உயிரோசை - Uyirosai
 
நீட்சே அறிமுக குறிப்புகள்
- ஆர்.அபிலாஷ்
வலது கையும் இடது காதும்
- அ.ராமசாமி
கொரியா ''பள்ளி பள்ளி''
- அப்துல்காதர் ஷாநவாஸ்
விவரிக்கப்படாத சுவருக்கு அப்பால் ஒரு வாழ்வும் இழப்பும்
- கே.பாலமுருகன்
தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்
- ஆர்.அபிலாஷ்
பிரிட்டிஷ் இளவரசரும் இந்திய ராஜாவும்!
- இந்திரஜித்
சூ..மந்திரகாளியும்,,சுட்டுக் கொல்லப்படும் ஆந்தைகளும்
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
தேசத்தின் சாபக்கெடுவும் - தோல்பாவை பிரதமரும்
- என்.விநாயக முருகன்
வேறொன்றுமில்லை.
- ஆறுமுகம் முருகேசன்
கண்களின் பரிசு
- ஜனனிப்ரியா
சிரிப்பதைப் பற்றிப் பேசத் தொடங்கும் மனிதன்
- இளங்கோ
முதுகெலும்புகள் முறிந்த வண்டுக்கூட்டங்கள்
- ராம்ப்ரசாத்
விடியாக்கனவு
- ஷம்மி முத்துவேல்
நிகழ்வு
- சின்னப்பயல்
பவித்ரா
- அ.முத்துலிங்கம்
சிட் கார்மன்
- தமிழில்: ஆர். அபிலாஷ்
வா,,ராசா,,வா
- பாபுஜி
புதைகுழி
- பாபுஜி
click here
விவரிக்கப்படாத சுவருக்கு அப்பால் ஒரு வாழ்வும் இழப்பும்
கே.பாலமுருகன்

" இவர்களுக்கும் நமக்கும்

இடையில் ஒரு பெருஞ்சுவரும்

சில முள்கம்பிகளும் மட்டுமே.

இருளுக்குள்ளிருந்து வெளிச்சத்தை

நோக்கி ஏங்குவதைத் தவிர

வேறொன்றும் கிடையாது அவர்களுக்கு."

 

 

சிறை தொடர்பான தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த படம் என்றால் அது "சிறைச்சாலை" தான். காலனிய காலகட்டத்தில் அந்தமான் தீவில் மிகவும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட குற்றவாளிகளின் நீண்டதொரு துக்க வரலாற்றை இப்படத்தில் காணலாம். சிறை என்ற இருள் சூழ்ந்த அறையைப் பார்க்கும்போதெல்லாம் மிகவும் அடர்த்தியான வலியொன்று மனதில் அப்பிக் கொள்கிறது. சிறைக் கம்பிகளில் பதிந்து கரைந்துவிட்டிருக்கும் கைரேகைகளின் ஆழத்தில் மறைந்துகிடக்கும் எதிர்பார்ப்பின் கதைகள் மானுட சலனத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலிமை பெற்றவை.

கடந்த சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊரிலுள்ள சிறைச்சாலையைக் கண்காட்சிக்காகத் திறந்துவிட்டார்கள். அதே ஊரில் 20க்கும் மேற்பட்ட வருடங்கள் வாழ்ந்து, அந்தச் சிறையையும் பலமுறை கடந்து சென்ற எனக்கு முதன்முறையாகக் கூர்ந்து அவதானிக்க வாய்ப்புக் கிடைத்தது. சிறு பிராயத்தில் பள்ளிப் பேருந்து அவ்விடத்தைக் கடக்கும்போது கூட முள்வேலிகளுக்கு அப்பால் அடைக்கப்பட்டிருப்பது நம்மைப் போன்ற மனிதர்கள்தான் எனத் தெரிந்துகொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை அது(சிறைச்சாலை) எட்டிப் பார்க்க முடியாத ஒரு மர்மமான புதைகுழி.

