உயிரோசை - 06/10/2008
 
அன்புள்ள (நடிகை) ஷகிலாவுக்கு
- மாயா
வழிதலின் அரசியல்: பாக்- பாலின் -பத்வா
- மனோஜ்
கற்பில் காணும் பண்பாட்டு அரசியல்
- இந்திரா பார்த்தசாரதி
இறப்புரிமை: : தர்மமும் தார்மீகமும்
- வாஸந்தி
படுகொலை : ஹிச்காக்கின் பாணியில்
- சி.வி.பாலகிருஷ்ணன்
அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்
- செல்லமுத்து குப்புசாமி
சென்சார் எனும் சவரக்கத்தி
- சுதேசமித்திரன்
கமல் என்கிற ஆளவந்தான்
- இந்திரஜித்
கிராமத்து வெளிகளில் உயிர்த்திடும் மனிதர்கள்
- ந.முருகேச பாண்டியன்
நான் அறிந்த தி.க.சி.யின் இலக்கிய உள்ளுணர்வு
- தமிழவன்
அதிகாரப் பரவலாக்கமல்ல; பங்கீடு
- அ.ராமசாமி
யோத்தி மாசி!
- ஸ்ரீபதி பத்மநாபா
ஓபியம் தரும் செய்திகள்
- வா. மணிகண்டன்
பலூன் மனிதர்களும் பலிச் சடங்குகளும்
- ஆர்.அபிலாஷ்
அழியும் உருவங்கள்: ஒரு புராதனக் கலையை முன் வைத்து
- முத்துக்குமார்
தர்க்கத்தின் மொழி- அரபு தத்துவவாதி அல்-பராபி ஓர்
- எச்.பீர்முஹம்மது
துடிப்பு
- இளைய அப்துல்லாஹ்
சமனில்லாக் கால்கள்
- நதியலை
சென்னை
- மனோஜ்
கண்ணாடியில் மறைந்த முகம்
- செந்தில் குமார்
குட்டித் தவளைகள்
- நரன்
கலைக்கப்படும் அமைதி
- நந்தாகுமாரன்
வெற்றிடம்
- ஒளியவன்
அடிமைகளை உருவாக்குவது எப்படி
- அனிதா
அப்பாச்சி
- எம்.ரிஷான் ஷெரீப்,(இலங்கை.)
' நேபாளம்' புத்தக வெளியீடு
- ஞான தேஷிஹன்
அந்திமத்தில் அணையும் விளக்குகள்
- தமிழ்மகன்
நாட்டார் நம்பிக்கைகள்
- கழனியூரன்
ஹைக்கூ வரிசை
- அபிலாஷ்
பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழா
- -
முன்னிலை ஒருமை
- -
அரசனில்லாப் படை ஜெயிக்குமா..?
- தொகுப்பு:கழனியூரன்
மணல் வீடு
- சிவன்
அன்புடன் ரகமி
- இளசை அருணாவுக்கு ரகமி எழுதியது
நவீன கொலு
- பாபுஜி
நாடகமொன்றோ நடக்குது
- பாபுஜி
click here
அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்
செல்லமுத்து குப்புசாமி

   இது ஒன்றும் புதிய விஷயமல்ல. சொல்லப் போனால் அளவுக்கு மீறி விவாதிக்கப்பட்டு, துவைத்து உலரப் போட்ட ஒரு சங்கதி. சேது சமுத்திர ராமர் பால விவகாரத்திற்கு நிகரான சர்ச்சையை உருவாக்கிய சங்கதி. எந்தக் காரணத்திற்காக இதைச் செய்வதாகச் சொல்கிறார்களோ அந்தக் காரணம் முன்பை விட இப்போது வலுத்திருக்கிறது.

ஆம் நண்பர்களே. காந்தி பிறந்த நாளன்று பகலில் மூன்று மணி நேர மின் வெட்டில் வியர்வையோடு இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன். நமது மின் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி பெருகிக் கொண்டே வருகிறது. இதே போக்கில் போனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படியே தேங்கிப் போகக் கூடிய அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சமீபத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாகக் கூடியிருக்கிறது. 2007 ஆகஸ்ட் மாதத்தை விட 2008 ஆகஸ்ட்டில் நாம் 76.7 சதவீதம் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறோம். எண்ணெய் சாராத இறக்குமதியும் கூடியிருக்கிறது. என்னதான் ஏற்றுமதி ஓரளவு பெருகியிருந்தாலும் இறக்குமதிகள் அதை விட வேகமாக வளர்ந்து பற்றாக்குறையை ஊதிப் பெரிதுபடுத்துகின்றன.

