முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
வைகோ ஏன் வீழ்கிறார், ராமதாஸ் ஏன் வளர்கிறார்? இரண்டிற்குமான பதில் ஒன்றே: பணம்-அதிகாரம்-ஜாதி
மாயா
இந்தியத் தேர்தலில் வெளிநாட்டு இந்தியரின் எதிர்பார்ப்பு!
இந்திரஜித்
‘காலணிக் கொண்டார் பகை'
இந்திரா பார்த்தசாரதி
இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்கள்
செல்லமுத்து குப்புசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -1
பாஸ்கர்
எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?
ஆர்.அபிலாஷ்
எங்கெங்கு காணினும் உழவு என்றொரு காலம்
ந. முருகேச பாண்டியன்
ஒரு ரத்த நினைவு
சுப்ரபாரதி மணியன்
சினத்தைப் பொருளென்று...
நாகரத்தினம் கிருஷ்ணா
‘போடா ஒம்போது…‘
பொன்.வாசுதேவன்
மதிப்பிடும் அதிகாரம் - ஒரு பின் நவீனத்துவக் குழப்பம்
அ.ராமசாமி
சிலபோது சிரித்து சிலபோது அழுது
சி வி பாலகிருஷ்ணன்
ஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்!
சுதேசமித்திரன்
மலைவாசனை
பாண்டியன்
கற்பனையும் எதார்த்தமும் : நகுலனின் கவிதை
பாவண்ணன்
தமிழ் மனத்தில் பதிந்துள்ள வடுவும் நீதிபோதனையும்
தமிழவன்
கவிதை
உருமாற்றம்
கென்
மீன்கள் தின்ற குளம்
த.செல்வசங்கரன்
பிறகு
நேசமித்ரன்
நிழல் கடக்கும் ரயில் பூச்சிகள்..!
இளங்கோ
வேறு வேறாக ...
பிரவின்ஸ்கா
தோற்ற மயக்கம்
வே. முத்துக்குமார்
காத்திருத்தல்
என்.விநாயக முருகன்
உதிர்ந்த பூவின் வெயில்
எம்.ரிஷான் ஷெரீப்
தேடும் என் தோழா
நடராஜா முரளிதரன் (கனடா)
சிறுகதை
மிருகபாஷினி
ஆதவா
பொது
ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!
தமிழ்மகன்
சூஃபி கதைகள்
தமிழில்: முகமது சஃபி
என்றார் முல்லா
தமிழில்:சஃபி
இந்த வார கருத்துப் படம்
தேர்தல் அறிக்கைகள்
பாபுஜி
செருப்பதிகாரம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக் கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
ஆடு இருக்க இடையனைப் பிடிக்குமா நரி.
தொகுப்பு: கழனியூரன்
ஹைக்கூ
ஹோமியோபதிச் சுடர்
-
பொது
மாடவீடுகளின் தனிமை (சிறுகதைகள்)
-
வைகோ ஏன் வீழ்கிறார், ராமதாஸ் ஏன் வளர்கிறார்? இரண்டிற்குமான பதில் ஒன்றே: பணம்-அதிகாரம்-ஜாதி
மாயா

"பொருதடக்கை வாளெங்கே;

மணி மார்பெங்கே;

போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத

பருவயிரத் தோள் எங்கே

எங்கே..."

இன்றைக்கு தமிழக அரசியல் போர்க் களத்தில் வைகோவின் நிலையை நினைக்கும் போது எனக்கிந்த பாடல் நினைவுக்கு வருகிறது. கலிங்கத்துப் பரணியின் காலத்து மிகை உணர்ச்சியையும் வார்த்தை அலங்காரத்தையும் இன்னமும் தனது ஆயுதங்களாக நம்பிக்கொண்டிருக்கும் வைகோவின், அவரது கட்சியின் வீழ்ச்சி அத்தனை தளங்களிலும் முழுமையடைந்து வருகிறது. தனது காலாவதியாகிப் போன புராதன ஆயுதங்களை மேடைக்கு முன்னால் ஆவேசமாக வீசிக்கொண்டிருக்கும் வைகோ, மேடைக்குப் பின்னால் போயஸ் தோட்டத்து அறைகளுக்கும் பியூன்களுக்கும் இடையில் தடுமாறிக்கொண்டிருந்தார். நாலுக்கும் ஐந்திற்கும் இடையில் அவர் பாத்திரமேந்தி நிற்க வைக்கப்பட்டார். முன்பு கருணாநிதியிடம் நடந்துகொண்டது போல வீராப்புடன் வெளியேற முடியாத அளவுக்கு தனது தார்மீக பலத்தை ஏற்கனவே கெடுத்துக்கொண்டுவிட்ட வைகோவுக்கு சமரசமாகப் போவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

