திசையெட்டும் என்ற காலாண்டிதழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நடத்தப் பெறுகிறது. மொழிபெயர்ப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கத்திலான இந்த விருது, மொழிபெயர்ப்பாளரின் ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புப் பணியையும் கவனத்தில் கொண்டு நல்லி குப்புசாமி அவர்களின் ஆதரவில் வழங்கப்படுகிறது. அயல் மொழியிலிருந்து தமிழுக்கு, இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்று பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு நூலுக்கும் வழங்கப்படும் இந்த விருது சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டமைக்காக ஜெயந்தி சங்கர் அவர்களின் 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் ஆதிகாலந்தொட்டு நவீன காலம் வரையிலான சீனக் கவிதைகளைக் குறித்ததொரு சிறந்த அறிமுகமாக விளங்குகிறது.
நூலின் பின்னட்டையில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் சொன்னது:
சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக்கலாசாரம் பற்றிய தேடலில் ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்த போது அவரின் அந்தத் தேடலின் உச்சப்பங்களிப்பு இதுதான் என்று தோன்றுகிறது. அத்துடன், சீனக்கவிதை மொழிபெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அதை விட இந்நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப்புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' அதற்கான பலவெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (ஆங்கிலத்தினூடாக) (2007)
உயிர்மை பதிப்பகம் - பக்கங்கள் 320 / விலை: ரூ 90
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,
Tele : 91-44-2493448,