இந்தியா தனது பெரும்பகுதி எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அது போதாதென்று அதிகரித்து வரும் மின் தேவை இன்னொரு பக்கம். ஒரு தேசத்தின் பொருளாதார பலம் அதன் மின் உற்பத்தியோடு நேரடித் தொடர்புடையது.

நமக்கு சிலிண்டரும் கிடைப்பதில்லை. மின்சாரமும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் எதிர்கால மின் தேவையை மனதில் கொண்டு தொலை நோக்கோடு செய்த காரியம் என்று இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அதன் ஆதரவாளர்கள் வர்ணிக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள். அதன் நல்லது கெட்டது பற்றி விவாதிப்பதற்கு முன் சில பின்னணித் தகவல்களை நினைவு கூர்வது அவசியம்.

உலக வரலாற்றில் இது வரை அணு ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரில் (1945) ஹிரோசிமா மீது போட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேரைக் கொன்றது. மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி மீது வீசப்பட்ட fat man என்ற அணுகுண்டு நாற்பதாயிரம் பேரைக் கொன்றது. அதற்குப் பின் வந்த சந்ததியினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.

ஒரு வழியாக இந்தக் குண்டுகள் இரண்டும் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், உலக அரங்கில் அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு இருந்தது. பனிப்போர் யுகத்தின் ஆரம்ப வருடங்கள் அவை. இப்படிப்பட்ட நேரத்தில் அயர்லாந்தின் முயற்சியில் அநேக உலக நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. போன வரை போகட்டும், இனி மேல் அணு ஆயுதம் வேண்டாம் என்று 'நிறுத்திக் கொள்ளும்' உடன்பாட்டிற்கு அது வித்திட்டது.

1968 இல் அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்பாடு எனப்படும் NPT (Non-Proliferation Treaty) கையெழுத்திற்கு வந்தது. அதன் முக்கிய அம்சங்கள்:

- அமெரிக்கா, சோவியத் யூனியன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை அவ்வாறு வைத்திருப்பதை உடன்பாடு அங்கீகரிக்கிறது. (இந்த ஐந்து நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்)

- மேலே குறிப்பிட்ட ஐந்து நாடுகள் nuclear weapon states (NWS) எனப்படுகின்றன.

- மற்ற நாடுகள் அணு ஆயுதம் தரிக்காத தேசங்கள் ஆகும். அதாவது non-nuclear weapon states (NNWS)

- NWS உறுப்பினர்கள் NNWS உறுப்பினர்களுக்கு அணு ஆயுதம் தொடர்பான தொழில் நுட்பத்தை அளிக்கக் கூடாது.

- அதே போல உடன்படிக்கையில் கையெழுத்திட்ட NNWS உறுப்பினர்கள் NWS உறுப்பினர்களிடம் அதைத் தருமாறு வலியுறுத்தக் கூடாது.

- எனினும் NWS உறுப்பினர்கள் அணு சக்தியை ஆக்கப் பூர்வமான பணிகளுக்கு உபயோகிக்கலாம். அதற்கான தொழில்நுட்பத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட எல்லா நாடுகளும் இந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மூன்று தவிர. அவை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆசியும், அரவணைப்பும் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அதனால் யாரும் பொருட்படுத்தவில்லை.