மைக் தெறிக்கும் அளவுக்கு உக்கிரமாக வெளிப்படுத்தும் நாடகத்தனமான பேச்சுகளை மீறி வைகோவின் மீது அறிவார்ந்த உலகிற்கு மரியாதை இருந்தது உண்டு. அவர்கள் உயர்வாக மதித்த தலைவர் இன்று சந்திக்கும் அவமானங்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு உடைக்கப்படும் பேனாவின் முனையைப் போல காட்சி தருகின்றன. அனைத்துத் தரப்பு மக்களையும் எட்டக்கூடிய வைகோவின் ம.தி.மு.கவைவிட ஒரு சாதாரண ஜாதித் தலைவர் அல்லது ஜாதிக் கட்சிகளே சிறந்த அரசியல் தேர்வு என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி மதிப்பிட்டிருப்பது இன்றைய அரசியலில் ஜாதி, மத, சினிமா அடையாளங்கள் ஆட்சி செய்வதைக் காட்டுகிறது. ராமதாஸ் எவ்வாறு உயர்ந்தார் என்பதும், வைகோ ஏன் வீழ்ந்தார் என்பதும் இரு வேறு கேள்விகள் என்றாலும் அவற்றுக்கான பதில் ஒன்றுதான்.

இன்றைய காலத்தின் இரண்டு துருவங்கள்தான் வைகோவும் ராமதாசும். ஒருவர், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்குப் புதிய இலக்கணம் எழுதியவர். ஒவ்வொரு முறையும் வெற்றிக் கூட்டணியில் சேர்ந்துகொண்டு, சேர்த்துக்கொள்ளப்பட்டு தனக்கான அதிகாரத்தின், பணத்தின் ஊற்றுக் கண்களைத் திறந்தே வைத்திருந்தவர். தேர்தல் வரும் கடைசிக் கட்டம் வரை காத்திருந்து, வெற்றி பெறும் வாய்ப்புள்ள தரப்பில் தாவுவதில் அவர் கூச்சப்பட்டதில்லை. அவருக்கென்று எந்த உயரிய இமேஜும் கிடையாது என்பது அவரது பலவீனமாக மட்டுமின்றி ஒரு சந்தர்ப்பவாத அரசியல் யுகத்தில் பலமாகவும் மாறிவிட்டிருந்தது. அவர் செல்லுமிடமெல்லாம் ஜாதி உணர்வுடன் அவரின் வாக்கு வங்கியும் அவர் பின்னாலேயே வந்தது. தனது ஜாதியின் மீட்சியையே தனது ஒற்றை நோக்கமாகக் கொண்டு தனது அரசியலைத் தொடங்கியவர் அவர். ஜாதி அரசியலின் உச்ச வரம்பை அறிந்துகொண்ட பிறகு பிற ஜாதிகளுடனான கூட்டல்-பெருக்கல் கணக்கைப் போடத் தொடங்கியவர். இன்று வரைக்கும் உள்ளுக்குள் தீவிர ஜாதி உணர்வு கொண்டவர்களின் கட்சி என்றே வர்ணிக்கப்படும் கட்சியின் தலைமை வன்னியர் அவர். தலித்துகளின் ஓட்டுகளுக்காக ஒரு தலித் கிராமத்தில் கொடியேற்றச் சென்ற இடத்தில், அதே தலித்துகளை அடித்து உதைத்த 'சாதீய' பெருமையைக் கொண்டது புதுச்சேரி பா... தமிழகம் முழுக்க தனது கட்சியைப் பரப்பும் பா..கவின் மெகா திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகுகூட அந்தக் கட்சி வன்னியர் அல்லாத பகுதிகளில் போட்டியிடத் தயாராக இல்லை. இதற்கு நேர் எதிரானது வைகோவும் ம.தி.மு.கவும்.

