உயிரோசை - Uyirosai
 
தமிழ் எனும் அரசியல்
- வாஸந்தி
பொங்கி எதிர்வரும் வாழ்வு
- ஆர்.அபிலாஷ்
வைகுண்ட ஏகாதசியும் அடை அவியலும்
- எஸ்கா
பெட்ரோல் விலையும் ஆதிக்கச் சக்திகளும்
- நிஜந்தன்
"அப்படி ஒரு காலம்"
- என்.விநாயக முருகன்
ரோஜாக்கைத் தாக்கிய சுநாமி
- அப்துல்காதர் ஷாநவாஸ்
ஹர்ட் லாக்கர் - கொடிய கரங்கள் நெறிக்கும் குரல்வளைகள்
- ஜெகதீஷ் குமார்
பாவம்......இந்த பல்லிகள்!!
- எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
உயிரோசை எழுத்தாளர்கள் கவனத்திற்கு
- பாப்லி
இந்திரா பார்த்தசாரதிக்கு ஒரு விழா-9.7.2010
- -
காகமும் அம்மாவும்
- டெட் ஹியூக்ஸ் - தமிழாக்கம் ஆர்.அபிலாஷ்
சலனங்கள்
- மழையோன்
சுனை மடி
- அப்துல்காதர் ஷாநவாஸ்
கடந்து செல்லுதல்.
- ஆறுமுகம் முருகேசன்..
தன்னோடு ஒரு பேனா வைத்திருத்தல்
- இளங்கோ
பன்னிரெண்டாம் கட்டளை
- ஏ.தேவராஜன்
இரவின் கொடை
- ஜெயபிரகாஷ் வேல்
மான்குட்டியைக் கைவிட்ட பின்
- எம்.ரிஷான் ஷெரீப்
கதாபாத்திரங்களின் உரையாடல்
- சரவண வடிவேல். வே
எரியும் எண்ணெய்
- பாபுஜி
கசப்பு
- பாபுஜி
நவீன ஹைக்கூ
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
இயல் விருது : அதிகாரங்களுக்கு வெளியே ஒரு அங்கீகாரம்
- பிரசாத்
click here
"அப்படி ஒரு காலம்"
என்.விநாயக முருகன்

அப்போது எங்கள் ஊரில் பத்து தெருக்கள் என்றால் தெருவிற்குப் பத்து வீடுகள்தான் இருந்தன. வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும். பெயருக்கு ஒரு திமிர் இருக்கும். சகமனிதனுக்கு ஓர் ஆபத்தென்றால் இந்தத் திமிர் எல்லாம் கரைந்துவிடும். மேளக்காரர் வீடு, வெற்றிலைப் பொட்டிக்காரர் வீடு, மரகதம் வீடு, செல்வராஜ் பட்டறை வீடு. தெருக்களையும் ஒரு நபராகவே பார்க்கும் வழக்கம்.

வீட்டில் யாராவது இறந்துவிட்டால் போதும், தெருவே ஒன்று கூடிவிடும். செல்வராஜ் பட்டறையிலிருந்து மரப்பெஞ்சுகளைக் கொண்டு வந்து விடுவார். துக்கம் இருக்கும் வீட்டில் அடுப்பு பற்ற வைக்கமாட்டார்கள். மரகதம் வீட்டிலிருந்து காபித்தண்ணி போட்டு எல்லாருக்கும் கொடுத்து விடுவார்கள். தெரிந்த உறவினர்கள் வாழும் அக்கம்பக்க ஊருக்கெல்லாம் செய்தி சொல்ல ஒரு ஆள் ஓடுவார். காசு கொடுத்தால், "இருக்கட்டும்ணே, போய் சடங்க நடத்துங்க" என்பார். தலையை சொறிவார். பிறகு கொஞ்சம் பிகு பண்ணி பணம் வாங்கிக்கொண்டு ஓடுவார். அவர் வீட்டில் எழவு நடந்தது போல, காலில் வெந்நீர் கொட்டியது போல ஓடுவார்.

