உயிரோசை - 05/01/2009
 
பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம்
- மாயா
அண்ணாத்துரையும் ஹிட்லரும்
- தமிழவன்
திருப்பாவை சொல்வது என்ன?
- இந்திரா பார்த்தசாரதி
தொட்டு விலகும் தீவுகள்
- ஆர்.அபிலாஷ்
மொளனத்தின் உறை பனி
- வாஸந்தி
பெட்ரோல் அரசியல்
- செல்லமுத்து குப்புசாமி
மாணிக்கம் பக்கிரிசாமியின் வரலாற்றுச் சாட்சியம்
- இந்திரஜித்
இடைத்தேர்தல் என்னும் குதூகலம்
- அ.ராமசாமி
சினிமாவின் இரண்டாவது முகம்
- சுதேசமித்திரன்
கரைந்துபோகும் கணம்-ஆனந்தின் ‘உள்ளேயும் வெளியேயும்’
- பாவண்ணன்
ஏகே 47
- வா. மணிகண்டன்
பாலியல் பேச்சுகளும் மறுபேச்சுகளும்
- ந.முருகேச பாண்டியன்
இருளில் மித‌க்கும் வெயிலின் துக‌ள்க‌ளை
- லாவண்யா
'போல்'களின்றி...
- செல்வராஜ் ஜெகதீசன்
நான் ரௌத்திரன்
- மதன்
நாம் வாழும் வீடு
- கார்த்திக் பிரபு
பட்டியல்
- ஸ்ரீமதி
சிறுநீர் கழித்தல் - சில குறிப்புகள்
- ஜெயபிரகாஷ் வேல்
என் பிரச்சினை எனக்கு
- வா.மணிகண்டன்.
காமெடி... கீமெடி..!
- தமிழ்மகன்
கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்:வட்டார வழக்கில் குணச் சித்திரச் சொற்றொடர்கள்
- கழனியூரன்
நம்பிக்கையின் வெளிச்சம்
- பாபுஜி
இடைத்தேர்தல்
- பாபுஜி
தெக்கத்தி சொலவடைகள் செவக்காட்டுப் பழமொழிகள்
- தொகுப்பு: கழனியூரன்
ஹைக்கூ வரிசை
- பாப் போல்டுமான்
அ.மார்க்ஸ். தி.க.சிக்கு எழுதியது
- -
click here
பெட்ரோல் அரசியல்
செல்லமுத்து குப்புசாமி

என் நண்பர் ஒருவர் கார் வாங்கி மூன்று மாதமே ஆகிறது. சாம்பல் நிற கார். இந்த மூன்று மாத காலத்தில் குறிப்பிட்ட நிறமுடைய அந்த மாடல் வாகனம் சாலையில் அதிகமாகத் தென்படுவதாகச் சொன்னார். ஒரு சங்கதியை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்து விட்டால் அது நமது கண்ணில் அடிக்கடி தென்படுவது இயல்பு. நம்முடைய தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு பார்க்கும் பெண்ணெல்லாம் காதலியைப் போலவே தெரியுமே அப்படி! அதே போல இன்னொரு விசயத்தையும் நண்பர் கூர்ந்து நொக்கி வருகிறார். புள்ளி விவரத்தோடு அந்த விசயத்தைப் பற்றி அவர் கேட்கும் கேள்வி சிந்தனையைத் தூண்டுவதாகவே இருக்கும். அந்த வினா கிட்டத்தட்ட எல்லோர் மனதிலும் எழுகிறது.
 
சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெயில் விலை ஒரு பீப்பாய்க்கு 147 டாலரில் இருந்து வெறும் 45 டாலராகக் குறைந்திருக்கிறது. இருப்பினும் நமது அரசாங்கம் பெட்ரோல் விலையை வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது. இது எவ்வகையில் நியாயம்? பொருளாதார மேதை எனக் கொண்டாடப்படும் மன்மோகன் சிங் நிர்வாகம் மக்களை ஏன் தான் இப்படி வாட்டி வதைக்கிறதோ? - இந்தக் கேள்விகளைக் கேட்க நண்பரைப் போல புதிய கார் வாங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தினசரி செய்திகளை அவதானித்து வந்தாலே போதும்.
 
