எல்லாவற்றையும் ஒரு தடவை முயன்று பார்
முல்லா ஒரு சத்திரத்தின் அருகே யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டிருந்தார். கையில் நயா பைசா கூட அவரிடம் இல்லை. மேலும் நம்பிக்கையாளர்களுக்கு திராட்சை ரசம் தடை செய்யப்பட்டிருந்தது.
அப்போது சுல்தானின் வேலையாள் பெரிய சீசாவில் திராட்சை ரசத்தை கவனமாகச் சுமந்து கொண்டு சத்திரத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தார்.
அவரும் முல்லாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"மேன்மையுள்ளவரே...' என்று ஆரம்பித்த முல்லா "எனக்குத் தாருங்கள்...'
"என்ன தர வேண்டும், முல்லா?'
திராட்சை ரசம் வேண்டுமென்றால் அவர் அதை முன்பு குடித்திருக்கிறார் என்பதை ஒத்துக் கொண்டது போலாகிவிடும்.
"எனக்குத் தாருங்கள்.. ஒருசில அறிவுரைகளை...' என்று தயங்கிச் சொன்னார் முல்லா.
"ரொம்ப நல்லது. போய் ஒரு புத்தகத்தை வாசியுங்கள்.' என்றார் வேலையாள்.
முல்லா தனக்கு மட்டும் கேட்கும் படியாக "இல்லை, அது சரிப்பட்டு வராது.' என்று முணுமுணுத்தார்
"ஏன் ஒத்து வராது?'
" நான் ஒரு முறை அதை முன்பு முயற்சித்திருக்கிறேன்.'என்றார் முல்லா.
எல்லையில்
நஸ்ருத்தீன் தனது நாட்டின் எல்லைப் பகுதியை கடந்து போய் முட்டைகளை விற்று வந்தார்.
அந்த எல்லைப் புற தேசத்து முட்டை வியாபாரிகள் தமது உரிமைகளை நிலைநாட்ட எண்ணி அரசனிடம் போய் முறையிட்டனர்.
அரசனும் முட்டைகளை வேற்றுநாட்டிலிருந்து இறக்குமதி பண்ணக்கூடாது என சட்டம் போட்டு விட்டார்.
ஒரு தடவை சுங்க இலராகா அதிகாரிகள் முல்லா முட்டை கொண்டு போகும் போது பிடித்து விட்டனர். அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
"பொய் சொன்னால் அதற்கு தண்டனை மரணமாகும். உங்கள் கூடையில் என்ன இருக்கிறது?'
"மிகச் சிறிய கோழிக்குஞ்சுகள்.' என்றார் முல்லா.
"அது வளர்ப்புப் பிராணிகள் பிரிவில் வரும்.
"நாங்கள் அவைகளை பறிமுதல் செய்கிறோம்'என்று சொல்லிக் கொண்டே அவைகளை ஒரு அதிகாரி ஒரு மரப்பெட்டியில் போட்டு அடைத்து வைத்தார். ஆனால் பயப்படாதீர்கள். அவைகளுக்கு இரை போட்டு விடுவோம். அது எங்கள் பொறுப்பு.'
"அவைகள் சிறப்பான கோழிக் குஞ்சுகள்.' என்றார் முல்லா.
"எப்படி?'
"நல்லது. நீங்கள் எஜமானனை விட்டுப் பிரிந்த துக்கத்தினால் வாடி உடல் மெலிந்து அதன் பருவத்திற்கு முன்னமேயே கிழமாகிப் போகும் பிராணிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?' எனக் கேட்டார் முல்லா.
"ஆமாம்.'
"இக் கோழிக் குஞ்சுகள் மென்னுணர்வுகள் கொண்டவை. சிறப்பான வகையைச் சார்ந்தவை. ஒரு நொடி அவைகளை தனியே விட்டாலும், அதன் காலத்திற்கு முன்னமேயே இளமையாகிவிடும்.'
"எவ்வளவு இளமையாகும்?' எனக் கேட்டார் அதிகாரி.
"அவைகள் மறுபடியும் முட்டைகளாகக் கூட ஆகிவிடும்.' என்றார் முல்லா.
பொருளாதார விதி
புனித மதப் போரில் முல்லா ஈடுபட்டிருந்த போது முல்லா சிறைப் படுத்தப்பட்டு ஒரு கோட்டை அரண் அருகே சாக்கடை தோண்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டார். முதுகுத் தண்டு ஒடிந்து விடுவது மாதிரியான வேலை அது. முல்லா ரொம்பவும் நொந்து கொண்டார்: ஆனால் அந்தப் பயிற்சி அவருக்கு தேக ஆரோக்கியத்தை தந்தது.
யார் பக்கமும் சாராத ஒரு நடுநிலை வியாபாரி அந்தப் பக்கமாய் போனபோது முல்லாவை தெரிந்து கொண்டார்.
முப்பது வெள்ளி திர்ஹம் மீட்புத் தொகை கொடுத்து முல்லாவை அந்த வியாபாரி விடுவித்தார். தன்னுடன் முல்லாவை அழைத்துச் சென்று அவரை அன்புடன் நடத்தி தன் மகளையும் அவருக்கு மணமுடித்து கொடுத்தார்.
நஸ்ருத்தீன் சுகமான வாழ்க்கை நடத்தி வரலானார். ஆனால் அவருக்கு வாய்த்த மனைவியோ துடுக்குக்காரியாய் இருந்தாள்.
ஒருநாள் முல்லாவிடம் அவள், "உம்மை என் தந்தை முப்பது திர்ஹத்துக்கு வாங்கி எனக்கு கொடுத்தார்கள். ஞாபகமிருக்கட்டும்,' என்றாள்.
"ஆமாம், நான்அதே நபர்தான். அவரோ எனக்கு முப்பது பணம் செலுத்தினார்; நான் உனக்கு சும்மாதான் கிடைத்தேன் . சாக்கடை தோண்டும்போது எனக்கு இருந்த தேக பலத்தையும் இப்போது இழந்து விட்டேன்" என்றார் நஸ்ருத்தீன் அவளிடம்.