மத்திய அரசில் பங்கு பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் பெரு வாரியான காலக் கட்டங்களில் வைகோவின் கட்சி நட்புரீதியாகவும் எதிரிகளிடமிருந்தும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது; அதிகார அரசியலின் பாலைவனங்களில் காலத்தைக் கழித்திருக்கிறது. நினைத்தபடியெல்லாம் முகாம் மாறுவதை, முகாம் மாறிய பிறகும் தனது வாக்குகளைத் தக்க வைத்துக்கொள்வதை வைகோவின் இமேஜ் தடுத்தது. ஒரு சந்தர்ப்பவாத அரசியல் யுகத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருப்பதன் பலவீனத்தை அனுபவித்தவர் அவர். வைகோ சார்ந்த நாயக்கர் சமூகத்தினர் தீவிர ஜாதி உணர்வுடன் அவருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு நெருக்கமான சிலருடன் தெலுங்கில் பேசினார் அல்லது பேசுகிறார் என்பதைத் தாண்டி வைகோவிடம் ஜாதி அடையாளத்தைக் காண முடியவில்லை. தமிழகம் முழுவதும் பரவலான ஆதரவைக் கொண்ட வைகோவின் கட்சி தமிழகத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிகள் நாலா திசைகளிலும் பரந்து விரிந்திருக்கின்றன. தமிழகத்தில் எத்தனை வகை நிலங்கள் உண்டோ அத்தனையிலும் ம.தி.மு.கவுக்கு இடமுண்டு. அத்தனை ஜாதியிலும் வைகோவுக்கென்று சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். வைகோவின் கட்சியில் உள்ள தலித் மற்றும் பிற சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள் பா..கவில் இருப்பதைப் போல பொம்மைகளாக அல்லாமல் நிஜமான அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மிக முக்கியமாக ராமதாஸ் போல அன்றி வைகோவின் கட்சியில் சர்வாதிகாரம் இதுவரை இருந்ததில்லை. தன்னைவிட மூத்த தலைவர், கட்சிப் பொறுப்பில் தன்னைவிட கீழே இருந்தாலும்கூட அண்ணே என்றே அவர் அழைத்தார். அனுபவமுள்ள கட்சியின் மூத்த தலைவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்தார். ஒரு போதும் தன் மகனுக்கு அவருக்கு உரியதாக இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஆனாலும் ராமதாஸ் வெல்கிறார், வைகோ தோற்கிறார்.

வைகோ தோற்றதற்கு அவரை அன்றி வேறு யாரும் எதுவும் காரணமல்ல என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். வீராவேசமாகப் பேசுவார், அரசியல் செய்யத் தெரியாது. கட்சியை வளர்க்கத் தெரியாது என்று மேலோட்டமாகச் சொல்பவர்கள் உண்டு. அப்படிச் சொல்பவர்கள் ராமதாசின் ஜாதி அரசியல் பற்றியும் அரசியல் சந்தர்ப்பவாதம் பற்றியும் திட்டித் தீர்க்கக்கூடும். ஆனால் இந்த இரண்டு வாதங்களும் ஒரே நபரிடமிருந்து வருவது அபத்தமானது. ராமதாஸைத் திட்டுவதானால் வைகோவின் தார்மீக நெறிகளின்படி செயல்படும் அரசியலைப் பாராட்ட வேண்டும். ராமதாஸின் தந்திரமான அரசியலைப் பாராட்டுவதானால்தான் வைகோவின் "அறிவற்ற" அரசியலைத் திட்ட வேண்டும். ஆனால் இந்த இரண்டுங்கெட்டான் பார்வைகள் பொது புத்தியில் ஊறிய எண்ணங்கள் எந்த அளவுக்கு முரண்பாடுமிக்கவை என்பதைக் காட்டுகிறது. இந்தக் குழப்பம் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது: வைகோ ஏன் தோற்றார், ராமதாஸ் ஏன் ஜெயிக்கிறார் என்பதற்கான நிஜமான பதிலைக் கண்டறியாமல் சமகாலத்து அரசியல் போக்குகளைப் புரிந்துகொள்ள முடியாது.

