
கனமழை பெய்வதை நோக்கி தனிமையில் அமர்ந்திருக்கும்போது பெரும்பாலான சமயங்களில் என் நினைவுக்கு வரும் படம் 'ராஷோமான்'. ஒரு சம்பவமும் அதன் ஒன்றுக்கொன்று வித்தியாசமான நான்கு விவரணைகளுமாக புகழ்பெற்ற இந்தப் படம் மழையிலிருந்துதான் துவங்குகிறது. சிதிலமாகிக் கொண்டிருக்கிற 'ராஷோமான்' என்னும் நகர நுழைவாயிலின் மேல் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. வாயிலின் படிக்கட்டு, தூண்கள், மேற்கூரை எல்லாம் மழையில் நனைந்தொழுகுகிறது. தரையில் மழை வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. எங்கும் பெருமழையின் காட்சிகள்.
மழை நனையாமலிருப்பதற்காக வாயிலின் கீழ் தஞ்சமடைந்த ஒரு மரம்வெட்டியும் மதகுருவும் தலை குனிந்தபடி, மழையில் கவனத்தைக் குவித்து மௌனமாக இருக்கிறார்கள். அந்த மௌனத்தை மரம்வெட்டி முதலில் அறுக்கிறான். நாம் பார்க்கவிருக்கும் திரைப்படத்தின் புதிர் நிறைந்த குழப்பங்களை தெரியப்படுத்துவதுபோல அவன் சொல்கிறான்: 'எனக்கொண்ணும் புரியல. ஒரு வழியும் விளங்கல.'
மதகுரு அதைக்கேட்டு மரம்வெட்டியை ஒரு முறைபார்க்கிறார். அவ்வளவுதான். மீண்டும் அவர்கள் மழை பெய்வதை நோக்கி நிசப்தர்களாக இருக்கிறார்கள்.
இந்தக் காட்சிக்குள் மூன்றாவதாக ஒரு கதாபாத்திரம் நுழைகிறது; மழைநீரை நாலாபுறமும் தெறிக்கச் செய்தபடி. யாரேனும் வாய் திறந்து பேசுவதைக் கேட்பதைவிட மழையின் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதுதான் தனக்குப் பிடிக்கும் என்கிறான் அவன். ஆனாலும் மரம்வெட்டியின் கதைசொல்லலில் அவனுக்கும் ஈடுபாடு இருக்கவே செய்தது. இந்த மழை நிற்கும்வரை எதையாவது சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருக்கலாமே என்பதுதான் அவனுடைய பட்சம்.
மிகக் குழப்பம் நிறைந்த 'ராஷோமான்' கதையை அகிரா குரோசோவா நுழைவாயிலின் வெளியே மழை பெய்யும் நேரத்தில் விவரித்து முடிக்கிறார். படம் முடியும் தருணத்தில் மழை நிற்கத் துவங்குகிறது. மேலிருந்து படிக்கட்டில் மழைத்துளிகள் துளித்து வீழ்கின்றன. இறுதிக் காட்சியில் மழைமேகம் நீங்கி ஆகாயம் தெளிந்து வாயிலின் மேல் சூரிய ஒளி படர்கிறது.
குரோசோவா தன்னுடைய முக்கியமான இந்தத் திரைப்படத்துக்கு அடிப்படையாக எடுத்துக்கொண்ட - முப்பத்தியைந்து வயதில் தற்கொலை செய்துகொண்ட ரியனோசுகி அகுதகாவாவின் இரண்டு கதைகளில் ஒன்றான - 'ராஷோமானி'லும் பெருமழை உண்டு. ஆனால் கதையில் அது ஒரு குறியீடாக பயன்படுத்தப்படவில்லை. பெருமழையின் பின்னணியில் ஒரு கதை சொல்லல். அவ்வளவே. அது மட்டுமல்ல ஒரு சின்ன எதிர்பார்ப்புக்குக் கூட இடம் தராத இருண்மையான ஒரு கதை அது. ராஷோமோன் நுழைவாயிலின் மேல்தட்டில் தூக்கிவீசப்பட்ட அனாதைப் பிணங்களின் முடியைப் பிய்த்தெடுத்து 'விக்' செய்து விற்கிறஒரு பரட்டைக் கிழவியும் அவளைக் கொள்ளையடிப்பதில் அநியாயம் ஏதுமில்லை என்று சொல்லி அவளின் துணிகளை உருவிக்கொண்டு அவளை பிணங்களுக்கிடையில் உதைத்துத் தள்ளி இரவின் இருட்டுக்குள் ஓடி மறையும் ஒரு சாமுராயின் வேலைக்காரனும்தான் அதில் உள்ள கதாபாத்திரங்கள். அவலத்தையும் சுயநலத்தின் நிர்வாணத்தையும் அடையாளப்படுத்தும் கதாபாத்திரங்கள். பனிரெண்டாம் நூற்றாண்டின் பஞ்சத்தாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் நாசப்பட்டுப்போன கியோட்டோ நகரத்தின் பரிதாப நிலையில் நம்பிக்கையின் ஒரு சின்ன வெளிச்சக் கீற்றைக்கூட அகுதகாவா தரிசிக்கவில்லை. ஆனால் திரைக்கலைஞனான குரோசோவா கதாசிரியனின் பார்வையை பின்பற்றவில்லை. அதனாலேயே அகுதகாவாவின் கதை திரைப்படமானபோது அது மனிதத்தன்மைக்கு எதிரான விவரணையாக அமையவில்லை. மழை நின்றபின்னே மதகுரு மரம்வெட்டியிடம் கூறுகிறார்:
'உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மனிதனிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கவேண்டியதில்லை என்று நீங்கள் எனக்குப் புரியவைத்திருக்கிறீர்கள்.'
ராஷோமோன் நுழைவாயிலில் யாரோ கைவிட்டுப்போன ஒரு குழந்தையை தன் ஆறு குழந்தைகளோடு சேர்த்து வளர்ப்பது என்கிற மரம்வெட்டியின் மனிதாபிமானம்தான் மதகுருவின் இதயம்தொட்டது. அதுவரை அவர் பார்த்த, கேட்ட விஷயங்கள் எல்லாம் மனிதனிடமுள்ள நம்பிக்கையை அறுக்கிறவிஷயங்கள்தான். மற்றவர்கள் எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய மரம்வெட்டிக்குள்ளேயும் பொய் பதுங்கியிருக்கிறது என்றும் காலத்தின் அவலத்தைத்தான் அவன் அடையாளப்படுத்துகிறான் என்றும் நினைத்து மனமொடிந்த மதகுருவுக்கு தன் நம்பிக்கைகள் திரும்பக் கிடைக்கின்றன. அப்போதுதான் மழைமேகம் நீங்கி ஆகாயம் பிரகாசமடைகிறது.
நான் பார்க்க நேர்ந்த வேறெந்தப் படத்திலும் மழை இவ்வளவு ஆற்றலுடன் வெளிப்பட்டதில்லை. மழை பெய்வதைப் பார்த்தபடி ஏகாந்தியாய் இருக்கையில் வேறேந்தப் படமும் என் நினைவில் வருவதுமில்லை.