உயிரோசை - Uyirosai-173
 
மாறிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புகள்: புதுவகைக் கலப்புத்திருமணங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல்
- அ.ராமசாமி
கர்ப்பங்களின் கலகம்
- ஆர்.அபிலாஷ்
பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல் ( பகுதி - 1 )
- யா. பிலால் ராஜா
ராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
- கெரபொத்தா
கவனம் ஈர்க்காத அபூர்வ உயிரினம் -------கழுதைகள்
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மக்களின் மனிதனின் கதை
- ஆர்த்தி வேந்தன்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (9) –
- ராஜ்சிவா
இதய நாதம்
- உஷாதீபன்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
ஒரு மௌனத்தின் மரணம்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
ஆழ்ந்த நித்திரையில்
- அன்பரசன்
ஆசிர்வதிக்கப்பட்ட நாள்
- தனுஷ்
பெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்
- மதி
யாமத்திரி எரிகிறது
- ராஜா
வன்முறைக்கவிதை
- சின்னப்பயல்
‘பாடம்’ - கவிதை.
- கலையரசி
நிழல் தேடும் ஆண்மை
- கார்த்திக் பாலா
சந்தானத்தின் மாடி வீடு
- :ஆத்மார்த்தி
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்..........
- கே.பத்மலக்ஷ்மி
click here
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (9) –
ராஜ்சிவா

இதுவரை உலகில் வாழ்ந்த இனங்களில் அதியுயர் அறிவுடன் வாழ்ந்ததாக கருதப்படும் ஒரே இனம் மாயா இனம்தான். அந்த மாயா இனம் பற்றியும், அவர்கள் '2012 இல் உலகம் அழியும்' என்று கூறியது பற்றியும் பேச ஆரம்பித்த இந்தத் தொடர், அது தாண்டி வேறு சில இடங்களிலும், விடை தெரியாத சில மர்மங்களிலும் பயணித்தது. இதுவரை எம்மால் பார்க்கப்பட்டவை கூட சிறிய அளவுதான். பார்க்க வேண்டியவை இன்னும் நிறையவே உண்டு. ஆனாலும் நாம் அவற்றையும் ஆராய ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். 2012 மார்கழி வரை கூட நீண்டாலும் ஆச்சரியம் இல்லை. அப்புறம் இந்தத் தொடர் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

"2012ம் வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி உலகம் அழியும்" என்று மிகப்பெரிய எழுத்தில் எல்லா நாட்டு மக்களும் அலறும்படிக்கு, ஒரு குறித்த நாளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் மாயா இன மக்கள். இந்தியாவில் இது பற்றி அதிக அளவில் பேசப்படாவிட்டாலும், மேற்குலகம் தினம் தினம் இதைப் பேசிக் கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏதோ ஒன்று, ஒவ்வொரு கணமும் இதை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுவாசி மக்களான மாயா இனத்தவர்கள் கணித்த ஒரு 'நாட்காட்டி' (Calendar). ஒரு குறித்த நாளில் ஆரம்பித்த அந்த நாட்காட்டி, 2012ம் ஆண்டு மார்கழி 21ம் திகதியுடன் முடிவடைகிறது. முடிவடைகிறதென்றால், அப்படியே முடிந்து போகிறது. அதற்கு அப்புறம் அதில் எதுவுமே இல்லை.

சரி, அவர்கள் நாட்காட்டி முடிந்தால் நமக்கென்ன? அறிவே இல்லாத காட்டுவாசிகள் உருவாக்கிய ஒரு நாட்காட்டி முடிவடைகிறது. அவ்வளவுதானே! அதற்கேன் நாம் இப்படிப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டும்? உலகம் அழியும் என்று பல காலகட்டங்களில், வெவ்வேறு விதமாகப் பலர் சொல்லியிருந்தார்களே! அவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லையே! அப்புறம் ஏன் மாயன் சொன்னதில் மட்டும் நாம் மிகுந்த நம்பிக்கையை வைக்க வேண்டும்? இந்து மதம் கலிகாலத்துடன் உலகம் அழியும் என்கிறது. கிருஸ்தவ மதமும் உலக அழிவை வலியுறுத்துகிறது. அதிகம் ஏன்? கடந்த 2000ம் ஆண்டு கூட, உலகம் அழியும் என்று ஒரு மிகப் பெரிய நம்பிக்கையும் இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ளவில்லையே! இவற்றிற்கெல்லாம் அதிக அங்கீகாரம் கொடுக்காத நாம், மாயாக்களுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எமக்கு சுலபமாக எழுந்துவிடுகிறதைத் தடுக்க முடியாதல்லவா?