உலகமயமாக்கலுக்கும் அதில் விளைந்த நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் நடுவில் புதிதாக வளர நினைத்த இரண்டு தலைவர்கள் இரு வேறு பாதைகளில் பயணித்தார்கள். அவர்களின் பயணம் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் கழித்து அதில் ஒருவருக்கு போயஸ் தோட்டத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன, தரிசனம் மறுக்கப்படுகிறது. மற்றொருவருக்கு தயாராக, தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்த பிரசாதம் கனிவுடன் கொடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ம.தி.மு.க கூட்டணியில் ஒரு ஓரமாக தங்களுக்கும் இடமளிக்க முடியுமா என்று வேண்டுகோள் வைத்த பா..க இன்று அ.தி.மு.க கூட்டணியில் ம.தி..கவுக்கு இடமில்லாமல் செய்யக்கூடிய சக்தியாகக் காட்சி தருகிறது. வன்னியர் ஓட்டு அல்லாத ஒரு வாக்கைக்கூடப் பெற முடியாத ராமதாசுக்கும் எல்லா ஜாதியையும் தனக்குள் கொண்டிருந்த வைகோவுக்குமான வித்தியாசம் உண்மையில் 1990களில் உருவான சமூக-அரசியல் போக்கினால் உருவாக்கப்பட்ட வித்தியாசம். ஜாதி, மதம், மொழி அல்லது சினிமா அடையாளம் இல்லாமல் ஒரு புதிய அரசியல் தலைவர் உருவாக முடியாது என்று புதியதொரு விதி எழுதப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான். இந்த யுகத்தின் அலைகளுக்கு எதிராகப் பயணிக்க முயன்ற வைகோவைப் பந்தாடியது மூன்று சக்திகள்: பணம்-அதிகாரம்-ஜாதி.

நுகர்வுக் கலாச்சாரத்தின் உச்சத்தை இன்று தேர்தல் கரன்சி யுத்தத்தில் காணும் சமயத்தில் ஒரு அரசியல் கட்சியை நடத்த பணம் தேவை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணமும்-அதிகாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று இருந்தால்தான் இன்னொன்றை அடைய முடியும். 1994இல் உருவான ம.தி.மு.கவிற்கு இந்த இரண்டு சவால்களும் முதுகில் தொங்கிய வேதாளம் போலத் தொடர்கின்றன. ஒரு ஸ்டெர்லைட் எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராக வலுவான கட்சிகள் வளராமல் தடுக்க இந்த வேதாளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகாரத்திற்கும் பணத்திற்கும் ஏற்படும் பஞ்சக் காலங்களில் இடப் பெயர்ச்சியும் நடக்கும், எதிரி முகாம்களின் வேட்டைகளும் நடக்கும். பா..க தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்று ஊழல் கறைபட்ட செஞ்சி ராமச்சந்திரன்கூட தனது லாபத்தை கட்சியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வேளை வைகோவின் மகன் மத்திய அமைச்சராக்கப்பட்டிருந்தால் அந்த நிலை நேர்ந்திருக்காது. இந்நேரம் தாயகம் தொலைக்காட்சி உதயமாகியிருக்கும்.