மிக நியாயமான கேள்விகள் இவை. சமீபத்தில் பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் குறைத்து அறிவிப்பு விட்டுள்ளது அரசாங்கம். அப்போதும் கூட எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 9.89 இலாபம் ஈட்டுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அப்படி உள்ள நிலையில் எரிபொருள் விலையை மேலும் குறைத்தால் என்ன என்ற கேள்வி திருவாளர் வெகுஜனத்திற்குத் தோன்றுவது இயல்பு. மேலோட்டமாகக் காட்சியளிக்கும் இந்தத் தகவல்களை விட உள்ளார்ந்த பல உண்மைகள் இதில் புதைந்துள்ளன. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நியாயமானதாகவே நமக்குத் தோன்றினாலும், பாமரத்தனமானதுமான இந்தக் கேள்விகளை அணுகுவது சுலபமில்லை. சரியுமில்லை.
 
நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கு கனமான மானியம் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவை குறைத்து விற்கப்படுகின்றன. அதில் மண்ணெண்ணெய் குறிப்பாக ஏழை மக்களால் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயு கூட அப்படித்தான். டீசலைப் பொறுத்த வரை சற்று ஆறுதல். தேசத்தின் இயக்கம் டீசல் வாயிலாகவே நடக்கிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை விளையும் இடத்தில் இருந்து சந்தைக்குக் கொண்டு வர டீசல் லாரிகள் வெகுவாகப் பயன்படுகிறன. ஆகையினால் டீசலின் விலை சரக்குப் பரிமாற்றத்தின் செலவை நேரடியாகக் கூட்டுகிறது. அப்படி நடக்குமானால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும். எனவேதான் டீசல் எப்போதுமே குறைத்து விற்கப்பட்டு வருகிறது.
 
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் பெட்ரோலை ஆடம்பரத்திற்கான நுகர்பொருளாக நாம் கருத வேண்டியிருக்கிறது. காரிலும், இரு சக்கர வாகனத்திலும் சுற்றுவது தவிர்க்க முடியாது என்றாலும் கூட தணித்துக்கொள்ளக் கூடியதே என்பது உண்மை. குறிப்பாக கார் வைத்திருக்கும் நபர்கள் பெட்ரோல் நிரப்புமளவு வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். டீசல் அதிலிருந்து மாறுபட்டது. தற்போது கச்சா எண்ணெயின் விலை வெகுவாகக் குறைந்த பிறகு தான் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் டீசலில் ஒரு ரூபாயும், மூன்று காசும் ஈட்டுகின்றன என்ற செய்தியே டீசல் எந்த அளவிற்கு தள்ளுபடி விலைக்குத் தரப்படுகிறது என்பதற்குச் சான்று. எந்த நோக்கத்திற்காக டீசல் மானிய விற்கப்படுகிறதோ அந்த நோக்கத்தைக் கேலி செய்வது போல டீசல் கார்கள் சாலையில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
 
கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் நிலவிய ஜூலை மாத நிலவரத்தை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மானியம் அளிக்காலம் சர்வதேசச் சந்தையில் நிலவும் விலையை நமது வாடிக்கையாளர்கள் அப்படியே கொடுப்பதாக இருந்தால் பெட்ரோலுக்கு ஒரு லிட்டர் ரூ67, டீசலுக்கு ரூ63, மண்ணெண்ணெய்க்கு ரூ45, சமையல் எரிவாயுவுக்கு ரூ648 என விலை நிர்ணயம் ஆகியிருக்கும். அப்போதெல்லாம் நமக்கு உதிக்காத கேள்வி இப்போது மட்டும் பீறிட்டுக்கொண்டு வருவது வேடிக்கை.  உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதற்கு இணையாக உள்நாட்டு சில்லரை விலையைக் கூட்ட வேண்டும் என்ற குரல் அப்போது கேட்கவில்லை. இந்தியன் ஆயில் நிறுவனம் தினம் ஒன்றுக்கும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பைச் சந்தித்த நாட்கள் நூற்றுக் கணக்கில் உண்டு. அப்போதெல்லாம் ஓரிரு ரூபாய்கள் பெட்ரோல் விலையை உயர்த்தினாலே கண்டனக் குரல்கள் எல்லாத் திசைகளிலும் இருந்து உரக்க ஒலிக்கும்.
 
இந்த இடத்திலே தான் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கு உள்ள வேறுபாடு புலனாகிறது. கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்த போதும் அதற்குத் தக சில்லரை விலை உயராத தருணத்தில் ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டுக்குத் தான் ஏற்றுமதி செய்தனவே ஒழிய அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு உள்நாட்டில் விற்கவில்லை. அவை மறுபடியும் இப்போதுதான் கடை திறந்துள்ளன. அதிலிருந்தே அரசு நிறுவனங்கள் எவ்வளவு இழப்பைச் சுமந்தன என்பது புலனாகும். கச்சா எண்ணெய் உலக அரங்கில் மலிவாக மாறிய நிலையில், பெட்ரோல் மூலம் இலாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் இப்போதும் கூட முழுமையாக நட்டத்தில் இருந்து மீளவில்லை. பெட்ரோலில் ஈட்டும் இலாபம் மற்ற பொருட்களை மலிவாகக் கொடுப்பதில் கரைந்து போகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை கம்பெனிகளின் இந்த நிதியாண்டுக்கான ஒட்டு மொத்த நட்டம் ரூ 1,14,500 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
 
பெட்ரோல் விலை மேலும் குறையுமா என்ற ஐயம் ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்வது அவசியம். எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் விலையை அதன் உற்பத்தியும், கிராக்கியும், அவை இரண்டுக்குமான இடைவெளியுமே தீர்மானிக்கின்றன. கச்சா எண்ணெயும் இந்தப் பொது விதியில் இருந்து விலக்குப் பெற்றதல்ல. எனினும் கடந்த காலத் தகவல்களைப் பகுத்து நோக்கும் போது உலகெங்கும் நிலவிய எண்ணெய் கிராக்கி மட்டுமே அதன் அசாத்திய விலையேற்றத்திற்குக் காரணமல்ல என்பது புலப்படுகிறது. 
 
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் வியாபாரம் எப்போதுமே அமெரிக்க டாலரில் நடந்து வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதார அரங்கில் Fully convertible என்று சொல்லப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மட்டுமே விளங்கியது. அதாவது உலகத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் டாலரைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர் என்ற கணக்கு. உலகத் தங்கக் கையிருப்பில் பெருமளவு அமெரிக்கா வசமிருந்தது. டாலர் கரன்சி as good as gold ஆகக் கருதப்பட்டது. சர்வதேச வர்த்தகம் தங்கத்தின் மூலமாக அல்லது தங்கத்திற்கு நிகரான டாலரின் மூலமாக நடந்தேறியது.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உண்டாக்கிய Bretton Woods சிஸ்டம் எனப்படும் இந்த ஏற்பாட்டை 1970 களின் தொடக்கத்தில் அமெரிக்கா குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டது. இனிமேல் டாலருக்குப் பதிலாக தங்கம் தர இயலாது என்ற அதிர்ச்சியை அதிபர் நிக்சன் உலகுக்குத் தந்தார். அது வரைக்கும் எண்ணெய்க்குப் பதிலாக டாலரைப் பெற்று வந்த அரபு நாடுகள் இனிமேல் தங்கமாக வேண்டும் என நிர்பந்தித்தன. கூடவே சிரியா, எகிப்துக்கு எதிரான 1973 போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கியதன் விளைவாக அரபு நாடுகள் இனிமேல் அமெரிக்காவுக்கு எண்ணெய் விற்பதில்லை என்று தடை போட்டன. ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக ஈரானில் வெடித்த புரட்சியினால் 1979 இல் மேற்கு நாடுகளுக்கு இரண்டாவது எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
 
