உயிர்மை - ஏப்ரல்
 
இருண்ட காலக் குறிப்புகள்
- மனுஷ்ய புத்திரன்
தீர்ப்பை நோக்கி காத்திருந்த மக்கள்!
- தீபச்செல்வன்
போர்க்குற்றமும் இந்திய அரசியலும்
- மாயா
சச்சினும் திராவிடும் ஒரே படகில்: மேதையும் நடைமுறைவாதியும்
- ஆர்.அபிலாஷ்
பறவைக் கோணம் 7: கண்டதைச் சொல்லுகிறேன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
அபாயத்தை தேடுவோர்
- அ.முத்துலிங்கம்
தமிழ்த்திரையில் காட்டுயிர்
- சு.தியடோர் பாஸ்கரன்
துரோகிகளின் காலம்
- பா.செயப்பிரகாசம்
சொல்லப்பட்டதும் சொல்லப்படாததுமான ஒரு கதை:எதிரிகள் இல்லாத போர்க்களம்
- அ.முத்துக்கிருஷ்ணன்
இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்
- யமுனா ராஜேந்திரன்
புலப்படாத பறவை
- எஸ்.ராமகிருஷ்ணன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- -
கவிதைகள்
- -
இசை எரிக்காத தீ...
- அனார்
காலநதியின் சகபயணிகள்
- சுப்ரபாரதிமணியன்
கடிதங்கள்
- -
click here
போர்க்குற்றமும் இந்திய அரசியலும்
மாயா

 

உடல் நைந்து, பார்வை ஒடுங்கி நரம்பு போல் காட்சியளிக்கும் அந்த ஊசி தேகத்தைப் பார்த்தால் 16,000 பேரைக் கொல்லக் காரணமான கம்போடியாவின் ஜெயிலர் என்று சொல்லவே முடியாது. இரண்டு பேர் தாங்கிப் பிடித்து கம்போடியாவின் அந்த முன்னாள் ஜெயிலரைப் போர்க் குற்ற தீர்ப்பாயத்தின் குற்றவாளிக் கூண்டில் தூக்கி நிறுத்துகிறார்கள். கொலைகளுக்கும், கொலைகளைவிட மோசமான சித்ரவதைகளுக்கும் உத்தரவு கொடுத்த தன்னைப் போலவே சிறையில் இருக்கும் கமேர் ரூஜ் எஜமானர்களை அம்பலப்படுத்தும் வாக்குமூலத்தைக் கொடுக்கும் டுக் என்று அழைக்கப்படும் அந்த ஜெயிலர் இன்று தட்டினால் செத்துவிடும் அளவுக்குப் பலவீனமாகக் காட்சி தருகிறான். ஆயுள் தண்டனை பெற்ற, தன்னைவிட 17 லட்சம் பேரை சித்ரவதை செய்து கொல்ல உத்தரவிட்ட போல்பாட்டின் சகாக்களுக்கு அதிக தண்டனை பெற்றுத் தரும் ஆதாரங்களை ஐ.நா.வின் ஆதரவு பெற்ற போர்க் குற்ற தீர்ப்பாயத்தில் டுக் முன்வைத்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில்தான் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துச் செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஆதரிப்பது பற்றிய எண்ணம் உதித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் விளம்பினார் பிரதமர் மன்மோகன்சிங். டுக்கைப் போல அரசியல் தளத்தில் பலவீனமாகக் காட்சியளிக்கும் மன்மோகன் சிங், கூன் விழுந்துவிட்ட தோற்றத்தில் குனிந்துகொண்டு எழுதி வைத்த அந்தப் பிடி கொடுக்காத அறிக்கையை வாசித்தார். Òஅமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்தை முழுமையாக வாசித்துவிட்டு, ஒரு வேளை அது தமிழர்களுக்கு உதவும் என்றால் அதை ஆதரிக்கத் தயார்.” தீக்குளிக்கத் தயார் என்ற கருணாநிதியின் வெற்று அறிக்கையைப் போலவே (தீக்குளிப்பு பூச்சாண்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அல்ல, வரலாற்றில் தன் பெயரைப் பதிக்க நினைக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக) இவ்வாறு பிடி கொடுக்காமல் பேசினாலும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடியாத அளவுக்கு இன்று மத்திய காங்கிரஸ் பலவீனமாகியிருக்கிறது. அவர்களை வழிக்குக் கொண்டு வரும் அளவுக்கு மாநிலக் கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறி வருகின்றன.

