உயிர்மை - Uyirmmai November
 
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
- மனுஷ்ய புத்திரன்
கவர்மெண்டு அக்ரஹாரம்: நவீன கல்வி அமைப்பின் சாதிய முகம்
- அ.முத்துக்கிருஷ்ணன்
இறந்தவர்கள் பேசும்போது... உயிருள்ளவர்களின் வாயை அடைக்க முடிகிற இந்திய அரசால், இறந்தவர்களின் குரலைத் தடுக்க முடியாது.
- அருந்ததி ராய்
இருளில் மறையும் மாற்றுப் படங்கள்
- அம்ஷன் குமார்
வெற்றிபெற்ற மனிதர் எல்லாம்...
- ஆர்.அபிலாஷ்
ஈழம்: சின்னச் சின்னக் கதைகள்
- தீபச்செல்வன்
‘2 ஜி’யும் ‘1000 ஜி’யும்
- மாயா
ஹிபாகுஷாக்கள்: அழிந்தும் உயிர்த்திருப்பவர்கள்
- சு.கி.ஜெயகரன்
கார்ல் மார்க்ஸின் கள்ளப் புன்னகை: வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
- யமுனா ராஜேந்திரன்
1942-2011 முவம்மர் கடாபி: மக்கிச் சிதைந்த பச்சைப் புத்தகம்
- யமுனா ராஜேந்திரன்
1955-2011 ஸ்டீவ் ஜோப்ஸ்: அது ஒரு கணினிக் காலம்
- ஷாஜி
எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது: கசையடிகளும் முள்முடிகளும்
- யமுனா ராஜேந்திரன்
1941-2011 சொல்லில் அடங்காத இசை ஜெக்ஜித் சிங்: பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்
- ஷாஜி
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
சுகுமாரன் கவிதைகள்
- சுகுமாரன்
கவிதைகள்
- -
இந்திரயோனி
- எஸ்.செந்தில்குமார்
சர்ப்பம்
- சுகுமாரன்
கொலையைக் கலையாக்குபவன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
கடிதங்கள்
- -
click here
கவர்மெண்டு அக்ரஹாரம்: நவீன கல்வி அமைப்பின் சாதிய முகம்
அ.முத்துக்கிருஷ்ணன்

மணிஷ் குமார், மூன்றாம் ஆண்டு, IIT, - ரூர்கி

தேதி: 6, பிப்ரவரி 2011

மணிஷ் குமாருக்குப் படிப்பில் மிகுந்த ஈடுபாடு. தன் பள்ளிப் பருவம் முழுவதும் தன் சக மாணவர்களைப் போல் அவன் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை. +2வில் நல்ல மதிப் பெண்கள் பெற்று பல நுழைவுத் தேர்வுகளை எழுதினான். அவன் எழுதிய தேர்வுகளில் எல்லாம் அவனுக்குத் தேர்ச்சி கிட்டியது. அவன் ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் படிக்க முடிவு செய்தான். மிகுந்த சந்தோஷத்துடன், பல கனவுகளுடன் அவன் ரூர்கி நோக்கிப் பயணத்தை தொடங்கினான்.

முதல் ஆண்டிலேயே சில பிரச்சினைகள். அவன் அதைச் சமாளிக்க முயன்றான். அவன் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும் விஷயங்கள் தொடர்ந்தது. இந்திய விமானப் படையில் பணிபுரியும் தன் அப்பாவிடம் அவன் இதைத் தொலைபேசியில் தெரிவித்தான். அவர் உடன் அங்கு வந்து மணிஷின் விடுதி அறையில் அமர்ந்து எல்லா சம்பவங்களையும் கேட்டு அறிந்தார். அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபொழுதே யாரோ வந்து அறையை வெளியில் இருந்து தாளிட்டுச் சென்றார்கள். அறையை விட்டு வெளியே வரவே மிகவும் சிரமப்பட்டார்கள். தொலைபேசியில் அழைத்து ஒரு நண்பர் வந்து கதவைத் திறந்தார். மணிஷின் அப்பா உடன் விடுதிக் காப்பாளரைத் தொடர்பு கொண்டார். அவர் ‘ஏன் உங்கள் மகனை நீங்கள் ஒரு நல்ல வீடு பார்த்து வெளியே வையுங்களேன்’ என்றார். அதன்பின் ஐ.ஐ.டி. அருகிலேயே வெளியே உள்ள ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட அமர்ந்தார்கள். அருகில் அமர்ந்திருந்த ஐந்து பேர் மிக இயல்பாக சாதியைச் சொல்லி இவர்களைக் கேலி செய்தார்கள். இவர்களும் தன்னை சாதியைச் சொல்லிக் கொச்சையாகப் பேசும் நபர்களில் சிலர் என்றார் மணிஷ்.

நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘உங்கள் பையன் மிகவும் பதட்டமாக இருக்கிறான். அவனை உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றார்கள். ஐ.ஐ.டி.யில் உள்ள மருத்துவமனையில் இருந்த மருத்துவர், ‘மருந்துகள் தருகிறேன். உங்க பையன் சீக்கிரம் சரியாகிவிடுவான். ஆனால் இந்த செமஸ்டர் அவன் பரீட்சைகளை எழுதவேண்டாம்’ என்றார். இதுவும் தலித் மாணவர்களைப் பின்னுக்குத் தள்ள நடக்கும் சதியின் ஒரு பகுதி. அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ஒரு செமஸ்டர் பாடங்களை வீட்டில் வைத்துப் படித்தான். அதன்பின் வந்து மீண்டும் வகுப்புகளைத் தொடர்ந்தான். மீண்டும் சாதியை சொல்லித் திட்டுவது, உணவுக் கூடத்தில் செய்யும் இகழ்ச்சிகள், வகுப்பில் பேராசிரியர்கள் நடத்தும் முறை என அவன் மனப்பதட்டம் அடையச் செய்யும் எல்லா காரியங்களும் தொடர்ந்து நடந்தன.

இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி தனது விடுதியின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். மணிஷ் வீட்டுக்கு வரும்பொழுது எல்லாம் அவன் அம்மாவிடம் கேட்ட ஒரே கேள்வி: "நான் என்ன தவறு செய்தேன்? என் தவறு என்ன?"

பால்முகுந்த் பாரதி, இறுதி ஆண்டு, AIIMS, தில்லி

தேதி: 3, மார்ச் 2010.

பால்முகுந்த் பாரதி மத்தியப் பிரதேசம் திகாம்கர்ஹ் பகுதியின், குந்தேஸ்வரைச் சார்ந்தவர். பள்ளியில் மிக புத்திசாலி மாணவன். +2 தேர்வில் நல்ல மதிப்பெண். ஜனாதிபதியிடம் இருந்து விருது வாங்கினான். பல நுழைவுத் தேர்வுகளை எழுதினான். ஐ.ஐ.டி.க்கு நடத்தப்படும் தேசியத் தேர்வில் அகில இந்திய அளவில் 8வது இடத்தைப் பிடித்தான். இருப்பினும் அங்கு செல்ல அவனுக்கு விருப்பமில்லை. AIIMSல் அவனுக்குப் பொதுப் பிரிவிலேயே சீட் கிடைக்கும் அளவு நல்ல மதிப்பெண். பொதுப் பிரிவில் அவன் விண்ணப்பித்த போதும் அவனை நிர்வாகம் இடஒதுக்கீட்டின் கீழ்தான் அனுமதித்தது.

வகுப்பில் நுழைந்த முதல் நாளே பேராசிரியர், "உன்னால் டாக்டர் ஆக முடியாது" என்றார். 50 ஆண்டுகளுக்குப் பின் இவன்தான் அந்தப் பின்தங்கிய பகுதியில் இருந்து மருத்துவம் படிக்கச் செல்லும் முதல் மாணவன். இதுதான் அவனுக்கு இந்த வல்லரசின் தலைநகரம் வழங்கிய வரவேற்பு. பேராசிரியர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை எனப் பல முறை வீட்டில் புலம்பியுள்ளான். இருப்பினும் அவனது தகப்பனார், "நீ நல்லா படிப்பா. நீ நல்லா படிச்சா உன்னை அவங்களுக்குப் பிடிச்சிரும்" என்றார்.