உண்மையில் அந்தப் புதைகுழிக்குள் விழுந்துகிடப்பவர்கள், எல்லாரையும் போலவே முன்பொரு நாட்களில் மாலை வேளையில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்திருப்பார்கள், வீட்டுக்காகக் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்றிருந்திருப்பார்கள், மகனுடன் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சி பார்த்திருந்திருப்பார்கள், தொழிற்சாலையில் 5மணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்திருப்பார்கள் அல்லது பற்பல கனவுகளின் கட்டமைப்பில் நாளைய பொழுதை நகர்த்துபவர்களாக இருந்திருப்பார்கள். இப்பொழுது குற்றவாளி என அழைக்கப்படும் இவர்கள், எல்லாரையும் போல மிகச் சாதாரண இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்திருக்கக்கூடும் அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு விளிம்பு வாழ்வின் அகநெருக்கடியின் பின்புலத்தில் வாழ்ந்திருக்கக்கூடும்.

ஒரு குற்றவாளி உருவாக்கப்படுவதன் மூலத்தையும் தொடக்கப் புள்ளியையும் இதுவரை யாரேனும் ஆராய்ந்திருப்பார்களா? அவர்களுக்கு வேண்டியது குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு அது முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதை நிகழ்த்திவிட்டால் குற்றவாளி சீர்ப்படுத்தப்படுவான் என்கிற முரணான நம்பிக்கை தேசிய அளவில் வளர்க்கப்பட்டு சட்டங்களாகவும் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடுமையாகத் தண்டிக்கப்படுவதன் மூலம் ஒரு குற்றவாளி மேலும் வலுவான குற்றத்திற்குரிய மனநிலையை அடைகிறான். அதிகார சக்திகளின் மூலம் குற்ற உணர்வு ஆழமாக அவனுக்குள் விதைக்கப்படுகிறது.

ஒரு பிராணி நம்முடைய உடமையை நெருங்கிவிட்டால் அதை உதைத்துத் தூரமாக விரட்டும் சிலரை நீங்கள் பார்த்ததுண்டா? அதுபோலத்தான் குற்றவாளி சமூகத்தின் வெளியிலிருந்து அல்லது உள்கட்டமைப்பிலிருந்து, தீண்டத்தகாதவன் என்கிற முத்திரை குத்தப்பட்டு முள்வேலிகளுக்கு அப்பால் வீசப்படுகிறான். சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு குற்றவாளி மேல்தட்டு ஒழுக்கவாதிகளால் தீர்மானிக்கப்பட்ட ஒழுக்கத்தை மீறியவன் ஆகையால் அவன் தண்டிக்கப்பட்டு சமூக வெளியிலிருந்து முற்றிலும் நிராரிக்கப்படக்கூடியவன் என்கிற தீர்க்கமான கருத்தியல் இங்கே நிலவுகிறது. ஒவ்வொருநாளும் சமூகத்திலிருந்து குற்றம் செய்ததற்காக ஒருவன் அல்லது இருவர் சிறை என்கிற இருளுக்குள் தள்ளப்பட்டு வதைக்கப்படுகிறார்கள். அவர்களை நாம் வன்மையாகப் புறக்கணிக்கிறோம். அவர்களின் உலகம் குரூரத்தாலும் வன்முறையாலும் ஆனது எனத் தீர்மானிக்கின்றோம். ஒட்டு மொத்தத்தில் எல்லா குற்றவாளிகளும் முதலில் சமூகத்தின் எல்லா வகையான அங்கீகாரத்திலிருந்தும் நீக்கப்பட்ட பிறகுதான் கவனிக்கவேபடுகிறார்கள். ஒரு சராசரி மனிதர்களின் கவனம் மிகவும் கொடூரமான ஒரு சாலைப் பிராணியைப் பார்ப்பது போன்ற தோரணையில்தான் அவர்கள் மீது பட்டு விலகுகிறது.

