உயிர்மை - ஏப்ரல்
 
இருண்ட காலக் குறிப்புகள்
- மனுஷ்ய புத்திரன்
தீர்ப்பை நோக்கி காத்திருந்த மக்கள்!
- தீபச்செல்வன்
போர்க்குற்றமும் இந்திய அரசியலும்
- மாயா
சச்சினும் திராவிடும் ஒரே படகில்: மேதையும் நடைமுறைவாதியும்
- ஆர்.அபிலாஷ்
பறவைக் கோணம் 7: கண்டதைச் சொல்லுகிறேன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
அபாயத்தை தேடுவோர்
- அ.முத்துலிங்கம்
தமிழ்த்திரையில் காட்டுயிர்
- சு.தியடோர் பாஸ்கரன்
துரோகிகளின் காலம்
- பா.செயப்பிரகாசம்
சொல்லப்பட்டதும் சொல்லப்படாததுமான ஒரு கதை:எதிரிகள் இல்லாத போர்க்களம்
- அ.முத்துக்கிருஷ்ணன்
இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்
- யமுனா ராஜேந்திரன்
புலப்படாத பறவை
- எஸ்.ராமகிருஷ்ணன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- -
கவிதைகள்
- -
இசை எரிக்காத தீ...
- அனார்
காலநதியின் சகபயணிகள்
- சுப்ரபாரதிமணியன்
கடிதங்கள்
- -
click here
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
-

இந்தக் கோடையின் கைகள்

இந்தக் கோடையின் முகத்தில்
புன்னகையில்லை
அதன் உதடுகளில் ஈரமில்லை
அதன் கண்களில் பரிவு இல்லை
அது தன்னோடு
பரிசுகள் எதையும் கொண்டு வரவில்லை
சுவர்களில் தீட்டுவதற்கு
அதனிடம் வண்ணங்கள் இல்லை
பூப்பதற்கும் உதிர்வதற்கும்
இந்த முறை அதனிடம்
ஒரு காகித மலர்கூட இல்லை

நான் அதன் கைகளை
அவ்வளவு தயக்கத்துடன் தொடுகிறேன்
ஒரு கோடையின் கைகள்
இவ்வளவு குளிர்ந்துபோகக்கூடும் என
நான் நினைத்ததே இல்லை

தனிமை என்று எதும் இல்லை

இறப்பது அவ்வளவு
தனிமையானது என்றார்கள்
நான் இறக்கும்
இந்தக் கணம்
அப்படி இருக்கவேயில்லை
இந்த உலகில்
இக்கணம்
என்னோடு இறக்கும்
எண்ணற்ற மீன்கள்
எண்ணற்ற வண்ணத்துப்பூச்சிகள்
எண்ணற்ற கொசுக்கள்
எண்ணற்ற மண்புழுக்கள்
எண்ணற்ற நாய்க்குட்டிகள்
எண்ணற்ற பூனைகள்
எண்ணற்ற தவளைகள்
எண்ணற்ற காக்கைகள்
மேலும்
அதில் இருந்தார்கள்
எண்ணற்ற மனிதர்கள் பலரும்

நான் இந்த உலகைவிட்டுச்
செல்லும் இந்தக்கணத்தில்
பிரத்யேகமாய் எதுவுமே இல்லை
அது உண்மையில்
பெரிய ஊர்வலம் போல இருக்கிறது
நான் கொஞ்சம்
தனியாக இருக்க விரும்பியபோதும்
எங்கும் கொஞ்சமும் தனிமையில்லை

தூக்க கலக்கம்

அப்படி ஒரு  தூக்கம் வருகிறது
கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல்
எங்கே வேண்டுமானாலும் படுத்துவிடலாம் என்பதாய்
எந்தப் பாதுகாப்புணர்ச்சியுமற்று
தூங்குவதற்கான ஆடை மாற்றிக்கொள்ள முடியாமல்
அலாரம் ஏதும் வைக்க நேரமில்லாமல்
ஒரு தலையணைகூட தேவைப்படாமல்
கெட்ட கனவுகள்  காணும் உத்தேசங்களின்றி
தூக்கத்தில் எழுப்புபவர்களைப் பற்றி யோசனைகளின்றி
அப்படி ஒரு தூக்கம்
அப்படி ஒரு தூக்க கலக்கம்

