முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஈழத்து நகர சபைகளின் தேர்தல் என்ன சொல்லுகிறது?
தீபச் செல்வன்
பற்றி எரிகிறது மலை
கிருஷ்ணன் ரஞ்சனா
அணுவளவும் பயமில்லை
எம்.ரிஷான் ஷெரீப்
செயற்கை விந்துத் துளிகள்
இளைய அப்துல்லாஹ் (இலண்டன்)
‘மொழிபெயர்ப்பா விழி பெயர்ப்பா?'
இந்திரா பார்த்தசாரதி
பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.
அ.ராமசாமி.
எந்திரமும் அதிகாரமும்
நிஜந்தன்
ஓரியண்டலிசம், அரபு அறிவுஜீவிகள், மார்க்சியம் மற்றும் பாலஸ்தீன் வரலாற்று தொன்மம் - (எட்வர்ட் செய்த்துடன் நூரி ஜரா நேர்காணல்)
தமிழில் :- எச்.பீர்முஹம்மது
ரியாலிட்டி ஷோக்கள் எல்லை மீறுகின்றனவா?
மாயா
இலக்கியவாதி - அரசியல்வாதி - அறிவுஜீவி
யமுனா ராஜேந்திரன்
ஓ. . .செகந்திராபாத் - 20
சுப்ரபாரதிமணியன்
இது உயிரோசையின் 50ஆவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
காலம்காலமாக நீளும் கனவுகள்-சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"
பாவண்ணன்
அண்டை நாட்டில்... அடிக்கிறார்கள்
தமிழ்மகன்
கவிதை
நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
தீபச்செல்வன்
ஒரு நட்பின் தேடல்......
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
நம்பிக்கை
நளன்
விளக்க முடியாத ஒரு பொழுது
மண்குதிரை
உறுவலிக் குறிப்பு
மதன்
குறிப்புகளும் , அது சார்ந்தும்
பிரவின்ஸ்கா.
பாலை, மழை, காளான்
த.அரவிந்தன்
மின்விசிறியில் சுழலும் கவிதைகள்
நட்சத்திரவாசி
சவால்
எஸ். நளீம், இலங்கை.
சிறுகதை
நுவல்
கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
எப்படியிருந்த நாம்...
பாபுஜி
பதட்டம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புது நூல்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
-
சிற்றிதழ்ப் பார்வை
பூவுலகு (சுற்றுச்சூழல் இதழ்)
-
ஈழத்து நகர சபைகளின் தேர்தல் என்ன சொல்லுகிறது?
தீபச் செல்வன்

நடந்த தேர்தல் பற்றி இந்தக் குறிப்பை எழுதும் வரை மிகவும் மந்தமான செய்திகளே வருகின்றன. வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மாநகரசபைக்கான தேர்தலை யுத்தம் முடிந்த அடுத்த கணத்திலேயே அரசு அறிவித்திருந்தது. யுத்தத்தையும் தமிழ் மக்களின் கையறு நிலையையும் தனது அதிகாரத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. அதிலும் மிகவும் துயரமான திட்டம் என்னவென்றால் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் வாக்களியுங்கள் என்பதுதான் தேர்தலின் சகல கட்சிகளினதும் முதலாவது வாக்குறுதியாகும்.

 

அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறவர்களும் இதைத்தான் சொன்னார்கள். வன்னி அகதி மக்கள் அரசியல் கேடயமாகப்பட்ட துயரம் நடந்தது. அவர்களை விடுவிக்க வாக்களிக்க வேண்டும். 'அரிசி'க்காக 'ரிவி'க்காக வாக்களிப்பது போல வன்னி அகதிகளுக்காக வாக்களிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.

 

வன்னி மக்களை மீட்பதாக காட்டிக்கொண்ட இலங்கை அரசு அவர்களை முகாம்களில் தடுத்து வைத்துக்கொண்டு தனது தேர்தல் அறிவிப்பை தொடங்கியது. இந்த தேர்தலின் முடிவு யுத்தத்தின் விளைவாக அரசின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிறது. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மக்களை மகிழ்ச்சியான வாக்களிப்பை எப்படி ஏற்படுத்த சந்தர்ப்பம் தரும்?. யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து வீதம் வாக்குகளும் வவுனியாவில் ஐம்பது வீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

புத்தளம், மொனராகல முதலிய இடங்களில் நடந்த பதிவுகளில் அறுபது வீதமாக பதிவாகியிருக்கிறது. இப்பொழுது யார் கைப்பற்றுகிறார்கள். யார் தோற்கிறார்கள் என்பதைவிட மக்களுக்கு ஜனநாயகம் அவைகளின் சபை என்பவற்றில் என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதுதான் முக்கியமான விடயம். இந்தத் தேர்தல் மக்களின் அரசின் ஜனநாயக நாடகத்தின் மீதான வெறுப்பையும் அரசியல் மீதான நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துகிறது. தேர்தல் அண்மிக்கவும் அதற்கு முன்பாகவும் மக்களிடம் அவை எந்த கவனத்தையும் பெறவில்லை.