ஆனால்............!

மாயன் சொன்னவற்றை தவறு என்று வெகு சுலபமாக தட்டிக் கழித்துச் செல்ல அறிவியலாளர்களுக்கே கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதைத் தீவிரமாகவே அவர்கள் பார்க்கின்றனர்? மாயன் சொன்னவை உண்மையாகலாமோ என்னும் பயம் அவர்களுக்கும் உண்டு. மாயன்களின் சுவடுகளும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடிகளும்தான் இந்தப் பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டன. மாயன்கள் சொன்னவற்றை அறிவியலுடன் பொருத்திப் பார்க்கும் போது, ஏற்பட்ட வியப்புத்தான் இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை உலகில் இருந்த, இருக்கின்ற எந்த இனத்துக்குமே இல்லாத விசேசங்கள் பல, மாயன்களுக்கு இருந்திருக்கிறது. அந்த ஆச்சரியப்படும் விசேசத் தன்மைதான் மாயன்களிடம் இப்படி ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மாயன்கள் கணிதம், வானியல், கட்டடக் கலை, நகர அமைப்பு, அறிவியல், உணவு வேளாண்மை, கலை, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்திலும் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போ? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். அதுதான் எம்மை வியக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொன்னால் அதைச் சரியாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் மாயா இனத்தவர்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாமா.....!

இன்று நாம் பயன்படுத்தும் கணிதம், 'தசம கணிதம்' (Decimal System) என்னும் அடிப்படையைக் கொண்டது. அதாவது 10 அடியாகக் கொண்டு உருவாக்கிய கணிதம். 1, 10, 100, 1000, 10000...... இப்படி. அத்துடன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எனப் பத்து இலக்கங்களையும் எமது கணக்கியலில் நாம் பயன்படுத்துகிறோம். இப்படி 10 அடியாக (base10 or radix10 ) மனிதன் கணிக்க ஆரம்பித்ததற்கு ஒரே காரணம் அவனுக்கு கைகளில் 10 விரல்கள் இருந்ததுதான். ஆரம்ப காலங்களில் கை விரல்களால் கணக்கிட்ட வழக்கம் தொடர, அதுவே கணிதமுமாகியது.

இப்பொழுது இப்படிப் பாருங்கள்.......! மனிதனுக்கு ஒரு கையில் மூன்றே மூன்று விரல்கள்தான் இருக்கிறது என வைத்துக் கொண்டால், இரண்டு கைகளிலும் மொத்தமாக அவனுக்கு 6 விரல்கள் இருந்திருக்கும். அப்போது, மனிதனின் கணிதவியல் 6 அடியாகக் கொண்டு இருந்திருக்கும். அதாவது 1, 6, 36, 216, 1296....... என இருந்திருக்கும். என்ன புரிகிறதா…? ஆனால் 6 அடியாகக் கொண்டு கணிப்பதை விட, 10 அடியாக கொண்டு கணிப்பது, மிகப்பெரிய எண்ணை அமைப்பதற்கு சுலபமாக இருக்கும். காரணம் 10 என்பது 6 விடப் பெரியது. 'அடி எண்' (base or radix) பெரிதாக இருந்தால், அதிக எண்ணிக்கையில் கணிப்பது இலகுவாக இருக்கும்.