1968 க்கு முன்பு சோதனை நடத்தி அணுகுண்டு தயாரித்த வல்லரசுகள் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கலாம். அதே ஆயுதத்தை மற்றவர் தயாரிப்பதும், பரிசோதிப்பதும் தவறு என்று கட்டுப்படுத்துகிற ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க முகாம், சோவியத் முகாம் என்று இரண்டாகப் பிரிந்திருந்த உலகில் 'அணிசேராக் கொள்கை' என்று இந்தியா முழங்கினாலும் அது சோவியத் பக்கம் சாய்ந்திருந்தது. ஜோசப் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய ஐந்தாண்டுத் திட்டங்களை இந்தியாவிலும் அறிமுகம் செய்த நேரு இந்தியாவை ஒரு சோசலிச சமுதாயமாக மாற்றினார். எல்லாமே தனியார் கையில் விட வேண்டும் என்று இப்போது பல அறிஞர்கள் வாதிட்டாலும் நேருவின் செயல்பாடு அன்றைய கால கட்டத்தில் நியாயமான ஒன்று. வியாபாரம் செய்ய வந்த 'கிழக்கிந்தியக் கம்பெனி' என்ற ஒரு நிறுவனம் இந்தியாவையே அடிமையாக மாற்றியதை உணர்ந்த எந்த மனிதனும் சுதந்திர இந்தியாவில் சர்வதேச முதலீட்டையும், முதலாளித்துவத்தையும் பரிந்துரை செய்திருக்க மாட்டான்.

எப்படியோ, முதலாளித்துவத்தின் வக்கீலாக உலகை ஆட்டிப் படைத்த அமெரிக்கா சோசலிசப் பொருளாதாரமாகிய சோவியத் யூனியனின் பக்கம் சார்புடைய இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை வளர்த்தெடுத்த கதை உலகறிந்த இரகசியம். இந்தப் பின்னணியில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாத போது பாகிஸ்தானும் கையெழுத்திடவில்லை.

இந்திய சீனப் போர் 1962 இல் வெடித்த போது ஒரு உண்மை புலப்பட்டது. விடுதலைக்குப் பிறகு பொருளாதார மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்திய அரசு இராணுவத்தைப் பலப்படுத்தாமல் விட்டது தெரிய வந்தது. ஒரு சோசலிச நாடான சீனா இன்னொரு சோசலிச நாடான இந்தியாவை ஆக்கிரமித்துத் தாக்கும் என்ற சுடுகிற உண்மையை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தக் கவலையே அவரது உடல் நலத்தைப் பாதித்தது. 64 இல் அவர் இறந்து போனார்.

நேருவின் மகள் இந்திரா காந்தி தந்தையைப் போல இருக்கவில்லை. அவர் அதிரடியான பெண்மணி. அவர் யோசனையின் பேரில் 1968 இல் உளவுத் துறை RAW (Research and Analysis Wing) நிறுவப்பட்டது. 1971 இல் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கியது, இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களை வளரச் செய்து ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வளர்ச்சியை ஒடுக்குவது போன்றவை RAW வின் வேலைகளில் குறிப்பிடத் தக்கவை.

இதை ஏன் குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இந்த இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. 1967-74 சமயத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அதைத் தயாரித்திருந்தார்கள். 1974 புத்த ஜெயந்தி அன்று வெடித்த அந்தக் குண்டு Smiling Buddha என்று அறியப்படுகிறது.

அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாடு செய்திருந்த நாடுகளுக்கு இது கலக்கத்தை உண்டு பண்ணியது, குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஐந்து NWS உறுப்பினர்களுக்கு. சிவில் உபயோகத்திற்குக் கூட இனி இந்தியாவுக்கு அணு சக்தி எரிபொருள் வழங்குவதில்லை என்று முடிவு செய்தார்கள். அப்படி எரிபொருள் விற்கும் நாடுகள் 45 உள்ளன. அவற்றை Nuclear Suppliers Group (NSG) என்கிறோம். இந்த NSG அமைக்கப்பட்டதே 1974 இல் இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனைக்குப் பிறதுதான்.

நம்மிடமே அணு எரிபொருள் இல்லையா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழக் கூடும். இருக்கிறது. நமது கடற்கரையில் யுரேனியமும், தோரியமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதை அப்படியே அணு உலைகளில் பயன்படுத்த முடியாது. பூமியில் கிடைக்கும் யுரேனியம் தாதுவில் இருந்து யுரேனியம் தனிமத்தைப் பிரித்து எடுக்க வேண்டும். அதை மறுபடியும் செறிவூட்டி யுரேனியம் ஐசோடோப் ஆக மாற்ற வேண்டும். அதன் பிறகு அணு உலைகளில் பயன்படுத்த முடியும். அதே போல fast breeder reactor மூலம் புளூட்டோனியம் தயாரித்து அதை வைத்தும் அணு சக்தி தயாரிக்கலாம். இங்குதான் சிக்கலே.