கடந்த ஒரு தசாப்தத்தில் கண்டிராத அரசியல் நோசானாக காங்கிரஸ் கட்சி மாறும் போதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சொட்டு நீதியாவது கிடைக்கச் செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் இறுதி நோக்கமான போர்க்குற்ற மேடையும் அதில் கமேரூஜின் கொடுங்கோலர்களைப்போல ராஜபக்சே சகோதரர்கள், பொன்சேகா உள் ளிட்ட ராணுவ அதிகாரிகளை நிறுத்த வேண்டும் என் றால், மாநிலக் கட்சிகள் சுயநல அரசியல் செய்யவிடாமல் ஈழ ஆதரவுக் குழுக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டின் அரசியலில் தேசிய சுயநலன் சார்ந்த காரியங்கள் நீதி பரிபாலனத்தையும் பெரிதும் பாதித்திருக்கிறது. அதனால் உள்நாட்டின் மாநில அரசியல் சக்திகளும் தங்கள் சுயநல அரசியலையே முன்னிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்பதால்தான் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பான கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. கமேர் ரூஜின் ஒரு காலத்துக் கொடுங்கோலர்கள் போல எலும்பும் தோலுமாக மாறும்போது தான் குற்றமிழைத்த தேசியத் தலைவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு உருவாகிறது என்பதால் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கு இலங்கைப் போர்க் குற்றவாளிகள் உள்நாட்டில் செல்வாக்கு இழக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய அரசியல் நிர்ப்பந்தங்களால்தான் இலங்கை அரசை அதன் சொந்த அறிக்கையை அமல்படுத்தச் செய்வதற்கே மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

காங்கிரஸை பிளாக்மெயில் செய்து, தமிழர்களுக்குச் சிறிய நல்லதையாவது செய்ய வைக்க இதைவிட பலவீனமான மத்திய அரசு இந்தியாவில் இருந்ததில்லை. தெற்காசியாவில் மூக்கை நுழைக்கும் முன்பு யாரைக் கேட்க வேண்டும் என்று மேற்கத்திய சக்திகள் கருதுமோ அந்த இந்தியா இன்று அடித்தளங்கள் ஆட்டம் காணும் லுட்யன்ஸ் பங்களாவில் பதறிப் போய் அமர்ந்திருக்கிறது.மாநிலங்களில் காங்கிரஸ் இழந்த இடத்தை ராகுல் காந்தியால்கூட மீட்க முடியாது என்ற உண்மை பிராந்தியக் கட்சிகளுக்குப் புதிய டானிக்கை கொடுத்திருக்கிறது.2ஜி ஊழல் குடுமியைப் பிடித்திருக்கும் காங்கிரஸை எதுவும் செய்யவே முடியாதா என முனகிக்கொண்டிருந்த தி.மு.க.விற்கும் தைரியம் வந்தது இப்படித்தான். ஆனால் மன்மோகன் சிங்கின் ஒரு நழுவல் அறிக்கையிலேயே கருணாநிதி திருப்தியடைந்து, 2009ல் நடந்தது போல அரை நாள் உண்ணாவிரத நாடகத்தைக்கூட நடத்த முன்வராமல், அறிவிப்போடு நிறுத்திக்கொண்ட நாடகம் அவர் மீதான அவநம்பிக்கையைத் தக்க வைக்கச் செய்திருக்கிறது. ஈழத்தைவிட காங்கிரசிடம் கோரிப் பெற அவர்களுக்கு வேறு விஷயங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் ஜெனீவா தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறிய பிறகும் நீங்க மறுக்கிறது. ஏற்கனவே திரிணா முல் காங்கிரசுடன் உரசல்களை சந்திக்கும் காங்கிரஸ் ஆட்சி தி.மு.க. ஆதரவை வாபஸ் பெறுவதையோ, வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாக சொல்வதையோ தாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட துருப்புச் சீட்டை கருணாநிதி இலங்கைத் தமிழர் நலனுக்காக இறக்க மாட்டார் என்று 2009ஆம் ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஆனால் தப்பித் தவறி ஈழத் தமிழர்கள் மீது அவர்களுக்குப் புதிய பாசம் பிறந்துவிட்டால் என்னவாவது என்ற பயத்திலேயே இறங்கி வர வேண்டிய அளவுக்கு மத்திய காங்கிரஸ் அரசு பலவீனமாக இருக்கிறது.

