தி.மு.கவின் கட்சி இதழான முரசொலியில் கடந்த வாரம் அக்கட்சித் தலைவர் மு.கருணாநிதி பதற்றத்துடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சாதாரண பென்னாகரம் இடைத் தேர்தல் தள்ளிப் போவது குறித்து அவர் இவ்வளவு பதற்றத்திற்கு ஆளாகியிருப்பதும் அதற்கடுத்து தொடர்ச்சியாக பழைய கூட்டணி சகாக்களுக்கு முரசொலி வாயிலாக வெள்ளைக் கொடி காட்டுவதையும் அ.தி.மு.கவில் தங்களவர்களாக மாற்றி வைக்கப்பட்டிருந்தவர்களை அவசர அவசரமாக விசுவாசத்தை வெளிப்படையாக்கச் செய்திருப்பதையும் பார்க்கையில் பிரச்சனை பென்னாகரம் இடைத் தேர்தலில் இல்லை என்பது புரிகிறது.
பென்னாகரம் இடைத் தேர்தல் விஷயத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா அ.தி.மு.கவுக்கு சார்பாக நடந்துகொள்வதாக சொல்கிறார் மு.க. அவர் நவீன் சாவ்லா என்று சொன்ன இடத்தில் காங்கிரஸ் என்று போட்டுக்கொள்ளலாம். மாநிலத்தில் தி.மு.கவின் ஆட்சிக்கான பெரும்பான்மை காங்கிரசின் 36 எம்.எல்.ஏக்களையே நம்பியுள்ளது. காங்கிரஸ் சார்பாளர் என்று முன்பு குற்றம்சாட்டப்பட்ட நவீன் சாவ்லா சமீபத்தில் நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவில் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சுயேட்சையான தமிழக அரசியல் நடவடிக்கைகள் தி.மு.கவுக்கு சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய நிலையில், நவீன் சாவ்லா ஏற்பாடு செய்த சந்திப்பை ஒரு ஆட்சியையே கலைத்த பிரபல தில்லி டீ பார்ட்டி சந்திப்புடன் தி.மு.க ஒப்பிட்டுப் பார்க்கிறது. டீ பார்ட்டி சந்திப்பு அன்றைய பா.ஜ.க அரசு சாய வழிவகுத்தது. தற்போதைய ஜெயா-சோனியா சந்திப்பு தி.மு.கவின் ஆட்சி கவிழ காரணமாகுமா?
தி.மு.க சர்வாதிகார பலத்துடன் ஆட்சி செய்வதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக பார்த்துப் பார்த்து அவர்கள் சிறு பெரும்பான்மையுடன்தான் ஆட்சி செய்கிறார்கள் என்பதே மக்களுக்கு மறந்துவிட்டது. 235 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில் தனிப் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்கள் தேவை. தொடர்ச்சியாக இடைத் தேர்தல்களில் வென்ற பிறகும் தி.மு.கவிடம் இருப்பது 97 மட்டுமே. காங்கிரசின் 35 எம்.எல்.ஏக்கள்தான் தி.மு.கவின் ஆட்சிக்கு பிராண வாயு. அதிக கூட்டணிக் கட்சிகளை வைத்துக்கொண்டிருப்பதுதான், தி.மு.க குறைவான தொகுதிகளில் போட்டியிடவும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகவும் காரணம் என்ற கட்சிக்குள் எழுந்த புதுச் சிந்தனையால் ஏற்கனவே குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த 18 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பா.ம.கவை 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியிலிருந்து விரட்டியாகிவிட்டது. காங்கிரஸ் போக 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் தி.மு.க கூட்டணியில் உள்ளது. தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலேயே எதிர் முகாமுக்குத் தாவிய சி.பி.எம் (9 எம்.எல்.ஏக்கள்) வேண்டாவெறுப்பாக அ.தி.மு.க கூட்டணியில் நிற்கிறது. சி.பி.ஐ (6 எம்.எல்.ஏக்கள்) முழு மனதுடன் அ.தி.மு.க முகாமில் இருப்பதாக சொன்னாலும் இடதுசாரிகளில் வலுவான சி.பி.எம் செல்லும் திசைகளில் செல்வதுதான் சி.பி.ஐக்கு உகந்தது; அவ்வாறுதான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது. ம.தி.மு.கவை வேட்டையாடி, ஆடி 3 எம்.எல்.ஏக்கள் அளவுக்குக் கொண்டு வந்தாயிற்று. இப்போது இந்த எம்.எல்.ஏ கணக்கை வைத்து தி.மு.க ஓர் ஆடு புலியாடு ஆட்டம் ஆட தயாராகி வருகிறது.
