
பனித்துளிகளைப் பற்றி
யாரும் அபிப்பிராய
பேதம் கொள்வதில்லை
அதிகாலையின் சங்கமத்தில்
இலையின் நுனியை எட்டி
விடுதலை பெற
எத்தனித்தது ஒரு துளி
விழுந்தது
விடுதலை பெற்றது
இலையா?
பனித்துளியா?
---
2
விழும் நீர் பெருக்கே
நீ ஒரு செயல்வீரம்
எனினும் ஏன்
உன்னிடமும் அடக்குமுறை?
தரையில் சொட்டும்
பைப் தண்ணீரிலும்
கூட பறக்க
எத்தனிக்கிறது
பறவைக் கூட்டம் ஒன்று
---
3
நடக்கவும் முடியவில்லை
குனியவும் முடியவில்லை
பட்டாம் பூச்சி ஒன்று
தற்செயலாய்
காலில் அமர்ந்த போது
மற்றபடி
பட்டாம் பூச்சியைப் பற்றி
நினைக்க சமயமேது?
---
4
மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
எதையெல்லாமோ
அடித்துச் செல்லுகிறது
எதையெல்லாம்
அடித்துச் செல்லுகிறது
என்று ஒரு முறையாவது
கவனித்திருக்க வேண்டும்
நானோ?
மழையோ?
-----
5
கிணற்றடியில்
வாளியை
வைக்க முடியவில்லை
உடனே புளியம்பூ
உதிர்ந்து வாளிக்குள்
விழுந்து விடுகிறது
காற்று அடித்துச் செல்லும்
புளியம்பூக்களைக் குறித்தோ
கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும்
புளியம்பூக்களைக் குறித்தோ
அல்லது
முற்றம் முழுக்க விரவிக்கிடக்கும்
புளியம்பூக்களை குறித்தோ
கவனிப்பற்றுப் போகிறது
மனசு.