எதிராளி பலவீனமடையும்வரை அவசரப்படாமல் காத்திருந்தால் ராஜபக்சேவைக்கூட ஒரு நாள் போர்க்குற்ற மேடையில் ஏற்ற முடியும் என்பதற்கு காங்கிரசின் இன்றைய பலவீனமான நிலையும் ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்கும் நெருக்கடிக்கு அவர்கள் பணிந்திருப்பதுமே சாட்சி.போஸ்னியாவின் இனப் படுகொலையில் ஈடுபட்ட ஸ்லோபடான்மிலோசெவிக்   ஒரு நாளில் வீழ்த்தப்படவில்லை.மாறாக, உள்நாட்டில் அவர் பலவீனமடைந்தபோது தானாகப் போர்க் குற்றக் கூண்டில் வந்து விழுந்தார்.இந்தியாவில் கடந்த ஏழு வருட ஆட்சியில் காங்கிரஸ் பெற்றிருக்கும் கெட்ட பெயரை மூன்றே ஆண்டுகளில் மிக நெருங்கி வருகிறது ராஜபக்சே சகோதரர்களின் குடும்ப ஆட்சி.இலங்கையில் பெட்ரோல் மானியங்களைக் குறைத்ததால் உணவுப் பொருள் உள்ளிட்டவற்றின் கூடுதல் விலையேற்றம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பு, தொடரும் வெள்ளை வேன் கடத்தல்கள்-, கொலைகள் ஆகியவற்றால் கிளம்பும் மக்கள் ஆத்திரத்தை ஜெனீவா தீர்மானத்தை வைத்து எவ்வளவு காலம் திசை திருப்ப முடியும்? 2009ல் விடுதலைப்புலிகளைக் காட்டி இந்திய அரசு தப்பித்துக் கொண்டது.அதன் பிறகு தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும் புனர்வாழ்வையும் கொடுக்கச் செய்யும் தனது நிர்ப்பந்தம் தோற்றபோதே இந்தியா சாட்டையை சொடுக்கியிருக்க வேண்டும்.13ஆம் திருத்தம் மூலம் தமிழர்களுக்கு அதிகாரமளிக்கப்படும் என ராஜபக்சே தன்னிடம் வாக்களித்தார் என்று கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கை மூக்கறுத்தபோதே இந்தியா தனது கெஞ்சும் தொனியைக் கைவிட்டிருக்க வேண்டும். இந்தியாவின் அமைச்சரை ஒரு பொய்யராகச் சித்தரித்த பிறகு இந்தியா துணிவாகக் களமிறங்கி, முன்மொழிந்திருக்க வேண்டிய ஒரு மனித உரிமைத் தீர்மானத்தைத்தான் அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாவைக் கலந்துகொள்ளாமல் எதுவும் செய்வதில்லை என்று மேற்கத்திய நாடுகள் கொடுத்த சிறப்புரிமையை இந்தியா தனது மங்குணித்தனத்தால் கெடுத்துக்கொண்டது.

பெரும் சாத்தியங்கள், நடைமுறையில் பெரும் ஏமாற்றங்களைக் கொண்டதுதான் இந்தியாவின் அண்டை நாட்டு ராஜ தந்திரம்.கம்யூனிச சீனாவுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த நேபாளத்தின் மாவோயிஸ்டு இயக்கத்தை உடைத்து, ஜனநாயகத்திற்குள் அவர்களை இழுத்து வந்து தேர்தல் அரசியலில் கரைய வைத்த அளவுக்கு சாத்தியங்கள் அதனிடம் உண்டு. பர்மாவில் ஜனநாயக சக்தியான ஆன் சான் சூ கியை ஆதரிப்பதற்குப் பதில் இயற்கை வளங்களுக்கு ஆசைப்பட்டு சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆதரித்து, அதற்குப் பிறகும் அந்த தேசத்தை சீனாவின் தாக்கத்திற்கு இழந்த பெருமையும் இவர்களுடையது. இலங்கை விஷயத்தில் சமீப காலமாகத் தனது சக்தி என்ன என்றே தெரியாமல் இந்தியா கோமாளி வேடம் தரித்துக் காட்சியளிக்கிறது. மூன்று ஆண்டுகளாக ராஜபக்சே அரசு ஒரு எளிய நாடகத்தின் வழியாக இந்தியாவை ஏமாற்றி, எள்ளி நகையாடி வருகிறது.ஜெனீவா தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதன் வழியாகவே அவர்களைத் தமிழர் நலனுக்குத் தேவையான காரியங்களைச் செய்ய வைக்க முடியும் என்று இந்திய அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் 2009ல் இலங்கை அரசின் காரியங்களுக்கு ஆதரவாக நின்றதன் மூலம் எத்தகைய தமிழர் நலனை இந்திய அரசு உறுதி செய்தது?அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் இந்தியாவின் சாதாரண திட்டத்தையே இலங்கை அரசு நீண்ட காலம் காக்க வைத்தது. உச்சகட்ட ஈழப் போரில் சிங்கள அரசின் நண்பனாக இந்தியா நடந்துகொண்டாலும் ஒரு அன்னிய சக்தியாகவே இந்தியாவை ராஜபக்சே அரசு நடத்தி வருகிறது.தற்போதைய பலவீனமான ஜெனீவா தீர்மானத்தை எதிர்த்துவிட்டு, களத்தில் இலங்கை அரசாங்கத்தைச் செயல்பட வைப்பதுதான் ஆக்கபூர்வமான, யதார்த்தமான நிலைபாடு என்று வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்தியாவின் ராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாமல் செய்வது கடந்த மூன்று வருடங்களின் கையாலாகாத்தனம்தான்.

ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் பெரும்பாலான வற்றை மூடி மறைக்கும் அந்த நாட்டின் சொந்த எல்.எல்.ஆர்.சி.கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தும்படிதான் ஜெனீவா தீர்மானம் முன்மொழிகிறது. கொசமாவது பெருந்தன்மையுடன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு அறிக்கையை ராஜபக்சேவின் அரசே அமல்படுத்தி, உலக அரங்கில் இன்னுமொரு மக்கள் தொடர்பு நாடகத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் இலங்கையின் போர் தொடர்பான எந்தவொரு விசாரணை முடிவின் அமல்படுத்தலும் தங்களைப் போர்க் குற்றக் கூண்டை நோக்கியே இழுத்துச் செல்லும் என ராஜபக்சே அரசு நினைக்கக்கூடும். அத்தகைய வாய்ப்புக்களை முடிந்த வரை காலம் தாழ்த்துவதே அவர்களின் வியூகம். அதனால்தான் இதுவரை எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற உள்நாட்டு மனித உரிமைக் குழுக்களின் குரலை உதாசீனப்படுத்திய ராஜபக்சேவின் அரசு, ஜெனீவா விவாதத்தில் தீர்மானத்தைத் தவிர்க்கும்படி கூறும்போது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை நாங்களே நிறைவேற்றிவிடுகிறோம் என கற்பூரம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்தது. அவர்களின் வழக்கமான வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியும் காற்றில் பறக்க விடப்படலாம் என்றாலும் உலகெங்கும் மனித இனப் படுகொலையாளிகளைப் பின்தொடர்ந்து வந்திருக்கும் குற்றத்தின் நிழல் இவர்களையும் விடாது.

கம்போடியாவில் போர்க் குற்ற தீர்ப்பாயத்தில் சாட்சியமளிக்கும் கமேர் ரூஜின் ஜெயிலரைப் போல ஒரு நாள் அரசியல்ரீதியாகப் பலவீனமடையப் போகும் ராஜபக்சே அண்ட் கோ, அன்றைய நாளன்று குற்றவாளிக் கூண்டில் ஏறி, இந்தியாவையும் உள்ளே இழுக்கலாம். 2009ல் நடந்த இனப்படுகொலை நிகழ்ந்தபோது காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்ததா, உத்தரவிட்டதா என்பது அப்போது விவாதத்திற்கு வரலாம்.ஆனால் எப்போதும் விதிகள் பிறருக்காகவே வகுக்கப்படுகின்றன.மனித உரிமை குறித்து அமெரிக்கா உருவாக்கும் விதிகள் ஈராக்கிற்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ பொருந்தாது.மனித உரிமை மீறல்களின் மீதே கட்டமைக்கப்பட்ட சர்வாதிகார ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் தங்கள் மீறல்களை மறைக்க நாடகங்கள் போடும் அவசியம்கூட இல்லை. சமகால உலக அரசியலில் பிராந்திய வல்லரசுகளின் மனித உரிமை மீறல்களை ஐ.நா. ஒருபோதும் கையில் எடுத்ததில்லை (காஷ்மீர் விவகாரத்தில்கூட இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் முயற்சி தோற்கவே செய்தது). ஏனெனில் ஐ.நா. என்ற அமைப்பே வல்லரசுகளின் உருவாக்கமும் வல்லரசுகளின் செயலாக்கமும்தான். அதனால், இலங்கையின் மனித உரிமையைப் பற்றிப் பேசினால் இலங்கை காஷ்மீரத்தைப் பற்றிப் பேசும் என பூனையைப் போல் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பயங்கள் ஒரு மட்டத்தில் ஏமாற்றுத் தந்திரத்தையும் மறு மட்டத்தில் சுய பலத்தைத் தெரியா மலிருப்பதையும் காட்டுகிறது. ஈழத் தமிழர் கொலைக்கான நேரடிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்பவே முடியாது என்றாலும் அதற்கு ஆதரவளித்த இந்தியா, சீனாவின் குற்றம் ஐ.நா. போன்ற மன்றங்களில் தண்டிக்கப்படாமலே போகலாம்.

எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அண்டை நாட்டு ராஜ தந்திரம் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துத்தான் மூன்று குரங்குகள் கதையை மகாத்மா காந்தி முன்வைத்திருப்பார் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. அந்தக் கதையைச் சிறிய வித்தியாசங்களுடன் அபாரமாக நடித்துக் காட்டுகிறது மன்மோகன் சிங் தலைமையில், சோனியா காந்தியின் கண்ணசைவில் இயங்கி வரும் ஐ.மு.கூட்டணி அரசு. இலங்கையில் 2009ல் நடந்த ‘கெட்டதை’ப் பார்த்தும் பார்க்காதது போல் நடித்த காங்கிரஸ், அப்பாவித் தமிழர்களின் மரண அவலத்தையும் நீதிக்கான குரலையும் கேட்டும் கேளாதது போல் நடித்துக்கொண்டிருந்தது. தமிழர்களுக்கு ஒரு சொட்டு நியாயமாவது வழங்க வேண்டும் என்ற குரல் ஜெனீவாவில் ஒலித்தபோது பேசவே வாயற்று வாய் மூடி மௌனித்திருந்தது.மீறிப் பேசிய சில தருணங்களிலும் பேசா தருணங்களைப் போலவே எந்தத் தெளிவான செய்தியும் இருக்கவில்லை. எனினும் இறுதியில் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருப்பது இதைத்தான் உணர்த்துகிறது: காங்கிரசின் பலவீனம்தான் இப்போது ஒரே நம்பிக்கை.

அரசியல்ரீதியாகப் பலவீனமடையும் சக்திகளுக்கு ஏற்படும் நெருக்கடியைப் போல இப்போதைய இந்தியாவினால் இந்திரா காந்தியைப் போல் உறுதியான நடவடிக்கையும் எடுக்க முடியாது, ராஜீவ் காந்தியைப்போல் விடலைத்தனமான காரியங்களிலும் ஈடுபட முடியாது. நரசிம்ம ராவ் போல் தூங்கவும்கூட முடியாது.ஏனெனில் பலவீனமான அரசியல் சக்திகள் பலம் பெற்ற பிற சக்திகளின் இஷ்டப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுவார்கள்.காங்கிரசின் பலவீனமான தருணத்தில் பலம் பெற்றிருக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அவ்வாறு காங்கிரஸை ஆட்டுவித்து ஈழத் தமிழர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கச்செய்ய வைக்கப் போகிறார்களா?ஊழல் வழக்கில் சிக்கிய சொந்த மகளை மீட்கப் போகிறார்களா?சொத்துக் குவிப்பு வழக்கின் கதையை முடிக்கப் போகிறார்களா?உலக வல்லரசுகள் போலவே இந்திய தேசியத்தின் புதிய வல்லரசுகளான மாநிலக் கட்சிகளும் சுயநல அரசியலாலேயே உந்தித் தள்ளப்படுகின்றன என்பதுதான் இப்போதைய ஒரே அவநம்பிக்கை. தேர்தல் அரசியலில் இருக்கும் அரசியல் கட்சிகளால் பொதுக் கருத்தினை மீறிப் போக முடியாது என்ற நிலையில் மக்களும் ஈழ ஆதரவுக் குழுக்களும் எழுப்பும் நெருக்கடியின் மீதுதான் நம்பிக்கை.
maya.flowerpower@gmail.com

click here

click here
click here