உயிரோசை - Uyirosai
 
தி ரீடர் - உள்ளே புதைந்திருக்கும் ரகசியங்கள்
- ஜெகதீஷ் குமார்
யுத்தத்திற்குப் பின்னே இலங்கைப் படையினர் என்ன செய்கிறார்கள்?
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
கடல் தாயை மாசுபடுத்திவிட்டோம்
- எஸ் கிருஷ்ணன் ரஞ்சனா
சாரு நிவேதிதாவை ஆதரிக்கிறேன்!
- இந்திரஜித்
மருத்துவமனைகள்: துண்டிக்கப்பட்ட உலகங்கள்
- வா.மணிகண்டன்
ராவணன்:காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்
- கே.பாலமுருகன்
தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன்
- எஸ்கா
நிதிஷ் - மோடி : ஒரு மாய அரசியல்
- நிஜந்தன்
அப்படி ஒரு காலம்
- என்.விநாயக முருகன்
அகா அகா சிடாப்
- அப்துல்காதர் ஷாநவாஸ்
டெட் ஹியூக்ஸ் கவிதைகள்
- டெட் ஹியூக்ஸ்
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
- மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
முகமூடிகள்
- ராமலக்ஷ்மி
காரணங்களறிதல்
- நளன்
கண்ணாடிச் சில்லுகள்
- மாணிக்
துணையற்ற இரவில் எரியும் கேண்டில் லைட் டேபிள்..!
- இளங்கோ
ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்
- பொன்.வாசுதேவன்
விடைபெறும் உரையாடல்
- பா.சரவணன்
போதி மரம்
- எம்.ரிஷான் ஷெரீப்
நவீன ஹைக்கூ
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா
- ‘
click here
அப்படி ஒரு காலம்
என்.விநாயக முருகன்

 

 ஊருக்குள் டி.வி. பெட்டிகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்த காலம் அது. பத்திரிக்கை ஆசிரியர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களும் பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்றிய காலம். டயனோரா, ஃபிலிப்ஸ்,டெலிராமா இவையெல்லாம் பிரபல டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள். இரண்டு ஆண்டெனாக்கள் வாங்க வேண்டும். டில்லி ஸ்டேஷனுக்கு ஒன்று. தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க சென்னை ஸ்டேஷனுக்கு ஒன்று. டில்லி ஆண்டெணா சின்னதாக இருக்கும். சென்னை ஆண்டெனா பெரிதாக இருக்கும். ஆண்டெனா வாங்கும்போது இரண்டு பூஸ்டர்கள் தருவார்கள். ஒரு பூஸ்டரை ஆண்டெணா மேல் பொருத்துவார்கள். ஒன்றை டி.வி.யுடன் இணைப்பார்கள்.

எனக்குத் தெரிந்து ஊருக்குள் வர்க்க வேறுபாடுகளும், உறவுகள் சிதைவும் தொலைக்காட்சி வந்த பிறகுதான்.சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வண்ணத் தொலைக்காட்சியும், சென்னை ஆண்டெனாவும் வைத்திருந்தவர்கள் ஊருக்குள் செல்வந்தர்கள். ஒரு தெருவில் இரண்டு வீட்டில் மட்டுமே டி.வி. இருக்கும். கறுப்பு வெள்ளை டி.வி. வைத்திருக்கும் நடுத்தர வர்க்க வீட்டில் தெரு ஜனமே கூடி நின்று பார்ப்பார்கள். வண்ணத் தொலைக்காட்சி வைத்திருப்பவர் அலுத்துக்கொள்வார். எங்க வீட்டில் டி.வி. ரிப்பேரு என்று சொல்லி வீட்டுக்குள் திருட்டுத்தனமாக சவுண்டைக் குறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். மாதத்தவணை கட்டி நாங்களும் போட்டிக்கு டி.வி வாங்குவோம். அண்ணனோ, அப்பாவோ கூரைமேல் நின்றபடி ஆண்டெனாவை அட்ஜஸ்ட் செய்தபடி தெரியுதா, பாருடா என்று கத்துவார்கள். ஆங், இன்னும் கொஞ்சம் திருப்புங்க. கிளியரா, இல்லை கத்துவோம். மழை பெய்தால், காற்று அடித்தால் படம் தெளிவாகத் தெரியாது.

