சமீபத்தில் பெங்களூர் நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஆங்கிலத்தில் வி,ஸ்ரீராம் எழுதியுள்ள புத்தகத்தைப் படித்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் தேவதாஸிக் குடும்பத்தில் பிறந்த இவர், ஒரு பிரமிக்கத்தக்கப் பெண்மணியாய் இருந்திருகின்றார் என்று தெரிகிறது. தாய்மொழி கன்னடத்தைத் தவிர இவருக்கு தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி இருந்திருக்கின்றது. பெங்களூர் நாகரத்தினம் என்றால், கர்நாடக சங்கீத பிதாமகர் தியாகராஜருக்குத் திருவையாரில் சமாதிக் கட்டியவர் என்று ஓரளவு பெரும்பான்மையோருக்குத் தெரிந்திருக்கலாமே தவிர, வாழ்க்கையில் ஆணாதிக்கத்தை எதிர்த்து அவர் போராடியதும், ஏழை தேவதாஸிக் குடும்பத்தில் பிறந்து பல வாதப் பிரதிவாதப் போராட்டங்களைச் சந்தித்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப, மத்திய காலங்களில், ஒரு சங்கீத ஒளி விளக்காய் மட்டுமல்லாமல், ஓர் அறிவு ஜீவியாய் ஜொலித்திருக்கிறார் என்பது இக்காலச் சந்ததியரில் பலருக்குத் தெரிந்திருக்காது.
‘பெங்களூர் நாகரத்தினம்' என்றாலும், அவர் பெங்களூரில் இருந்ததே இல்லை. இளமைப் பருவத்தில் மைசூரிலும், பிறகு வாழ்க்கை முழுவதும் தமிழ் நாட்டில்தான்(சென்னை, திருவையாறு) இருந்திருக்கிறார். இருபத்தைந்து வயதில் சென்னையில் குடியேறினார். இசை உலகில் உயர்ந்த சங்கீதத்தின் முடிசூடா ராணியாக அப்பொழுது விளங்கியவர் வீணை தனம்மாள். வெளியில் போய் கச்சேரி செய்யாமல், நல்ல இசை கேட்க விரும்புகின்றவர்களைத் தம் வீட்டுக்கு வரச் செய்யும்படியான அசாத்தியமான தன்னம்பிக்கையும் சங்கீத ஞானமும் உடையவர் அவர். சென்னைக்கு வந்த நாகரத்தினம் அவருடைய நெருங்கிய நண்பரானார்.
வீட்டிலிருந்தே சங்கீத உலகைத் தம்மைப் புற உலகுக்குப் புலப்படுத்திக் கொள்ளாமல், ஆட்சி செய்தவர் தனம்மாள். வெளியில் போய், இந்தியாவின் பல இடங்களில் கச்சேரி செய்து, ( வெளிநாட்டுக்கும் சென்று( கொழும்பு) கச்சேரி செய்த முதல் பெண்மணியும் அவர்தான்) ஏராளமாகச் சம்பாதித்துத் தம்மைச் சமூகத்தில் நிலை நாட்டிக் கொண்டவர் நாகரத்தினம். முற்றிலும் வேறுபட்ட குணநலன்களுடைய இருவருக்குமிடையே நிலவிய நட்புதான் ஆச்சர்யத்தக்கதாகும். நாகரத்தினத்தின் போராட்டங்களுக்கெல்லாம் தனம்மாளின் மௌனமான ஆசி இருந்திருக்கிறது..
என்ன போராட்டம்? முதல் போராட்டம் இலக்கியச் சம்பந்தமானது. ஆச்சர்யமாயிருக்கிறதா?
1739லிருந்து 1763 வரைத் தஞ்சையை ஆண்ட பிரதாமசிம்மனுடைய காதலி முட்டு பழனி அம்மாள், இசையிலும், நடனத்திலும், இலக்கியத் தேர்ச்சியிலும் நிகரற்று விளங்கினார். அவர் ஆண்டாளின் ‘திருப்பாவை'யைத் தம் கற்பனையையும் கலந்து தெலுங்கில் மொழியாக்கம் செய்தது, அறிஞர் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிறகு அவர், ‘ராதிகா சாந்தவனமு' என்ற ஒரு தெலுங்கு சிறு காப்பியம் இயற்றினார். கிருஷ்ணனும் ராதையும் காதலர்கள். ராதை கிருஷ்ணனுடைய அத்தை. ராதை தான் வளர்த்த ஒரு பெண்ணைக் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது,
அவனை எப்படித் திருப்தி செய்ய வேண்டுமென்றுமென்று தன் வளர்ப்பு மகளுக்குச்
சொல்லிக் கொடுக்கிறாள். சிருங்காரச்சுவை மிகுந்த காவியம். கிருஷ்ணன் தெய்வமாகவே சித்திரிக்கப்படவில்லை. ஆசாபாசங்கள் உடைய ஒரு சாதாரண மனிதனாகவே வருகிறான்.
