முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் அதிகம் அச்சுறுத்தலுக்குள்ளான நாடு இலங்கை. இந்த அச்சுறுத்தல் போருக்கு முன்னும் இருந்தது. போருக்குப் பின்னர் இப்போதும் தொடர்கிறது. ஜனவரி 26 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த பின்னர்கூட ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டுள்ளார். இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இப்போது ஜனாதிபதியே ஊடக அமைச்சின் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஊடக அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை விட்டு பல ஊடகவியலாளர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் முக்கிய ஊடக ஆளுமைகள். இதில் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எனச் சகல தரப்பினரும் அடங்குவர்.

இந்த ஊடக அச்சுறுத்தல் நீண்டகாலமாக மெல்ல மெல்லக் கருக்கொண்டு வளர்ந்த ஒரு விவகாரம். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இனவாத நடைமுறை அரசாங்கத்தில் பிரயோகத்துக்கு வரத்தொடங்கிய போதே ஊடகப் பயங்கரவாதமும் வளரத் தொடங்கியது. இனவாதத்தின் எழுச்சி ஊடக சுதந்திரத்தின் வீழ்ச்சியாகியது. இனவாதத்தை ஊடகங்கள் ஆதரிக்க முற்பட்டபோதே மறுவளத்தில் ஊடகத்தின் மீதான அச்சுறுத்தலும் நிழலாக வளரத் தொடங்கியது. இதற்குத் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எதுவும் விலக்கல்ல. இனவாதம் ஊடக நெறிமுறைகளையும் ஜனநாயகத்தையும் துஸ்பிரயோகம் செய்தன.

சிங்களத் தேசியவாதம் முதன்மை பெறத் தொடங்கியபோது அதன் பாதிப்புகள் தமிழ்பேசும் மக்களைப் பாதித்தது. இதை எதிர்கொள்வதற்காக தமிழ்த் தேசியவாதம் எழுச்சியடைந்தது. இந்த இரண்டு தேசியவாதங்களும் தமிழ் - சிங்களம் என்ற நோக்குநிலையிலேயே எல்லாவற்றையும் அணுகின. அதாவது இவை இரண்டும் முற்போக்கு அம்சங்களைக் கொள்வதற்குப் பதிலாக அடிப்படைவாதப் பண்புகளைக் கொண்டமைந்தன. இது ஏட்டிக்குப் போட்டியான நிலைமைகளையும் விளைவுகளையும் உருவாக்கியது.

என்றபோதும் இந்த நிலைமை ஒரு கட்டத்தில் மாற்று ஊடகத்துக்கான அவசியத்தை உருவாக்கியது. இந்தச் சந்தர்ப்பத்தில், மாற்றுப் பத்திரிகைகள், மாற்று இதழ்கள், மாற்று ஊடகவியலாளர்கள் என ஒரு பொதுவெளி மெல்லியதாக உருவானது. ஆனாலும் இது எண்பதுகளில்தான் தனி அடையாளம் என்ற நிலையைத் தொட்டது. இப்படி இந்த மாற்று ஊடகக் கலாச்சாரம் உருவாகியபோதும் அதனால் இனவாத ஊடகச் சூழலை மாற்றவும் முடியவில்லை. அதைத் தணிக்கவும் இயலவில்லை. பதிலாக இன்னும் இனவாத ஊடக முறைமை இன்னும் தீவிர நிலையை எடுத்தது.

இதில் அதிகமும் பாதிக்கப்பட்டது இற்த மாற்று ஊடகங்களும் மாற்று ஊடகவியலாளர்களும்தான். இவர்கள்தான் ஜனநாயகத்துக்காகவும் குரல் கொடுத்தார்கள். ஊடக சுதந்திரத்துக்காகவும் குரலெழுப்பினார்கள். இனவாதப் போக்குகளின் மீது அதிக விமர்சனங்களையும் கண்டனங்களையும் எழுப்பியவர்களும் இவர்களே. இதன் காரணமாக அதிக பாதிப்புகளைச் சந்தித்தது மாற்று ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்தான்.

