முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
தலையங்கம்
வெற்றிகள் காட்டும் திசைகள்
மனுஷ்ய புத்திரன்
கட்டுரை
ரெட்டணை துப்பாக்கிச் சூடும் ஆறாவது ஊதியக் குழுவும்
ச.தமிழ்ச் செல்வன்
அலெக்சாந்தர் சோல்செனித்சின் : இருளைக் கடந்த கலைஞன்
சுகுமாரன்
ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்
சாரு நிவேதிதா
மஹ்முத் தர்வீஸ் : காத்திருத்தல் எனக்கு பிடிக்காது
யமுனா ராஜேந்திரன்
கவிதை
-
-
குமுதத்தின் கதை
பிரபஞ்சன்
பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு
எஸ்.ராமகிருஷ்ணன்
சிங் இஸ் கிங்
பாரதி மணி
மறையும் உயிரினங்கள்
சு.தியடோர் பாஸ்கரன்
மறக்கப்பட்ட தாமிரபரணிப் படுகொலை
மாயா
கவிதை
புத்தொளியின் வெளி
இசை
கருணை
கணேசகுமாரன்
அவர் வந்துகொண்டிருக்கிறார்
மா.காளிதாஸ்
நரன் கவிதைகள்
-
பிரபஞ்சம் தோன்றிய போது
எஸ்.பஞ்சலிங்கம்
அம்மாவின் இசை
ரவி உதயன்
கடவுளைக் கொலை செய்தவர்கள்
சலனி
சிறுகதை
சிறுகதை:இரண்டு நபர்களைப் பற்றிய ஒரு செய்தி
எஸ்.செந்தில்குமார்
சின்னப்பாப்பா: பாலியல் தொழிலாளியின் குட்டி சரிதை
வா.மு.கோமு
கதீட்ரல்
ரேமண்ட் கார்வெர்
சிறுகதை
யாமம்: இரவால் கோர்க்கப்பட்ட கதைகள்
சமயவேல்
ஹைக்கூ வரிசை
கடிதங்கள்
-
மறையும் உயிரினங்கள்
சு.தியடோர் பாஸ்கரன்


தமிழ்நாட்டில்  முற்காலத்தில் சிங்கம் இருந்ததா இல்லையா என்று இந்து நாளிதழில் அண்மையில் ஒரு விவாதம் நடந்தது. மாமல்லபுரத்திலுள்ள அர்ஜுனன் தவம் புடைப்புச்சிற்பத்தில் ஒரு பெட்டைச் சிங்கம் தன் குட்டிகளுக்குப் பால் கொடுப்பது போன்ற சிற்பம் இடம் பெற்றிருப்பதை நான் சுட்டிக்காட்டி எழுதினேன். சிங்கமே இல்லாத இடத்தில் எப்படி இந்தச் சிற்பம் வந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  இன்று இல்லாதிருந்தாலும் முன்பு இருந்திருக்கலாமே என்ற எண்ணம் யாருக்கும் எழவில்லை. தமிழ் இலக்கியத்தில் சிங்கம் பற்றிய குறிப்புகளுடன், அதற்கு வழங்கப்பட்ட பல பெயர்களும் உண்டு. சிங்கநல்லூர், சிங்கம்புணரி என்ற ஊர்ப்பெயர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  தென்னிந்தியாவில் சிங்கம் இருந்திருந்ததையே இவை காட்டுகின்றன என்று நான் நினைக்கின்றேன். தமிழ் நாட்டில் செழித்திருந்த வேறு சில பாலூட்டிகளும் பறவைகளும் கூட  இன்று அற்றுப்போய்விட்டன.