1855க்குப் பிறகு 1907ல் பிரசுரம் கண்ட இந்நூலைப் பற்றித் தெலுங்கு அறிஞரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான வீரேசலிங்க பந்துலு, ‘காமரஸம் ததும்ப ஒரு வேசியினால் எழுதப்பட்ட நூல்' என்று குறிப்பிட்டிருந்தார். தம்மைப் போன்ற ஒரு தேவதாஸியாகிய பழனியை ‘வேசி' என்று வீரேசலிங்கம் குறிப்பிட்டதை நாகரத்தினத்தால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு பிரதியைப் பெற்று (பிரதிகள் அப்பொழுது கிடைக்கவில்லை) அதைப் படித்த போது, அது ஓர் அற்புதமான இலக்கிய நூல் என்பதை உணர்ந்தார். தாமே அதை மறுபடியும் ஒரு நீண்ட முன்னுரையுடன் பிரசுரம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.
தம் முன்னுரையில் வீஈரேசலிங்கத்தின் குறிப்பைக் கடுமையாக எதிர்த்தார். பிரதாபசிம்மனின் காதலி என்றால், எப்படி ‘வேசி' என்று சொல்லமுடியும் என்பது அவர் கேள்வி. காமரஸம் ததும்ப எழுதுவதென்பது ஆண்களுடைய ஏகபோக உரிமையா என்று காரசாரமாகச் சாடினார். இலக்கியம் என்று பார்க்க வேண்டுமேதவிர, தம்முடை குறுகிய பார்வையை நூலின்மீது திணிக்கக்கூடாது என்பது அவர் வாதம். ஆணாகிய ஜெயதேவர் இதே சிருங்கார ரஸத்துடன் எழுதியது, ஆன்மீகக் கருவூலமாகக் கொண்டாடப்படும்போது, ஒரு பெண் எழுதினார் என்பதற்காக இது ஆபாச நூலாகிவிடுமா என்று அவர் கேட்டிருந்தார். இது ஆபாசமென்றால், வீரேசலிங்கம் எழுதியிருந்த நூலின்றும் பல எடுத்துக் காட்டுகள் காட்டி அவையும் ஆபாசம் என்று அவர் குறிப்பிட்டார். முட்டு பழனியின், நூலின்கண் காணப்படும் இலக்கிய நயங்களை இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கித் தம் முன்னுரையை எழுதி முடித்திருந்தார் நாகரத்தினம்.
வீரேசலிங்கம் அந்தக் காலக் கட்டத்தில் ஒரு cult figure.அவரை நாகரத்தினம் கடுமையாகத் தாக்கியதை அவருடைய நண்பர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. நாகரத்தினம் பிரசுரித்திருந்த முட்டு பழனியின் சிறு காவியத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கிளர்ச்சி கிளம்பியது. பத்திரிகைகளில்
இது பற்றியக் கட்டுரைகள் வரத் தொடங்கின. நாகரத்தினமும் சும்மா இருக்கவில்லை. தம்முடைய நிலையை நியாயப் படுத்தி பேட்டிகள் கொடுத்தார். இறுதியில், ஆணாதிக்கந்தான் வென்றது. பழனியின் நூல் தடை செய்யப்பட்டது.
1911ல், ஒரு தேவதாஸிப் பெண் தன்னுடைய இலக்கியக் கோட்பாட்டுக்காகப் போராடினார் என்பது ஓர் ஆச்சர்யமான செய்தி. சமீபத்தில், பெண்கவிஞர்கள் தங்கள் உடல் உறுப்புக்களைக் குறிப்பது ஆபாசம் என்று ஒரு திரைப்படக் கவிஞர்(?) கூறியிருந்ததைக் குறித்து எழுந்த சர்ச்சைகளைப் பற்றி நாம் அறிவோம். பெண்கல்வி வளர்ச்சி பெற்றிருக்கும் இந்நாளில், ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண் கவிஞர்கள் கூக்குரல் கொடுத்தார்கள் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கல்வி அறவே அற்றிருந்த காலத்தில், ஒரு பெண் தம் இலக்கியக் கொள்கைக்காக, இன்னொரு பெண்ணின் சார்பில், ஆண் ஸ்தாபனத்துடன் மோதினார் என்பதுதான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!