இந்த டெக்னாலஜி விவகாரமெல்லாம் நம்மிடம் இல்லை. அதாவது அணு எரிபொருள் தயாரிக்கும் வல்லமை தற்போது நம்மிடம் இல்லை. அதற்குத்தான் NSG நாடுகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அவை தடை போட்டு 34 ஆண்டுகள் ஆகிறது. அது நீங்குவதற்கு இப்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒரே காரணம் இந்தியாவின் வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பதே காரணம்.

(இதற்குள்ளாக இந்தியா 1998 இல் இன்னொரு முறை அணு குண்டு சோதனை நடத்தியது. வாஜ்பாய் பிரதமர். இரண்டு வாரத்தில் பாகிஸ்தானும் சோதனை நடத்தியது.)

தற்போது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் - அதாவது 1.45 இலட்சம் மெகா வாட்- 64.6 சதவீதம் அனல் மின்சாரம் ஆகும். 24.7 சதவீதம் புனல் மின்சாரம். காற்றாலை, சூரிய சக்தி முதலிய முறை சாரா மின்சாரம் 7.7 சதவீதம். வெறும் 2.9 சதவீதம் மட்டுமே அணு சக்தி மூலம் தயாரிக்கப்படுகிறது.

பெருகி வரும் எரிபொருள் தேவையைச் சமாளிப்பதற்காக ஈரானில் இருந்து ராட்சதக் குழாய் போட்டு எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்தது. 2012 க்குள் 'எல்லோருக்கும் மின்சாரம்' என்ற இலக்கு வேறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனல் மின் உற்பத்தியைப் புதிதாகக் கொண்டு வரும் இயற்கை எரிவாயு மூலம் அதிகரிக்கலாம். குழாய் பாகிஸ்தான் வழியாக வரும் என்பதால் அவர்களும் ஆர்வமாக ஒப்புக் கொண்டனர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறையைக் கவனித்த மணிசங்கர் ஐயர் ஆர்வமாகக் காணப்பட்டார். ஆனால் அமெரிக்கா இந்தத் திட்டத்தை வன்மையாக எதிர்த்தது.

ஈராக் மீது போர் தொடுத்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்காவுக்குக் கண். ஈரான் அதிபர் அமெரிக்காவின் நாட்டாமைத் தனத்தை பகிரங்கமாக எதிர்த்தார். இதனால் அந்த நாட்டோடு இந்தியா பொருளாதார ரீதியாக உறவு பேணக் கூடாது என புஷ் மிரட்டியிருக்க வேண்டும். திட்டம் கைவிடப்பட்டது. மணிசங்கர் ஐயரின் பதவி இன்னொருவருக்குச் சென்றது.

அப்படியானால் நமது கதி? 'நீரின்றி அமையாது' என்று வள்ளவர் பாடிய உலகம் இன்று 'மின்சாரம் இல்லாமல் அமையாது' என்ற நிலையில் உள்ளது. நாம் எடுத்த முயற்சியை அமெரிக்கா முட்டுக்கட்டை போடும் போது அதற்கு மாற்றாக எதாவது உதவி செய்ய வேண்டாமா? அனல் மின் உற்பத்தி இல்லாவிட்டால் அணு ஆற்றலையாவது பயன்படுத்தலாம் என்றால் அதற்கும் NSG நாடுகள் யுரேனியம் கொடுக்காது.

"பரவாயில்லை. நான் கவனித்துக் கொள்கிறேன்" என்றார் புஷ்.

ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்தார் அவர். ஒரு பக்கம் ஈரானுக்குக் கிடைக்க வேண்டிய வியாபார நலனைக் கெடுத்தார். இன்னொரு பக்கம் அணு சக்தித் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு விற்கும் அமெரிக்காவின் வியாபார நலனைக் காப்பாற்றினார்.