நான் சிறுவனாக தாராபுரத்தில் படித்துக்கொண்டிருந்த ஆண்டுகளில், எங்கள் பள்ளியில் தச்சு வேலை, பாய் முடைதல், நெசவு நெய்தல் போன்ற கைத்தொழில்களும் பாடங்களாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அந்த வாத்தியார்கள் மேஸ்திரி என்று அழைக்கப்பட்டனர். நெசவு சொல்லிக் கொடுத்த இஸ்ரவேல் மேஸ்திரியார் கதை சொல்வதில் கில்லாடி. வெளிச்சம் மங்கும் மாலை நேரத்தில், சிறுவர்களைக் கூட்டி வராந்தாவில் உட்கார்ந்துகொண்டு கதை சொல்லுவார். அதில் பல உண்மைச் செய்திகளும் தகவல்களும் நிரவி இருக்கும். ஒரு நாள் கதை புலியைப் பற்றி. நம்மூரில் நான்கு வகைப் புலிகள் உண்டு என்றார். வேங்கைப்புலி, சிறுத்தைப்புலி, சிவிங்கிப்புலி, நான்காவதாக கழுதைப்புலி. (இந்தக் கடைசி விலங்கு ஒரு புலியே அல்ல. பெயர்தான் அப்படி . . . வெஜிடபுள் பிரியாணி மாதிரி.)

சிவிங்கிப்புலியை சத்தியமங்கலத்தருகே பார்க்கலாம் என்றார் மேஸ்திரியார். நான் கதை கேட்ட ஆண்டு 1951. மோயாரும் பவானி நதியும் சேரும் இடத்திலுள்ள புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலி  இருந்த விவரம் அன்றைய அரசு ஆவணங்களில் பதிவாகியிருக்கின்றது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் காட்டிற்கு நான் சென்றபோது, வெளிமான் (Blackbuck) மந்தைகள் இங்கு திரிவதைக் காண முடிந்தது. ஆனால் இந்த மானை இரையாகக் கொண்டு இங்கு வாழ்ந்த அரிய பூனையினம் நம் நாட்டில் அற்றுப்போய்விட்டது.

சிவிங்கிப்புலிக்கும் இன்றும் தமிழ்நாட்டுக் காடுகளில் வாழும் சிறுத்தைக்கும் வேறுபாடுகள் பல. சிவிங்கிக்குத் தலை சிறியதாக, கண்களுக்குக் கீழே ஒரு கறுப்புக் கோடு இருக்கும். ஒல்லியான, நீண்ட கால்களையுடையது. உடல் முழுவதும் கருப்புப்புள்ளிகளிருக்கும். ஆனால் சற்றுப் பருத்த உடலுடைய சிறுத்தையில் ரோமப்போர்வையில் கரு வட்டங்களிருக்கும். மற்றப் பெரும் பூனைகள் போல,  சிவிங்கியால் தன் நகங்களை உள்ளிழுத்துக் கொள்ள முடியாது. அதன் உடல் வடிவமைப்பு இரைவிலங்கை ஓடித் துரத்திக் கொல்ல ஏதுவாக உள்ளது. மனிதருக்கிருப்பது போல இரு கண்களும் முன்னோக்கி அமைந்து கூரிய  பார்வைக்கு வழி செய்கின்றன. இதனால் தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிகின்றது. உலகிலுள்ள இரைகொல்லி விலங்குகளுள் மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிதான். ஏறக்குறைய 100 கிமீ வேகத்தில் பாய்ந்தோட முடியும். இந்த விலங்கு பாறைகள் நிறைந்த குன்றுகளில்  மறைந்து வாழ்ந்தாலும் இரை தேடப் பகலிலேயே பரந்த வெளிக்கு வந்து அங்கு மேயும் வெளிமான்களை அடித்து இரையாகக் கொள்ளும். மற்றப் பெரும் பூனைகளைப்போலவே சிவிங்கியும் இறைச்சியை மட்டுமே உணவாகக் கொண்டது.