எப்படியோ இலங்கையில் இனவாதம் முற்றுவதற்கு வெகுஜன ஊடகங்கள் பெரும் பங்கை வகித்தன. இது தமிழிலும் நடந்தது. சிங்களத்திலும் நடந்தது. ஆங்கிலப்பத்திரிகையான தி ஐலண்ட்இதற்கு நல்ல உதாரணம். ஆக, சார்பு நிலை என்பது இலங்கை ஊடகங்களில் முக்கிய அம்சமாகியது. அது உச்ச நிலையை எட்டியபோது ஊடக நெறி என்பது பிறழ்ந்து வசைபாடுதல், குற்றப்பத்திரிகை வாசித்தல், எழுந்தமானமாகக் குற்றஞ்சாட்டுதல் என்ற அளவுக்கு கீழிறங்கியது. ஒற்றைப்படைத்தன்மையாக ஊடகங்கள் தொழிற்படத் தொடங்கின. இது வளர்ச்சியடைந்து பொது மரபாகவும் ஆகியது. சனங்களும் இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டார்கள். தமிழ் - சிங்கள பிரிவினையின் இடைவெளியை அரசியல் வாதிகளுக்கு நிகராக இலங்கை ஊடகங்களும் பராமரித்து வருகின்றன. இலங்கை ஊடகங்களின் உயிர்வாழுகையே இனவாதத்தில்தான் இருக்கிறது. இதை மீறும் ஊடகங்கள் அந்தந்த இனங்களுக்கு துரோகம் இழைப்பதாகவும் குறிப்பிட்ட இனங்களைக் காட்டிக் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படியே வளர்ந்த ஊடக முறைமையில் பலியாகிக் கொண்டிருப்பது ஊடக நெறிமுறைகளும் சுதந்திரமும்தான். இதன் மெய்யான அர்த்தம் சனங்களின் அழிவேயாகும்.

இனவாதம் எப்போதும் சார்பு நிலையையே வற்புறுத்துகிறது. சார்புஎன்று வரும்போது எதிர்என்ற நிலையும் உருவாகிறது. சிங்களச் சார்பு தமிழ் எதிர்ப்பாகியது. தமிழ்ச் சார்பு என்பது சிங்கள எதிர்ப்பாகியது. இன்று வரையிலும் இந்தப் பிரிகோட்டில்தான் இலங்கையின் பிரதான பொது ஊடகங்கள் இயங்குகின்றன. இது பகைமையை அதிகரித்தது. சார்பில் உண்மை, யதார்த்தம், விமர்சனம், நியாயம், பக்கஞ்சாராமை, ஜனநாயகம் என்பதெல்லாம் பலியாகின. அல்லது புறக்கணிக்கப்பட்டன. இது தவிர்க்;க முடியாதது. ஆனால், இதை இந்த ஊடகங்களோ, ஊடகவியலாளர்களோ புரிந்து கொள்வதாக இல்லை.

அதாவது அரசியல்வாதிகளைப் போலவே ஊடகவியலாளர்கள் பலரும் செயற்பட்டனர். ஊடக நிறுவனங்கள் வெளிப்படையாகவே அரசியற் கட்சிகளைப்போல செயற்பட்டன. கட்சிகளும் தத்தமக்கென ஊடகங்களை வைத்திருந்தன. அல்லது தமக்குச் சார்பான ஊடகங்களைக் கொண்டிருந்தன. இப்போதும் இதுதான் நிலைமை. இன்னும் இது கொழுத்துத் திரண்டு, பச்சை இனவாதத்தைக் கக்கிக் கொண்டேயிருக்கின்றன. இன்று ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இவை ஊடக துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவது மிக விசித்திரமானது. தேர்தற்காலங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுகள் வருகின்ற சந்தர்ப்பங்களில் இந்த இனவாதக் கொந்தளிப்பை ஊடகங்கள் உருவாக்குதை யாரும் தெளிவாகவே பார்க்க முடியும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனக்கென்று சுதந்திரன்பத்திரிகையையும் சுடர்என்ற சஞ்சிகையையும் வெளியிட்டது. சுதந்திரன் பத்திரிகை அந்த நாட்களில் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களையும் அது வெளியிட்ட தலைப்புச் செய்திகளையும் இப்பொழுது படித்துப்பார்த்தால் எவரும் ஆச்சரியப்படுவார்கள். அவ்வளவு சூடான வீர வசனங்கள். உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான வார்த்தைகளும் கருத்துகளும். பீரங்கிக் குண்டுகளையும் விட அதிக சக்திவாய்ந்த வகையில் இன உணர்வைச் சுண்டிவிடும் பிரகடனங்கள். அடைந்தால் மகா தேவி. இல்லையென்றால் மரணதேவிஎன்பதைப்போன்ற ஆக்ரோச வார்த்தைகள். (உண்மையில் சுதந்திரனைப் படித்துப் பார்க்கும் போது ஒரு கேள்வி யாருக்கும் வரும், இப்படி ஆக்ரோசமாக எழுதியும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்கள் பீரங்கிகளைளப் போல முழங்கியுமா இன்னும் ஈழத்தமிழர்கள் இப்படி அவல நிலையில் இருக்க வேண்டும் என)