நாகரத்தினத்தின் இன்னொரு போராட்டமும் ஆணாதிக்கத்தை எதிர்த்துதான்.
தியாகராஜர் திருவையாற்றில் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, திருவையாற்றில் முள்ளும் புதரும் மூடியிருந்த அவர் சமாதியிருந்த இடத்தில், அவர் நினைவு நாளில் ஆராதனை நடத்தி, அவர் இயற்றிய கீதங்களைப் பாடுவதென்று அவர் சிஷ்யப் பரம்பரையில் வந்தவர்கள் தீர்மானித்தார்கள். ஆராதனை நடக்கும் நாட்களில் மட்டும் அந்த இடம் பராமரிக்கப்பட்டது. மற்றைய நாட்களில் அது ஒரு குப்பை மேடாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அதற்குள், ஆராதனை செய்த கட்சி இரண்டாகியது.
ஒரே நாளில், இரண்டு கட்சிகளும் வெவ்வேறு சமயங்களில் இத் தினத்தைக் கொண்டாடின. கொண்டாடிய அனைவரும் ஆண்கள்.
நாகரத்தின அம்மாளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திருவையாறு சென்று, தம் செல்வாக்கை உபயோகித்து, சமாதி இருந்த இடம் முழுவதையும் விலைக்கு வாங்கித் தாம் சம்பாதித்திருந்த பொருள் அனைத்தையும் செலவழித்து, சமாதியைச் சுற்றி ஒரு மண்டபம் கட்டினார். வெட்ட வெளியில் வானமே கூரையாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த தியாகராஜர் ஆத்மா இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும். நாகரத்தினம் இரு கட்சிகளையும் சமாதானப் படுத்தி, ஒரே விழாவாகக் கொண்டாட முயற்சி செய்தார். இது நிறைவேறவில்லை. தொடர்ந்து அவர்கள் இரண்டு விழாக்களாக நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், இரண்டு கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒற்றுமைப் பட்டன. நாகரத்தினம், சமாதியில் பாட விரும்பியபோது, சாஸ்திரத்தின்படி, பெண்கள், சமாதி சன்னதிக்குள் நுழையக் கூடாது என்றார்கள். இடம் வாங்கி மண்டபம் கட்டியவர் நாகரத்தினம், அவருக்கு அங்கு நுழைய அனுமதி இல்லை என்றதும், அவர் வெகுண்டெழுந்தார்.
அடுத்த ஆண்டு ஆராதனையின்போது, சென்னை, சேலம்,பெங்களூர், இன்னும் பல இடங்களிலிருந்தும் நாற்பது தேவதாஸிகளை ஒன்று கூட்டித் திருவையாற்றுக்குச் சென்றார் நாகரத்தினம். சமாதிக்குள்ளேதானே செல்லக்கூடாது, பின்னால் பந்தல் போட்டு ஆராதனையும், இசைக் கச்சேரி, நடனம் ஆகியவற்றையும் நிகழ்த்துவது என்பது தீர்மானமாயிற்று. இது முழுவதும் பெண்கள் நடத்திய தியாகராஜர் நினைவு விழா.
பொது ஜனங்கள் அனைவரும் நாகரத்தினம் நடத்திய விழாவுக்குக் கூடினார்கள்.
பிரபலமான, அழகிய, அத்தனை இசை, நடன பெண் விற்பன்னர்களை ஒருங்கு சேர ஓரிடத்தில் பார்ப்பதென்பதென்பது அவர்கள் கண்ணுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தது! ஆண்கள் கட்சி விழாக்களுக்குக் கூட்டமேயில்லை!
இதற்குப் பிறகு, எஸ்.ஒய். கிருஷ்ணஸ்வாமி I.C.S அவர்கள் குறுக்கிட்டு மூன்று கட்சிகளையும் ஒன்றாக்கி, தியாகராஜர் ஆராதனையை எல்லோரும் (பெண்கள் உள்பட) கலந்துகொள்ளும் ஒரே விழாவாக்கினார். இது நாகரத்தினத்துக்குக் கிடைத்த வெற்றி.
நாகரத்தினம் தம் இறுதி நாட்களைத் திருவையாற்றில் கழித்தார். தியாகராஜர் சமாதிக்காகத் தம்மையும் தம் உடைமைகள் அனைத்தையும் அர்ப்பணித்த அவருக்கு அவர் மறைவுக்குப் பிறகு, தியாகராஜர் சமாதிக்கெதிரே சமாதி எழுப்பப்பட்டது.