செகந்திராபாத்தில் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று யுனானி மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று வருவது. யுனானி மருத்துவமனை வெவ்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும் வெண்குஷ்டம் எனப்படும் லூக்கோடர்மாவிற்கு பிரசித்தமான மருத்துமனையாக இருந்தது. மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவையும் கொண்டிருக்கிறது. உடம்பில் வெள்ளையாய்ப் படரும். உடம்பு முழுக்க ஆக்கிரமித்துவிடும். சிலர் சாதாரண தோல் நோய் என்று ஆறுதல்பட்டுக் கொள்வார்கள். சிலர் முன் ஜென்ம பலன் என்று கோவில்களில் நிவாரணம் தேடுவார்கள். பெரும்பாலும் நிவாரணம் இல்லை என்பதுபோல்தான் விட்டுவிடுவார்கள். பெண்கள் என்றால் திருமணத்திற்குத் தடையாக அமைந்துவிடும். தற்கொலை செய்துவிடுகிற லூகோடர்மா பெண்களைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்.
எர்ரகடாவில் இருந்தது யுனானி மருத்துவமனை. மகேஸ்வரிக்கு உடம்பு முழுக்க பட்டைபட்டையாய் லூக்கோடர்மா பரவியிருந்தது. சின்ன வயதில் இருந்து மெல்லப் பரவி அவளின் உடம்பை சீரழித்திருந்தது. கல்யாண வயது என்பதால் எப்படியும் குணமாக்கிவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர். யுனானி மருத்துவமனை பற்றிக் கேள்விப்பட்டு என்னிடம் விசாரிக்கும்படி சொல்லியிருந்தார்கள் அவளின் பெற்றோர்கள். உள் சிகிச்சையும் உண்டு. உள் சிகிச்சை நோயாளிகளுக்கு சாப்பாடும் இலவசம். மகேஸ்வரியை அழைத்துக்கொண்டு நாலைந்து உறவினர்கள் (அப்பா, சித்தப்பா 2 பேர், தாத்தா) என வந்துவிட்டனர். ஹைராபாத்தைச் சுற்றிப்பார்க்கும் எண்ணத்துடனும் மகேஸ்வரியைப் பரிசோதனைக்காகக் கூட்டிக்கொண்டு போனது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஆனால் தொடர்ச்சியாக நான் அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
ரத்தத்தில் வெள்ளை அணுவின் சதவிகிதம் அதிகரிப்பதால் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன. வெள்ளை அணுவினை சரிசமமாக சிவப்பணுவுடன் வைத்திருந்தால் இந்த நோய் வராது. மீன் சாப்பிடுகிற நாளில் முட்டை சாப்பிட்டுவிட்டால் அவை ரசாயன ரீதியில் வெள்ளை அணுவின் சதவிகிதத்தை அதிகமாக்குகின்றன. அதிகமாக எலுமிச்சைச்சாறு உட்கொள்வதாலும் இது நிகழ்கிறது. பெரும்பாலும் மீன்களின் மூலம் இது பரவுகிறது என்பது பற்றின விபரங்களைத் தெரிந்துகொண்டேன்.
மகேஸ்வரி உள் சிகிச்சை பிரிவில் 3 மாதங்கள் தங்க வேண்டியிருக்கும். சாதாரண உணவு, வாரம் ஒரு முறை அசைவம் உண்டு. அதிகமாய் ரொட்டி என்பதால் மகேஸ்வரிக்குப் பிடிக்காது என்பதும் வார விடுமுறை நாளில் மகேஸ்வரியை சென்று பார்ப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. பல்லடத்தில் உள்ள அவளின் பெற்றோர்களின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகளின் கட்டாயங்கள் காரணமாய் வாராவாரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவளுக்குத் தேவையான சோப்பு, எண்ணெய் உட்பட பெண்களின் பல பிரத்யேக உபயோகப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். நாக்கு செத்துப் போயிருப்பவளுக்கு பத்திய கட்டுப்பாட்டை (தக்காளி, புளி கூடாது) மனதில் கொண்டு ஏதாவது விசேச உணவைத் தயாரித்து எடுத்துச் செல்ல வேண்டும்.
மருத்துவமனையில் மண் நிறத்தில் மாத்திரைகள் வழங்கப்படும். வெவ்வேறுவகை மாத்திரைகள் என்றாலும் எல்லாமே மண் நிறத்தவை. வெள்ளைப் புள்ளிகள் இருக்கும் இடததில் மண் நிற மாத்திரைகள் பொடியைப் பூசி வெயிலில் சற்று நிற்பது அச்சிகிச்சையின் முக்கிய பகுதி. ஆலிவ் ஆயிலை மருந்துக்கடைகளில் தேடுவதும் எனது முக்கிய வேலைகளில் ஒன்றாகிவிட்டது.