அக்கம்பக்க ஊர்களில் சில சொந்தக்காரர்கள் சொல்லி விடாமலேயே விசயத்தை மட்டும் கேள்விப்பட்டு ஓடிவருவார்கள். கல்யாணத்துக்கு அழைத்தால் போவார்கள். சாவு வீட்டுக்கு அழைக்காமலேயே செல்லவேண்டும் என்பது மரபு. யுகம்யுகமாய் ஜென்மப்பகையுடன் இருக்கும் உறவினர்கள் கூட சாவு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். சம்பந்தி முறையாக இருந்தால் பத்து பதினைந்து ஆட்களுடன் உருமி மேளம் மாலையென்று ஒரு படையே திரண்டு வரும். ஊரிலிருந்து மேளக்காரர்களைக் கையோடு அழைத்து வந்து விடுவார்கள். பஸ்ஸிலிருந்து இறங்கி எழவு நடக்கும் வீட்டுத் தெரு முனை வரை அமைதியாக வருவார்கள். தெருமுனையில் மேளச்சத்தம் அதிரும். ஒரு நீண்ட குச்சியில் மாலையைத் தொங்கவிட்டு தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி வருவார்கள். கூட்டத்தில் இருக்கும் வயதான பெண்கள் ஒப்பாரி சத்தத்துடன் எழவு வீட்டுக்குள் ஓடிவருவார்கள். அதுவரை பிணம் அருகே அமைதியாக இருக்கும் சாவு விழுந்த வீட்டுப் பெண்கள் கூட அவர்களைப் பார்த்து ஒப்பாரி வைத்தபடி எழுந்து கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். பிறகு பெண்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்தபடி ஒப்பாரி வைத்தழுவார்கள். சில இளம்பெண்கள் மட்டும் கூச்சமாய் ஒப்பாரி வைக்கத் தயக்கமாய் அருகே சோகமாய் நின்று கொண்டிருப்பார்கள். சிவப்பு, பச்சை நிற தாவணி அணிந்திருப்பார்கள் (ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு).

கூடவந்த மேளக்காரர்கள், ஏற்கனவே அங்கு மேளம் அடிக்கும் மேளக்காரர்கள் அல்லது இன்னொரு சம்பந்தி அல்லது தாய்மாமன் அழைத்து வந்திருக்கும் மேளக்காரர்களுடன் சேர்ந்துகொள்ள தெருவே அதிரும். அவர்கள் வாசிக்கும் வாத்தியம் பறை எனப்படும். அந்த இசைக்கருவி (கவனிக்க, இசையென்று குறிப்பிடுகிறேன்.) மாட்டுத்தோலால் செய்யப்பட்டிருக்கும். பறையடிக்கும்போது வாத்தியக்கருவி அடிக்கடி இளகிவிடும். வீட்டு முன்னால் காய்ந்த சருகுகளைப் போட்டு தீமூட்டி அதன் மேல் பறையைத் தூக்கிப்பிடித்து வெப்பமூட்டுவார்கள். தோல் இறுகிக்கொள்ளும். வாசிக்கும்போது சவுண்ட் காதைப் பிளக்கும்.

சண்டைபோட்டு இத்தனை வருடமாக உன் வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேண்டா என்று போயிருந்த பெரியப்பா கூட துண்டால் வாயைப் பொத்தியபடியே எப்படிப்பா நடந்துச்சு" என்று நம் பக்கத்தில் வந்து கேட்பார். இறந்துப் போனவர்களின் மகனோ, மகளோ "அப்பா முந்தைய இரவு நல்லா பேசிக்கிட்டே இருந்தார். டீ சாப்பிட்டார். பேப்பர் படித்தார். தூங்கப்போனார். நெஞ்சுவலின்னு சோடா வாங்கிட்டு வர்ற சொன்னாரு.வர்றதுக்குள்ளே…" என்று கேவுவார். "அழுவாதப்பா..பெரியப்பா நான் இருக்கேன்" என்று கட்டிப்பிடித்துக்கொள்வார். வெளியே பறையடிப்பவர்களிடம் ஒரு கூட்டம் சண்டைக்கு நிற்கும். "சாமி, கல்யாணச் சாவு சாமி. பார்த்துக் கொடு சாமி." சத்தம் கேட்கும். காசை வாங்கிக்கொண்டு இப்படி சொல்லியபடியே பறையடிப்பார்கள். மேலத்தெரு ஆண்டித்தேவர் தந்தது ஐம்பது ரூபாய். ஆண்டித்தேவர் மற்ற நாட்களில் எச்சில் கையால் ஈ ஓட்ட மாட்டார். அப்போதெல்லாம் சாவு வீட்டில் யாரும் கணக்குப் பார்க்கமாட்டார்கள். நேரமாயிட்டே இருக்கு. ஒருவர் சொல்வார். பக்கத்தில் வேம்புஐயர் தோட்டத்தில் வெட்டிய பச்சை தென்னைமட்டையை முடைந்து பாடை செய்து கொண்டிருப்பார்கள். வேம்பு ஐயர் திண்ணையில் அமர்ந்தபடி சாவுக்கு வந்திருக்கும் பெரிய பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.

