முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

தலையங்கம்
மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள்?
மனுஷ்ய புத்திரன்
கட்டுரை
தேர்தல் - 2009 திராவிடக் கட்சிகள் உருவாக்கும் கானல் நீர் அரசியல்
மாயா
ஐ.பி.எல் : நவீன கிரிக்கெட்டின் அசுரக் குழந்தை
ஆர்.அபிலாஷ்
'இப்போது நான் அன்பின் தூய்மை'
சுகுமாரன்
குருதி கசியும் பனிநிலம் : ரோஜா முதல் தஹான் வரை
யமுனா ராஜேந்திரன்
அமெரிக்காவின் தவறான புரிதலுக்கு என்ன காரணம்
பி.சாய்நாத்
தேர்தல் - 1946 "மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு"
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சமநிலையைக் குலைக்கும் சமன்பாடுகள்
சுப்ரபாரதிமணியன்
கவிதை
சுந்தர ராமசாமி : நினைவின் கதவுகளைத் திறந்து பார்கிறேன்
எஸ்.ராமகிருஷ்ணன்
மனதில் புகுந்தது மா மத யானை
பிரபஞ்சன்
கவிதை
அதிர்ஷ்டத்தின் வருகை
மனுஷ்யபுத்திரன்
வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி - 16.04.2009
மனுஷ்யபுத்திரன்
சிநேகிதிகளின் கணவர்கள்
மனுஷ்யபுத்திரன்
பரஸ்பரம் சில உதவிகள்
மனுஷ்யபுத்திரன்
கடைசியில் வருத்தமே மிஞ்சியது
மனுஷ்யபுத்திரன்
யாசிப்பின் திசையெல்லாம்
புவனராஜன்
பெண்ணாய் உணர்ந்த கணம்
மகா
மரியா
த.செல்வசங்கரன்
சிவாஜிகணேசனின் முத்தங்கள்
இசை
அந்த கணத்தில். . .
சம்யுக்தா
சிறுகதை
பங்குப்பணம்
சுரேஷ்குமார இந்திரஜித்
இனி ஒண்ணையும் மறைச்சு வைக்க முடியாது
வா.மு.கோமு
சிறுகதை
யுவன் சந்திரசேகருக்கு ஒரு பதில் - சரியாக இசை கேட்டதன் லட்சணம்
சாருநிவேதிதா
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
விட்டுப்போன வார்த்தைகளும் எஞ்சிய நினைவுகளும் - அப்பாஸ் - சி.மணி அஞ்சலிக் கூட்டம்
லக்ஷ்மி சரவணக்குமார்
இந்த வாரக் கருத்துப் படம்
சி.மணி 1936-2009 அணை உடைத்த காவிரி
ஞானக்கூத்தன்
கடிதங்கள்
கடிதங்கள்
-
தேர்தல் - 1946 "மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு"
எஸ்.வி.ராமகிருஷ்ணன்

1946இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்தான் நான் கண்ட முதல் தேர்தல்.  ஃபர்ஸ்ட் பாரம் என்றழைக்கப்பட்ட ஆறாவது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. இரண்டாவது உலகயுத்தத்தில் நம்மைக் கேட்காமலேயே  பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஜெர்மனி மீது யுத்தப் பிரகடனம் செய்ததிலிருந்து (1939) தோன்றி யுத்தகாலம் முழுதும் நீடித்த காங்கிரஸ் - பிரிட்டிஷ் பிணக்கம் சமீபத்தில்தான் ஒருவழியாக முடிவு பெற்று இணக்கமாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்குச் சில மாதங்கள் முன்பு இங்கிலாந்தில்  (அதாவது பிரிட்டனில் - அப்போதெல்லாம் மூத்த தலைமுறையினர், என் அப்பா அம்மா உட்பட, இங்கிலாந்து என்றுதான் சொன்னார்கள். ஏன், பிரிட்டிஷ் பிரதமராயிருத்த சர்ச்சிலும் கடைசிநாள் வரை அப்படித்தான் சொன்னதாகவும் ஸ்காட்லந்துக்காரர்களின் எரிச்சலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் கூடத் தெரிகிறது.) ஆட்சி மாறியதே. சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் அனுதாபிகள்  (உ.ம். கிரிப்ஸ், பெதிக்-லாரன்ஸ்) நிறைந்த தொழிற்கட்சி சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சியைத் தேர்தலில் முறியடித்து அமோகவெற்றி பெற்றிருந்தது (1945). அந்த முடிவைத் தெரிந்து கொள்வதற்காக அன்று பி.பி.ஸி செய்திகள் வரும்போது என் தந்தை கடமுட என்று சத்தம் பண்ணிக்கொண்டிருந்த ரேடியோவிலேயே காதைப் பதித்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. நியூஸ் கேட்டுவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் கூடத்துக்கு (ஹால்) வந்து நற்செய்தியைச் சொன்னவுடன் அம்மா உடனே பாயசம் பண்ணி எல்லோருக்கும் கொடுத்ததும் ஒரு ‘இனிய’ நினைவு. புதிய லண்டன் அரசு தாமதமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதைத் தங்கள் கொள்கைப்பிரகடனமாகச் செய்துவிட்டது . உடனடியாக சிறையிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட அதைத் தொடர்ந்துதான் இப்போது, 1937இல் இருந்து ஒன்பதாண்டுகளுக்குப்பின், மறுபடியும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது.

