ஜோன்னி தோ, வை கா ஃபை, டேனியல் யுன் கூட்டணி தயாரிப்பில் 2003ல் மலர்ந்த ஒரு சிறந்த காவியமாக உள்ளது ‘தெர்ன் லெப்ட் தெர்ன் ரைட்’ (Turn Left Turn Right). முதன் முறை பார்த்த போதே என் மனதை ஈர்த்ததின் விளைவே காலங்கடந்த இத்திரை விமர்சனம் ஒரு ரசிக பார்வையாக முன் வைக்க பின்னனியாய் என்னை இயக்குகின்றது. ஜிம்மி லியவ்வின் புத்தகத் தழுவலான இத்திரைச்சித்திரத்தில் தாகேசி கானெஷிரோ வயலின் வாசிப்பவராகவும் கீகீ லியுங் மொழி பெயர்ப்பாளராகவும் வலம் வருகின்றனர்.
தாகேசி கானெஷிரோ கீகீ லியுங்கும் இடையிலான தற்செயலான முதல் சந்திப்பு பள்ளி பருவப் பொழுதொன்றில் சுற்றுலாவின்போது அமைகின்றது. முதல் சந்திப்பிலேயே நேசம் உருவாக்கம் பெறுகின்றது. பதிமூன்றாண்டுகளுக்குப் பின்னர் மற்றதொரு தற்செயலான சந்திப்பில் நேசம் வெளிப்படுகின்றது. மழையில் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட தொலைப்பேசி எண்களோடு இச்சந்திப்பில் பிரியும் இவர்கள், மழைக் கையினால் அழிப்பட்ட எண்களைத் தேட முயன்று தோல்வியுறுகின்றனர். தாங்களிருவரும் பக்கத்து வீடுகளில் வசிப்பதை அறியாமலே தேடி அலுத்துப் போகின்றனர். தேடல், அலைச்சல், காலம் எதுவும் அவர்கள் மனதில் வேரூன்றிருக்கும் காதலை அசைக்க இயலவில்லை. இச்சூழலில் தாகேசி கானெஷிரோவின் மீது காதலுறும் துரித உணவு கடை பணியாளப் பெண், கீகீ லியுங்கிடம் காதலை வெளிப்படுத்தும் டாக்டர் இருவரும் தங்களின் காதல் மறுக்கப்பட்டு இணையாகின்றனர். பெரும் தடைகளைத் தாண்டி தாகேசி கானெஷிரோவும் கீகீ லியுங்கும் நில நடுக்கத்தின்போது இணைவதாக கதை முற்றுப்பெறுகின்றது.
படம் முழுவதும் பரவியிருக்கும் ‘Love at First Sight’ என்ற போலந்து கவிஞரான விஸ்லாவா ஷிம்போர்ஸ்காவிற்குச் சொந்தமான கவிதை வரிகள் வால்தர் விப்பலால் மொழிபெயர்க்கப்பட்டவை. விஸ்லாவா ஷிம்போர்ஸ்கா (Wislawa Szymborska) 1996ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர்.
‘Beautiful is such a certainty,
but uncertainty is more beautiful’
கவிதை வரிகள் படம் முடிந்த பின்னரும் அகலாமல் சிந்தனைகளில் பரவி நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் சந்திப்பில் ஏற்படும் காதல் எப்போதுமே பொய்யாகிவிடுவதில்லை. முதல் சந்திப்பில் மலரும் உண்மைக் காதல் என்றென்றும் மாசற்ற பசுமையுடன் இருக்கவும் செய்கின்றது எனும் கரு கதையோட்டத்தில் எண்ணத்தில் பதித்துவிட்டு செல்கின்றது.
