறிக் கொண்டிருக்கும், முன்னேறாத நாடுகளில், முன்னேறும், முன்னேறிக் கொண்டிருக்கும் நகரங்களை இனம் கண்டு, தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மில்லினியம் சிட்டி என்று செல்லப் பெயர் இட்டு, அவற்றின் முன்னேற்றத்தை, அனைத்து வகைகளிலும் ஊக்குவித்தல்.
இதில், நகரங்களை பரந்து விரித்து முன்னேற்றிக் காட்டினால் ஒரு தேசம் முன்னேறி விடுமா? - இது போன்ற கேள்விகளை கேட்டீர்களென்றால், நீங்கள் உலக நடப்பு தெரியாத கற்கால மனிதர். அப்படி ஒரு அவப் பெயர் வாங்கிக் கொள்ளும் உத்தேசம் உங்களுக்கு இருக்குமென்றால் அது பற்றி தொடர்ந்து பேசலாம். எனக்கு இல்லை, ஆகையால் அதைவிட சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டேன். முதல் ஒரு மணி நேரம், ஒரு நிறுவனமாக எங்கள் உற்பத்தி பிளாந்தையரின் வளர்ச்சியில் எவ்வளவு முக்கிய பங்கு வைப்பது என்று எடுத்துறைத்து, எங்கள் உற்பத்தி அளவை பெருக்க அவர்களால் எந்த வகையில் உதவ முடியும் என்று ஆலோசித்தேன். பெரிய பலன் என்று ஒன்றுமில்லை; என்றாலும் என் கடமை இனிதே நிறைவேறியது. பிறகு அடுத்த அரை மணி நேரம், நண்பர், சுற்றி வந்த தேசங்களின் ஹோட்டல்கள், அவற்றின் பிரசித்தி பெற்ற உணவு வகைகள், என்று பேசிக் கொண்டிருந்தோம்.
சமீப காலமாக இப்படி நிறைய சந்திப்புகள் நிகழ்கின்றன. இந்தியாவிலிருக்கையில் செய்தித் தாள்களில் மட்டுமே பெயரறியக் கிடைக்கும் வகையான முக்கிய பிரமுகர்களை, மலாவிக்குள் நுழைந்த இந்த ஒரு சில வருடங்களில் நேரில் சந்தித்து, உரையாடக் கிடைத்திருக்கிறது.
இதில் பல சந்திப்புகள் எதிர்பாராதாவை, வேடிக்கையானவை...
இரண்டாம் கை பொருட்களுக்கான ஏலத்தை ஏற்பாடு செய்யும் நிறுவனம் அது; செய்தித் தாளில் விளம்பரம் செய்திருந்தார்கள். ஏலத்துக்கு வரும் பொருட்களில் கணினி முதல், அலுவலக உபயோகத்திற்கான மேஜை, நாற்காலி, கோப்புகளை அடுக்கி வைக்கும் கேபினட், வீட்டு உபயோகத்திற்கான, கட்டில், மெத்தை, போர்வைகள், ஜன்னல் திரை சீலைகள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், என சகலமும் அடக்கம்.
நாங்கள் அப்போது தான் புது அலுவலகம் ஒன்றினை கட்டி முடித்திருந்தோம் என்பதால் ஏதாவது நல்ல பொருள் மலிவு விலையில் சிக்குமா பார்த்து விடலாம் என்பது எங்கள் நிறுவனத்தின் ஆர்வம். ஏலத் தொகைகளை முடிவு செய்ய வேறு யாரையும் அனுமதிக்க முடியாததென்பதால் பொறுப்பு என் வசம் ஒப்படைக்கப் பட்டது. ஒரு பரபரப்பான வேலை தினத்தில், கைபேசி சினுங்கிக் கொண்டே இருக்க இப்படி ஏலத்துக்கு வந்து நிற்பதில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தாலும், முதல் முறை ஒரு ஏலத்திற்கு செல்வதால் அதற்கேயுரிய ஆர்வமும் குறுகுறுப்பும் ஒரு புறம் இருக்க பல்வேறு யோசனைகளுடன் ஏலமிடும் இடத்தினுள் நுழைந்தேன்.