வகுப்பில் பேராசிரியர்கள் பலரும் ஒரே அணுகு முறையில்தான் நடத்தினார்கள். வகுப்பில் நீங்கள் உங்களை அறிமுகம் செய்யும்போது உங்கள் முழுப் பெயரை உரக்கச் சொல்ல வேண்டும். அத்துடன் நீங்கள் எந்தக் கோட்டாவில் உள்ளே நுழைந்தீர்கள் என்பதும் சொல்ல வேண்டும். இதுதான் அடையாளம் காணும் உத்தி. அதன்பின் உங்களுக்கு சகல மாணவர்களிடம் இருந்தும் அற்புதமான உபசரிப்பு படிப்புக் காலம் முழுவதும் கிட்டும்.

"ஜாதிதான் என் பிரச்சினை. இதை எப்படி சரி செய்வதுன்னே தெரியலையே" என தன் தாயின் மடியைக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு விடுமுறையிலும் கதறி அழுதான். "நான் வந்து உங்க நிர்வாகத்திடம் பேசவா’’ன்னு பல முறை கேட்ட தகப்பனாரிடம் இல்லப்பா, நீங்க வந்தா என் படிப்பையே முடக்கி விடுவார்கள்" என்றான். முதல் தற்கொலை முயற்சியில் பிழைத்துக் கொண்டான். இருப்பினும் கடந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி அவன் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

ஜஸ்ப்ரீத் சிங், இறுதி ஆண்டு, மருத்துவக் கல்லூரி, சண்டிகர்

தேதி: 27, ஜனவரி 2008.

மிகவும் சுறுசுறுப்பான மாணவர். மருத்துவப் படிப்பின் முதல் 4 ஆண்டுகளில் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இறுதி ஆண்டில் ஜாதி வெறி பிடித்த பேராசிரியர் அவரைத் தொடர்ந்து ஒரு பாடத்தில் தோல்வி அடையச் செய்கிறார். "நீ எப்படி மருத்துவர் ஆவேன்னு பார்ப்போம். நான் உன்னை எல்லா பரீட்சைகளையும் திரும்ப எழுதச் செய்வேன்" என மிரட்டுகிறார். பல முறை ஆசிரியர்களிடமும், நிர்வாகத்திடமும் முறையிட்டும் பயன் இல்லை. மிகவும் மனச்சோர்வு அடைந்து கல்லூரி நூலகத்தின் 5வது மாடியில் தூக்குப் போட்டுக் கொள்கிறார். அதன்பின் அவரது குடும்பத்தார் வழக்குத் தொடர்ந்தனர். தேசிய அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் தலையிட்ட பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் ஜஸ்ப்ரீத் சிங்கின் விடைத்தாள் வேறு மருத்துவக் கல்லூரியின் மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழுவால் திருத்தப்பட்டது. அதில் அவர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்க ஜஸ்ப்ரீத் சிங் உயிருடன் இல்லை. ஆனால் எந்த நடவடிக்கைக்கும் ஆளாகாமல் ஜாதி வெறிபிடித்த பேராசிரியர் கோயல் துறைத் தலைவராகப் பணியில் தொடர்கிறார்.

*

இந்தியாவின் மிக உயரிய தொழிற்கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் AIIMS, IIT, IIS, NII ஆகிய நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 18 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். பொதுவாக படிக்கும் காலங்களில் மனத்தாழ்வு, ஆங்கிலப் புலமை இல்லாமை, வீட்டில் டுவீலர்- மொபைல் கேட்டுக் கிடைக்காதவர்கள், எனப் பல காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் தகவல்கள் நாளிதழ்கள் வழியாக நம்மை வந்தடைந்தவண்ணம் உள்ளன. ஆனால் இந்தக் கதைகள் சற்று அல்ல, முற்றாக வேறானது. இந்த 18 பேரும் தலித்துகள். இந்தியாவின் மிகப் பின்தங்கிய பகுதிகளில் இருந்து முதல் முறையாக இப்படியான உயர்கல்வி பயிலச் சென்றவர்கள்.