சுதந்திரனிலும் பிற சிங்கள ஏடுகளிலும் இப்படி எழுதுவதற்கு அப்போது இலங்கையில் சுதந்திரம் இருந்தது என்பது அடுத்த ஆச்சரியமான சங்கதி. ஆனால், இது ஒரு எல்லை வரைதான். அதாவது இது எண்பதுகள் வரையிலுமிருந்த எதையும் எழுதலாம்என்ற நிலைமை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. எண்பதுகளில் இலங்கையின் அரசியல் ஆயுதமயமாகியது. இந்த இனவாதம் போராக உருமாறியபோது ஊடக மொழியும் கூரானது. தணிக்கை ஒரு முதல் நிலை இடத்தைப் பிடித்தது. இந்தத் தணிக்கை இரண்டு வகையிலானது. ஒன்று சுயதணிக்கை. மற்றது அதிகார வர்க்கத்தின் தணிக்கை. அதாவது அரசாங்கத்தின் தணிக்கை. இயக்கங்களின் தணிக்கை. குறிப்பாக புலிகளின் தணிக்கை.

புலிகள் எழுச்சி பெற்று தமிழ்ச் சூழலில் ஆதிக்க சக்தியாக மேற்கிளம்பியபோது அவர்களுக்கென்றொரு ஊடகப் பண்பாடும் ஊடகச் சூழலும் ஊடக வளங்களும் உருவாகின. இது அதிகம் சுயதணிக்கைப் பாரம்பரியத்தைக் கொண்டது. தமக்குச் சார்பான செய்திகள், கருத்துகளைத் தவிர ஏனையவற்றைத் தவிர்த்தல். தவிர, எதிரிகளை உருவாக்கவும் அவர்களின் மீது எதிர்ப்பரப்புரை செய்யவும் கூடிய நிலை இன்னும் வளர்ந்தது. எதிர்த்தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்துதல், அந்தத்தரப்பை முற்றாக எதிர் நிலைக்குத் தள்ளி விடுதல். (இதுதான் எதிர்தரப்பை எதிரித்தரப்பாகவே கருதும் நிலையை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது. இதனால், எதிர்த்தரப்புடன் பேசுவதற்கும் தீர்வுக்காகத் தொடர்பு கொள்வதற்கும் கூட பல தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் இந்தநிலைமை இன்னும் மாறவேயில்லை. இலங்கைச் சூழலில் இதுவொரு பெரிய அச்சுறுத்தலுக்குரிய விசயம்). இதைப் புலிகள் தமிழரசுக்கட்சிப் பாரம்பரியத்துக்குள்ளிருந்துதான் கண்டெடுத்திருந்தார்கள். அடுத்த கட்டமாக புலிகளுக்கு அப்பால் உள்ள தமிழ் ஊடகப்பரப்பையும் அவர்கள் தமது நிழல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். இது இரண்டு வகையில் நடந்தது.

ஒன்று, தேவைக்கேற்ற அளவிலான தமது அதிகாரத்தின் மூலமும் சிநேக முறையான நடத்தைகளின் (தந்திரோபாயமாகவும்) மூலமாகவும் இதைச்;செய்தனர். அடுத்தது, தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும், அதைப் பலப்படுத்த வேண்டும் என்ற வகையில் இதை நடைமுறைப்படுத்தினர். இந்த நோக்குநிலைகளில் ஒரு பக்கம் ஜனநாயகம் முற்றாகப் பலியானது. விமர்சனம், மாற்றுக் கருத்து என்பனவெல்லாம் எதிரிக்கு வாய்ப்பைக் கொடுக்கும் செயல் என்றும் அவை எதிரியின் நடவடிக்கைகள், எதிரித்தரப்பின் சூழ்ச்சிகள் என்றும் கருதப்பட்டன. அத்துடன் எதையும் விமர்சிப்பதோ சுட்டிக்காட்டுவதோ, எதன் மீதும் கேள்வி எழுப்புவதோ இனத்துக்கும் போராட்டத்துக்கும் துரோகமிழைக்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இது வெறுமனே குற்றஞ்சாட்டுவதுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தமாதிரி செயற்பாடுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. மாற்றுக் கருத்தாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் காணாமற்போனார்கள். சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மறுபக்கத்தில் ஊடக சுதந்திரம் பலியாக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ் மாற்றுக் கருத்தாளர்கள் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்கள். இது பலரையும் எதிர் நிலைக்குக் கொண்டு போனது. இந்த முறைமை அரசியலில் மாற்றாளர்கள் அரசாங்கத்தின் காலடியில் நிற்கவேண்டிய நிலையையும் உருவாக்கியது.