ஒரு நொடி கல்யாணத்துக்கு சாமான் பரப்பிதை போல இருந்தது, அடுத்த நொடி கண்காட்சி போலவும் தோற்றமளித்தது.
எடுத்தவுடனே கண்ணில் தென்பட்டவை கணிப் பொறிகள்; திறந்த வெளியில்,சிமென்ட்டு தரையில், பத்து மணி வெயிலில், சுடச் சுட அமர்ந்திருந்தன. இப்படி தரையில் கிடத்தியிருக்கிறார்களே, இவை எல்லாம் இனி வேலை செய்யுமா என்று முணு முணுத்தேன். அருகிலிருந்தவர் சினேகமானதொரு ஒரு புன்னகையை சிந்தினார். நானும் பதிலுக்கொரு புன்னகையை பரிமாறினேன். எங்கள் கவனம், இதில் இனி அந்த கணிப் பொறிகள் மீது நிலைக்கத் தேவையில்லை என்று அந்த புன்னகையில் பரஸ்பரம் உணர்த்திக் கொண்டோம்.
ஏலம் துவங்கியது. முதலில் அலுவலக சாமான்களுக்கான வரிசை. மேஜைகள் மற்றும் கேபினட்டுகளுக்கான போட்டி துவங்கியது. முன்பு அருகிலிருந்து புன்னகை சிந்திய அந்த மனிதர், இப்போது நடு நாயகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தார். சிலவற்றின் விலைகள் புது பொருட்களின் விலையை விட அதிகம் கொடுத்து அவரால் வாங்கப் பட்டது. சமரசமே இல்லை ,நான் விரும்புவது எனக்குத் தான் என்று முடிவெடுத்து விட்டது போல் தென்பட்டார். ஒரே ஒரு இளைஞன் மட்டும் தனது நிறுவனத்தின் சார்பில் அவருடன் போட்டி போட்டு தொடர்ந்து தோத்துக் கொண்டிருந்தான். நானெல்லாம் வாயையே திறக்கவே இல்லை; இவ்வளவு பணம் கொடுத்து இரண்டாம் கை பொருட்களை வாங்குவார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. அதிவேகத்தில் ஏலத்தை முடித்து கொண்டிருந்த அவரை பார்க்கப் பார்க்க எங்கோ இவரை எங்கோ பாத்திருக்கிறோமே என்பது போல் தோன்ற, சற்றே விசாரித்தேன் - அவர் தான் ரிஸ்ர்வ் பேங்க் கவர்ணராம், தான் கட்டிக் கொண்டிருக்கும் புது ஹோட்டலுக்காக பொருட்களை வாங்க வந்திருக்கிறார் என்றார்கள்!
அவருடன் மீண்டும் ஒரு புன்னகை பரிவர்தனை செய்து கொண்டு மெல்ல நழுவி, அவர் முடித்துக் கொண்டு செல்லும் வரை வாயை திறப்பதில்லை என்ற முடிவுடன் கைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறத் துவங்கினேன்...
இது இப்படி என்றால் ஒரு சூப்பர் மார்க்கெட் துவக்க விழாவில் நிகழ்ந்த வேறோரு நபருடனான சந்திப்பு முற்றிலும் வேறு வகையிலானது. வெறும் புன்னகையுடனெல்லாம் நின்று விடவில்லை, அந்த நபருடம், நெடு நீளமாக உரையாடி கிட்டத் தட்ட நண்பனாகவே ஆகிவிட்டிருந்தேன். திறக்க இருக்கும் அந்த சூப்பர் மார்க்கெட்டின் விலை பட்டியல் முதல், வேலைக்கு ஆள் எடுப்பது வரை, எல்லாவற்றிலும் அவரது கை உதவிக்கு உண்டாம். சூப்பர் மார்க்கெட் முதலாளி அவரது நண்பர் என்பதால் சம்பளம் பற்றியெல்லாம், அவ்வளவாக கவலை படவில்லை, சொற்ப பணத்திற்கே உதவ ஒப்புக் கொண்டேன் என்றார். உண்மையில் அப்படி ஒப்புக் கொண்டு விட்டதில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்ததாக அவர் குரலிலிருந்து ஊகித்தேன் ஒரு நிமிடம், அவர் ஒரு முன்னாள் மந்திரி என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். நிறைய தனது எதிர் கால அரசியல் திட்டங்கள் பற்றியும் விவரித்துக் கூறினார்
இப்படி தனிப்பட்ட முறையில் நிகழும் சில பல சந்திப்புகள் போக, தொழிற்துறை முனையின் பிரதிநிதியாய் சென்று அமர வேண்டியிருக்கும் சந்திப்புகள் தனி ரகம்.