புலி, ஆடு, புல்லுக் கட்டு கதையாக யாரை எங்கு சேர்ப்பது, எங்கு விடுவது என்று கவனமாய கையாள வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.கவின் பக்கம் இருக்கும் போது இடதுசாரிகள் வர மாட்டார்கள். அதனால் காங்கிரஸ் விலகி, அ.தி.மு.க பக்கம் சென்றால் இடதுசாரிகளை இங்கு கொண்டு வந்துவிடலாமே? நவீன் சாவ்லா விவகாரத்திற்கு மறு நாளே இடதுசாரிகள் தி.மு.கவுக்கு நன்றிக்கடன்பட்டவை என்ற தொனியில் வெளியான முரசொலி மு.க கட்டுரையின் தாத்பர்யம் அதுதான். மு.கவின் முரசொலி கட்டுரைகள் அவரால் பின்னணியிலிருந்து இயக்கப்படும் வெகுஜன பத்திரிகைகளில் திடீரென இடம் பெறத் தொடங்கியிருப்பது, செய்தி அங்கு போய்ச் சேர வேண்டும் என்பதற்காகத்தான். இடதுசாரிகளின் 15 எம்.எல்.ஏக்களுடன், விலை கொடுத்து வாங்கிய சில அ.தி.மு.க எம்.எல்.ஏக்களையும் கூட்டினால் அறுதிப் பெரும்பான்மை ரெடி. குடைச்சல் கொடுக்கும் பா.ம.கவைக்கூட நம்பாமலே தி.மு.க ஆட்சியை தக்க வைப்பதற்கான வழி இது.
இப்படிப்பட்ட அரசியல் கணக்கு அவர் மனதில் இருப்பதாலேயே கூட்டணி மாறும் என்று அர்த்தமல்ல. இது காங்கிரசுக்கான மிரட்டல். நீங்கள் இல்லாமலே என் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும் என்று காட்டிக்கொள்வது மூலம் அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்களை தடுத்து நிறுத்துவது அல்லது காலம் தாழ்த்த வைப்பதுதான் நோக்கம். மத்தியில் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கப் போகும், அசைக்க முடியாததாகத் தெரியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் ஆதரவும் அதில் கிடைக்கும் பதவியும் அவருக்குத் தேவை. அந்த வாய்ப்பு பறி போவதற்கான அச்சுறுத்தல்களை முளையிலேயே கிள்ளியெறியும் வேலைதான் இது. 1996 தேர்தலில் ரஜினியின் ஆதரவையும் பெற்று வென்றாலும் அதன் பிறகு ரஜினி ஒரு தனி அரசியல் சக்தியாக, தனக்கு எதிரான சக்தியாக உருவாகிவிடக்கூடாது என்பதை மு.க எவ்வாறுதான் தந்திரமாக கையாண்டாரோ அவ்வாறு இதையும் கையாள்கிறார் ("கடவுளே, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று; எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" மு.கவுடன் நட்பிலிருந்த போது ரஜினி நடித்துத் தயாராகி பாதியில் நின்ற ஜக்குபாய் படத்தின் வசனம்).