அண்மையில் நான் பார்த்த சிறையைப் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படம் மிகவும் சர்ச்சைக்குரிய விசயத்தை முன்வைத்து குற்றவாளிகளுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் கண்டிக்கிறது. ‘சிறை எண் 211’ என்கிற அப்படம் குற்றவாளிகளை எவ்வகையிலும் நியாயப்படுத்த முயலாமல், அவர்களின் மீதான அதிகாரிகளின் அதிகார மீறலை மட்டுமே முன்வைத்து முரணான செயல்பாடுகளை உருவாக்கிக் காட்டியது. மனநோய்க்கு ஆளானவர்கள் எப்படிச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்களோ, அதே மாதிரிதான் குற்றவாளிகளும் மிகவும் வன்முறையாகக் கையாளப்படுகிறார்கள். இரண்டு வகையான விசயத்திற்கும் ஒரே அணுகுமுறையைப் பிரயோகிக்கும் விதத்தை எப்படி அனுசரித்துக் கொள்ள முடிகிறது?

 

 

 

 

 

 

 

 

 

 

சமூகத்திற்கு முன் அடையாளம் காட்டப்படும் ஒரு குற்றவாளி என்பவன் அதே சமூகத்தின் துரோகத்தாலும் , புறக்கணிப்பாலும், வளர்ப்பாலும் உருவானவனாக இருக்கும் நிலையில், சமூகம் அவன் முகத்தில் மட்டும் காரி உமிழ்ந்துவிட்டுத் தன் துரோகத்தை மறைத்துக் கொள்வது எவ்வகை நியாயம்? இப்படிக் குற்றவாளியை மட்டும் அடையாளம் காட்டி, அவனுக்கு வழங்கப்படும் தண்டனையை மிகப்பெரிய சாதனையாகக் காட்டி ஊடக ஆதரவையும் பெற்றுக்கொண்டு இருக்கும்வரையில், குற்றவாளிகள் மட்டுமே தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். குற்றங்கள் தொடர்ந்து தன்னை அபிவிருத்தி செய்துகொண்டே இருக்கும்.

சிறை தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட எல்லா வகையான சினிமாவும் சிறையை மிகவும் கொடூரமான ஒரு இடமாகவும் வதை செய்யப்படும் இடமாகவும் மட்டுமே காட்டியிருக்கிறது என நினைக்கிறேன். முழுக்க முழுக்க எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்ட சிறை குறித்தான படங்கள் குற்றவாளிகள் நியாயமில்லாத முறையில் நடத்தப்படுவதையும் அவர்களின் மீது பயன்படுத்தப்படும் வன்முறையையும்தான் மையமாகப் பேசிவிட்டுச் செல்கின்றன. தமிழில் எடுக்கப்பட்ட சில முக்கியமான படங்களும் சிறையைப் பற்றிய இருளைத்தான் அப்பிவிட்டுப் போயிருக்கின்றன. ‘விருமாண்டி’, மகாநதி’, சிறைச்சாலை என இன்னும் சில.

குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாம் கொள்ளும் கோபம் சமூகத்தின் பாதுகாப்புக்கு எவ்வளவு நியாயமானதாகத் தோன்றுகிறதோ, அதைவிட இந்த ஒவ்வொரு குற்றவாளிகளும் நியாயமான முறையில் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என நினைப்பது மேன்மையானதே. இனி கரப்பான்பூச்சியை வெறுப்பு கொண்டு பார்ப்பதற்கு நிகரான மனநிலையிலிருந்து குற்றவாளிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். அவர்களின் அகப்பிரச்சினைகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் உரிய பார்வையும் அக்கறையும் வெளிப்படுத்தப்பட வேண்டும். குற்றங்களை முழுவதும் அழித்தொழிக்க முயலும் செயல்பாடாக இதைக் கருதாமல், ஒரு சில மனிதர்களையாவது மீண்டும் எந்தத் தயக்கமும் பயமும் இல்லாமல் இந்தச் சமூகத்தில் வாழ வைக்க முடியும் என்கிற சிறு எதிர்பார்ப்பாக நினைத்துக் கொள்ளலாம்.

சிறை குறித்த முக்கியமான சில படங்களின் மூலம் எனக்குள் தோன்றிய ஓர் எண்ணப் பகிர்வே இந்தப் பதிவு.

கே.பாலமுருகன்

சுங்கைப்பட்டாணி, மலேசியா

 

 

 

 

 

 

bala_barathi@hotmail.com

http://bala-balamurugan.blogspot.com/

 

 

click here

click here
click here