துப்பாக்கி நம்நாட்டிற்கு வருமுன், அதாவது 16ம் நூற்றாண்டுக்கு முன், அரசர்கள், சிவிங்கிப்புலிகளைப் பிடித்து வேட்டைக்குப் பழக்கியிருந்தார்கள். சவூதி போன்ற நாடுகளில் ஷேக்குகள் வல்லூறுகளை முயல் வேட்டைக்குப் பயன்படுத்துவது போல. சிவிங்கிக்குட்டிகளைப் பிடித்து வேட்டைக்குப் பழக்க முடியாது. குட்டிகளுக்கு இரையைத் துரத்திக் கொல்லும்  வித்தையைத் தாய்ச்சிவிங்கிதான் கற்றுக்கொடுக்கின்றது. ஆகவே முழுதும் வளர்ந்த சிவிங்கிகளைத்தான் பிடிக்க வேண்டும். பின் மனிதர்களுடனிருக்க அவைகளை பயிற்சி கொடுத்துப் பழக்க வேண்டும். பழக்கிய வேட்டைச் சிறுத்தைகளுக்குக் கண்மூடியிட்டு மாட்டு வண்டியில் காட்டிற்குக் கொண்டு செல்வார்கள். அங்கு வெளிமான்கள் காணப்பட்டால், சிவிங்கியை அவிழ்த்து விடுவார்கள். அது வெளிமானைச் சில வினாடிகளில் துரத்திக் கொன்றுவிடும். அடிக்கப்பட்ட மானின் ஒரு காலை அறுத்து சிவிங்கிக்குப் பரிசாகக் கொடுப்பார்கள். இவ்வாறு வேட்டைக்குப் பயிற்சியளிக்கப்பட்ட  1000 சிவிங்கிகள் அக்பரின் அரண்மனையில் இருந்தன என்று அக்பர்நாமா நூல் கூறுகின்றது. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இடப்பட்டிருந்தது. திப்புசுல்தானிடம் 16 சிவிங்கிகள் இருந்தன. 1789இல்,             சீரங்கப்பட்டினம் வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்டு, திப்புவும் கொல்லப்பட்ட பின் இந்தச் சிவிங்கிகளில் மூன்று லண்டனுக்கு மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்குப் பரிசாக கும்பினி யாரால் அனுப்பப்பட்டதென்று ஒரு வரலாற்றுக்குறிப்பு தெரிவிக்கின்றது. சிறுத்தை, வேங்கை போன்ற பெரும்பூனைகள் அவ்வவ்போது ஆட்கொல்லிகளாக மாறி மக்களைப் பீதியிலாழ்த்திய கதைகளை ஜிம்கார்பெட் போன்ற வேட்டையாடிகள் கூறியிருக்கின்றார்கள். ஆனால் சிவிங்கிப்புலி மனிதரைத் துன்புறுத்தவேயில்லை. இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில், சிவிங்கியைக் கொன்று, அதன் வாலைக் கொண்டுவந்து காண்பித்தால் அரசு ரூபாய் 18 கொடுத்தது. ஆடுகளைச் சில இடங்களில் கொன்றதற்காக அதற்கு இந்தக் கதி. 1876ஆம் ஆண்டில் மட்டும் 135 சிவிங்கிப்புலிகள் இவ்வாறு மதராஸ் ராஜதானியில் கொல்லப்பட்டதாக ஒரு ஆவணக் குறிப்பு சொல்கின்றது.

தமிழ்நாட்டுக் குட்டி அரசர்களும் வேட்டைச்சிவிங்கிகளை வளர்த்தனர். 1900ல் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் புதுக்கோட்டை அரசரின் அரண்மனையிலிருந்த சிவிங்கிப்புலி ஒன்று காணப்படுகின்றது. தஞ்சாவூருக்கருகே இருந்த காடுகளில் உள்ள உயிரினங்களை, ஓவியர்களைக் கொண்டு வண்ணப் படங்கள் தீட்டி வைப்பது சரபோஜி அரசரின் பொழுதுபோக்குகளில் ஒன்று.  நாடாளும் வேலையை பிரிட்டீஷ்காரர் பிடுங்கிக்கொண்டபின், குட்டி அரசர்கள் பலர் இம்மாதிரியான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர். சரபோஜியின் தர்பாரில் இத்தகைய காட்டுயிர் ஓவியங்கள் 117 தீட்டப்பட்டன. அவற்றை  1803இல் தஞ்சாவூரிலிருந்த பிரிட்டீஷ் ரெசிடெண்டுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். இப்போது அவை  லண்டனில் விக்டோரிய ஆல்பெர்ட் அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு தைல ஓவியம் வேட்டைக்குத் தயாராக உள்ள சிவிங்கிப்புலி ஒன்றைக் காட்டுகின்றது. சிவிங்கியை எப்படிப் பிடிப்பது, வேட்டைக்குப் பழக்கும் முறைகள் என்னென்ன, அதற்கு வைத்திய முறைகள், இவைகளை படங்களுடன் விளக்கும் ஒரு மராத்தி நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் பரவலாக இருந்த இந்த எழிலார்ந்த பெரும்பூனை, இதைப்பற்றி நாம் சரிவர அறிந்து கொள்ளுமுன் 1950களில் சிவிங்கி அற்றுப்போய் விட்டது.