இது பின்னர் இலங்கைத் தீவு முழுவதற்குமான பொது நடைமுறையாக அரசாங்கத்தரப்பினாலும் பின்பற்றப்பட்டது. சிங்களத்தின் புகழ்பெற்ற றிச்சர் டி சொய்சா பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் ஜே.வி.பி யுடன் இனங்காணப்பட்டவர்கள் என்ற மாற்றுக் கருத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் இவ்வாறு தண்டிக்கப்பட்டனர்.

பின்னர் பொதுவாகவே அரசாங்கத்தை எதிர்ப்போர், விமர்சிப்போர் என்று நோக்கப்பட்டு, அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது என ஆரம்பமாகி ஊடகவியலாளர்கள், சுட்டுக் கொல்லப்படுதல், கடத்தப்படுதல், காணாமற் போதல், சிறைப்பிடிக்கப்படுதல் என்று வளர்ந்து சென்றது. ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்படும் நிலை உருவானது.

அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது, தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்று ஊடகங்களின் மீதும் ஊடகவியலாளர்களின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் அரசாங்கம் இலகுவாகவே பழகிவிட்டது. இவ்வாறான ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் புலிகளுடன் தொர்பானவர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஒவ்வொரு அரசாங்கமும் தனக்குத் தோதாக ஊடக துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டன. இப்போது மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இதை உச்சநிலைக்குக் கொண்டு போயிருக்கிறது.

இப்படியே தமிழ்த்தரப்பிலும் புலிகளுக்கு மாறாகவோ தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளை விமர்சித்தோ அல்லது அதன் குறைநிறைகளை விமர்சித்தோ வந்தவர்கள் பொதுவெளியிலேயே தவறானவர்களாகவே பார்க்கப்பட்டனர். மாற்று அபிப்பிராயம் தெரிவிப்போரைச் சந்தேகிக்கின்ற பழக்கம் தமிழ் மக்களிடமும் இன்று வளர்ச்சி பெற்று விட்டது. மக்களிடம் அப்படியானதொரு பார்வை ஏற்பட்டும் விட்டது.

ஆனால், என்னதான் இருந்தாலும் நடைமுறை விளைவுகள் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் கட்டுப்பட்டிருப்பதில்லை. அவை தமது பொதுவிதியின் படியே நிகழும். அதாவது, இந்த விமர்சனமற்ற போக்குகள் தவறுகளை இனங்காண்பதிலும் மாற்றுப்பார்வைகளினூடாகக் கிட்டுகின்ற அறிவு, புதிய கோணங்களிலான அணுகுமுறைகள் போன்றவற்றை அடையாளங்காண்பதிலும் வாய்ப்பை அளிக்கத்தவறின. அபிப்பிராயங்களில்லா மூடுண்ட அமைப்பில் இருள்தான் மிஞ்சும் என்பார்கள். அதைப்போலவே பெரும்போராட்டம் மிகச் சோகமாகவும் அவலங்களோடும் முடிந்தது. என்னதான் முற்குறிப்பிட்ட காரணங்களிருந்தாலும் இதற்கு ஊடகங்களுக்கும் பொறுப்பே.