தாராபுரத்தில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டோடியது. நாடு முழுவதிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஊரெங்கும் சுவர்களின் மீது “மங்களமான மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு” என்று கொட்டை கொட்டையாக எழுதினார்கள். (கூடாதென்று சொல்ல அப்போது எலெக்ஷன் கமிஷனர் எல்லாம் கிடையாது). ‘வாக்கு’ என்ற பதம் அப்போதும் இன்னும் சில வருடங்கள் வரையிலும்கூட உபயோகித்து நான் கேட்டதாக நினைவில்லை. ஆங்கிலச் சொல்லான ‘வோட்’ ஆனது  (‘ரயில்’ மாதிரியாக) ஓட்டு என்றொரு தமிழ் வார்த்தையாகப் பரிணமித்து  நிலைபெற்றிருந்தது. அதேபோல, தேர்தலில் நிற்பவர் ‘அபேட்சகர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் ‘வேட்பாளர்’ ஆனது இன்னும் பல காலத்திற்குப் பிறகுதான். வடமொழியிலிருந்து வந்த ‘அபேட்சகரின்’ நேரடி சுத்தத்தமிழ் மொழிபெயர்ப்பு.

சினிமா நோட்டீஸ் மாதிரி பிரசாரத் துண்டுக்காகிதங்கள் (அதற்கும் நோட்டீஸ் என்றுதான் சொன்னார்கள்) அச்சடித்து வினியோகிக்கப்பட்டன. இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், வீடு வீடாகப் படியேறி மக்களை நேரில் சந்தித்து நோட்டீசுகளைக் கொடுத்தும் விண்ணப்பித்தும் ‘காந்திக்கட்சிக்கு’ வாக்கு சேகரித்தார்கள். தொண்டர்கள் தெருத்தெருவாக மெகாபோனில் முழங்கிக் கொண்டும் போனார்கள். இன்று காணாமற்போன மெகாபோனைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்றால்  அது சௌகரியமானதொரு சாதனம். மலிவும் கூட. மின்சாரம், பேட்டரி எதுவும் கேட்காது. நாம் போடும் சத்தத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகக் கூட்டும், அவ்வளவுதான். ஒலிபெருக்கி போலக் காதைத் துளைக்காது. அடிக்கடி காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் நடந்தன. மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் (‘மட்டப்பாறைச் சிங்கம்’), ம.பொ.சிவஞான கிராமணி யார், அல்லாப்பிச்சை என்று வெளியூரில் இருந்தும் தலைவர்கள் வந்து பேசினார்கள். அவர்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து என் தந்தையிடம் கொஞ்சநேரம் பேசி விட்டுப் போனார். அவர்தான் காமராஜ நாடார் (அப்போது அப்படித்தான் அவர் பெயர். பின்னாளில் ‘நாடார்’ என்ற பகுதி , காரல் மார்க்ஸின் பாஷையில் சொல்லப்போனால், ‘உதிர்ந்துபோயிற்று’ ) என்று அப்புறம் அப்பா சொன்னார். “அட, அப்பவே தெரிஞ்சிருந்தால் எட்டிப் பார்த்திருப்பேனே  என்று குறைபட்டுக்கொண்டார் அம்மா.