AIIMS இந்தியாவின் மிக முக்கிய மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம். 1956ல் நியூசிலாந்து அரசு கொடுத்த நிதியில்தான் இந்த மருத்துவமனையின் பெரும் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டது. AIIMS ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத் (2) 1962ல் திறந்து வைத்தார். இங்குதான் இந்திய நாட்டின் பிரதமர், அரசியல்வாதிகள், பிரபலங்கள் முதல் ஏழை எளியவர் வரை தினமும் 8000 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இது மத்திய அரசின் 100% நிதியளிப்பில் இயங்கும் நிறுவனம். கடந்த ஆண்டு மட்டும் இந்த ஒரு நிறுவனத்திற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் ரு.667 கோடி ஒதுக்கியது. ஆகையால் அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் இங்கு மாணவர்களின் சேர்க்கை முதல் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என சகல நியமனங்களிலும் இடஒதுக்கீடு மிக கறாராகப் பின்பற்றப்படவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள். இதில் ஆண்டுதோறும் 50 பேர் மருத்துவப்படிப்புக்கு சேர்க்கப்படுகிறார்கள். இப்படி இந்த நுழைவுத் தகுதிகளை எல்லாம் பெற்று உள்ளே செல்லும் தலித் மாணவர்களை இந்த நிறுவனம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

ஒரு தலித் மாணவன் உள்ளே நுழைந்தவுடன் அவனது காதில் விழும் முதல் வார்த்தையே, "ஏண்டா, உங்க ஊர்லயே மருத்துவக் கல்லூரி இருக்குல்ல. அங்க எல்லாம் சேர்ந்து நீங்க படிக்க மாட்டீங்களா, ஏண்டா இங்க வந்து எங்க உயிர வாங்கறீங்க." இந்த வரவேற்புடன்தான் உங்களுக்கு ஒரு மாத காலம் ராகிங் நடைபெறும். ராகிங்கில் இந்த நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அறிமுக நிகழ்வின்போது தங்களின் முழுப் பெயர் (சாதி உட்பட) , தங்களின் பட்டியல் விபரம் ஆகியவற்றை உரக்க கூற வேண்டும். இந்த விபரங்கள் அடங்கிய பட்டியல் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதும், பிற மாணவர்களுக்காக இதனை அவர்கள் ஒரு சடங்கு போல் நடைமுறைப் படுத்துகிறார்கள். அதன் பின் இந்த நிறுவனம் சார்ந்த பயத்தை தலித் மாணவர்களின் மீது அவர்கள் தொடர்ந்து பல வழிமுறைகளில் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் எல்லா பாடங்களிலும் 50% மதிப்பெண்கள் internal marks ஆக உள்ளது. அதனால் நீங்கள் நிர்வாகத்தையோ, பேராசிரியரையோ பகைத்துக் கொண்டால் படிப்பை உருப்படியாக முடித்து வெளியேற இயலாது. நீங்கள் எவ்வளவு நாகரீகமோ (ஜனநாயகமே அவர்களைப் பொறுத்தவரை அநாகரீகமானது) அதைப் பொறுத்துதான் உங்கள் எதிர்காலமும்.

இந்தியாவின் எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு என ஆங்கிலம் பயில சிறப்பு வகுப்புகள் வசதி நடைமுறையில் உள்ளது. அப்படி ஒரு வசதி AIIMSல் கிடையாது. அதனை 50 ஆண்டுகளாக முறையிட்டும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அங்கு குறைதீர்ப்பு மையங்களோ (Grievance Cell), கலந்தாலோசனை மையங்களோ (Counselling centre) கூட இல்லை.

வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் சந்தேகம் கேட்க இயலாது. பேராசிரியர்களைத் தனியே சந்தித்தும் சந்தேகம் கேட்க முடியாது. Ôஉங்களுக்கு இதுவெல்லாம் புரியாது. போய் வேற வேலை இருந்தா பாருங்க’ என்பதுதான் அவர்களது வழக்கமான பதில். பேராசிரியர்கள் தலித் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி சார்ந்து உதவுவதே இல்லை. பிண அறுவை முதல் அறுவை சிகிச்சை வரை தலித் மாணவர்கள் தள்ளித்தான் நிற்க வேண்டும். அங்கிருந்து நீங்கள் அதனைப் பார்க்கக் கூட இயலாது. மற்ற மாணவர்களுடன் சமமாக நீங்கள் தோள் உரசி நிற்க இயலாது. அதை விட தலித் மாணவர்களிடம் மிக எளிதான கேள்விகள் கேட்டு கொல்லென அனைவரும் சிரிப்பார்கள்.

மாணவர்கள் இங்கே நுழைந்தவுடன் அவர்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விடுதியில் அறைகள் ஒதுக்கப்படும். அங்கு விடுதி 1&-8 வரை ஆண்கள் விடுதியாகவும், 9-&10 பெண்கள் விடுதியாகவும் உள்ளது. ஆனால் உங்களுக்கு எந்த விடுதியில் இடம் கிடைத்தாலும், முதல் நாளே சித்ரவதை தொடங்கிவிடும்.

AIIMSல் இரண்டு வகையான மெஸ் உள்ளது. ஒன்று பொதுவானது, மற்றொன்று தனியார். பொது மெஸ் என்பது குறைந்த சாப்பாட்டு வகைகளுடன் கொஞ்சம் கட்டணம் மலிவானது; தனியார் மெஸ் என்பது நிறைய உணவு வகைகளுடன் மாதக் கட்டணம் கூடுதலானது. நீங்கள் ஒரு தலித்தாக இருந்தால் நீங்கள் பணம் கட்டத் தயாராக இருக்கும் பட்சத்திலும் தனியார் மெஸ்ஸில் சேர இயலாது. தலித் மாணவர்கள் மற்றவர்களால் காரணமின்றித் தாக்கப்படுகிறார்கள். உணவு சாப்பிடும் கூடத்தில் தலித் மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேசையில் யாரும் வந்து அமர மாட்டார்கள். நீங்கள் அப்படி அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அமர்ந்தால் உடன் ஒரே நொடியில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து எழுந்து சென்றுவிடுவார்கள். ஜாதியைச் சொல்லி உரக்கத் திட்டுவார்கள், வசை பொழிவார்கள்.

விளையாடும் இடங்களிலும் பாரபட்சம்தான். நீங்கள் ஒரு தலித்தாக இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் விளையாடுவதைக் கனவு காணக் கூட இயலாது. தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டு கூடைப்பந்து மற்றும் கால்பந்து மட்டுமே. கலை நிகழ்ச்சிகளில் தலித்துக்கள் பங்கேற்க இயலாது. அப்படி அவர்களின் பங்கேற்பு இருக்கும் என்றால் அதில் அவர்கள் பார்வையாளர்களாகவும், தொண்டராகவும் தான் இருக்க இயலும்.

நாம் இங்கு முதலில் பார்த்த பால்முகுந்த் பாரதிக்கு AIIMSல் இதுவெல்லாம்தான் நேர்ந்தது. அவனுக்கு அறை ஒதுக்கப்பட்டபோதும், ஒரு நாளில் குறைந்தது 4-&-5 முறையாவது அதை யாராவது வெளியில் இருந்து பூட்டி விடுவார்கள். அறையில் இருந்து வெளியே வருவதே பெரும் பிரச்சினை. எவ்வளவு கத்தினாலும் யாரும் உதவ முன்வர மாட்டார்கள். சக தலித் மாணவர்களைத் தொலைபேசியில் அழைத்தாலும் அந்த நேரம் அவர்கள் வகுப்புகளுக்குச் சென்றிருப்பார்கள். பகல் - இரவு என்று நீங்கள் அறையில் இருந்தால் நிம்மதியாகப் படிக்கவோ-உறங்கவோ இயலாது. அந்த வழியாகச் செல்லும் அனைவரும் கதவைக் காலால் உதைத்து விட்டுச் செல்வார்கள். இந்த உதைப்பு கனவிலும் தொடரும். இதன் உச்சமாக பால்முகுந்த் பாரதியின் அறைக் கதவில் ஒரு வாசகம் எழுதப்பட்டது "No Body Likes you here. Fuck off from this wing." இங்கு வந்த நாளே பேராசிரியர் ‘நீ டாக்டராக முடியாது’ என்றார். நிம்மதியில்லாத தினங்கள் அவனைத் தொடர்ந்து அலைக் கழித்தது.