நீர்க்குமிழிப்போல் சட்டென உருப்பெற்று மறையும் உணர்வுக்குக் ‘காதல்’ என என்னால் சொல்ல இயலவில்லை. உண்மைக் காதல் என்பது நாளுக்கு நாள் ஆழ்ந்து வளரும் அன்பு என்றும் அதுவே காதலின் உறுதித்தன்மையை வலுப்படுத்துகின்றது என்னும் என் மனக்கோட்பாட்டை இத்திரை பல இடங்களில் உணரவைக்கின்றது. இயற்கையின் தற்செயலான பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் நிரம்பி வழிகின்றன. (நான் இத்திரைப்படத்தை முதன்முதலில் பார்த்ததும் ஒரு தற்செயலான விஷயம்). தற்செயல்கள் யாவும் சாதாரணமாய் கடந்து போக சில மட்டும் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களின் அடித்தளங்களாகின்றன. அதில் உண்மைக் காதலும் இயற்கையின் அன்பளிப்பாய் வந்தடைகின்றது. இயற்கையின் அன்பளிப்புகள் யாவும் காலத்தால் அழியாதவை.
ஆனாலும் இயற்கையின் அன்பளிப்பைப் பெற்று அகமகிழ்பவர்கள் சிலராயினும் கால ஓட்டத்தில் மகிழ்ச்சி கரைந்து இயற்கையின் கண்ணீராகின்றது. இயற்கை தன் கண்ணீரைப் பூமியில் வழியவிட்டு மீண்டும் அன்பைத் துளிர்க்க செய்வதாய் தோன்றுகின்றது. அதற்கு முன்னுதாரணமாய் இக்கதை. பெயர் அறியாமல் 784533, 763092 ஆகிய மாணவ சீருடை எண்களை மட்டும் கொண்ட அடையாளம் காதலின் உன்னதத்தைச் சிதைக்கவில்லை. இசை, எழுத்து, மொழி கலந்த ஒரு அன்புச் சூழலை நம்மைச் சுற்றி பின்ன செய்து உள்ளிழுக்கின்றது. திடமான நம்பிக்கை, ஒன்றினையும் எண்ணங்கள், காலத்தையும் கடந்த ஆழ்ந்த அன்பு யாவும் மெய் குளிர வைக்கின்றன.
துரித உணவு கடை பணியாளப் பெண்ணும் டாக்டரும் தாகேசி கானெஷிரோவையும் கீகீ லியுங்கையும் சேர விடாமல் தடுக்க முயல்கின்றனர். ‘நான் என் பிம்பத்தைத் தொலைத்துவிட்டேன்’ என இருவரின் ஒரே உணர்வும் வார்த்தைகளாய் உதிர்ந்து சேர விடாமல் தடுக்க நினைத்தவர்கள் மனதைத் தடுமாற செய்கின்றது. பகைமையை வேரறுக்கும் சக்தியையும் உண்மைக்காதல் தன்னுடன் கொண்டுள்ளது பெரும்மதிப்புக்குரியது.
‘பதிமூன்றாண்டுகளுக்கு முன்பே ஒருவரை ஒருவர் தொலைத்துவிட்டோம். மீண்டும் ஒருவேளை சந்திப்போம். பதிமூன்றாண்டுகள் ஒரு நீண்ட காலம். ஆனாலும் பதிமூன்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்தால் அற்புதமாய் இருக்கும். பதிமூன்றாண்டுகளுக்குப் பின் சந்திக்காவிட்டாலும் அதற்கடுத்து வரும் பதிமூன்றாண்டுகளில் சந்தித்தாலும்கூட அற்புதமாயிருக்கும்.’ என சலிப்பும் களைப்பும் அற்ற உண்மைக் காதல் காத்திருப்பு அவர்களின் மனதிலிருந்து வரிகளாய் பிறப்பெடுக்கின்றன.
நிலநடுக்கம் அவர்கள் வீடுகளின் நடுப்பகுதி தடுப்புச்சுவர்களைத் தகர்க்க இருவரும் இணையும் காட்சி நெஞ்சை நெகிழ செய்கின்றது. இயற்கையே இவர்களை இணைக்க செய்த முயற்சி. உண்மைக்காதலுக்கு இயற்கை தந்த ஆசிர்வாதமாய் அக்கணம் உணரமுடிகின்றது. மனிதர்களைவிட இயற்கைக்கே உண்மைக்காதலை விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் ஏனென்றால் இயற்கை உண்மைக்காதலின் கருவறை.
ktrajamranjini@yahoo.co.in