முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்
அ.ராமசாமி
ஹெமிங்வேயும் உயிரோசையும்
ஆர்.அபிலாஷ்
தேக்கடி படகு விபத்து: மலிவாகிப் போன மனித உயிர்
மாயா
இந்தியாவின் இயற்கை வளங்கள் என்ன அம்பானிகளின் சொத்தா?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
பொருளாதார தாராளமயமாக்கலும் சனிப்பெயர்ச்சியும்
ஜி.ஆர்.சுரேந்திரநாத்
இரண்டாம் காதலர்களும், மூன்றாம் காதலிகளும்
நிஜந்தன்
காணாமல்போன காந்தி
வாஸந்தி
தொலைந்து போனவர்கள்
சுப்ரபாரதிமணியன்
தத்ரூப வியாபாரிகள்
எம்.ரிஷான் ஷெரீப்
செலவு மிகுந்த மரணம்
இளைய அப்துல்லாஹ் (லண்டன்)
சின்ன.. சின்ன ஊசிகள்!
தமிழ்மகன்
கவிதை
நிருவாணமாகக் கொலையுண்டவர்களின் பின்பக்கம்
தீபச்செல்வன்
நெருங்கவியலாமல்..
பரிமளம்
ரயில்விலங்கு ஓடிக் கடக்கும் மலைபபிரமிடுகள்
நந்தாகுமாரன்
நீங்கள் கேட்டவை
என். விநாயக முருகன்
அன்று நல்ல மழை
அடலேறு
எனக்கான விருந்தாளி
உழவன்
சிறுகதை
மூன்று சம்பவங்கள்
சரவண வடிவேல்.வே
அம்ரிதா
க.ராஜம்ரஞ்சனி
பொது
என்றார் முல்லா
பாபுஜி
சூஃபி கதைகள்
பா‘பு
இந்த வார கருத்துப் படம்
கரை
பாபுஜி
புது நூல்
ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்
-
சிற்றிதழ்ப் பார்வை
போர்க்குரல்
-
காணாமல்போன காந்தி
வாஸந்தி

மஹாத்மா காந்தி என்ற மாமனிதர் திடீரென்று இன்று உலகத்தின் பார்வையில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவுக்கு நன்றி. இனிமேல் நமது இளைஞர்களுக்கும், பள்ளிச் சிறுவர் சிறுமியருக்கும் அவர் யார் என்று அறியும் ஆவல் ஏற்படலாம். சென்ற மாதம் அமெரிக்காவின் ஆர்லிங்டன் வர்ஜீனியாவில் உள்ள வேக்பீல்ட் உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி அதிபர் ஒபாமாவை ஒரு விசித்திரமான கேள்வி கேட்டாள். " ஹாய்! என் பெயர் லிலி. உங்களுக்கு யாருடனாவது டின்னர் சாப்பிட விருப்பம் என்றிருந்தால், உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ, அது யாருடன் இருக்கும்?" ஒபாமா யோசித்தார். அது பெரிய லிஸ்டாக இருக்குமே? "என்று சிரித்தார். ஆனால் அடுத்த நிமிடம் மிக சீரியஸ்ஸாகச் சொன்னார். " அது காந்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்தான் எனது நிஜமான ஹீரோ". கூடவே சிரிப்புக்கிடையே சொன்னார்." ஆனால் அது மிக எளிய குறைந்த உணவாக இருக்கும். ஏனென்றால் அவர் நிறைய சாப்பிடமாட்டார்."