எண்ணெய்த் தட்டுப்பாடு என்றால் அநியாய விலை என்றும் அர்த்தம் கொள்ளலாம். 1979-1980 சமயத்தில் கச்சா எண்ணெய் அதிக பட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலரை எட்டியது. அது பரந்துபட்ட பொருளாதாரத் தேக்க நிலையை உண்டாக்கியது. அதன் விளைவாக தொழில்களும், தொழில் துறை சரிவின் காரணமாக எண்ணெயின் கிராக்கி மந்தமானது. கிராக்கி குறைந்ததனால் விலையும் சரிந்தது. 1986 இல் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை வெறும் பத்து டாலருக்கு இறங்கி வந்தது. அப்போதிலிருந்து 2003 வரை ஒரு சில புறக்கணிக்கத் தக்க சிறு ஏற்ற இறக்கங்கள் தவிர கச்சா எண்ணெய் சீரான அளவிலேயே நிலவி வந்தது.
 
அந்த ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த போது உலகைப் பிடித்தது சனி. 2002 துவக்கத்தில் ஒரு பீப்பாய் வெறும் 20 டாலர் என்ற அளவிலிருந்து 2003 இல்  31 டாலர் ஆனது. சிறிது சிறிதாக வேகமெடுத்த விலை 2007 ஜனவரியில் 50 டாலரையும், 2008 ஜூலையில் 147 டாலரையும் தொட்டு உலகையே ஆட்டி வைத்தது. 2003 முதல் 2008 வரை உலகப் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்தது. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் வெகு வேகமாக வளந்தன. பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும் போது எண்ணெய் தேவை கூடுவது இயல்பு. ஆனால் அது மட்டுமே 18 மாதங்களில் மூன்று மடங்காக கச்சா எண்ணெயில் விலையை உயர்த்தியதா என்று ஆராய வேண்டி வருகிறது.
 
நீடித்திருக்கும் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு, அவ்வப்போது அமெரிக்காவின் எண்ணெய் நிலைகள் மீது வீசும் சூறாவளிகள் என்று காரணங்கள் சொன்னாலும் அவையெல்லாம் அபாரமான விலையேற்றத்தை நியாப்படுத்துவதாக இல்லை. தேவை கூடியதென்று பொதுப்படையான நியாப்படுத்துதல்கள் இருப்பினும் அந்தத் தேவை எந்த அளவில் கூடியது என்பதை ஆராயாமல் வெளிப்படுத்தும் எவ்விதக் கருத்தும் முழுமையாக இருக்காது. இந்தியா, சீனா முதலிய நாடுகளின் எரிபொருள் தேவை கூடியது உண்மை என்றாலும் கூட இந்தியாவெல்லாம் உலக எண்ணெய் செலவழிப்புப் ப்பட்டியலில் மிகவும் கீழே உள்ள ஒரு தேசம். உலக எரிபொருள் தேவையின் கால் பங்கு அமெரிக்காவில் இருந்து எழுகிறது. அப்படி இருக்கும் போது சிறு அளவில் செலவிடும் இந்தியராகிய நமது 6 விழுக்காடு என்ற கணக்கில் அதிகரித்த தேவையானது உலக அரங்கில் பெரும் பாதிப்பை உண்டாக்கவில்லை என்றே கூறலாம்.
 