AIIMSல் பல காலமாக நடக்கும் தலித், பழங்குடி மாணவர்கள் விரோதப் போக்குகளைப் பற்றிய புகார்கள் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. AIIMSல் உள்ள தலித் - பழங்குடி மாணவர்களின் நிலையை ஆராய மத்திய சுகாதார அமைச்சகம் ஜூலை 2006ல் UGC தலைவர் சுகதேவ தோரட் அவர்களின் தலைமையில் ஒரு 3 நபர் குழு அமைத்தது. (COMMITTEE TO ENQUIRE INTO THE ALLEGATION OF DIF-FERENTIAL TREATMENT OF SC/ST STUDENTS in All India Institute of Medical Science, Delhi).

இந்தக் குழு அமைக்கப்பட்ட நாள் முதல் AIIMS நிர்வாகம் எந்த விதமான ஒத்துழைப்பையும் நல்கவில்லை. இந்தக் குழுவே பல தடைகளைச் சந்தித்தது என்றால் மாணவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிப்பது உங்கள் வேலை. இந்தக் குழு அளித்த அறிக்கையின்படி அவர்கள் சந்தித்த மாணவர்களில் 84% மாணவர்கள் தங்களுக்கு சிறப்பு ஆங்கில வகுப்புகள் வேண்டும் என்றார்கள். 69% மாணவர்கள் தங்களுக்குப் பேராசிரியர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்றார்கள். 72% மாணவர்கள் வகுப்பு நடைபெறும்போது பாரபட்சம் காட்டப்படுகிறது என்றார்கள். 76% பேர் தங்களின் விடைத்தாள்கள் பாரபட்சமாகத் திருத்தப்படுவதாகத் தெரிவித்தார்கள். 88% பேர் தங்களுக்குக் குறைந்த மதிப்பெண்களே வழங்கப்படுகிறது என்றார்கள். 84% பேர் வாய்மொழித் தேர்வில் தங்களைப் பாரபட்சமாக நடத்துவதாகத் தெரிவித்தார்கள். 30&40% கேள்விகளை எழுதாத மற்ற மாணவர்களுக்கு 70% மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகிறது என்பதையும் தலித் மாணவர்கள் தெரிவித்தார்கள். இந்தக் குழு அளித்த விரிவான அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. அமைச்சகமே அமைத்த குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்காத இயக்குநர் மற்றும் நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

AIIMS பல முறை உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளான நிறுவனம். நாடே ஒரு நடைமுறையைப் பின்பற்றினாலும் இவர்கள் தாங்கள் ஒரு முறையற்ற முறையைப் பின்பற்றுவார்கள். 1980களில் மிதவை ஒதுக்கீடு என்ற ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய விபரம், இதுவரை யாருக்கும் விளங்கவில்லை. 1993ல் மண்டல் கமிஷன் அமலுக்கு வந்தபொழுது அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கத் தடை வாங்கியது AIIMS நிர்வாகம். இதனைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் அங்கு ஒரு அதிகாரியை நியமித்து அவர் ஒவ்வொரு வருடமும் சுகாதார அமைச்சகத்திற்கு மாணவர்கள் சேர்க்கை, உயர் மருத்துவப் படிப்பு, பேராசிரியர் நியமனம், அலுவலக ஊழியர்கள் நியமனம் ஆகிய அனைத்தையும் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றது. அப்படி ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த ஆண்டுகளில் ஒரு அறிக்கையைக் கூட முழுமையாகத் தாக்கல் செய்யவில்லை. அவர் அளித்த அறிக்கைகளில் அலுவலக ஊழியர்கள் நியமனம் தவிர்த்து வேறு எந்தத் தகவல்களும் இடம்பெறவில்லை. இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படாததால் நிர்வாகம் எந்த விபரங்களையும் வழங்க மறுக்கிறது.

