கெட்ட வார்த்தைகள் இரண்டு வகைப்படும். அவற்றில் முதல் வகை எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திட்டுவதற்கானவை; அவை நிரந்தரமானவை; புதிதாக ஒரு மொழியைக் கற்கும் போது முதலில் நமக்குக் கற்பிக்கப்படுபவை. இரண்டாவது வகை சீசனுக்குத் தகுந்தபடி மாறும். தற்போதைய சூழ்நிலையில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் 'பங்குச் சந்தை', 'ஷேர் மார்க்கெட்' போன்றவற்றைக் காட்டலாம்.
பங்குச் சந்தை முதலீடு அந்த அளவுக்கு வெறுப்பையும், சோகத்தையும், ரணத்தையும் ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறது. இதை எழுதும் நாளன்று சென்செக்ஸ் பத்தாயிரத்தைத் தொட்டு விடும் அளவுக்குக் குட்டிக் கரணம் அடித்தது. கிரிக்கெட் நியூஸ் பார்ப்பதற்கு முன்னர் காற்று வாக்கில் 'பத்தாயிரம் புள்ளி' என்று காதில் விழும் போது அதன் தீவிரத்தை நாம் முழுமையாக உணர்வதில்லை. ஏனென்றால் சென்செக்ஸ் சும்மா 12,000 க்குப் போய்விட்டு 10,000 க்குத் திரும்பி வந்ததால் உண்டான வலியல்ல இது. 21,000 க்கு மேல் இருந்து பத்தாயிரத்தை நோக்கி அந்தர் பல்டி அடித்த போது பல இலட்சம் கோடிகள் ஆவியாகிப் போன பரிதாபம்.
(2006 மே மாத வாக்கில் பங்குச் சந்தை 12 ஆயிரம் புள்ளிகளில் இருந்து பத்தாயிரம் புள்ளிக்குச் சரிந்தது. ஏழே நாளில் ஆறு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களின் பணம் காணாமல் போனது. அப்போது எழுதிய வரிகள் கீழே. இப்போதைய நிலைமையைக் காணும் போது 2006 நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. 12 ----> 10 என்பது 21 ---> 10 ஐக் காட்டிலும் பன் மடங்கு தேவலாம்.)

21 மே 2006 அன்று Business Line பொருளாதாரத் தினசரியில் வந்த ஒரு கேலிச்சித்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடைந்ததில் கட்டு போடப்பட்ட கை கழுத்தில் தொட்டிலாடிய படி வரும் முதலீட்டு அறிவுரையாளர் (investment advisor) ஒருவர் தன் உதவியாளரைப் பார்த்துச் சொல்வதாக அமைந்திருந்தது அது.
"ஆமாய்யா.. சென்செக்ஸ் முதன் முதலா 10,000 போனப்ப ஸ்வீட் குடுத்தானே அதே ஆளு தான். இப்போ இப்படிப் பண்ணிட்டான்"
அருமையான மெசேஜ் சொல்கிறது இந்தக் கார்ட்டூன். சந்தை 9,000 புள்ளியில் இருந்து 10,000 புள்ளியைத் தொட்ட போது குதூகலித்தவர்கள் இப்போது அதே 10,000 இல் புலம்புவது ஏன்? அப்போதைக்கும் இப்போதைக்கும் மூன்று மாத இடைவெளிதான். இதில் பெரிதாக வருத்தப்பட ஒன்றுமே இல்லை.
2007 ஜூலை முதல் 2008 ஜனவரி வரையான காலத்தில் புவியீர்ப்பு விசை என்ற ஒரு சங்கதி இருப்பது மறந்துதான் போனது. 15,000 முதல் 21,000 வரை ஆறாயிரம் புள்ளிகள் வெறும் ஆறே மாதத்தில் கூடின. தவிர ஆறு மாதத்தில் 27 ஆயிரத்தைக் கடந்து விடுவோம் என்று பிரபலமான ஒரு இணைய தளத்தில் ஜோசியம் சொன்னார்கள். <http://www.rediff.com/money/2008/jan/07bspec.htm>
ஜனவரி 10 ஆம் தேதி 21,206.77 புள்ளிகள். அதுதான் உச்சக் கட்டம். அதன் பிறகு சறுக்கியது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 10 அன்று 10,527 புள்ளிகள். துல்லியமாகக் கணக்குப் போட வேண்டாம். கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி காலி. ஒரு நாளில் சென்செக்ஸ் அதிகபட்சமாக எத்தனை புள்ளிகள் வீழ்ந்தது என்ற புள்ளிவிபரங்களை எல்லாம் அலசினால் டாப்-12 இடங்களில் எட்டு இடங்கள் 2008 க்குக் கிடைக்கின்றன.