இறப்பது என்பது
இவ்வளவு எளியதெனில்
நான்
இவ்வளவுதூரம் பயந்திருக்கவே மாட்டேன்

இன்னொரு நாளில்

கண்களில் ஒளியற்றவனை
புகைப்படம் எடுக்க மறுக்கிறான்
புகைப்படக் கலைஞன்

நீங்கள் மகிழ்ச்சியான
ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்
என்கிறான்
நான் மகிழ்ச்சியான நிறைய விஷயங்களை நினைக்கிறேன்
அவைதான் இப்போதைய
எனது எல்லா துயரங்களுக்கும் காரணம்
என்றபோதும்  நான் அதை நினைக்கிறேன்

எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும்
கண்கள்
எதையோ நினைத்துக்கொண்டிருக்கும்
கண்கள்
எங்கும் தரித்து நிற்காத
கண்கள் 
எப்போதோ வரையப்பட்டது போன்ற
கண்கள்
அவற்றைப் புகைப்படம் எடுக்கும்போது
அவை தன் கனவுகளில் வந்து
அச்சுறுத்துகின்றன என்கிறான்
 
நான் ஒரு நடிகனைப்போல
என் கண்களை மாற்ற முயல்கிறேன்
அது ஒரு துயரமான நடிகனின்
கண்களாகத்தான் மாறுகிறது
அல்லது ஒரு தோல்வியடைந்த
நடிகனின் கண்களாக

இறந்தவர்களைப் புகைப்படம்
எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை
ஆனால்
உயிருள்ள மனிதனின்
இறந்த கண்களைப் படம் எடுப்பது
ஒருபோதும் எளிதாக இல்லை
என்கிறான் வருத்தத்துடன்

உயிருள்ள போதே
மனிதர்கள் எவ்வாறு
இறந்த கண்களுடையவர்களாகிறார்கள்
என்பதை நான் ஒரு புகைப்படக்காரனுடன்
விவாதிக்க ஆயத்தமாகிறேன்.

உயிரில்லாத கண்கள்
பார்வையில்லாத கண்களைவிட
நம்மை மனமுடைய வைக்கின்றன
என்பது உங்களுக்குப் புரியவில்லை
என்று கேட்கிறான்
நான் இந்த சட்டையை மாற்றிக்கொள்ளட்டுமா
எனது ஒப்பனையை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக்கிக் கொள்ளட்டுமா
என்று கேட்கிறேன் கண்ணீருடன்

நாம் இந்தப் படம் எடுக்கும் அமர்வை
இன்னொரு நாளைக்கு மாற்றலாமா
என்கிறான் ஆயாசத்துடன்

நானும்
அவனைப்போல
அந்த இன்னொரு நாளில்
உயிருள்ள கண்களுடையவனாக மாறிவிடுவேன்
என்று நம்பவே விரும்புகிறேன்.


ஒரு பயணக் குறிப்பு

ஒரு நாள் சீக்கிரம்
கிளம்பி விடுகிறேன்
ஒரு நாள்
மிகவும் தாமதமாகி விடுகிறது
என்றேனும் ஒரு நாள்
நேரத்திற்குக் கிளம்பவே செய்கிறேன்
எப்படிக் கிளம்பினாலும்
எப்போதும்
பாதிவழியில்
இறங்கிப் போய்விடுவதில் மட்டும்
மாற்றமே இல்லை


நிம்மதி

எவ்வளவு நிம்மதியாக
உறங்குகிறாய்
என்றேன்.

நிம்மதியாக இருக்கத்தான்
உறங்குகிறேன்
என்றாள்.

புத்தாண்டு மழை

புத்தாண்டுக் காலையில்
மழை  பெய்கிறது

புத்தாண்டு தினத்தில்
மழை பெய்ததுதான்
இவ்வளவு மகிழ்ச்சிக்கும் காரணம் என்று
ஒவ்வொரு மகிழ்ச்சி தினத்திலும்
நான் நினைத்துக்கொள்ளும்படியாக

புத்தாண்டு தினத்தில்
மழைதானே பெய்தது
இருந்தும் ஏன்
இவ்வளவு துயரம் என
ஒவ்வொரு துயர தினத்திலும்
நான் நினைத்துக்கொள்ளும்படியாக

புத்தாண்டு நாள் முழுக்க
மழை பெய்கிறது

manushyaputhiran@gmail.com

click here

click here
click here