வன்னி மக்கள் சொல்லில் அடங்காத அளவற்ற துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது பிரச்சினை முழு ஈழத்தையும் அவலத்திற்குள்ளாக்கியபடியிருக்கிறது. தமிழ் மக்களின் துயர் மிகு நாட்களில் இந்தத் தேர்தல் நடப்பது வாக்களிப்பது சபைகளை அமைப்பது யுத்தத்தின் பேரழிவை மறைப்பதற்கான நடவடிக்கையாகும். ஆனால் தமிழ் மக்கள் பலர் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறார்கள். வவுனியாவில் இன்று வாக்களித்த ஒருவர் கூறினார் வன்னி மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களித்ததாக சொன்னார். நாம் வாக்களிக்காமல் விட்டால் தவறான விளைவையும் சபையையையும் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.

தமிழ் மக்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய வேண்டும்? என்பதை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தம் ஏற்படுத்திய அழிவின் விரக்தி தமிழ் மக்களை விளிம்பு நிலைக்கு தள்ளுகிறது. இதனால் நகர சபைகளையும் தமிழ் மக்கள் இழக்க நேரிடுகிறது.

வெற்றிலைச் சின்னம் வெற்றி பெற்றால் அது அரசாங்கத்தின் வெற்றியாக இருக்கும். யுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். தமிழ் மக்களின் அழிப்புக்கு கிடைத்த நியாயமாக இருக்கும். அந்தத் தெரிவுகூட மக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு கட்சியைத் சேர்ந்தவர்கள் வெற்றிலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

 

இந்தத் தேர்தல் சொல்லுகிறது ஒரு விடயத்தை., யுத்தத்தின் ஆறாத வடுவை. துயரத்தை., இன்னும் அப்பால் சென்று சுயநலமான அரசியல் மக்களை அழித்துக்கொண்டிருப்பதையும் தடுப்புச் சிறையிடப்பட்டிருப்பதையும் சொல்லுகிறது. எங்களை வெளியில் விடுங்கள் என்று கேட்கிற சனங்களை பெருமளவு இராணுவத்தைக்கொண்டு அதற்கு செலவுகளை செய்து கொண்டு வன்னி மக்களுக்கான தண்டனைக் காலத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது அரசு. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல தேர்தலை உருக்குலைந்த மனங்களில் செலுத்தி அரசியல் தெளிவு, தலைத்துவம் என்பவற்றை அரசு குழப்பியிருக்கிறது.

 

இப்பொழுது தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதாக அவர்களது ஆதரவு இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

தேர்தல் வன்முறையுடன் அவலத்தை ஏற்படுத்துகிறது. வென்று விட்டு வெளிநாடு செல்ல இருக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்னத்தை சாதிக்கப்போகிறது என்ற சில சனங்களின் எதிர்வுணர்வு கேட்கிறது. அவர்கள் காலங்கடந்த கருத்தையும் போக்கையும் பிரயோகிப்பவர்கள் என்ற நிலை இப்பொழுது உருவாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெல்லுதற்கு சந்தர்ப்பமற்றிருந்தது.

 

முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்ட கைகலப்பாக மாறிய நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லீம் காங்கிரஸ் பிரமுகர் நூர்தீன் மசூரை தாக்கினார். தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் சீரான வேட்பாளர்கள் இறங்கவில்லை. வன்முறையிலும் சூழ்ச்சியிலும் நம்பிக்கை கொண்ட போலியான தேர்தல் நகரங்களை சீரழிக்கப்போகிறது. இருக்கிற பாதைகளையும் சிதைத்து யுத்தத்தால் சிதைந்த சுவர்களை மேலும் அகற்றப்போகிறது. அரசாங்கம் நாடகத்தை அரங்கேற்றி விட்டு மிகவும் அமைதியாக இருக்கிறது.