சென்செக்ஸ் என்பது ஒட்டு மொத்த ஷேர் மார்க்கெட்டையும், அங்கு வியாபாரமாகும் எல்லா நிறுவனங்களின் பங்குகளையும் குறிப்பதல்ல. அது பெரிய 30 கம்பெனிகளின் விலையைப் பிரதிபலிக்கும் அளவுகோல் மட்டுமே ஆகும். பெரும்பாலான பங்குகள் சென்செக்ஸ் வீழ்ந்ததை விட அதிகமாக வீழ்ந்திருக்கின்றன. பெரும்பாலான முதலீட்டாளர்கள் - அவர்கள் இன்னமும் பங்குகளை வைத்திருந்தால் - சென்செக்ஸ் சரிந்ததைவிட அதிகமாகத் தொலைத்திருக்கிறார்கள். பொங்கலன்று ரூ1465 க்கு விலை போன ஐசிஐசிஐ வங்கி இப்போது ரூ364.
சரிவு என்பதும், இழப்பு என்பதும் நமக்கு மட்டுமல்ல. சொல்லப் போனால் இந்தியச் சந்தை எவ்வளவோ பரவாயில்லை. ரஷ்யாவில் தொபுக்கட்டீர் என்று விழுந்து மார்க்கெட்டைத் தற்காலிகமாக இழுத்து மூட வேண்டிய கட்டாயம்கூட ஏற்பட்டது. செப்டம்பர் மாதத்தில் உலகெங்கும் உள்ள 52 சந்தைகளுமே கீழ் நோக்கிச் சென்றன. அந்த மாதம் மட்டும் தேச எல்லைகளைக் கடந்து 4.1 டிரில்லியன் டாலர் பணத்தைப் பங்குச் சந்தைகள் காவு கொண்டன. (அக்டோபர் அதனினும் மோசம்)
உலகமயம் ஆகிவிட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. இன்றைய பொருளாதாரச் சூழல் என்பது சிக்கல் நிறைந்ததொரு நுட்பமான eco-system. அதில் வாழை மரத்தில் தேள் கொட்டினால் வவ்வாலுக்குக்கூட நெறி கட்டும்.
ஆனால் ஷேர் மார்க்கெட் அளவுக்கு அதிகமாகக் கீழே விழுந்திருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 'ஏன் இவ்வளவு சரிவு?' என்ற கேள்வியை வைத்துக் கொண்டு பலரும் மண்டையைக் குடைவதைக் காண முடிகிறது. 'கார்ப்பரேட் இந்தியா' ஈட்டும் இலாபத்திற்கு ஏற்ற சென்செக்ஸ் அளவு இதுதானா என்ற கேள்வி ஒரு பக்கம் என்றாலும், சென்செக்ஸ் இருக்கும் அளவை அது 21 ஆயிரமாக இருந்தாலும் சரி 11 ஆயிரமாக இருந்தாலும் சரி நியாயப்படுத்தும் கூட்டமும் பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அது போகட்டும்.
உலகமே ஸ்தம்பித்துவிடும் என்ற தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்க முனைகின்றன. அது தவறு. 1930 இல் ஏற்பட்டது மாதிரியான great depression என்றும் சிலர் கூறுகின்றனர். அதுவும் சரியல்ல. எனினும் இது மிகவும் சிக்கலான, சீரியசான விவகாரம்.
அதன் ஆரம்பப் புள்ளி அமெரிக்கா. திவாலாகும் வீட்டுக் கடனில் ஆரம்பித்து நிதி நிறுவனங்கள் திவால் ஆயின. ஒரு குடும்பம் திவால் ஆகலாம். கம்பெனிகள்கூட திவால் ஆகலாம், ஆனால் ஒரு தேசம் திவால் ஆகுமா? ஆகிவிட்டது என்கிறார்கள். ஐஸ்லாந்து.
ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் இடையே அட்லாண்டிக் கடலில் அமைந்து மூன்று இலட்சத்துச் சொச்சம் மக்கள் தொகையைக் கொண்ட தீவு. 2007 ஐ.நா வாழ்க்கைத்தரப் பட்டியலில் அதற்கு முதலிடம். சராசரி ஆயுள் 81 க்கும் மேல். அந்த நாட்டில் இப்போது ஷேர் மார்க்கெட்டை அரசாங்கம் இழுத்து மூடியுள்ளது. அந்தத் தீவின் கடைசித் தனியார் வங்கி அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டினர் ஐஸ்லாந்து கரன்சி krona வை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அக்டோபர் 6 அன்று ஒரு யூரோ = 131 krona, அக்டோபர் 9 அன்று 340 krona. அதன் பிறகு நோ அந்நியச் செலவாணி எக்சேஞ்ச்.
கைப்பற்றிய வங்கிகளில் பணம் போட்டவர்களுக்கு அவர்களின் வைப்பீடு திரும்பக் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானோர் இங்கிலாந்துப் பிரஜைகளும், நிறுவனங்களுமே ஆகும். சுமார் மூன்று இலட்சம் ஆங்கிலேயர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள். பணத்தை மீட்காமல் விடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு கங்கணம் கட்டியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஐஸ்லாந்து வங்கிகளின் உடைமையைக் கைப்பற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம். பயங்கரவாதக் குழுக்களின் உடைமையை முடக்குவதற்குப் பிரயோகிக்கும் சட்டத்தைப் பிரயோகித்துள்ளார்களாம்.
கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது ஐஸ்லாந்து. ரஷ்யாவிடம் கடன் கேட்டுத் தூது அனுப்பியிருக்கிறார்கள். ரஷ்யா உதவுமா அல்லது IMF துணைக்கு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். National bail out!!
இதெல்லாம் நமக்குப் புலப்படுத்துவது ஒரே உண்மைதான். உலகின் பல பகுதிகளில் உள்ள வங்கிகள் பணத்தை சும்மா வைத்திருக்க முடியாமல் குறைவான வட்டிக்கு வருவோர் போவோருக்கெல்லாம் வாரிக் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கின்றன. நல்ல வேளையாக இந்தியாவில் அந்த நிலைமை இல்லை. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பும், நெறியாள்கையும் வங்கிகளைத் தடம் மாறிச் செல்லாமல் வைத்திருக்கப் பெருமளவு உதவியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வட்டி விகிதத்தைக் குறைக்கிறார்களாம்! நோய்க்குக் காரணமாக இருந்த கிருமியே அந்த நோய்க்கு மருந்தாம்!
அதெல்லாம் போகட்டும், நமது பங்குச் சந்தை என்னவாகும்? வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப ஒரே பதிலைத்தான் வழங்குகிறது. எப்போதுமே blue chip எனப்படும் பெரிய நிறுவனங்களே கடைசியாக சரிவு காணும். அதன் பிறகு இறக்கம் பெரிதளவு நின்றுவிட்டதாகப் பொருள் காணலாம். தற்போதையை நிலை அப்படித்தான் தோன்றுகிறது.
நிதியமைச்சர் சிதம்பரத்தின் வார்த்தைகளைக் கடன் வாங்கினால், "பயத்தில் முடிவெடுக்காதீர்கள். Take informed decisions"
வாரன் பஃபட் வார்த்தையில் சொன்னால், "மற்றவர்கள் பேராசை கொள்ளும் போது பெரும்பயம் கொள்க, பெரும்பயம் கொள்ளும் போது பேராசை கொள்க"
வரலாறு இன்னொன்றையும் திரும்பத் திரும்பச் சொல்கிறது: "பங்குச் சந்தையின் ஒவ்வொரு ஏற்ற இறக்கச் சுழற்சியிலும் பழைய முதலீட்டாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், புதிய முதலீட்டாளர்கள் உருவெடுக்கிறார்கள்"
பழையவர்கள் வெளியேறுவதற்கும், புதியவர்கள் உருவெடுப்பதற்கும் இடையே கால அவகாசம் தேவைப்படுகிறது. அது சில மணி நேரங்களில் இருந்து சில ஆண்டுகள் வரை நீளலாம்.
kuppusamy18@gmail.com