சென்னை ஆண்டெனா வைத்திருந்தாலும் இரவு நேரம் மட்டுமே தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.. ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். வெள்ளிக்கிழமை ஒலியும்,ஒளியும். புதன்கிழமை சித்ரஹார். திங்கள்கிழமை சித்ரமாலா (ஒரேயொரு தமிழ்ப்பாட்டு போடுவார்கள்). ஞாயிற்றுக்கிழமை வந்தல் கொண்டாட்டமாக இருக்கும். காலையில் ராமாயணம்.ஹீமேன் ஒளிபரப்பாகும். ராமாயணம்,மகாபாரதம் பார்க்கும் சிறுவர்கள் விளக்குமாற்றுக் குச்சியை(ஈர்க்குச்சி) வைத்து வில்,அம்பு செய்து விளையாடுவார்கள். பார்த்துடா கண்ணுல பட்டுடப்போகுது, பெரியவர்கள் அதட்டுவார்கள். சென்னைத் தொலைக்காட்சி வைத்திருந்தால் ஞாயிற்றுக்கிழமை சொர்க்கம். தமிழ் நாடகங்கள், தமிழ் சினிமா பார்க்கலாம். சார்லி சாப்ளின்,லாரல் ஹார்டியெல்லாம் எங்களுக்கு அறிமுகமானது. ஸ்கூலில் இவற்றைச் சொல்லி,சொல்லி சிரித்துக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் வருடக்கணக்கில் ஜவ்வுபோல இழுக்கும் மெகாசீரியல் ஒளிபரப்பி மக்களை இம்சிக்கவில்லை. ரியாலிட்டி ஷோ எ‌ன்ற கூத்தடிப்பெல்லாம் நடைபெறவில்லை. அளவான விளம்பரங்கள், அரசியல் சார்பற்ற செய்திகள் எல்லாமே அளவாகப் பார்த்துப் பார்த்துக் கொடுக்க திகட்டாமல் இருந்தது.

நல்ல எழுத்தாளர்களது சிறுகதை, நாவல்களெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அகிலனின் சித்திரப்பாவை, சுஜாதா சிறுகதைகள், நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா, கின்னஸ் ரெக்கார்டு என்று சொல்லிக்கொண்டே போகலாம். தொலைக்காட்சித் தொடர்களில் கள்ள உறவு, ஆபாச வசனங்கள், வக்கிரக் காட்சிகள் இருக்காது. மீறி ஏதாவது தொலைக்காட்சி நாடகத்தில் தப்பித்தவறி வந்துவிட்டால் அடுத்த வாரம் எதிரொலி நிகழ்ச்சிக்கு ஆயிரம் கண்டனக் கடிதங்கள் வந்துவிடும். தொலைக்காட்சி நாடகங்கள் லோ பட்ஜெட்டில் எடுக்கப்படும். தூர்தர்ஷனின் குறைபாடென்றால் அரங்கு வடிவமைப்பு. ஒரு வீட்டினுள்ளேயே முழு படப்பிடிப்பும் நடந்துவிடும். பஸ் ஸ்டாண்டை காட்ட வேண்டுமா? ஒரு அட்டையில் பஸ் ஸ்டாண்டு என்று எழுதி அருகே இரண்டு பேரை நிற்க வைத்து விடுவார்கள். ஒருவர் எதிரொலிக்குக் கடிதம் எழுதுவார். சார், கதாநாயகி ஹேப்பி நியூ இயர் சொல்லும்போது அவள் பின்னாலிருந்த காலண்டரில் ஏப்ரல்-1 என்று காட்டியதே. நீங்கள் அரங்கு வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். அது..அது என்று இழுப்பார்கள். அந்த கிளிப்பிங் மீண்டும் காட்டப்படும். ‘அன்று ஏப்ரல்-1 கதாநாயகி ஏப்ரல் பூல் செய்ததால் அப்படி சொன்னாள். சமாளிப்பார்கள்.