எதிராளியின் நடவடிக்கையை pre-empt செய்யும் முயற்சிதான் இது. எதிராளி அந்தக் காரியத்தைச் செய்யும் முன்பே அதைச் செய்வதற்கான மனோ பலத்தை சிதைக்க முயற்சிக்கிறார் மு.க. தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிக வினோதமாக 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி இருவருக்குமே அரசாளும் வாய்ப்பு கிடைத்தது. தி.மு.கவுக்கு ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவு இருந்தால் போதும். எனினும் இரண்டு பெரிய கூட்டணிக் கட்சிகள் சேர்ந்தால் 57 எம்.எல்.ஏக்கள் கொண்ட அ.தி.மு.க அரசாளலாம். ஆனால் தனது அகம்பாவத்தால் அனைத்து கட்சிகளையும் ஜெயலலிதா பகைத்துக்கொண்டிருந்ததால் மூன்று ஆண்டுகள் கழித்தும் அவரால் அந்த உபாயத்தை பயன்படுத்த முடியவில்லை. இனியும் பயன்படுத்த முடியாதபடி தி.மு.க அந்தக் கட்சி எம்.எல்.ஏக்களை தன்வசமாக்கி வருகிறது. இதுவரை இரண்டு ரத்தத்தின் ரத்தங்கள் அறிவாலயத்தில் முழுமையாக சரணடைந்துவிட்டார்கள். எஸ்.வி.சேகர் எந்தக் கட்சி சாராமல் கோபாலபுரத்தாரை ஆதரிக்கிறார். கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ஆகியோர் அந்தக் கட்சியில் இருந்தாலும் தி.மு.க விசுவாசிகள் என்பதை முதல்வரையும் பிறரையும் சந்தித்து நிரூபித்துவிட்டார்கள். ஒரு பக்க பணத்தாசை. மறு பக்கம் சம்பாதித்த பணத்தை, சொத்துக்களை அதிகாரமிக்க ஆளுங்கட்சியின் வேட்டைக்கு பறி கொடுத்துவிடுவோம் என்ற பயம் ஆகியவற்றால் கணிசமான அ.தி.மு.க எம்.எல்.ஏக்களையும் பிரமுகர்களையும் தங்களவர்களாக தி.மு.கவினர் வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அவர்களில் ஒரு சிலரை வெளிப்படையாக கருப்பு-சிவப்பு விசுவாசத்தைக் காட்ட வைத்திருப்பது மூலம் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு மாற்றுக் கட்சி உளவாளிகாக, விசுவாசிகளாக இருக்கிறார்களோ என்று போயஸ் கார்டன் தரப்பிற்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்தக் கட்சிக்குள் இயல்பாகவோ, தி.மு.கவின் தூண்டுதல் பேரிலோ எழுந்திருக்கும் உள்கட்சித் தேர்தல் பிரச்சனைகளையும் கட்சி நிர்வாகம் குறித்த பிரச்சனைகளையும் இன்னும் மோசமாக்கப் பார்க்கிறார்கள்.
அ.தி.மு.கவைப் பொருத்தவரை கட்சி பலவீனமாக இருப்பதுகூட பெரிய இழப்பு அல்ல. எம்.ஜி.ராமச்சந்திரன் உருவாக்கிய அந்தக் கட்சியின் அடியாதாரம் கட்சி அல்ல. ஒரு பெரிய தலைவரையே மையமாகக் கொண்ட சர்வாதிகார இயக்கம் அது. கீழே எத்தனை எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டுப் போனாலும் அதை மேலும் சில பூஜ்ஜியங்களைக் கொண்டு நிரப்பிவிடலாம் (அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்பதால் அவர்கள் பிரித்துச் செல்லும் வாக்குகளும் ஒன்றும் பெரியதல்ல). எல்லோரும் நினைப்பது போல, தி.மு.க காட்ட விரும்புவது போல, சசிகலாவும் அவரின் மன்னார்குடி குடும்பத்தின் கட்சி மீதான கட்டுப்பாடும்கூட கட்சிக்குப் பெரிய அச்சுறுத்தல் அல்ல. அது சமாளிக்கக்கூடிய பிரச்சனையாகவே ஜெயலலிதாவுக்கு இருந்து வந்திருக்கிறது. அதற்கு மாறாக, எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஏழை மக்களின் பங்காளன் என்ற பிம்பத்தையும் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கியையும் ஜெயலலிதா தொலைத்துவிட்டு நிற்பதுதான் அந்தக் கட்சிக்கு நிஜமான ஆபத்து. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதுகூட கட்சியை காப்பாற்றிய அரிய அரசியல் சாதனையை நிகழ்த்திய மு.க, எம்.ஜி.ஆரின் வெகுஜன மயக்கு அரசியலை தான் கையிலெடுத்துக்கொண்டு முன்பைவிட பல மடங்கு சக்தி படைத்தவர் போல் காணப்படுகிறார்.