ஒபாமா அப்படிச் சொன்னது வெறும் வேடிக்கைப் பேச்சல்ல என்பது அவர் சமீபத்தில் பேசியது விளக்குகிறது. உலக அஹிம்சை தினமாகக் கொண்டாடப்படும் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று வாஷிங்டனில் சொன்னது அதிக ஆழம் கொண்டது. மஹாத்மா காந்தியின் இந்தியாவில் இன்றைய அமெரிக்காவின் வேர்கள் இருக்கின்றன" என்றார். " 1959-ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் [ஜூனியர்] இந்தியாவுக்குப் புனிதப்பயணம் செய்தபோது, காந்தியின் உபதேசங்களாலும் கொள்கைகளாலும் வசீகரிக்கப்பட்டார். அதன் காரணமாய் அவர் துவங்கிய ஸிவில் உரிமை இயக்கம் அமெரிக்க சமூகத்தையே மாற்றியது. அமெரிக்கர்கள் மஹாத்மா காந்திக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்." காந்தி இப்போது இந்தியர்களுக்கு வெறும் ஒரு சரித்திரம் என்று அவர் அறிந்திருப்பார். நமக்கு நினைவு படுத்துவதுபோல இருந்தது அவர் மேற்கொண்டு சொன்னது. " உலகம் முழுவதிலும் அரசியல் இயக்கங்களுக்கும் மனிதர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமும் உத்வேகமும் அளித்துவரும் அவரது அஹிம்சாவாதத்தைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டிய மிக முக்கியமான தருணம் இது. அஹிம்சை முறை எதிர்ப்பின் மூலம் மாறுதல் ஏற்படுத்திய, தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே வாழ்ந்த , எல்லா இனத்தையும் அரவணைத்த அந்த மகானின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய மக்களுடன் அமெரிக்க மக்களும் இணைகிறார்கள். காந்தியின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவும் மானுட கண்ணியத்தைக் கொண்டாடவும் உறுதி பூணுவோம்".

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்று தேசிய விடுமுறை நாளாக அறிவித்ததில் காந்தியின் நினைவுநாள் அன்று இந்தியர்களின் எண்ணங்களில் அன்று காந்தி இடம்பெறுவதுகூட இல்லை. சினிமா பார்ப்பதற்கும் அல்லது பிக்னிக் போவதற்கும் அல்லது சும்மா சோம்பிப் படுப்பதற்கு மட்டுமே பயன்படுவதாக, மாறிப்போனது. எப்பேற்பட்ட ஒரு மாமனிதர் இந்த மண்ணில் வாழ்ந்தார் என்பதை வெளிநாட்டவர் பிரமிப்புடன் பேசும்போது கூட நமக்கு அதன் முழு தாத்பர்யமும் அதன் பரிணாமமும் விளங்குமா என்பது சந்தேகம். ட்விட்டர் ப்ளாக் மூலம் சர்ச்சையில் சிக்கிய சசி தாரூர் இந்த விடுமுறை அளிப்பது பற்றி சொன்னது கவனத்திற்குரியது. " அன்று ஏன் விடுமுறை அளிக்கப்படவேண்டும்?" என்று கேட்கிறார் அவர். "காந்திக்கு உண்மையான அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால் அவருக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் நாம் அன்று அதிகமாக உழைக்கவேண்டும். உழைப்பு என்பது வழிபாடு என்று சொன்னவர் காந்தி. அன்று ஏன் மக்கள் சோம்பி வீட்டில் உட்காரவேண்டும்?" வெளிநாடுகளிலும் ஐநாவிலுமே இதுவரை பணியாற்றியிருக்கும் சசி தரூருக்கு இந்தியர்கள் அனுபவிக்கும் அதிக பட்ச விடுமுறை நாட்கள் ஆச்சரியமாக இருக்கிறது. வருடத்தில் பாதி நாட்களே நாம் வேலை செய்கிறோம் என்கிறார். மதரீதியான விடுமுறைகளை அவர் குறிப்பிடவில்லை. தலைவர்களின் பெயரில் வரும் விடுமுறைகள் அனாவசியம் மட்டுமல்ல அந்த நாட்களை வீணாகக் கழிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிறார். அப்படிக் கழிப்பது அத்தலைவர்களை அவமானப்படுத்துவது போல என்று அவர் சொல்லாமல் சொன்னார். எனக்குக் காலம் சென்ற குன்றக்குடி அடிகளார் நினைவு வருகிறது. மிக முற்போக்கு எண்ணங்கள் கொண்ட மடாதிபதி அவர். மதரீதியான விழாக்களைக் கூட அர்த்தமுள்ளவையாக அவர் மாற்றினார். பிட்டுக்கு மண்சுமந்த ஈசனின் விளையாட்டைக் கொண்டாடும் திருவிழாவில் ஊர் மக்களை ரோடு செப்பனிடுவது, தூர் வாறுவது போன்ற பணிகளைச் செய்யச் சொல்வார். அந்தக் கதையின் உள் அர்த்தம் அதுதான் என்று விளக்குவார். அதே போல முளைப்பாறித் திருவிழா உழவுக்கு வந்தனை செய்வதுபோல நடக்கும்.