அதென்ன மஞ்சள் பெட்டி என்ற கேள்வி இதைப் படிக்கும் பலர் மனதிலும் எழக்கூடும். அது ஒரு தனிக்கதை. சைமன் கமிஷன் வந்துவிட்டுப் போனதற்குப் பின் 1931இல் வைஸ்ராய் ஒரு கமிஷனை நியமித்தார். அதன் வேலை இந்தியாவுடன் ஒப்பிடக் கூடிய பல நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து நமக்கு தேர்தல் முறைகளைச் சிபாரிசு செய்தல். வெள்ளைக்காரர்கள் எப்போதும் ரொம்ப systematic. (அதை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் எனத் தோன்றுகிறது. உதாரணமாக, அண்மையில் Right to Information Act வந்தது. இயற்றுவதற்கு முன்னர், சில முன்னேறிய நாடுகளிலும், மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, மொரீஷஸ் போன்ற சில கிழக்கத்திய நாடுகளிலும் இதை எப்படிச் செய்திருக்கிறார்கள், சட்டம் மட்டுமில்லாது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ‘காப்பியடித்து’ இயற்றப்போக, இன்று அந்தச் சட்டம் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, சொல்லும்படியாக சாமானிய மக்களுக்குப் பிரயோஜனம் எதுவும் இல்லை). முன்னேறிய மேனாடுகள் போலன்றி  இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் (சுயேச்சை அபேட்சகருக்கும்) தனித்தனிக் கலரில் பெட்டிகள் வைப்பதென்ற கமிஷனின் பரிந்துரை ஏற்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் பங் கெடுத்துக்கொள்ளச் சம்மதித்த 1937இலிருந்து அதற்கு மஞ்சள் பெட்டி என்றாயிற்று. 1946இல் ஜின்னாவின் முஸ்லிம்லீகுக்கு பச்சைப்பெட்டி. மற்றவர்களுக்கு என்ன என்னவென்று எனக்குத் தெரியவில்லை.  சுயேச்சைகளும் கோதாவில் உண்டு.

ஒரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கே சொல்லவேண்டும். அன்று வயதுவந்தவர் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. இத்தனை படிப்பு அல்லது இத்தனை சொத்து என்று வைத்திருந்தார்கள். அந்தத் தகுதி இருந்தால்தான் ஓட்டுப்போடலாம். அதனால் ஜனத்தொகையில் ஓட்டுரிமை பெற்றவர்களின் சதவீதம் இன்றைவிட மிகக்குறைவாக இருந்தது. இங்கே எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பின்னால் 1952இல் இருபத்தோரு வயதானவர் எல்லோருக்கும் வாக்குரிமை வந்தபோது எளியவர்கள் பலருக்கு அது தெரியவில்லை. அப்போது எங்கள் வீட்டில் ஒரு சமையற்கார மாமி இருந்தார். விதவை, வயதான மாது. “ஓட்டுச்சாவடி நம்ம வீட்டில் இருந்து நாலு எட்டில் இருக்கிறதே, நீங்கள் ஒட்டுப்போடப் போகவில்லையா, மாமி?” என்று கேட்டேன். “எனக்கெல்லாம் ஓட்டு கிடையாதப்பா, அதுக்கு சொத்து எதாவது இருக்கணும்” என்று பதில் சொன்னார். இல்லை, இப்போது சட்டம் மாறியிருக்கிறது என்று நான் சொன்னபோதும் மாமிக்கு நம்பிக்கை வரவில்லை. நான் வெறும் பதினைந்து வயதுப் பையனாயிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என் தாயாரும் வந்து வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் போனார்.

1946இல் இருந்து, பின்னால் மறைந்து போன ஒரு பாரிய விஷயம் முஸ்லிம்களுக்கென்று இருந்த ‘தனித்தொகுதி’. தனித்தொகுதி என்றால் இன்று ஷெட்யூல்வகுப்பினருக்கு ஒதுக்கியிருப்பது போல அல்ல. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டளிக்க முடியும். ஒரு முஸ்லிம் லீகர், ஒரு தேசீய முஸ்லிம், ஒரு முஸ்லிம் சுயேச்சை என்று நின்றால், அந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தான் இஸ்லாமிய ஓட்டர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் முஸ்லிமல்லாத அபேட்சகர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்தவ ஓட்டர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போடவும் முடியாது. 37 வருடங்களுக்கு முன் இந்தியர்களைப் பிரித்தாளுவதற்கு ஆங்கிலேயர் கொண்டு வந்த இத்திட்டம் கடைசியில் இந்தியாவையே பிரித்துவிட்டது. மேலே விவரிக்கப்பட்டது 1946 தேர்தலின் அடிப்படையில்தான். ஆனால், பிரித்தல் முழுமை பெற்றபோது (1947) ஆளுவதற்குத்தான், அந்த விஷமத்தை ஆரம்பித்து வைத்த வெள்ளையர் இருக்கவில்லை! 

*

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com