தி.மு.கவுடன் தோழமையாக இருந்துகொண்டு தனது கட்சி ஒரு போதும் வளர முடியாது என்பதை மீண்டும் மீண்டும் பல தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகளிலும் பிற சமயங்களிலும் உணர்ந்தவர் வைகோ. .தி.மு.கவின் இருப்பு ஸ்டாலினின் இருப்புக்கும் தி.மு.கவின் இருப்புக்குமான சவாலாக இருக்கும் என்பதை வைகோவும் உணராமல் இல்லை, கருணாநிதியும் உணராமல் இல்லை. மேலோட்டமாக இருவரும் நடத்திக்கொண்ட உணர்ச்சி நாடகங்களின் பின்னால் இந்த பயம் என்றுமே இருந்தது. ஆனால் இயல்பாகவே தி.மு.க மீண்டும் மீண்டும் அதிகாரத்தில் இருந்தது, மத்தியில் உள்ள ஆட்சியின் செல்வாக்கான கூட்டாளியாக இருந்தது. அதனால் தோழனாக இருந்த போதும் சரி, எதிரியாக இருந்த போதும் சரி, ம.தி.மு.கவால் தி.மு.கவுக்கு சவாலாகவும் இருக்க முடியவில்லை, தன்னை அந்தக் கட்சியின் வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்றவும் முடியவில்லை. ஒவ்வொரு தொகுதிப் பங்கீட்டிலும் இந்த மோதல் உச்சக் கட்டத்தை அடைந்தது. நீண்ட காலமாகப் பணப் பிரச்சினைகளைச் சந்தித்து வந்த ம.தி.மு.கவுக்கு, தி.மு.கவுக்கு எதிரான அரசியலை எங்கு செய்வது என்றும் தெரியவில்லை. அதனால் தனது இமேஜை அடகு வைத்து ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை

தனியாக நின்று பல முறை சூடு போட்டுக் கொண்ட வைகோவை விஜயகாந்தைப் போல மாற்று சக்தி அரசியல் கவர்ந்திழுக்காதது ஆச்சரியமே அல்ல. பணமும் அதிகாரமும் கிடைக்கப் பெறாமல் நீண்ட காலம் போராடிய கட்சிக்கு அரசியல் மாற்றம் குறித்து ஏற்படும் அவநம்பிக்கை, மாடி வீட்டின் பால்கனியிலிருந்து வீசப்படும் பிரியாணிப் பொட்டலத்தைப் பிடிக்க ஓடும் பசி-பட்டினிக்குப் பழகியவனுக்கு சமூகத்தின் மீதுள்ள அவநம்பிக்கைக்கு இணையானது. வைகோவின் தீவிர புலி ஆதரவிற்கும் கட்சியை நடத்திச் செல்வதில் அவருக்கிருந்த நிதிச் சிக்கல்களுக்கும் இடையில், பலர் கூறுவது போல, தொடர்பு இருக்கிறதா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு தங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நிற்கக்கூடிய தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும், அவர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைவராக இருக்க வேண்டும் என்று தந்திரத்திற்குப் பேர் போன விடுதலைப் புலிகள் கருதியிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. வைகோ இப்போது ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் பேசுவது நமக்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஒரு வேளை அது அவர் ஆற்றியாக வேண்டிய கடமையாக, நிர்ப்பந்தமாகக்கூட இருக்கலாம். அரசியல் கட்சியை நடத்திச் செல்வதிலுள்ள இத்தகைய சிக்கல்கள் விஜயகாந்த்தை இன்னும் முழுமையாக ஆட்கொள்ளவில்லை.

ஒரு நாள் பட்டினிப் போராட்டத்திற்கு, கொழுத்த விருந்தை முடித்துவிட்டு வரும் திராவிட அரசியல் கலாச்சாரத்தின் வழியில், தனது சினிமா வகையறா வரவுகளை கடைசிச் சில்லறை வரை வசூல் செய்துவிட்டு சில ஆண்டுகள் அரசியல் பட்டினி கிடக்கத் தயாராக களத்தில் குதித்திருக்கிறார் விஜயகாந்த். இப்போது அவரின் கூட்டணிகளற்ற உறுமீன் வரக் காத்திருக்கும் 'உண்ணா'விரதத்தின் பந்தலுக்குப் பின்னால் பிரியாணிப் பொட்டலங்களை சப்ளை செய்கிறது நாட்டை நீண்ட காலமாக தனது சொத்தாகக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருந்திருக்க வேண்டிய வைகோ, அரசியல் யதார்த்தங்களுடன் போராடி சோர்ந்து போய், தனது இமேஜை அடமானம் வைத்து ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து தனது நம்பகத்தையும் எதிர்காலத்தையும் நிரந்தரமாகத் தொலைத்துவிட்டார். அதனால் இப்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அரசியல் செய்வதற்கு அவரிடம் எந்த தார்மீக பலமும் எஞ்சியிருக்கவில்லை. எனினும் தனது தொண்டர்களையாவது தக்க வைத்துக்கொள்ள வைகோவுக்கு உணர்ச்சிகர உரைகள் உதவுகின்றன. கண்களைத் துடைத்துக்கொள்ள நீளமான வஸ்திரம் இரண்டு தோள்களிலும் தொங்கிக்கொண்டிருக்கிறது, வைகோவுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும்.