தமிழ், தமிழ்க் கலாச்சாரம், மொழிப் பெருமை போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகளால் கட்டமைக்கப்பட்டது திராவிட இயக்கம். தமிழ் மானம் பெரியதா, வயிறு (சாப்பாட்டுப் பிரச்சனை) பெரியதா என்று 1960களில் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் விவாதம் வந்த போது தமிழ் மானமே பெரியது தீவிரமாக வாதாடியவர்கள் தி.மு.கவினர். மொழி, கலாச்சாரம் குறித்த பண்டைய (பல சமயங்களில் பொய்யான, கற்பனையான) புகழைப் பாடுவது வெகுஜனங்களின் உணர்ச்சிகரமான ஆதரவைப் பெறுவதற்கான சுலபமான கருவி. இந்தியின் ரூபத்திற்கு அதற்கு சரியான எதிரி உருவான பிறகு தி.மு.கவின் எழுச்சியையும் காங்கிரசின் வீழ்ச்சியையும் தடுக்கவே முடியவில்லை. போகப் போக வெகுஜனங்களுக்கு அத்தகைய பொய்யான கோஷங்களில் கவர்ச்சி போய்விட்டாலும் கட்சித் தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு அது பயன்பட்டு வருகிறது. இல்லாவிட்டால், 13 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை ருசிக்காமல், எம்.ஜி.ஆர் போன்ற வெகுஜன செல்வாக்கு கொண்ட ஒரு தலைவருக்கு எதிராக ஒரு கட்சி தாக்குப் பிடித்திருக்க முடியாது. ஆனால் அதே பொய்களை வைத்து மக்களை வெல்லலாம் (தொண்டர்களை வெல்வது என்பது வேறு, மக்களை வெல்வதென்பது வேறு) என்ற தி.மு.கவின் தப்புக் கணக்குகள்தான் அரைவேக்காட்டு 'பகுத்தறிவு' முழக்கங்களுக்கு (பெரும் சீரழிவுகளை எட்டிவிட்ட தங்களுக்கு சற்றும் பொருந்தி வராத கடவுள்களுக்கும் சடங்களுக்கும் எதிரான கருத்துக்கள்) வித்திட்டது. அதோடு தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய ஏழைகளுக்கான அரசாங்கமாக அவர்களுடையது பெயர் பெற முடியவில்லை. 1996-2001 ஆட்சிக் காலத்தில் மினி பஸ்கள் போன்ற புதுமையான திட்டங்களை நிறைவேற்றிய போதும் நல்ல நிர்வாகம் என்று பெயர் வாங்கிய போதும் தி.மு.க தோற்றது. ஏனெனில் பெயருக்கு செய்யப்பட்ட ஏழைகளுக்கான திட்டங்கள் போக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நடந்தது போன்ற கவனத்தை ஈர்க்கும் பெரிய ஏழைகளுக்கு உதவும் திட்டங்கள் இல்லை.