அற்றுப்போவது (extinction) என்றால் என்ன? ஒரு வாழிடத்திற்கு ஏற்றாற் போல், உடலமைப்பைப் பெற்று பல்லூழிகாலமாகப் பரிணாமத் தகவமைப்பின் மூலம், ஒரு தனித்துவத்துடன் உருவான ஓர் உயிரினம், முற்றிலுமாக அழிந்து போவதுதான் அற்றுப்போதல். இயற்கையின் வழியில் சில உயிர்கள் தாமாக அற்றுப்போவதுண்டு. ஆனால், மனிதன் இவ்வுலகில் உருவான பிறகுதான் அற்றுப்போதல்  மிகுதியாக இருக்கின்றது. அதிலும் நமது காலத்தில், இயற்கையாக அற்றுப்போவதைப் போல் ஆயிரம் மடங்கு அதிவேகமாக உயிரினங்கள் மறைந்து வருகின்றன. எல்லாம் மனிதரின் செயலால்தான். இயற்கையை நாம் சரியாக எதிர்கொள்ளவில்லை.  பாலூட்டிகளின் நான்கில் ஒன்றும், புள்ளினங்களில் எட்டில் ஒன்றும் இன்று அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன.

மனிதர் புதிதாகக் குடியேறிய இடங்களிலெல்லாம் அற்றுப் போதல் அதிகமாக நடந்திருக்கின்றது. மாரிஷியஸ் தீவில் 18ம் நூற்றாண்டு மனிதர் கால் வைத்த பின், பறக்கும் திறனற்ற, டோடோ பறவை அழிந்துபட்டு, அற்றுப்போதலுக்குக் குறியீடாக உருவாகிவிட்டது. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இதே போலப் பல உயிரினங்கள் அழிந்துபட்டன. உணவிலும், இரைதேடும் முறையிலும் தனித்துவம் கொண்ட உயிரினங்களுக்கு அற்றுப்போகும் ஆபத்து அதிகம். மாசற்ற நீர்நிலைகள் இல்லாவிட்டால் மீன்கொத்திகளேது? சீனக் காடுகளில் மூங்கில் குருத்தை மட்டுமே உணவாகக் கொள்ளும் பன்டா கரடி அரிதாகிவிட்டதற்கு இதுதான் காரணம். எதையும் தின்று வாழும் நம்மூர்க் குரங்கு, காகம், மைனா பலுகிப் பெருகுவதைப் பாருங்கள். பரந்த வெளிகளில் உள்ள இரை விலங்கை, ஓடித்துரத்தி அடித்து உண்ணத் தகவமைப்புடன் பரிணமித்திருந்த  சிவிங்கி, பரந்த வெளிகள் மறைய அதுவும் அற்றுப் போய்விட்டது. வாழிடங்கள் சீரழிதல், வேதியல் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், காடுகள் அழிக்கப்படுதல், இரைவிலங்குகளின் வீழ்ச்சி,  வணிகப்பயன்பாடு, வேட்டையாடல் இவைகளால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. நம் நாட்டில் புலி, சிங்கம்,   வரையாடு, காண்டாமிருகம் இவை அழிய, வேட்டையாடல் ஒரு முக்கிய காரணம். பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for the Conservation of Nature) என்ற ஐக்கிய நாட்டு சபை சார்ந்த அமைப்பு எந்த ஒரு உயிரினமும் ஐம்பது ஆண்டுகளுக்கு யாராலும் பார்த்திருக்கப்படாவிட்டால், அது அற்றுப்போய்விட்டது என்று அறிவித்துவிடும். அற்றுப்போன உயிரினங்கள், அரிதாகிக்கொண்டு வரும் உயிரினங்கள்  இவற்றைப் பட்டியலிட்டு Red Data Book என்ற நூலைச்சில ஆண்டுகளுக்கொரு முறை IUCN வெளியிடுகின்றது.