இனிமேல், ஒரு சர்வாதிகாரி அல்லாத, குடும்ப அரசியல் செய்யாத, ஜாதி-சினிமா அடையாளம் இல்லாத தலைவர் உருவாக முடியாது என்பது ஆபத்தான போக்கு. தனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை தன் கண் எதிரிலேயே அடியாட்களை அனுப்பி ரத்தம் சொட்டச் சொட்ட காட்டுமிராண்டித்தனமாகத் தாக்க வைத்தவருக்குத்தான் இது காலம் என்றால் அந்தக் காலம் ஊழிக் காலமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஜெயலலிதா செய்துவிட்ட சேதங்களையே இப்போதுதான் இந்த மாநிலம் கடந்து வருகிறது. மொழி, இனம், ஜாதி என பன்முகங்களைக் கொண்ட ஒரு சர்வாதிகாரி, தூய்மைவாதியின் கரங்கள் மேலும் மேலும் பலம் பெறுவதை இந்த மாநிலம் தாங்காது.

இப்போது தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி வைகோ தான் இதுவரை செய்யாத பல காரியங்களை இனிச் செய்யலாம். கட்சியில் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளலாம். தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வரலாம். வைகோ இனி அரசியலில் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஏனெனில் அவர் ஏற்கனவே தனது மிக மோசமான தாழ்வுகளைக் கடந்துவிட்டார். பொடா சிறைவாசத்திற்குப் பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததுடன், அதன் பிறகு ஜெயலலிதாவின் பியூன் போல செயல்பட்டதுடன் வைகோவை நாம் எதற்காகவெல்லாம் புகழ்ந்தோமோ அதையெல்லாம் அவர் இழந்துவிட்டார். இப்போதிருக்கும் வைகோ முழுச் சுதந்திரங்களும் கொண்டவர். இனி அவர் எதைச் செய்தாலும் அதை யாரும் பெரிதாகக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர் தான் இழந்ததை மீட்க முயல்வதற்கான வாய்ப்புகள் அருகி வருகின்றன.

வைகோ ஜெயலலிதாவுடன் பொடா கைதுக்குப் பிறகு கூட்டணி வைத்ததைக்கூட அரசியல் வியூகம், கணக்கு, யதார்த்தம் என்றெல்லாம் சமாதானம் கூறிக்கொள்ள முடிகிறது. ஆனால் அந்த உறவை வலுப்படுத்திக்கொள்வதற்காக தன்னைப் பெற்ற தாயை, தனது கைதால் வேதனையின் உச்சத்திற்குச் சென்றவரை ஜெயலலிதாவுக்கு விருந்தளிக்கச் செய்ததை இன்றுகூட ஜீரணிக்க முடியவில்லை. தனது மகன் நியாயமற்ற முறையில் 19 மாதங்கள் சிறையிலிருந்த போது, பல நீதிமன்றங்களுக்கிடையில் அலைக்கழிக்கப்பட்ட போது, இந்த விசுவாசத்தின் பரிசாக தனது மகன் மீண்டும் ஒரு முறை அவமானப்பட்டு நிற்பதை அறியும்போது அந்தத் தாய் அடைந்திருக்கக்கூடிய, அடையக்கூடிய துன்பம், வேதனை, ஆற்றாமை, போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கும் தனது கணவனைப் பற்றி பயிரவியிடம் அரற்றிய அந்த பரணி பாடப்பட்ட காலத்து மனைவியின் சோகத்திற்குக் குறைந்ததல்ல. இங்கு அரசியல் போர்க் களத்தில் வீழ்ந்து கிடப்பது வைகோவின் தன்மானம், நம்பகத்தன்மை, தார்மீக பலம்; கூடவே ஒரு தாய் தன் மகன் மீது வைத்திருந்த அயராத நம்பிக்கை.

maya.flowerpower@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com