2006 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த நேரம் அதைப் பெரிதும் எதிர்த்தவர்கள் AIIMS மருத்துவ மாணவர்கள்தான். அன்னா ஹசாரே போராட்டத்திற்கு முன் அதுபோல் பெரிய மீடியா வெளிச்சத்துடன் நடந்த போராட்டம் இதுவே. இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் தலித் பழங்குடி மாணவர்கள் மீதான நெருக்கடிகள் தீவிரமடைந்தன. இந்தப் போராட்டத்தின்போது நாட்டின் மிகப் பெரும் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலும் முடக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாணவர்களின் பின்னணியில் முழு நிர்வாகமும் செயல்பட்டது. இந்தப் போராட்டத்தை மாணவர்கள் அமைப்பான youth for equalityதான் நடத்தியது. அங்கிருந்த பூங்காவில் ஷாமியானா அமைப்பது முதல் மின்சாரம், மெத்தை விரிப்புகள் என சகல ஏற்பாடுகளையும் நிர்வாகமே செய்து கொடுத்தது. இந்த youth for equality அமைப்புதான் இன்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் முன்னணியில் இருந்தது. இவர்கள் தலித்துகளை நடத்துவதற்கும் அன்னா ஹசாரே ரலேகான்சித்தியில் தலித்துகளை நடத்துவதற்கும் இருக்கும் ஒற்றுமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும்படி எல்லா மாணவர்களும் மிரட்டப்பட்டார்கள். ஆனால் தலித் பழங்குடி மாணவர்கள் இதனை எதிர்த்தனர். அவர்கள் இடஒதுக்கீடு வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இந்தப் போராட்டத்தில் இடஒதுக்கீட்டை ஆதரித்தவர்கள் அனைவரையும் மிக மோசமாக நடத்தியது நிர்வாகம். பழிவாங்கல் நடவடிக்கை தொடங்கியது. பல மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. பல ஆண்டுகள் அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள். விடுதிகளிலும் நிலைமை மோசமானது. 2006 முதல் மெல்ல மெல்ல தலித் மாணவர்கள் அறை மாறி மாறி, விடுதி 4 மற்றும் 5ன் மேல் மாடிகளில் குடியேறினர். இன்றும் AIIMS விடுதி ஊரும் சேரியுமாகப் பிரிந்துதான் கிடக்கிறது. இந்த இரண்டு மாடிகளில் மட்டும் அதில் வசிக்க வேண்டிய எண்ணிக்கை போல் 3 மடங்கு மருத்துவ மாணவர்கள் இருக்கிறார்கள். இங்குதான் அவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பை உணருகிறார்கள்.

மருத்துவ உயர் படிப்பில் இருந்த மாணவி அஜிதா கில்லின் கதை நாடறிந்தது. அவரை உயர் மருத்துவப் படிப்பில் இருந்து காரணம் தெரிவிக்காமலேயே நீக்கினார்கள். வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்தினார்கள். அவரை அதற்கு முந்தைய 20 மாதங்களில் பெற்ற சம்பளத்தை திரும்பக்கட்டச் சொன்னது நிர்வாகம். இவரைப் போல பல மாணவர்கள் விதவிதமாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

பொதுவாகவே இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. உதாரணத்திற்கு சென்னையில் உள்ள IIT யில் மொத்தம் 427 பேராசிரியர்கள் உள்ளனர். இதில் பார்ப்பனர்கள் 400 பேர் என்றால் நீங்கள் அவர்களின் செல்வாக்கு இங்கு எப்படிப்பட்டதாக உள்ளது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். அரசிடம் நிதி பெறும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் கவர்மெண்டு அக்ரஹாரங்களாகவே உள்ளன. இங்கே இடஒதுக்கீடு, மனித உரிமை என்றால் உடன் அது எல்லாம் கிலோ என்ன விலை என்றே கேட்கிறது (IITகளைப் பற்றித் தனியாக ஒரு கட்டுரை எழுதத் தீர்மானித்துள்ளேன். அதனால் அதைப் பின்பு பார்ப்போம்). ரேஷன் கடைகளில் நிற்பவனின் கோவணத்தை உருவும் அரசு மறுபுறம் இந்தியாவில் உள்ள இப்படியான அக்ரஹாரங்களுக்கு மட்டும் ரு.6000 கோடியை ஒதுக்குகிறது.