மலாவிக்கு காமென் வெல்த் பிஸினஸ் கவுன்சில்(Common Wealth Business Council) வருகை தருகிறது என்று செய்தி வெளியிடிருந்தார்கள். சர்வதேச வங்கிகளின் பிரதினிதிகளும், சர்வதேச மூதலீட்டார்களும், மந்திரிகளும், பல் துறை நிபுனர்களும், அரசு எந்திரத்தின் முக்கிய அங்கத்தினரும், ஒன்று கூடி மலாவியில் முதலீட்டுக்கான சாத்தியத்தை பரிசீலிக்கப் போகும் முக்கிய மாநாடு.
குறைந்தபட்சம், 10 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய வியாபாரத் திட்டங்கள் கைவசம் இருக்கும் என்றால் கொண்டு வந்து சமர்ப்பிக்கக் கோரி, சரியானதாக இருக்குமென்றால் பண உதவி வழங்கப் படும் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். உபகுறிப்பாக, ஒரு வேளை ஐந்து மில்லியன் அளவு தான் மதிப்பு என்றாலும், மிகவும் நன்றாக இருந்தால் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்றொரு குறிப்புக் கொடுக்கப் பட்டிருந்தது.
உதவி என்பது இரண்டு வகைகளிலானது. 1) திட்டம் அருமையாக இருந்தல் அன்னிய தேசத்திலிருந்து கொண்டே இங்கே முதலீடு செய்யும் பங்குதாரர்கள் கிடைக்கும் வாய்ப்பு, 2) குறைந்த வட்டியிலான கடன் உதவி- இது வரப்போகும் வங்கிகளின் மூலமாக ஏற்பாடு செய்யப் படும்.
வழக்கம் போல், எங்கள் நிறுவனத்திற்கான வளர்ச்சி சாத்தியங்களையும், அதற்காக வேண்டியிருக்கும் தொகை பற்றிய விவரங்களையும் தயார் செய்து கொண்டு போய் சேர்ந்தேன்.
இதில் ஒரு விஷயத்தை முன்பே சொல்லி விட வேண்டும். எங்கள் நிறுவனம் உட்பட இங்கிருக்கும் பெரிய நிறுவனங்கள் எதற்கும் முதலீட்டில் உண்மையாக சிக்கலே கிடையாது. தவிர, பெரும்பாலான முதலாளிகள், அன்னிய நாட்டிலிருக்கும் ஒருவரை தங்கள் பங்குதாராக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். (காலம் காலமாக முழு லாபத்தையும் பார்த்த கைகள், வேறொருவருடம் அதை பகிர்ந்து கொள்ளத் தயாராவதில்லை) எனவே அனேக பேர் தங்கள் திட்டங்களை சமர்ப்பித்த ஒரே காரணம், வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி பெற முடியுமென்றால் மூலதனத்திற்கு தங்கள் பைகளில் கைவிடத் தேவையில்லை, வங்கியின் பணத்தையே சுழற்சி முறையில் பயன் படுத்தி லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணித்தான்.
உரைகள், கைதட்டல்கள், அவேசங்கள், வேடிக்கைகள்,நடு நடுவே தேனீர் இடைவெளிகள், வகை வகையான உணவு ஏற்பாடுகள் என கொஞ்சமும் குறைவின்றி மூன்று நாட்களாக மாநாடு சென்று கொண்டிருந்தது.