தேவை வெகுவாகக் கூடவில்லை என்றால் சரி. இன்னொரு பக்கம் உற்பத்தி அடி வாங்கியதால் விலை கண் மூடித்தனமாக உயர்ந்ததா என நோக்கினால் அதுவும் கிடையாது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு OPEC (Organization of Petroleum Exporting Countries) 2006, 2007 மற்றும் 2008 இன் முதல் காலாண்டில் சராசரியாக 31.43, 30.97 மற்றும் 32.075 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்தது. இந்த நாடுகள் உலகின் பாதி எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வன ஆகும். அதே போல இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பிற நாடுகளின் உற்பத்தி 2006 இல் நாளொன்றுக்கு 48.88 மில்லியன் பீப்பாயில் இருந்து 2008 இன் முதல் காலாண்டில் 49.74 மில்லியன் பீப்பாயாக உயர்ந்தது.
 
தேவைக்கும், உற்பத்திக்குமான இந்தச் சமன்பாடு பெருமளவு சீராகவே இருந்த போதிலும் 2007 தொடக்கம் முதல் 2008 மத்தி வரை கச்சா எண்ணெய் மூன்று மடங்காக உயரக் காரணம் என்ன? எண்ணெயின் விலையை டாலரில் குறிக்கிறோம் என்பதால், அந்த டாலரில் மதிப்பு குறைந்தால் கூட எண்ணெயின் விலை கூடும். ஓரளவிற்கு அது சரிதான். நாம் கூட உணர்ந்திருந்தோம். ஒரு டாலர் = 40 ரூபாய் என டாலரோடு ஒப்பிடுகையில் வலுவாக இருந்தது இந்திய ரூபாய். இப்போது ஒரு டாலர் சுமார் 50 ரூபாய் என ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு மறுபடியும் ஏறியுள்ளது. நம் விவாதம் அதுவல்ல.
 
ஏற்றுமதியை விடக் கூடுதலாக இறக்குமதி செய்கிற அமெரிக்காவின் டாலர் மதிப்பு உலக நாணயச் சந்தையில் சரிந்ததை மறுப்பதற்கில்லை. சில மாதங்கள் முன்பு வரை யாரும் டாலரை நாடவில்லை. கச்சா எண்ணெயில் விலை அந்த டாலரில் குறிக்கப்படுகிறது என்பதால் விலை ஓரளவு அதிகரிக்க இது ஒரு காரணம். மலிவான கடன்கள் மூலம் உலகப் பொருளாதாரம் இன்னொரு பக்கம் வளந்ததால் எண்ணெயின் தேவை ஓரளவு கூடியதும் ஒரு காரணம். இப்படியாக கச்சா எண்ணெய் விலையின் மேல் நோக்கிய பயணம் தொடங்கியது. வெறும் தொடக்கத்தை நீண்ட பிரயாணமாக மாற்றியது ஹெட்ஜ் ஃபண்ட் என்ற பிரத்யேக நிதித் திட்டங்களை நிர்வகிக்கும் பெரிய அமைப்புகள்.
 
ஒரு பொருளை தேவைக்காக வாங்குவது முதலீடு. மாறாக அந்தப் பொருளில் விலை ஏறும் என்ற நம்பிக்கையில் அதை தன் தேவைக்கு மீறி வாங்கித் தள்ளுவது ஊக வணிகம் அல்லது சூதாட்டம். அதை மட்டுமே செய்வதற்கு அவதரித்தவை இந்த ஹெட்ஜ் ஃப்ண்டுகள். 2004 இல் வெறும் 180 எரிபொருள் தொடர்பான ஹெட்ஜ் ஃபண்டுகள் இருந்தன. 2008 இல் அந்த எண்ணிக்கை 634 ஆக அதிகரித்ததை ஒரு புள்ளி விபரம் எடுத்துக் காட்டுகிறது. அவை மட்டுமல்லாமல் உலக அரங்கில் மிகப் பெரிய வங்கிகள் கூட டாலரில் மதிப்பு மேலும் சரியுமென்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய் ஊக வணிகத்தில் ஈடுபட்டன. 2003-2008 கால இடைவெளியில் எண்ணெய் பியூச்சர் (எதிர்காலத்தில் எண்ணெய் விலை என்னவாகும் என்று பந்தயம் கட்டுவது) வர்த்தகத்தின் மதிப்பு 20 மடங்கு பெருகியது. 2007 இல் மட்டும் 1.35 டிரில்லியன் டாலர் எண்ணெய் பியூச்சரில் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தின் அளவைக் காட்டிலும் அதிகம்.
 