அது எப்படி இந்த உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாம் ஒரே மாதிரியான கலாச்சாரத்துடன் இயங்குகின்றன? அது எப்படி இங்கு வன்கொடுமைகள் புரியும் மாணவர்கள், பேராசிரியர்கள் இத்தனை சுதந்திரமாகக் கோவில் மாடுகளைப் போல் திரிகிறார்கள்? அது எப்படி எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் மொட்டை மாடிகளில் நின்று அதன் இயக்குநர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற ஆணைகளைப் பட்டமாகச் செய்து பறக்கவிடுகிறார்கள்? அது எப்படி கான்பூர், கரக்பூர் என பல IITகளில் முதல் நாள் நுழையும் தலித் மாணவரிடம் வெவ்வேறு பேராசிரியர்கள் ஒரே மாதிரியாக, "உனது விடைத்தாள்களைத் திருத்தப்போவது நான்தான். மாயாவதி அல்ல" என்ற வசனத்தை ரீ-ரிக்கார்டிங் பேசுகிறார்கள்? அது எப்படி இந்த எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் பழங்குடிகளை ஆய்வு செய்ய ஒன்றுபோல் யாரும் எளிதாக அனுமதிப்பதில்லை, அப்படி அனுமதிக்கப்பட்டவர்களை 15 ஆண்டுகள் வரை அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்? அகில இந்த அளவில் IIT நுழைவுத் தேர்வில் 8 வது இடம் பிடித்த மாணவனின் மரணம் எப்படி ஒரு சிறு பத்தி செய்தியாக மாற்றப்பட்டது. அதே ஒரு பார்ப்பன மாணவனாக இருந்தால் இது உடன் தேசியத் தலைப்புச் செய்தியாக மாறி, இந்தியா வல்லரசாவது கூட இதனால் 6 மாதம் தள்ளிப் போகும் என்று கூச்சமில்லாமல் பேசியிருக்காதா ஊடகங்கள்?

மணிஷ் குமார், பால்முகுந்த் பாரதி, ஜஸ்ப்ரீத் சிங் ஆகியோருடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 18 பேர் இந்த சில உயர் கல்வி நிறுவனங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒத்த சூழ்நிலையில் மரணத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாம் அறிந்துள்ள இந்த எண்ணிக்கை வழக்காகப் பதிவு பெற்றவை என்றால், நிச்சயம் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமானதாகவே இருக்கலாம்.

சுணீ கோத்தால் மேற்கு வங்கத்தின் லோதா ஷாப்ரா பழங்குடியினரில் படித்த பட்டதாரியான முதல் பெண்மனி. வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கச் சென்ற அவரை பிராமண -பனியா அதிகாரத்துடன் இருந்த நிர்வாகமும் பேராசிரியர்களும் சாதிரீதியாகத் தொடர்ந்து இழிவுபடுத்தினார்கள். இதனைச் சகிக்க முடியாமல் 1992 ஆகஸ்டு 16 அன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் சுணீ கோத்தால் தொடர்ந்து தன் கணவரிடம் "நான் அதிகம் படிக்க ஆசைப்பட்டது தவறா, தவறா?" என தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். சுணீ கோத்தாலை முன்னிலைப்படுத்தி ஒரு நாவலை எழுதினார் வங்க நாவலாசிரியரும் போராளியுமான மகாஸ்வேதா தேவி. ஆவணப்படுத்த வேண்டிய வரலாறுகளின் பட்டியல் நீண்டவண்ணம் உள்ளது. இன்னும் கோடிக்கணக்கான குடும்பங்களில் முதல் பட்டதாரிகளே உருவாகாத நாட்டில், நாம் இன்னும் தொலைதூரம் பயணிக்க வேண்டும்.

muthusmail@gmail.com

click here

click here
click here