இங்கிலாந்தில் நூறு வீடுகளுக்கு குறைவில்லாது சொந்தமாக வைத்திருப்பவர்களெல்லாம் பண உதவி மட்டும் கிடைத்தால், தேசத்தையே மாற்றிக் காட்டுகிறோம் என்று எடுத்துரைத்தார்கள். நடு நடுவே முழு முழுக்க கற்பனையில் மட்டுமே உதித்திருக்கும் திட்டங்களை விட, ஏற்கனவே பாதி நிலையில் இருக்கும் வளர்ச்சிக்காக மட்டும் திட்டங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் போன்ற அறிவுரைகள் வழங்கப் பட்டன. அத்தகைய தருணங்களில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
எங்கள் நிறுவனம் மட்டுமே இன்றைய தேதியில் மலாவியில் கம்பளி போர்வைகள் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம். நாங்கள் அசுர வளர்ச்சி பெற்ற இந்த மூன்று வருடங்களில், மற்ற இரு போட்டி நிறுவனங்களும் மூடப் படும் நிலைக்கு வந்து விட்டன. காரணம் எங்களிடம் இருக்கும் திட்டமிடும் திறன், தொழில் நுட்ப திறன், நிர்வாகத் திறன் போன்றவை பிறரிடம் இல்லவே இல்லை. ஏற்கனவே 150 குடும்பங்கள் எங்கள் தொழிற்சாலையை நம்பி இருக்கின்றன். இப்போது இந்த கடன் உதவி அளிக்கப் பட்டால் எங்கள் வளர்ச்சியை ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக்கிக் காட்டுவோம். தேசத்தில் போர்வைகளை இறக்கு மதி செய்ய வேண்டிய அவசியம் குறைந்து போகும், ஏற்று மதி செய்யும் அளவுக்கு முன்னேறி விடுவோம். மேலும் புதிதாக ஒரு 200 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - இவை எங்கள் நிறுவனத்தின் வாதங்கள்.
சாதாரணமாக பெரும் புள்ளிகளுக்கே கூட சந்திக்க கிடைக்காத அந்த சர்வதேச பிரமுகர், என் தோளில் கை போடாத குறை மட்டுமே உடைய அன்புடன் சில விஷயங்களை விளக்கத் துவங்கினார்.
"முதல் சிக்கல், எங்கள் நிறுவனம் கேட்கும் கடன் தொகை மிகவும் குறைவாக இருக்கிறது, அதாவது நாங்கள் 15 மில்லியன் டால்ர்கள் (இந்த கணக்கில் 6.75 கோடி ரூபாய்?) தான் கேட்கிறோம். இதற்காக வேறொரு தேசத்தில் வீற்றிருக்கும் வங்கி உதவ முன் வரமுடியாது. ஏனென்றால் அவர்கள் கடன் கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்ள முடியாது, பணம் சரியாக பயன் படுத்தப் பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஒரு நிபுணர் குழுவை ஒழுங்கு செய்து அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான விமான செலவிலிருந்து, வந்து போகு வரை ஏற்படப் போகும் பலவகை மெனக்கெடல்களுக்கு இந்த தொகையின் அளவு மதிப்பு வாய்ந்ததல்ல, நேர விரயம் தான் அவர்களுக்கு மிஞ்சும். குறைந்த பட்டசம் ஒரு 50 மில்லியன் டால்ர்களாவது மதிப்பு இருந்தால் தான் அவர்கள் மெனக்கெடுவார்கள். எனவே நீங்கள் இங்கு வந்திருக்கும் எந்த ஒரு வங்கியை அனுகுதலும் பலன் தரும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்றார்.
புரிகிறது. ஆனால் மலாவியில் எடுத்த எடுப்பில் அவ்வளவு முதலீடு செய்ய யாருக்கும் அவசியம் இருக்காதே என்றேன்.
பதிலுக்கு தோள்களை குலுக்கினார். "என்றால் மலாவியிலேயே இருக்கும் வங்கிகளாக பார்த்து தான் உதவி கேட்க வேண்டும்".
"நியாயம் தான் ஆனால் அவர்களது வட்டி சதவிகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது"
அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். தவிர, மலாவியிலுள்ள வங்கிகளை விட குறைவான வட்டியில் வேறொரு தேசத்தில் அமர்ந்திருக்கும் வங்கி கொடுக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள் என்றார்?