இறந்தவரை தூக்கிப் பாடையில் வைத்து பாடையை இடவலமாகச் சுற்றி எடுத்துச்செல்வார்கள். பாடையைத் தூக்கி தோளில் வைத்துவிட்டால் இறக்கக்கூடாது. சுடுகாடு சென்றுதான் இறக்க வேண்டும் பாடையைத் தூக்கிச் செல்பவர்கள் பின்னால் அழுது கொண்டிருப்பவர்களை திரும்பிப் பார்க்கக் கூடாது. பாடைக்குத் தோள் கொடுத்தால் புண்ணியம். நீ, நான் என்று பாடையைத் தொட்டுத் தூக்க ஆட்கள் வருவார்கள். சனிக்கிழமை இறந்திருந்தால் ஒரு கருப்புக்கோழியை, பாடையில் கட்டி விடுவார்கள். சனிப்பிணம் தனி போகாது. வயதான பெண்கள் பாடையைத் தூக்கும்போது வீட்டிற்கு வெளியே வந்து மாரடித்து அழுவார்கள். பிறகு தெரு முனை வரை அழுதபடி வருவார்கள். தெருமுனையில் ஒருமுறை இறந்துபோனவரின் மனைவியோ மகளோ அமர்ந்து அழ பெண்கள் எல்லாம் சுற்றிக் கட்டிப்பிடித்து அழுவார்கள்.

சுடுகாட்டில் வெட்டியானுக்கு சில்லறைக் காசுகள் போட பாக்கெட்டில் கைவிட்டால் நமக்கு முன் பத்துப் பதினைந்து கைகள் சில்லறைக் காசுகளோடு முன்னால் நீளும். இறந்து போனவனைப் பற்றியே தெரு அன்று பேசும். அவன் செய்த நல்ல விசயங்களை பேசுவார்கள். அவன் அயோக்கியன் என்றால் பம்புசெட்டில் பெண்கள் குளிக்கும்போது மறைந்திருந்து பார்த்து செருப்படி வாங்கியதைப் பற்றி லேசான புன்னகையோடு நினைவுகூர்வார்கள். "நீ மட்டும் உன் அப்பன் மாதிரி இருக்காதடா. சுதாரிப்பா பொழைச்சுக்கோ" அறிவுரை சொல்வார்கள். செத்துப்போனவன் ஜென்ம விரோதியாக இருந்தால் கூட அவன் சாவுக்குச் செல்லவேண்டும் என்பது எங்கள் ஊரில் எழுதப்படாத சட்டம். சாவு வீட்டுக்கு வந்தவர்கள் போகும்போது போயிட்டு வர்றேன்னு சொல்லக்கூடாது.சொல்லாமல் வந்தவர்கள் சொல்லாமலேயே சென்றிருப்பார்கள். மீண்டும் கருமாதியில் ஒன்றுகூடுவார்கள். ஒரு சாவு என்பது சாதாரண விசயம் அல்ல.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் நேற்று பைக்கில் திருவான்மியூர் சிக்னலில் காத்திருந்தபோது பக்கத்தில் கறுப்பு நிற மாருதி வேன் வந்து நின்றது. உள்ளே கண்ணாடிப் பெட்டியில் ஒரு பெரியவரின் உடல் இருந்தது. அதன் பக்கத்தில் ஒருவர் அசுவாரசியமாக அமர்ந்திருந்தார். இன்னொருத்தன் செல்போன் பேசிக் கொண்டிருந்தான். வேனைப் பின்தொடர்ந்து மேலும் சில உறவினர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்கள். எல்லா முகங்களிலும் நூற்றாண்டுகளின் அசுவாரசியமும்,அலுப்பும் படிந்திருந்தது. பெசன்ட் நகர் எலக்ட்ரிக் க்ரிமடோரியம் போவார்களென்று தோன்றியது. சிக்னல் விழ அந்த வேன் வாகன சந்தடியில் விரைந்து மறைந்தது. அநேகமாக அவர்களில் பலர் இன்று காலை மீண்டும் அலுவலகம் விரைந்திருக்கலாம்.

 

click here

click here
click here