2006 மே மாதத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் வழக்கமாக ஆட்சியிலிருக்கும் போது தி.மு.க சந்திப்பது போன்ற மோசமான தோல்வி அல்ல. ஆனால் இலவச டிவி, மலிவு விலை அரிசி, இலவச கேஸ் முதலிய அடித்தட்டு மக்களுக்கான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அதை தீவிரமாக நிறைவேற்றி வருவது மூலம் அவரது இனிய நண்பரும்-தீவிர எதிரியாக மாறியவருமான எம்.ஜி.ஆருக்கிருந்தது போன்ற ஏழைப் பங்காளன் என்ற பிம்பத்தை எட்டும் பாதையில் இருக்கிறார். எம்.ஜி.ஆரை ஏழைப் பங்காளன் என்று அழைத்த காலக் கட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தை அவரது அரசு மிகக் கொடூரமாக ஒடுக்கிய போதும் மக்கள் அவரை ஏனென்று கேட்கவில்லை. மது விலக்கை கைவிட்டுவிட்டு, போதையில் மூழ்க விட்டாலும் பெண்கள் அவருக்கே வாக்களித்தார்கள். தங்களின் அன்றாட வயிற்றுப் பிரச்சனையை, வாழ்வாதாரப் பிரச்சனையை ஒரு தலைவர் தீர்த்து வைக்கும் போது, அவர் தொடர்ந்து அதைச் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கும் போது வாக்காளர்களுக்கு அவரின் மற்ற குறைகள் கண்ணில் தெரிவதில்லையோ என்னவோ. இது போன்ற வெகுஜன மயக்குத் திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவு கிடைக்கும் போது அது இயல்பாகவே சர்வாதிகாரத்திற்கும் வழி வகுக்கிறது. எம்.ஜி.ஆர் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி நடத்தினார். மனித உரிமை இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியையே தற்போதைய அரசாங்கத்திடமும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் சிவில் உரிமை இயக்கங்களும் அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படாமல் போனதற்கு வெகுஜன அரசுகளும் அவற்றோடு பிறந்த சர்வாதிகார அரசுகளும்தான் காரணம் என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் சைன்ஸின் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் ஜான் ஹாரிஸ். எம்.ஜி.ஆரின் வாரிசு என்ற அடையாளம் என்பது ஏற்படுத்திக் கொடுத்த பிம்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதாவும் தனக்கு சவால்கள் ஏற்பட்டபோது சர்வாதிகாரி போலத்தான் நடந்துகொண்டார்.
இலவசங்கள் உள்ளிட்ட ஜனமயக்குத் திட்டங்களுக்கும் (populist) அதை வழங்கும் அரசியல் தலைவர் சர்வாதிகார தொனியில் ஆட்சி செய்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லும் ஆய்வாளர் ஜான் ஹாரிஸின் வாதத்தை முற்றிலும் நிராகரிப்பதற்கில்லை. அதே போல வெகுஜன மயக்குத் திட்டங்களில் இரண்டு வகை உண்டு என்று சமூக அரசியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒன்று empowerment populism. இது கம்யூனிச சித்தாந்தைப் போன்ற வர்க்க தத்துவத்தின்படி அமைந்தது. மேல் தட்டு வர்க்கம்தான் ஏழைகளின் எதிரி. அவர்கள் ஏழைகளுக்கு பொது வள ஆதாரங்களை கிடைக்காதபடி செய்கிறார்கள் அல்லது கணிசமான பங்கை தங்களுக்கே எடுத்துக்கொள்கிறார்கள். இத்தகைய சித்தாந்தத்துடன் தான் திராவிட அரசியல் தனது பாதையை தொடங்கியது. ஆனால் விரைவிலேயே