ஆனால், இந்த நிலைக்கான மறு ஆய்வுப் பார்வையை இதுவரையில் தமிழ் ஊடகங்கள் வைக்கவில்லை. இதை இன்னும் தொடங்கவும் இல்லை. இதற்குரிய சூழல் இலங்கையில் இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக அரசாங்கத்தின் அழுத்தங்களும் நெருக்கடிகளும் அபாயவலைகளும் இன்னும் நீங்கவில்லை என்பது இதற்கு மறுக்க முடியாத ஒரு காரணம். இந்த நிலையில் எப்படி இதைச் செய்ய முடியும் என்ற கேள்வி உண்டுதான். ஆனால், அதைமட்டும் இதற்கான காரணங்களாகச் சொல்லிவிட முடியாது. தமிழ் ஊடகவெளியே (புலத்திலும் கூட) இப்படி எதிரி, துரோகி என்ற பார்வையோடுதான் பெரும்பாலும் உள்ளது. அது சுய ஒடுங்கலுடனும் ஒற்றை முகத்துடனும்தானிருக்கின்றது. எதையும் விமர்சிப்பது, அல்லது சுட்டிக்காட்டுவது, அல்லது விவாதிப்பது தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்திவிடும், அது எதிரியைப் பலமாக்கிவிடும் என்றமாதிரியே அது தொடர்ந்தும் சிந்திக்கின்றது. மாற்று வெளியைக் குறித்துச் சிந்திப்பதாகவோ தன் பலவீனங்களான அம்சங்களைக் களைவதாகவோ அது இல்லை. இவ்வளவு தோல்விகள், பின்னடைவுகளுக்குப் பின்னும் மறுபார்வை, மீள் பரிசீலனை என்பன இல்லாதிருப்பது தமிழ் பேசும் மக்களின் அரசியலையும் ஊடகச் செயற்பாடுகளையும் மேலும் பலவீனப்படுத்தியே வருகின்றன.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நிலைமைகள் முற்றிலும் வேறானவை. இந்த வேறு பட்ட சூழலில் புதிய திசைகளில், புதிய பயணங்களை தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். அது தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியலாகவும் அமைந்திருக்கும். திரு. நிலாந்தன் குறிப்பிட்டிருப்பதைப் போல அது புலிகள் தொடாத இடங்களைத் தொடுவதாகவும் புலிகளிடமிருந்த நல்லம்சங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் இருப்பது நல்லது. ஆனால், இது அப்படி நடக்கவில்லை. எனவேதான் இன்று தமிழ் பேசும் மக்களின் அரசியல் நிலரவம் மிகவும் பின்னடைவான நிலையை எட்டியிருக்கிறது. முன்னெப்பொழுதும் இல்லாத பெரும் பின்னடைவைத் தமிழ்பேசும் சமூகம் இலங்கையில் அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டடைவதற்கு இன்னும் தமிழ் ஊடகங்கள் தயாரில்லை. அவை மிக மோசமான சுயதணிக்கைப்பாரம்பரியத்தை வன்மமாகவே கடைப்பிடிக்கின்றன. விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் பலவீனத்தின் பிரதான அம்சங்களாகவே பார்க்கின்றன. இலங்கையில் இப்பொழுது ஒரு மாற்று ஊடகம் கூட இல்லை என்பது இந்தத் தன்மைகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

அதாவது இத்தனைக்குப் பின்னரும் பிடிவாதமாக திரும்பவும் அதே தவறான அணுகுமுறைகளில்தான் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் செயற்படுகின்றன. சுயதணிக்கை செய்தல், அடக்கி வாசித்தல், பக்கஞ்சார்தல், ஒற்றைப்படைத்தன்மையாக இருத்தல், குற்றஞ்சாட்டுதல், சந்தேகித்தல், ஊடகம் என்ற நிலையை விட்டு கட்சியைப் போலவும் அரசியல்வாதிகளைப் போலவும் தொழிற்படுதல், மேலாண்மைச் சக்திகளுக்கு ஒத்தூதுதல், யதார்த்தத்துக்கு மாறாகச் சிந்தித்தல், விமர்சனங்களைப் புறக்கணித்தல், தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஊடகத்தளத்தில் ஏற்றுதல் என்றவாறாகவே இருக்கின்றன.

இது உண்மையில் ஊடக ஜனநாயகத்தை மீட்பதற்குப் பதிலாக மேலும் நெருக்கடிக்கே கொண்டு செல்லும். இலங்கையின் ஊடக வரலாற்றை எவராவது மதிப்பீடு செய்தால் அரசாங்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் நிகரான ஊடக துஸ்பிரயோகத்தை ஊடகங்களே செய்திருக்கின்றன என்ற உண்மை துலக்கமாகத் தெரிவதை அறியமுடியும். அதிலும் சிறப்பிடம் தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.

அதிகார பீடங்களிலிருந்து ஊடக சுதந்திரத்தை மீட்பதற்கு முன்னர் ஊடக நெறியையும் ஊடக சுதந்திரத்தையும் பேணுவதற்கான முயற்சிகளில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஈடுபடுவது அவசியம். நமது குறைபாடுடைய பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதுதான் முதலாவது சிறந்த வழி. அதற்காகவே நாம் நிறையப்; பயிலவேண்டும். ஆனால், அது இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. இது இன்றைய நிலையில் பல சவால்களைக் கொண்டதுதான். ஆனால், இந்தச் சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கைத்தீவின் அரசியல் எதிர்காலத்தின் ஒரு பெரும்பகுதியும் மக்கள் வாழ்வின் முழுமையும் இந்த ஊடக சுதந்திரத்துக்குள்ளும் உண்டு. ஆகவே இதை யாரும் தவிர்க்க முடியாது.

21.02.2010

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com