தமிழ் நாட்டில் அண்ணாவின் பெயரைச் சொல்லி , பெரியார் பெயரைச் சொல்லி பல மாதங்கள் நடந்த விழாக்கள், கொடுக்கப்பட்ட விருதுகள், அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம், நேரம் இவையெல்லாம் உண்மையிலேயே அண்ணாவுக்கும் பெரியாருக்கும் எந்த வகையில் அதிகப் புகழைத் தந்தன என்று பாமரனுக்குப் புரிந்திராது. மேடையில் இருப்பவரெல்லாம் பேசிய பேச்சும் சூட்டிய புகழாரங்களும் அண்ணாவுக்கோ பெரியாருக்கோ அல்ல என்பதால் யாருக்கான விழா அது என்று கூட அவனுக்குப் புரிந்திராது. மேடை நாயகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சவரன் விற்கிற விலையில் நூறு சவரனிலும் அறுபது [அதற்கு மேலோ] சவரனிலும் சங்கிலியோ வேறு எதுவோ பறிமாறிக்கொண்டது இன்னும் குழப்பத்தை அளித்திருக்கும். முதல்வருக்கே கூட அது அண்ணாவுக்கான விழா என்று மறந்துபோனது போல இருந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்வதும் பெரியார் பெயரைச் சொல்வதும் இப்போது ஒரு சடங்கு.

'நமச்சிவாய வாழ்க' என்பது போல 'அண்ணா நாமம் வாழ்க'. ஜெயலலிதாவும் தனது தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்களை அப்படித்தான் முடிப்பார்.