அமெரிக்கா சேகரித்து வைத்திருந்த 700 மில்லியன் பீப்பாயைப் போல உலகின் எல்லா நாடுகளும் பதுக்கலில் ஈடுபட்டதும் கூட சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெயின் விலையேற்றத்திற்கு ஒரு வகையில் காரணம். எனினும் ஊக வணிகமே முதன்மையான காரணம் எனப் புரிந்து கொள்வது மிக எளிது. நல்ல வேளையாக அமெரிக்க நிதி நிறுவனங்களின் உருக்குலைவினால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் கச்சா எண்ணெய்க்கான தேவையை வெகுவாகக் குறைத்துள்ளது. அதை விட முக்கியமான ஒரு விஷயம், அது ஊக வணிகத்தையும் குறைத்துள்ளது என்பதே. சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 250 டாலர் செல்லும் என்று ஆரூடம் சொன்ன அதே வல்லுனர் சமூகம் இப்போது 45 டாலராக விலை இருக்கிற நேரத்தில், 25-30 டாலராகக் குறையும் என்று குறி சொல்லுகின்றது.
 
ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கூட்டமைப்பு OPEC அலறிக் கொண்டிருக்கிறது. விலை சரியாமல் இருப்பதற்காக உற்பத்தியைக் குறைக்கும் நடவடிக்கையில் அவை இறங்கியுள்ளன. OPEC இல் அங்கம் வகிக்காத ரஷ்யா போன்ற மிகப் பெரிய எண்ணெய் வளம் படைத்த நாடுகளுக்கும் கூட இது மோசமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவைப் போன்ற நிகர எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. நமது மிகப் பெரிய இறக்குமதியே கச்சா எண்ணெய் தான்.
 
நிலைமை இதே போல நீடித்தால் இன்னொரு பெட்ரோல் விலைக் குறைப்பு நமக்காகக் காத்திருக்கிறது இந்தியாவில். இன்னொரு விலைக் குறைப்பு மட்டுமல்ல. அரசுத் தலையீடின்று எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யும் முறை கூட மீண்டும் வரக் கூடும் என்று செய்திகள் உலவுகின்றன. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த 2002 இல் இரண்டு வாரத்துக்கு ஒரு தரம் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2004 இல் பீப்பாய் 37 டாலராக உயர்ந்த போதுதான் விலைக் கட்டுப்பாட்டை மறுபடியும் அரசாங்கமே எடுத்துக் கொண்டது.
 
எல்லாக் கணிப்புகளும் சரியாக அமைந்தால் அது 2009 பிஃப்ரவரியில் அமலுக்கு வரும் என்று கணிக்கப்படுகிறது. சர்வதேச நெருக்கடியில் இருந்து நம்மைக் காத்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனித்தபடி அது வரைக்கும் காத்திருப்போம். உலகப் பொருளாதாரம் அந்தர் பல்டி அடிக்காமல் போயிருந்தால் நமது அரசாங்கம் முக்காமல் முனகாமல் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் ரூ 2,45,000 கோடி ஒதுக்கியிருக்கும். நாமும் மூச்சு விடாமல் பைக் ஓட்டிக் கொண்டிருந்திருப்போம். அதற்காகவும் காத்திருப்போம்.

click here

click here
click here