மருத்துவமனைக் கட்டடம் முஸ்லீம்களை நினைவுபடுத்தும். பெரும்பாலும் முஸ்லீம்கள்தான் வேலை செய்து வந்தனர். இந்தியோ, உருதோ பழக்கப்படாதபோது தெலுங்கில்தான் பேச வேண்டியிருக்கும். இந்தி, உருது கற்றுக்கொள்ள என் பிரயத்தனம் இல்லாததுபோல முஸ்லீம்களும் தெலுங்கு கற்றுக் கொள்வதில் எவ்வித அக்கறையும் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். நான் சிரமப்பட்டு தெலுங்கு பேசுவது போலவே அவர்களும் சிரமப்பட்டு தெலுங்கு பேசுவார்கள். அழுக்கடைந்த கட்டிடம். சுவரின் இடிபாடுகளிலிருந்து கிளம்பிய பச்சைச் செடிகள் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும்.
எனது வார விடுமுறை யுனானி மருத்துவமனையில் கழிவது எனக்கு அலுப்பாகவே மாறியிருந்தது. 12 வாரங்களில் மகேஸ்வரிசற்று மெலிந்திருந்தாள். நான் தாமதாக சில வாரங்களில சென்றது. இன்னும் ருசியான வீட்டு சமையலைக் கொண்டு செல்ல இயலாதது போன்றவை பெரும் குறையாகவே மகேஸ்வரியால் அவர்களின் பெற்றோர்களிடம் சொல்லப்பட்டது. உடம்பு தோலின் நிறம் தொடர்ந்து சிகிச்சையால் மாறும் என்பதால் தொடர்ந்து மாத்திரை பொடிகளை வாங்கிவர மாதம் ஒரு முறை அங்கு செல்ல வேண்டியிருந்தது. பழைய மருந்துச் சீட்டை முறையாக மருத்துவரிடம் காட்டி கையெழுத்து பெற்று மருந்துகள் வாங்க வேண்டியிருக்கும். மருத்துவர் கையெழுத்தில்லாமல் புறக்கடை வழியில்தான் வாங்கிவிடுவேன். புறக்கடை வழிக்காக வழக்காமாய் நேரத்திற்கு மாறான மாலை நேரங்களில் வரச் சொல்வான் மருத்துவமனை ஊழியன் ரியாஜ். கொச்சையான தெலுங்கில் பேசுவான் . உருது பேசி என் திகைப்பைப் பார்த்து கொச்சைத் தெலுங்கில் பேசுவான். எனது தெலுங்கின் தடுமாற்றமும், சில சமயங்களில் சரளமும் அவனுக்குத் திகைப்பு ஏற்படுத்துவதுபோல என்னையே பார்த்துக் கொண்டிருப்பான். நான் கொடுக்கும் பணம் போதவில்லை என்பது அவனின் வருத்தம். ‘இங்க காவாலி’ என்று வலியுறுத்துவான்.
மகேஸ்வரிக்கு ஓரளவுதோலின் நிறம் சகஜமான போது பலர் ஹைதராபாத் யுனானி மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்டு எனக்குத் தொலைபேசி செய்வதும் பின் வருவதும் வழக்கமாகிவிட்டது. நம்மூர்க்காரர்கள் என்பதற்காகவே வீட்டில் தங்க வைத்து உபசரிக்க வேண்டியிருக்கும். மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வதற்கு சௌகரியமாய் இரவு நேரப் பணியாய் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது விடுமுறைதான். இது தொடர்ச்சியாக சடங்காய்த் தொடர்ந்து கொண்டிருந்தது.
உள் சிகிச்சை நோயாளிகளை உறவினர்களோ, கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்களோ, தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களோ சென்று பார்ப்பது, சிகிச்சை முடிந்துபோய்விட்டவர்களுக்கு மருந்துச்சீட்டைக் காண்பித்தோ பெரும்பாலும் பணம் கொடுத்தோ வாங்கிக்கொண்டு வருவது, பார்சல் செய்வது (கூரியர் அறிமுகமாகாத காலமாவதால் தபால் நிலையங்களின்மூலம் அனுப்புவது, ஒவ்வொரு முறை பார்சல் பொருள் பற்றின விவரங்களை தபால் நிலைய அலுவலர்களிடம் சொல்லி, எனது சமூக சேவையின் ஒரு பகுதி என்பதால் தயவு செய்து அனுமதிக்கும்படி கெஞ்சுவது) தினசரி வேலையின் பகுதியாகிவிட்டது.