அவர்கள் எழுச்சி ஏற்படுத்திக் கொடுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து உருவாகி வந்த புதிய மேல் தட்டு வர்க்கத்தின் நலன்களையும் அவர்கள் கவனித்துக்கொள்ளலானது. இவ்வாறு மேல்தட்டு சமூகத்தின் ஒரு பகுதியினர் மற்றும் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் ஜனத்தொகை எண்ணிக்கையில் அதிகமான ஏழைகள் என முரண்பாடான இரண்டு வர்க்கப் பிரிவினரின் நலனுக்காக அரசியல் செய்யும் கட்சியாக திராவிட இயக்கங்கள் உருவெடுத்திருக்கின்றன. இதைத்தான் ஆய்வாளர்கள் protection populism என்கிறார்கள். எம்பவர்மெண்ட் பாப்புலிசத்தில் ஏழைகளை சுரண்டும் மேல் தட்டு வர்க்கத்திடமிருந்து வள ஆதாரங்கள் பிடுங்கி அடித்தட்டு மக்களுக்குத் தரப்படும். அதற்கு மாறாக புரொடக்ஷன் பாப்புலிசத்தில் ஏழைகள் பணமே வரியாக பிடுங்கப்பட்டு, அவர்களுக்கே அது திரும்பக் கொடுக்கப்படலாம். எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அத்தகைய வினோதம் நிகழ்ந்ததாக சொல்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். தற்போதைய தி.மு.க அரசின் ஏழைகளுக்கான திட்டம் அதே மக்களிடமிருந்து வரியாக சுரண்டப்பட்டதுதானா என்று உடனடியாக உணர முடியவில்லை. ஆனால் பூ விற்கும் ஏழை வெள்ளை போர்டு பேருந்துக்காக காத்திருந்து தோற்றுவிட்டு, நீக்கமற நிறைந்திருக்கும் சொகுசுப் பேருந்தில் மிக அதிக கட்டணமாக ஐந்து ரூபாய் கொடுத்து பயணிக்கிறாள்; அரசுக்கு சாபம் கொடுத்துக்கொண்டு.
2006 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி கொடுக்க முன்வந்த இலவச டிவியும் கால தாமதமாக ஜெயலலிதா அறிவித்த இலவச கணினியும்தான் உண்மையில் "ஜனநாயக"த்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கின. இன்னும் ஒன்றரை வருடம் கழித்தோ, அதற்கு முன்னதாகவோ வரப் போகும் அடுத்த தேர்தலுக்கு எதைக் கொடுப்பதாக அறிவிக்கலாம் என்று இப்போதே அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்திருக்கும் என்பதை முரசொலி கட்டுரையும் பதற்றமும் கோடநாடு ஓய்வகத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு நேர்காணல்கள் கொடுப்பதில் ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் ஆர்வமுமே சாட்சி. வளரும் நாடுகளாக இருக்கும் அரைகுறையாக தொழில்மயமாதலைக் கண்ட தேசங்களில் அடி மட்டம் வரை தேசிய வள ஆதாரங்கள் பகிர்ந்துகொடுப்பதற்கு இது சிறந்த வழி என்பதை அரசியல்-பொருளாதார வல்லுனர்களும் இப்போது ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் (நரேந்திர சுப்ரமணியம், அருண் சுவாமி முதலிய ஆய்வாளர்கள் அது குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்). ஆனால் இலவசங்களும் மானியங்களும் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாய்வு உருவாவதற்கான அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதில்லை. இலவசங்கள் ஏழைகளுக்கு மட்டுமே செல்கின்றன என்பதற்கும் உத்தரவாதமில்லை. இலவசங்களைக் கொடுத்து ஆட்சியைப் பிடிப்பவர்கள், அதைவிட பல மடங்கு பணத்தை ஊழல் செய்ய வசதியாக அரசுக்கு எதிரான, ஆளுங்கட்சிக்கு எதிரான எந்த சக்தியையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் சிவில் உரிமை அமைப்புகள் இலவசங்களின் பூமியில் மிக அதிக சவால்களை சந்திக்கின்றன. உண்மையில், சிவில் உரிமைகளுக்கான இயக்கங்கள் மூலம்தான் சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை, ஏழ்மையை நிரந்தரமாக குறைக்க முடியும் என்பதை வளர்ந்த நாடுகள் உணர்த்தியுள்ளன. தற்காலிக தீர்வு தரும் இலவசங்களை அனுமதிப்பதன் விளைவாக, நீண்ட கால நலனை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அடமானம் வைக்கிறோமா?
maya.flowerpower@gmail.com