அதுபோல இப்போது தேச பிதா காந்தியும் வெறும் அடையாளமாகிப் போனார். பள்ளிக்குழந்தைகளுக்கு ஷாருக்கானையும் ரஜனி காந்தையும் தெரிந்த அளவுக்கு காந்தியைப் பற்றித் தெரியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைவர் அல்லது சிவாஜி போன்ற வரலாற்று நாயகர் யாரேனும் முக்கியமாகப் படுகிறார்கள். ஒரு மாபெரும் வல்லரசை, 200 ஆண்டுகளுக்கு மேல் நம்மை அடிமைபடுத்திவைத்திருந்த ஒரு சாம்ராஜ்யத்தை அஹிம்சை எதிர்ப்பு மூலமே மண்டியிடவைக்கலாம் என்று நினைத்த ஒரு மனிதர் எத்தனை மனோ வலிமை படைத்தவராக இருந்திருக்க வேண்டும் என்று யாரும் இன்று பிரமிப்பதாகக் காணோம். அவர் நினைத்தது மட்டுமல்ல, ஏழ்மையும் கல்வியற்ற சூன்யமும் கொண்ட மாபெரும் மக்கள் சமூகத்தை தனது ஆன்மீக பலத்தால் ஆட்கொண்டார். அது சாத்தியம் என்று நம்பவைத்தார். பாராக் ஒபாமா "YES WE CAN!" என்று சொன்ன மந்திரம் என்றோ காந்தி சொன்னது. கத்தியின்றி, துப்பாக்கி இன்றி, ரத்தமின்றி எப்படி விடுதலை சாத்தியம் என்று அவர் நம்பினார்? அவர் அழைத்ததும் அதுவரை படிதாண்டாமல் இருந்த எத்தனை எத்தனை பெண்கள் உத்வேகத்துடன் வந்தே மாதரம் என்று குரலெழுப்பி ஆண்களுக்கு சமமாக சுதந்திர வேள்வியில் புகுந்தார்கள்! அரை வயிறு உண்டு , மேல் ஆடை இல்லாமல் முழங்கால் வரை உடுத்திய வேஷ்டியும் கைத்தடியும் பொக்கை வாயும் ஏழை இந்தியனுடன் அவரை ஐக்கியப் படுத்திற்று. தன்னை வாழ்விக்க வந்தவர் என்று நம்பவைத்தது. லண்டனில் நடந்த வட்ட மேஜை கூட்டத்திற்கும் அப்படித்தான் சென்றார். அன்றைய பிரபல பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில் அவரை 'அரை நிர்வாண பக்கிரி' என்று இகழும் அளவுக்கு. சர்ச்சில் மிகக் கடுமையாக காந்தியின் விடுதலைக் கோரிக்கையை எதிர்த்தும், காந்தி உறுதியுடன் நின்று வென்றார். நினைக்க நினைக்க நம்ப முடியவில்லை அப்படிப்பட்ட ஒரு மனிதர் இந்த மண்ணில் வாழ்ந்தார் என்று.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காந்தி இறந்த போது எழுதிய அஞ்சலி மிக சத்தியமானது. " இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் ரத்தமும் சதையுமாக இந்தப் புவியில் நடந்தார் என்பதை வரப்போகும் தலைமுறைகள் உணரமாட்டார்கள்."

நமது தலை முறையே உணரவில்லை. வன்முறையினால் எந்த நோக்கத்தையும் அடையமுடியாது என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் காந்தியின் வழியைப் பின்பற்றும் பொறுமையோ விவேகமோ யாருக்கும் இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நமக்கு நேரமில்லை. ஏனென்றால் அது சிக்கலான பாதை. ஆன்மீகமும் மனித நேயமும் கலந்த பார்வை. நாம் சுவாசிக்கும் காற்று கெட்டுவிட்டது. ஒரு கன்னத்தை அடித்தால் மறு கன்னத்தைக் காண்பி என்று சொல்வது நமக்குக் கோழையின் அடையாளம். அந்தப் பொடியன் சஞ்சை காந்தி சொன்னானே, அடித்தவன் கையை வெட்டுவேன் என்று, அது தான் இன்று பௌருஷத்தின் அடையாளம். கைத்தட்டல் பெறுவது. வன்முறை நமது எண்ணங்களில் இருக்கிறது, செயல்பாடுகளில் இருக்கிறது. நவராத்திரி ஆயுத பூஜையின் போது நரேந்திர மோடி கனரகத் துப்பாக்கிகள் , கைத்துப்பாக்கிகள், ஏகே 47, 57 என்று கொலுவைப்பது போல துப்பாக்கிகளை வைத்துப் பூஜை செய்தாராம். உலகம் முழுவதும், முக்கியமாக உலகத்தின் மிக வலிமை மிக்க நாட்டின் அதிபர் காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளைப் போற்றிப் பேசும் நேரத்தில் பீகாரில் நக்சலைட்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து அப்பாவிகளை-அதில் பல குழந்தைகள்- கொன்று குவித்தார்கள். அவர்களது தலைவர் ஒருவரை காவல்துறை கைது செய்ததற்காக. தமிழக மீனவர்களை சிங்கள கப்பற்படை சுடுகிறது என்று புதிய தமிழகம் செயல்வீரர்கள் தில்லி சாணக்யபுரியில் உள்ள ஸ்ரீ லங்கா ஹை கமிஷன் கட்டடத்துக்குள் அடாவடியாக நுழைந்து கற்கள் வீசி சேதம் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்தபடி தெரு ஓரத்தில் ஒரு வாகனத்தில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அமர்ந்திருந்தார் என்று செய்தி. கலாட்டா செய்தவர்களைக் காவலர்கள் பிடிப்பதற்குள் , வண்டியில் ஏறித் தப்பிவிட்டார்கள். இவர்கள் சாதித்தது என்ன? தங்கள் கட்சியின் பெயர் இப்படியாவது செய்தியில் அடிபடட்டும் என்பதா?