தமிழ்நாட்டில் முன்பு இருந்து, அண்மையில் அற்றுப்போன உயிரினங்கள் சில உண்டு. வறண்ட புதர்க்காடுகளில் வாழ்ந்த கான மயில் (The Great Indian Bustard) எனும் பறவை இதில் ஒன்று.  'கானமயிலாடக் கண்டிருந்த' என்ற பாடல் நினைவிற்கு வரவில்லை? வான்கோழி அளவில், ஒரு மீட்டர் உயரமான  இப்பறவை நன்கு பறக்க முடிந்தாலும், இது ஒரு தரைப்பறவை. தரையில்தான் முட்டையிடும். இதன் அழிவிற்கு இதுவும் ஒரு காரணம். கால்நடை பெருகியதால், அதன் முட்டைகள் சிதைக்கப்பட்டன. ஒகேனக்கல் அருகே உள்ள காடுகளிலும் மதுரைக்கருகிலும் இப்பறவை இருந்ததை வேட்டைக்காரர்களின் குறிப்புகள் காட்டுகின்றன. இந்தியாவின் தேசியப்பறவையைத் தேர்ந்தெடுக்க முற்பட்ட குழு, இந்தியாவில் மட்டுமே வாழும்  இந்தப் பறவையைத்தான் தெரிந்தெடுக்க முதலில் முடிவு செய்தனர். பின்னர் அச்சுப் பிழையாலே, spelling தவறாலே (Bustard) பிரச்சினை ஏற்படலாம் என்று அந்த மரியாதையை மயிலுக்கு அளித்தார்கள். அதே போல வீட்டுக் கோழி அளவில் சிறிய பெட்டைமயில் போலத்தோற்றமளிக்கும் வரகுக்கோழி என்ற அழகிய பறவையும் இங்கு இன்றில்லை. செங்கம் அருகே உள்ள காட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு வரகுக்கோழியைப் பாடம் பண்ணி சென்னை அருங்காட்சியகத்தில்    வைத்திருக்கின்றார்கள். புல்வெளிகளில் வாழும் இப்பறவை இன்று குஜராத்தில் மட்டும் இருக்கின்றது. ஒரே ஒருமுறை இதை நான் பார்த்திருக்கின்றேன்.

நம் கண் முன்னாகவே சில உயிரினங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. முன்பு திறந்த வெளிகளிலும், வானத்தில் நான் அடிக்கடி பார்த்த பிணம்தின்னிக் கழுகுகளை இன்று பார்ப்பதே அரிதாகிவிட்டது. கால்நடைகளின் உடலில் செலுத்தப்பட்ட மருந்துகள் சில, இக்கழுகுகளின் உடலில் சென்று, அவற்றின் இனப்பெருக்கத்தை பாதித்து விட்டன.

செம்பருந்தைக் காண்பதும் அரிதாகி வருகின்றது. எங்கள் கிராமத்தருகே நான் குள்ள நரியை அடிக்கடி கண்டதுண்டு. இதை அண்மையில் யாராவது பார்த்திருக்கின்றீர்களா? நம்மைச் சுற்றியிருக்கும் பல்லுயிர் வளத்தை நாம் தொடர்ந்து சீரழித்து வருகின்றோம்.

(இக்கட்டுரையை எழுத திவ்ய பானுசிங்கின் The End of a Trail: The Cheetah in India (OUP, 1999) என்ற நூல் பயன்பட்டது.)   

றீ

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com