செய்தித்தாளில்,,,இல்லை நான் அவ்வளவு அப்பாவி இல்லை. அதற்கு மேல் வேறெதுவும் பேசவில்லை.
இரவு உணவு முடிந்த கையில் நடன நிகழ்ச்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். உண்டு களித்து விட்டு. பிரமுகர்களுடன் உணவருந்தி விட்டு, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி முகவரிகளை பரிமாறிக் கொண்டு வீடு திரும்பினேன்.
ஆனால், அன்று எங்கள் நிறுவனத்தின் தொழிற் திட்டம், அன்று பதிவு செய்து சேமிக்கப் பட்டதில், இந்த கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அந்த யுன்-ஹெச்டிபி பிரமுகர் வரை பலர் அறிமுகமாகிக் கொண்டேயிருப்பார்கள், காரணம் புரியாமலே எல்லோருக்கும் நிறுவனத் திட்டத்தினை விளக்கிக் கொப்டே இருக்கப் போகிறேன் என எனக்குத் தெரியாது. என்ன டெக்ஸ்ட்டைல் துறைக்கு பதிலாக, விவசாயத் துறையின் கீழ் எங்கள் திட்டம் பதிவு செய்யப் பட்டு விட்டது. அதில் ஒன்றும் கெட்டுப் போய்விட வில்லை. எந்த துறையென்றாலும் பிரமுகர்களிடமிருந்து தொடர்ந்து தொலை பேசி அழைப்புகள் வருவது, வியாபாரத்துக்கு பலம் தான் இல்லையா.
அதேசமயம் எல்லா வர்தக சந்திப்புகளும் இப்படியே முடிந்து விடும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஜப்பானிய அரசு செய்திருந்த ஏற்பாடின் படி கிடைத்த உதவித் தொகையை குறிப்பிட வேண்டும். அவர்கள் வேறு வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் அறிவுப்பு செய்து, பரிசீலித்து உதவி அளித்து விட்டு, பிறகு தேர்ந்தெடுத்த தொழிலதிபர்களை மட்டும் அழைத்து ஒரு சந்திப்பு கூட்டம் நடந்த்தினார்கள். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கிட்டத் தட்ட 250,000 டாலர்கள் (இந்திய கணக்கில் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய்) தான் நிதி உதவி அளிக்கப் பட்டது. ஆனால் வட்டியென்று சொல்ல முடியாத அளவுக்கு குறைந்த வட்டி. அந்த சந்திப்பில் அவர்கள் பொது விதிகளை விளக்கி விட்டு, ஏதாவது கேள்விகள் உள்ளனவா என்று கேட்க, நீங்கள் ஏன் கடன் உதவி அளிப்பதற்கு பதில் இதை இலவசமாக வழங்கக் கூடாது என்ற முதல் கேள்வி கேட்கப் பட்டது.
இதே ரீதியில் கேள்விகள் தொடர, இடை இடையே தேனீர் இடைவேளை, உணவு இடைவேளை, டிஃபன் வகைகள் இத்யாதி இத்யாதி...
பிற்பாடு அந்த கடன் உதவிக்கான பிரதினிதிகளை சற்று விசாரித்து பேசியதில் தெரிந்தது, ஏற்கனவே சென்ற முறை கொடுக்கப் பட்ட கடன் உதவியில் பாதி பேர் கூட ஒழுங்காக கட்ட வில்லையாம். கடன் பெற்றவர்கள் அனைவரும் வியாபார காந்தங்கள் அல்லவா, கடன் கட்டிக் கொண்டிருக்க நேரம் கிடைக்கவில்லையோ என்னவோ...
அதோடு விஷயம் முடிந்து விட வில்லை, கூடவே வேறொரு விஷயமும் அறியக் கிடைத்தது...
கொஞ்சம் இருங்கள், இதெல்லாம் இருக்கட்டும், பிரமுகர்களுடனான சந்திப்பு பற்றி கலைந்து கலைந்து என்னனெவோ பேசியதில் நான் சொல்ல வந்தையே மறந்து விட்டேன்.
அதாவது ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...