வன்முறை காலோச்சிய காலமும் அதன் தாக்கமும் நம்பமுடியாத விளைவுகளை உலகத்தின் முக்கியமான பகுதிகளில் சந்திக்கின்றன. இரும்புத்திரை என்று வர்ணிக்கப்பட்ட ருஷ்யாவில் முன்னாள் அதிபர் புட்டின் பழைய ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தின் சுவடுகளை அழிக்கப் பார்க்கிறார். க்ரெம்லின் செய்த அக்கிரமங்கள் பற்றி எழுத இப்போது தடைகள் இல்லை. தான் ஒரு சராசரி மனிதன் என்பதைக்காட்ட டால்பின்களுடன் நீச்சல் அடிக்கிறார். அமெரிக்காவில் போர் வெறி கொண்ட புஷ் அகற்றப்பட்டு அறிவு ஜீவி ஒபாமா அதிபராகியிருக்கிறார். அஹிம்சாவாதி காந்தியே எனது ஹீரோ என்கிறார். பலவீனமான பிரதமர் என்று அத்வானியால் காட்டமாக விமர்சிக்கப்பட்ட மன்மோகன் சிங் பாரதத்தின் பிரதமாரகியிருக்கிறார். வெறுப்பை வளர்ப்பதே தனது அரசியலாகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி சுருண்டுவிட்டது. வன்முறையை எண்ணங்களிலிருந்து அகற்றினாலேயே பிரச்சினைகளின் தீர்வுக்குப் பாதை தெரியும். அது பௌருஷம் அல்ல. பலவீனம். அதை காந்தி உணர்ந்ததே அவரது பலம்.

" நீங்கள் உங்கள் செயல்பாடுகளின் மூலம் காண்பித்திருக்கிறீர்கள்- வன்முறையைக் கைவிடாதவர்களைக்கூட வன்முறையற்ற வழிகளினால் வெல்லமுடியும் என்று" என்று ஐன்ஸ்டீன் காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். "உங்களுடைய உதாரணம் உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகத்துக்குப் பரவி யுத்தத்திற்கு பதில் சமாதானத்தைப் பரப்பும் என்று நான் நம்புகிறேன்."

பிறந்த நாட்டிலேயே காணாமல் போய்விட்ட காந்தியைத் தேடிப் பிடித்து தூசு தட்டிப் பார்க்கவேண்டிய அதி முக்கியமான தருணம் இது. உலகச் சந்தையின் புகழ் பெற்ற நிறுவனமான Mont Blanc காந்தியின் வாசகத்தை- ‘அஹிம்சையின் மூலமே சத்தியத்தை உணரமுடியும் - என்ற வாசகத்தை, தனது மிக விலை உயர்ந்த பேனாக்களின் விற்பனைக்கு விளம்பரமாக உபயோகிப்பதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை. தங்கப் பேனா முனையில் காந்தியின் உருவம் செதுக்கப் பட்டிருக்கிறது. நமக்கு வெறும் அடையாளம் தேவை இல்லை. அந்த வாசகத்தை மீள் பார்வை பார்ப்பதே , அதை உள்வாங்கிக் கொள்வதே நமது தலைமுறையின் கடமை. புவியைக் காக்கும் மந்திரச் சொற்கள் அவை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com