|
ஐந்து மணிக்கு கூட்டம் என்று அழைப்பிதழில் போட்டிருக்கும். போய்ப் பார்த்தால் நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடக்கும். நடுவில் நாலு பேர் மட்டும் அமர்ந்து, யாரிடமும் பேசாமல் லௌகீகக் கவலைகளை மனதுக்குள் ஓடவிட்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறரை, ஏழு போல கூட்டம் சேர ஆரம்பிக்கும். கூட்டம் என்றால் நாலு பதினாலு ஆகியிருக்கும். அவ்வளவுதான். பிறகு மேடையில் பதின்மூன்று பேர் அமர்வார்கள். நூலாசிரியர் நெகிழ்ந்து கரைந்து போகிற வகையில் புகழுரைகள் இருக்கும். இது நடுத்தர இலக்கியக் கூட்டத்துக்கு. சீரியஸ் இலக்கியக் கூட்டம் என்றால் கிழித்து நாராக்கி விடுவார்கள். பிறகு வானம் கறுக்கும் நேரத்தில் கூட்டம் முடியும். மனம் சோர்ந்து வீடு திரும்ப வேண்டும்.
சென்னையில் நடக்கும் இப்படியான பெரும்பான்மை இலக்கியக் கூட்டங்களில் கலந்து வதங்கிய இந்த வறண்ட ஜீவனுக்கு, கடந்த வாரம் வானத்து தேவதைகள் வலம் வந்து வர்ஷித்த குதூகலமும் கொண்டாட்டமும் மிகுந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
தி பார்க் ஓட்டலில் 'பிளாஃப்ட்' பதிப்பகத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா. மும்பையின் பாலிவுட் பார்ட்டிகளை மிஞ்சும் வகையில் ஓர் இலக்கிய நிகழ்வு. உலகளாவிய ஆங்கில வாசகப் பரப்புக்குள் தமிழ்ப் படைப்புகளை கொண்டுசெல்லும் சீரிய முயற்சியில் இறங்கியுள்ள நிறுவனம் 'பிளாஃப்ட்'. அமெரிக்கத் தாய்க்கும் டில்லித் தந்தைக்கும் பிறந்த ராகேஷ்குமார் கன்னாதான் பதிப்பக நிறுவனர். பெர்க்லியில் படித்தவர். கணிதம் பயில்வதற்காக 1998ல் சென்னை ஐஐடி வந்து சென்னைவாசியாகவே மாறியவர். ஐஐடி தினங்களின்போது இந்திய இசையும் தமிழ்ப் படைப்புகளும் ராகேஷுக்கு ஆதர்சங்களாக மாறிப் போய்விட்டன. குறிப்பாக பெட்டிக் கடைகளில் தொங்கும் பாக்கெட் நாவல்கள் அவர் ஆவலை வெகுவாகவே தூண்டியது. 'பல்ப்' படைப்புகளை வெளியிடும் ஆர்வம் ராகேஷுக்கு இங்கிருந்துதான் தொற்றியது. கணித வல்லுநர் பதிப்பாளராக மாறிய வரலாறு இதுதான்.
முதல்கட்டமாக தமிழ்ப் படைப்பாளிகளின் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளது 'பிளாஃப்ட்'. வணிக இதழ்களில் பரபரப்பாய் எழுதும் பிரபல எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெற்ற தொகுப்பு (The Blaft anthology of Tamil Pulp Fiction) ஒரு புத்தகம். தமிழ்வாணன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணி சந்திரன், வித்யா சுப்பிரமணியன், இந்திரா சௌந்திரராஜன் உள்ளிட்டோரின் 'பல்ப்' படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
முதல் புத்தகம் வெகுசன தளத்தில் இருந்துவிட்டதால் அடுத்த புத்தகம் இலக்கிய கனத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக சாரு நிவேதிதாவின் பிரபல படைப்பான 'ஜீரோ டிகிரி' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். கவித்துவம், தந்தை-மகள் உணர்ச்சிக் குவியல், செக்ஸ், செறிவான இலக்கியத் தரம் என எல்லாம் கலந்த சாருவின் வரம்பு கடந்த ஆக்கமான ஜீரோ டிகிரி மேற்குலகில் வரவேற்பைப் பெறும் என பதிப்பாளர் நம்புகிறார். ஜீரோ டிகிரியையும் பல்ப் படைப்புகளையும் மொழிபெயர்த்தது ப்ரீத்தம் சக்ரவர்த்தியும் பதிப்பாளர் ராகேஷ§ம்தான்.
மூன்றாவது, ஓவியர் நடேஷின் கோட்டோவியங்களின் தொகுப்பு. உயிர்த் துடிப்பும் உக்கிரமும் வன்மமும் மிகுந்த நடேஷின் கோடுகள் யாரையும் பார்த்த மாத்திரத்தில் ஆக்கிரமித்துக்கொள்பவை. இத் தொகுப்பின் தலைப்பு When this Key sketch gets real tongue is fork hen is cock when this key sketch gets real my baby eagle's dream comes true.