வயலும்,வாழ்வும் நிகழ்ச்சி நிலம் வைத்திருந்த சிறுவிவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. தாய்நிலம் தந்த வரம் தாவரம்.எம்.எஸ்.வி குரலில் டைட்டில் பாடல் சொக்க வைக்கும். மாமர இலைகளைப் பூச்சி அரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? சொட்டு நீர் பாசன மகத்துவம் எல்லாம் விளக்கிச் சொல்வார்கள். கல்விக்கு தூர்தர்ஷன் செய்த சேவை அளப்பரியது.காலை பதினோரு மணிக்கு கண்ணாடியணிந்த பேராசிரியர் மெத்தில் ஆல்கஹால் ஃபார்முலாவைக் கரும்பலகையில் வரைந்து விளக்கிக்கொண்டிருப்பார். வட இந்தியக் கிராமங்களில் அஞ்சல் வழிக்கல்வி படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கையில் தீபமேற்றிய புண்ணியம் தூர்தர்ஷனுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை மதிய நேரங்களில் காது கேட்காதவர்களுக்கு சிறப்புச் செய்திகள் வாசிப்பார்கள். ஆளில்லா லெவல் கிராசிங்கைக் கடக்காதீர், வதந்தியைப் பரப்பாதீர் போன்ற கருத்துகளை சொல்லும் கார்ட்டூன் படங்களை ஒளிபரப்புவார்கள். தூர்தர்ஷன் ஒருகாலத்தில் மிகப் பொறுப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தது. மிலே சூர் மேரா தும்ஹாரா என்று ஒரு இந்திய(ஹிந்தி) தேசபக்திப் பாடல் போடுவார்கள். காதுகளுக்குக் கேட்க இனிமையாக இருக்கும். இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து பிரபல பாடக, பாடகிகளும் வெண்ணிற ஆடையில் வந்து படுவார்கள். பெண்குழந்தைகளை கருவில் கலைக்காதீர்கள் போன்ற வாசகங்களுடன் ‌சில பாடல்கள் வரும். அப்போதெல்லாம் பகல் நேரங்களில் சினிமா, நாடகங்கள், திரைப்படப் பாடல்கள் இருக்காது. மக்கள் நிம்மதியாக இருந்தார்கள். பெண்கள் சமையல் வேலையை முடித்து லெண்டிங் லைப்ரரிகளிலிருந்து சிவசங்கரி, அனுராதா ரமணன்,பாலகுமாரன் நாவல்களை வாங்கி படித்தார்கள். ‘ஆனந்த விகடன், கல்கி, தினமணி போன்ற பத்திரிகைகளில் குறைவான சினிமா செய்திகளும், நிறைய துணுக்குகளும், ஜோக்ஸ்களும், சிறுகதைகளும் இருந்தன. சினிமாவை ஊறுகாய் போலவே தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் தொட்டுக்கொண்டன.

காணாமல் போனவர்களைப் பற்றி அறிவிப்பு வரும். தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி. காவல்துறை,எழும்பூர் என்பார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கும். அது எப்படி ஒரு மனிதன் காணாமல் போகமுடியும்? பணத்தை, செயின்,மோதிரத்தை தொலைப்பது போல ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படித் தொலைக்க முடியும்? ஆளைப்பார்த்தால் அறுபது வயது இருக்கும். இவர் காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். கற்பூரம் காற்றில் கரைவது போல இவர் கரைந்துவிட்டாரா. ச்சே..இருக்காது. எங்காவது வடநாட்டுப் பக்கம் இவர் சுற்றிக் கொண்டிருக்கலாம். மனதை தேற்றிக்கொண்டு டி.வி. பார்ப்பேன். காணாமல்போன சிறுவர்களது படம் டி.வி.யில் வந்தால் பயமாக இருக்கும். தெருவில் இறங்கி நடக்கும்போது பயமாய் இருக்கும். நாமும் காணாமல் போய்விடுவோமோ? காணாமல் போனவர்களில் எத்தனை பேர் திரும்பி வந்திருப்பார்கள்? எது எப்படியோ..காணாமல் போனவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு டி.டி. பெரும் வரப்பிரசாதம். காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் டி.வி.யில் வரும்போது உலகமே அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக ஆறுதல் கிடைக்கும்.

சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் படையெடுப்பிற்குப் பிறகு இதுபோன்ற எத்தனையோ பொக்கிஷங்களை இழந்துவிட்டோம். தூர்தர்ஷன் ஹிந்தியைக் குறைத்து பிராந்திய மொழிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அது அழியாமல் இருந்திருக்கும். இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் கொஞ்சம் கூட குழந்தைகள் பார்க்கின்றார்களே என்ற இங்கிதம் இல்லாமல் சாமியாரின் சரச லீலைகளை அரைமணிக்கொருதரம் ஒளிபரப்பினார்கள். தமிழ் சமூகமும் குடும்பத்தோடு அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தது வேறு விஷயம். துருப்பிடித்த மனங்களுடன் அழுக்கேறி நாறிப் போய்க் கிடக்கிறோம்.

நேற்று மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்த மாலைப் பொழுதொன்றில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். தூரத்தில் ஒரு அதிசயம் போல வானத்திருந்து இறங்கி நின்ற வானவில் ஒரு வீட்டு கூரை மேல் விழுந்திருந்தது. தூர்தர்ஷனில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாதபோது திரையில் தெரியும் வண்ண வண்ணக் கோடுகள் சம்பந்தமேயில்லாமல் நினைவுக்கு வர இந்தக் கட்டுரையை எழுதினேன்.

click here

click here
click here