 

சனங்களின் மெலிந்து உக்கிய கங்களை தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் இருக்கிறார்கள். ஒருநாள் கூட தடுப்பு முகாம் சென்று மக்கள் செத்தார்களா? இருக்கிறார்களா? என்று பார்வையிடாத அவர்கள் அவர்களைப் பற்றி பேசுவது ஆத்திரத்தை தருகிறது. கஜேந்திரகுமார் போன்றவர்கள் ஒரு சனத்தையும் தெரியாத எம்பிக்கள். அவர்கள் வன்னியில் மக்கள் தவித்துக்கொண்டிருக்க இப்ப அரசியல் திர்வுதான் தேவை என்று கேட்கிறார்கள். யாருக்கு அரசியல் தீர்வு அரசியல் வாதிகளுக்கா? என்றகேள்வி மேலெழுகிறது.

காலையில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் வவுனியாவில் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை பெற்ற செய்தி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

'புளொட்' எனப்படுகிற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வவுனியாவில் 3 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, போன்ற கட்சிகள் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு 8ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலின் முடிவுகள் நமது அரசியல் தலைவர்களுக்கும் இலங்கைஅரசிற்கும் பல செய்திகளை சொல்லுகிறது.

அரசாங்கம் வடக்கு கிழக்கில் நடத்தப்போகிற தேர்தல்கள் எப்படி இருக்கப்போகின்றன? வடக்குத் தேர்தல் எப்படி இருக்கப்போகிறது? யுத்தத்தின் விளைவு தனது ஜனநாயகத்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெற்ற வெற்றி யுத்தத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த அங்கீகாரமாக அரசால் வெளிக்காட்டப்பட திட்டமிட்டபோதும் 20 வீதமான வாக்குகளில் வெல்லப்பட்ட காரணத்தால் தற்போது அடங்கியிருக்கிறது. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு யாழ் நகரத்தேர்தல் தோல்வியையும் வவுனியா நகரத்தேர்தல் படுதோல்வியையும் தந்தாக இன்று தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். உண்மையில் உரிமை கோரமுடியாதபடி தனது வாக்குகளைப் பெற்று சுதந்திரக் கட்சிக்கு கொடுத்திருக்கிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தேர்தல் குழப்பம் அதுதான். வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதா? டக்ளஸிற்கு வாக்களிப்பதா என்று? டக்ஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களின் உடனடிப் பிரச்சினைகள் சிலவற்றை தீர்த்தபடியிருக்கிறார். அண்மையில் மூவாயிரம் மக்களை முகாங்களிலிருந்து விடுவிக்க அவர் உதவினார். ஆனால் அவருக்குப் போட்டியாக அரசால் சுதந்திரக் கட்சியில் வெற்றிலைச் சின்னத்தில் இரத்தினேஸ்வரன் களமிறக்கப்பட்டார். அத்துடன் அரசாங்கத்தின் பிரசாரங்களை இது வரை முன்னெடுத்து தமிழ் மக்களின் அரச- ஜனநாயகப் பிரதிநிதியாக வந்து சேவை புரிந்ததாக காட்டப்பட்டு வந்த டக்ஸஸ் தேவானந்தா வடக்கிலிருந்து மெல்ல அகற்றப்படும் விதமாக பசில் ராஜபக்ஸ இறக்கப்பட்டிருக்கிறார். கடைசியில் இனந்தெரியாத அதிகாரங்களின் போட்டியை கொண்டு வந்த தேர்தலாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

சரி. தேர்தலில் இறங்கினீர்கள். ஆசனங்களை கைப்பற்றினீர்கள். மக்கள் தங்களிடம் இருக்கிற ஜனநாயக நம்பிக்கை வீதத்தை தெரிவித்திருக்கிறார்கள். போரையும் வன்முறையையும் தந்த ஜனநாயகம் இந்தச் சபைகள் எல்லாம் இனி மக்கள் மனங்களை செம்மைப் படுத்தவும் வளம்படுத்தவும் உதவுவதற்கு ஏற்ப உங்கள் இடங்களை பயன்படுத்துங்கள். சிதைந்த நகரங்களை கட்டி எழுப்புங்கள். நிமமதியான சமாதானமான வாழ்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்ப அரசியல் நடத்துங்கள். அல்லது போனால் ஒற்'றை வாக்கும் கிடைக்காத தேர்தல் முடிவுகளை நள்ளிரவுகள் அறிவிக்கிற காலம்தான் அடுத்து வரும்.

 

சகல அரசியல் கட்சிகளும் அதன் போக்குகளும் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய போக்கில் இயங்க வேண்டிய தேவையை இந்த தேர்தல் சொல்லுகிறது. கிடைத்த வாக்குகளும் கிடைக்காத வாக்குகளும் அளிக்காத வாக்குகளும் இந்த நிலத்தின் நகரத்தின் பல விடயங்களை எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறது

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com