மேடையென்று எதுவுமில்லை அந்த இடத்தில் ஒரு டீக்கடை. பாய்லர் புகைவிட, வாழைத்தார் தொங்க, பாட்டில்களில் முறுக்கு, மிட்டாய் நிறைந்திருக்க, முன்புறம் மரபெஞ்ச் வீற்றிருக்க அச்சு அசல் ரோட்டோர டீக்கடையை பார்க் ஓட்டலுக்குள் கொண்டுவந்திருந்தனர். முன்வரிசையில் உட்கார்ந்திருந்த பார்த்திபன் இந்த 'செட்'டை வைத்த கண் வாங்காமல் பார்த்த படி, தன் அருகில் அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனிடம் 'ம்ம் . . . இதையெல்லாம் இப்ப நான் விட்டுட்டேன். இவங்க ஆரம்பிச்சட்டாங்க' என்று சொல்லிக்கொண்டிருந்ததை பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
உடனே ஒரு நாடகம் ஆரம்பமானது. டீக்கடைக்கு வருகிறார் ஒரு லுங்கி ஆசாமி. ஏற்கெனவே டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார் ஓர் அழகிய யுவதி. இவர்கள் உரையாடலுக்கு உம் கொட்டிக் கொண்டிருக்கும் டீக்கடைக்காரர். டீக்கடையில் தொங்கும் பல்ப் படைப்பின் ஆங்கில நூலை (!) எடுத்து ஒரு கதையை உணர்ச்சி பொங்கப் படிக்கிறார் லுங்கி. தமிழில் தொடங்கிய நாடகம் இங்கிலீஷில் பிய்த்து உதறப்பட்டுக் கொண்டிருந்தது.
சாரு, நடேஷின் புத்தக அறிமுகம் சிறு திரையிடலாகக் காட்டப்பட்டது. 'ஜீரோ டிகிரி'யின் அதிர்வூட்டும் பக்கங்களை குளோசப்பில் உள்ள உதடுகள் படிக்கும் காட்சி. வெண்தாடி சக்ரவர்த்தியின் உதடு ஒன்று. கறுஞ்சாயம் பூசிய ப்ரீதத்தின் உதடு ஒன்று. மேலும் இரண்டு உதடுகளும் தேவைப்பட்டிருக்கிறது. அதையும் அவர்களே பேசிவிட்டார்கள். வேறு யாரையாவது போட்டிருக்கலாம். நயன் . . . த்ரிஷா. வேண்டாம் அதிகமான உரிமை கோரல் கூடாது.
தன் ஓவியங்கள் குறித்து நடேஷ் வீடியோவில் தோள் குலுங்கக் குலுங்க பேசினார். நடேஷின் கோடுகளைப் போலவே அவரது உடல் மொழியும் விசித்திரமும் வேடிக்கையும் கொண்ட ஒரு புனைவாக காட்சியளித்தது.
ஜீரோ டிகிரி நாவலை ந. முத்துசாமி வெளியிட மனுஷ்ய புத்திரன் பெற்றுக்கொண்டார். பிறகு நூலாசிரியர்கள் எல்லோரையும் ப்ரீத்தம் அறிமுகப்படுத்தினார். பல்ப் ஆசிரியர்கள் எல்லோரும் சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். ரமணி சந்திரனைப் பார்த்து வந்த பார்வையாளரின் ஒரு கேள்வி வித்தியாசமானது. 'உங்களின் ஆண் கதாபாத்திர பெயர்கள் எல்லாம் 'ன்' என்றே முடிகிறது. திட்டமிட்டுச் செய்கிறீர்களா?' நுணுக்கமான வாசகராக இருக்கும்.
எந்த அலுப்பூட்டலும் இல்லாமல் சொற்ப நேரத்தில் வெளியீடு முடிந்தபின் கோலாகலங்கள் தொடங்கின. கைகளில் மதுக் கிண்ணங்களுடன் வசீகர உடைகளில் பெண்களும், ஆண்களும் வலம் வர, பச்சை வர்ண லேசர் ஒளிக் கற்றைகள் பளீரிட்டுக்கொண்டிருக்க குதூகலமான தமிழ் சினிமா பாடல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. அதற்கு உற்சாகமாக பலரும் நடனமாடினர். வழக்கம் போல ஆண் ரசிகர்களுக்கு அரை நிமிடக் குறுஞ்சிரிப்பும் பெண் ரசிகைகளுக்கு அரை மணி நேரப் பேச்சுமாக களைகட்டிக் கொண்டிருந்தார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.
கவுதம் மேனன், பார்த்திபன் என சினிமா பிரபலங்களும் டிசைனர் பிரபலங்களும் தியேட்டர் பிரபலங்களுமாக ஜெகஜ்ஜோதியாக இருந்தது கூட்டம்.
இரவு ஒன்பது மணிக்கு மேல் மத்திம போதையுடன் இறங்கி வந்த எனக்கு, அடுத்த வாரம் எல்எல்ஏ பில்டிங்கில் ஓர் இலக்கிய கூட்டம் இருக்கிறதே என்று நினைவு வந்தது. போதை இறங்கிக்கொண்டிருந்தது.
பார்கவி மைந்தன்
|