ஆனால் கணினியை (Computer) எடுத்துக் கொள்ளுங்கள். கணினிக்கு பத்து விரல்கள் கிடையாது. அதற்கு இருப்பது இரண்டே இரண்டு விரல்கள்தான். ஆம்! கணினிக்கு 1, 0 என இரண்டே இரண்டு விரல்கள்தான் உள்ளது. மின்சாரம் சென்றால் 1, மின்சாரம் செல்லாவிட்டால் 0. ஆகையால், கணினி, 2 அடியாகக் கொண்டே கணிக்கிறது. அப்படிக் கணிப்பதை பைனரி சிஸ்டம் (Binary System) என்பார்கள். அது 1, 2, 4, 8, 16..... என அமையும். கணிதத்தில் 'அடி எண்' அதிகமாக இருந்தால் கணிப்பது சுலபம் என்றேன் அல்லவா? ஆனால் மனிதனை விடக் கணினி மிக மிக வேகமாகக் கணிக்கிறதே! அப்படிக் கணிப்பதற்குக் காரணம் மனிதன் கணிப்பது போல பத்து இலக்கங்கள் இல்லாமல், கணினிக்கு இரண்டே இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தப்படுவதுதான். அந்த இரண்டு இலக்கங்களும் 1, 0 ஆகும்.

சரியாகக் கவனியுங்கள், சுலபமாய் எண்களை அமைப்பது என்பது வேறு, வேகமாய்க் கணிப்பது என்பது வேறு. இரண்டும் வேறுவேறான விசயங்கள் என்பதைத் தவற விட்டுவிடாதீர்கள்.

இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்........!

அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20 அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள். கைவிரல்கள் பத்து, கால் விரல்கள் பத்து என இது அமைந்திருக்கிறது. 20 அடியாகக் கொள்வதை, 'வைஜெசிமல் சிஸ்டம்' (Vigesimal System) என்பார்கள். அது 1, 20, 400, 8000, 160000..... என அமையும். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20 அடியாகக் கொண்டு கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்கு வைத்திருக்கவில்லை. மூன்றே மூன்று இலக்கங்களைத்தான் பாவித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும், கணினியைப் போல வேகமாய்க் கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

புள்ளி, நேர்கோடு, நீள்வட்டம் என்னும் மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்று இலக்கங்கள். இவற்றில் புள்ளி 1ஐயும், நேர்கோடு 5ஐயும், நீள்வட்டம் பூச்சியத்தையும் குறிக்கிறது.

மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.

புள்ளிகளையும், கோடுகளையும் வைத்து, லட்சங்களில் எப்படி மிகப் பெரிய எண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில விளக்கப் படங்களையும் உங்களுக்கான புரிதலுக்காகத் தருகிறேன்.

இதனுடன் இன்னுமொரு விசேசமாக, எண்ணிக்கைகளை இலக்கங்களால் மட்டுமில்லாமல், 'ஹிரொகிளிஃப்' (Hieroglyph) என்னும் சித்திர எழுத்துகள் மூலமும் எழுதியிருந்தார்கள். இந்த வழமை மாயாக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தனிச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தச் சித்திர எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள பெரிதாக உதவியது.

இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள் கோடிக்கனக்கான எண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக கணித்துவிடுகிறார்கள். நாம் கோடிகள், ஆயிரம் கோடிகள் என்பவற்றை ஊழல் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும் போது, மாயன்கள் எதற்கு அவற்றைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா....? வானியலில். வானத்தில் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத் துல்லியமாக கணித்தார்கள் மாயன்கள். அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில் எங்கள் அமைதியையே குலைக்கும், '2012 இல் உலகம் அழியும்' என்பதில் கொண்டு வந்து விட்டும் இருக்கிறது.

மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள் எதை ஆராய்ந்தார்கள் என்று தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம். ஆம்! சூரியனையும், அதன் கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போது, மாயன்கள் பால்வெளி மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள். வெறும் கண்களால் சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய், வியாழன் ஆகியவற்றை மட்டுமே பார்க்கக் கூடிய எமக்கு, மாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள் என்றால், அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான்.

மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்? எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்? என்பதை அடுத்த தொடரில் பார்ப்போமா..?

click here

click here
click here