ஜெயமணியைக் கூட்டிக்கொண்டு பொலாராம் பகுதியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்துவிட்டார். யுனானி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது அவரின் கோரிக்கை. ஜெயமணி மதுரையைச் சார்ந்த முப்பதை எட்டும் பெண். திருமணமானவர். ஆனால் கணவன் விவாகரத்து என்றில்லாமல் தள்ளிவைத்துவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டார். காரணம் மெல்ல படர ஆரம்பித்த லூகோடர்மா. ஒருவகை அருவருப்பான பூச்சியைப் பார்ப்பதுபோல அவன் கணவன் பார்த்திருக்கிறான். ஆடைகள் உடம்பை மூடுவதால் மறைக்கும்படியாய் இருந்ததைமீறி கழுத்து, முகம், பாதங்களில் அடர்த்தியாக வெளுத்துத் தெரிந்தது. யுனானி மருத்துவமனை பற்றிக் கேள்விப்பட்டு தனியாக சென்னை வந்து புகைவண்டி பிடித்து ரவிச்சந்திரன் உறவினர் என்பதால் அவர் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
சரியான சிகிச்சை பெற வேண்டும். உடம்பு தோல் நிறம் மாற வேண்டும். நானும் சாதாரணப் பெண்ணாக வேண்டும். எனக்கென்று ஒரு ஆண்மகன் கிடைக்காமலா போய்விடுவான். மறுதிருமணம் செய்து கொள்ளவேண்டும். குழந்தைகள் பெற்று கணவன் முன் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும். இதுதான் ஜெயமணியின் விருப்பமாகவும், ஆவேசமாகவும் இருந்தது.
லூகோடர்மாவால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கும், குடும்பத்தினருக்கும் நான் தெய்வமாக வேண்டிய நிர்ப்பந்தனைகளில் பலர் செகந்திராபாத் வந்து போய்க் கொண்டிருந்தனர். மருத்துவனைகள் முகவரி, தொலைபேசி எண், மருத்துவமுறை பற்றிய விளக்கம் போன்றவற்றை அச்சடிக்காத குறையாக கடிதங்களில் எழுதித்தீர்க்க வேண்டியிருந்தது. (ஜெராக்ஸ் வசதியில்லாத காலம், கல்லூரி நாட்களில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம்) தெய்வமாவதிலிருந்து தப்பிக்க முயற்சியும் செய்தேன்.
மகேஸ்வரி மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டதில் எனக்கு வருத்தமிருந்தது. குணமாகியிருக்கும் என நினைத்தேன். ஆனால் இரண்டாண்டு இடைவெளியில் பார்த்தபோது உடம்பு முழுக்க வெள்ளை பரவி ஆங்கிலோ இந்தியப் பெண் போல ஆகியிருந்தாள். ‘இன்னும் ஒரு வருடத்தில் முழுக்கப் பரவிவிட்டால் அது ஒரு கலர் ஆகிவிடும். அப்போது திருமணத்திற்கு சௌகரியம்’ என்று அவளின் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். திருமண அழைப்பிதழ் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளைக்காரியாகிவிட்டாள் என்றார். அவளின் திருமணத்திற்கு பணமும் நகையும் சேர்த்து வைத்திருந்தது பிரயோஜனமானது என்றார். நோய் ஒரு பெரிய குறையாகிவிடவில்லை. உடம்பு முழுக்கப் பரவி புதிய நிறமாகிவிட்டாள். அவர்களின் தகுதிக்குக் குறைந்த மாப்பிள்ளையும் கிடைத்துவிட்டதாகச் சொன்னார். யுனானி மருத்துவமனைக்கு வந்து சென்ற திருப்பூரைச் சார்ந்த பல பெண்களுக்கு திருமணமாகியிருந்தது. மருத்துவத்தை பலர் தொடரவில்லை.
ஜெயமணி பற்றி எதுவும் தெரியவில்லை. எப்போதாவது ரவிச்சந்திரன் சரியான தகவலைச் சொல்வார் என்ற ஆர்வம் எனக்குள் இன்னும் இருக்கிறது. அவரது முகவரியும் எனக்குத் தெரியாது. எழுத்தாளராக நான் அறிமுகம் பெறவில்லை என்பதால் எனது முகவரி அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லைதான்.