தற்போது 4,000 மெகாவாட் அளவில் இருக்கும் இந்திய அணு மின் சக்தி அடுத்த பத்தாண்டில் 25,000 மெகாவாட் ஆக உயரும் என்ற கணிப்பு உண்மையானால் அதற்கு 150 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்கிறது ஒரு கணிப்பு. அணு உலைகளை இந்தியாவிற்கு விற்று அமெரிக்கா காசு பார்க்கலாம்.

இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரு நாடு. அப்படிப்பட்ட நமக்கு அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். எனவே இது ஒரு win-win சூழல் என்றுதான் சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் U.S. Atomic Energy Act சட்டத்தின் 123 வது ஷரத்தில் மாற்றம் செய்து இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தைத் தரலாம் என்று மாற்றினார்கள். ஏற்கனவே பல நாடுகளுடன் அமெரிக்க 123 உடன்படிக்கை செய்துள்ளது. ஆனால் அவையெல்லாம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டவை. இந்தியாவிற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுத்து சட்டத் திருத்தம் செய்தனர்.

இந்த 123 ஒப்பந்தம் நம்மைக் கட்டுப்படுத்தவில்லை. அதாவது இந்தியா அணுகுண்டு தயாரிக்கக் கூடாது என்று கட்டுப்படுத்தவில்லை. அதே நேரம் மின்சாரத்திற்கு என்று வாங்கும் எரிபொருளையும், தொழில்நுட்பத்தையும் அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. அதற்குப் பயன்படும் உலைகளை சர்வதேச அணு சக்தி முகமை International Atomic Energy Agency (IAEA) பரிசோதிக்கலாம். கண்காணிக்கலாம்.

நம்மிடம் உள்ள 22 உலைகளில் 14 மட்டும் மின்சாரத்திற்குப் பயன்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறோம். மிச்சத்தில் அணு குண்டு தாயரித்துக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தத்திற்கு சர்வதேச அரங்கில் பெரும் எதிர்ப்பு இருந்தது. அணு ஆயுதமும் வைத்துக் கொண்டு, சிவில் தொழில் நுட்பம் மற்றும் எரிபொருளை சுலபமாகப் பெறும் சலுகையை இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஏனென்றால் அந்த ஐந்து நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் (ஈரான், வட கொரியா என்ற அடாவடிகள் தவிர) அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஆயுதம் தயாரிக்காமல் வைத்திருந்தன. ஆகையால் இது எந்த அளவிற்கு இந்தியாவிற்குச் சாதகமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இடது சாரிகள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது கொள்கை ரீதியில் ஆகும். அதாவது அமெரிக்கா என்பது ஏகாதிபத்திய நாடு. கம்யூனிசத்தின் எதிரி. ஆகவே கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் அமெரிக்காவோடு போடும் எந்த ஒப்பந்தத்தையும் எதிர்க்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது. விடாப் பிடியாக நின்ற மன்மோகன் சிங் வென்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் 298 க்கு 117 என்ற வாக்கு வித்தியாசத்தில் செப்டம்பர் 28 அன்று ஒப்புதல் கொடுத்தது. 'காங்கிரஸ்' என்பது நம்ம ஊர் மக்களவையைப் போன்ற பிரதிநிதிகள் சபை ஆகும். மாநிலங்களவையைப் போல உள்ளது செனட் எனலாம். அக்டோபர் முதல் தேதி செனட் சபையும் 86-13 என்ற கணக்கில் ஒப்புதல் கொடுத்தது.

அதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் காண்டலிசா ரைஸ் செனட் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா மீண்டும் அணு குண்டு பரிசோதனை நடத்தினால் சிவில் அணு சக்திக்கான உதவியை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். உதவி செய்கிறவனின் நிலையில் இருந்து பார்த்தால் அது சரிதானே!

ஆனால் அதற்காக நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் ஏற்கனவே அணுகுண்டு பரிசோதனை நடத்தியிருக்கிறோம். அணு ஆயுதமும் நம்மிடம் உள்ளன. IAEA கண்காணிப்புக்கு உட்படாத உலைகளில் நம் ஆயுதத் தேவைக்குப் போதுமான வேலைகளைச் செய்து கொள்ள முடியும்.

ஒரே சிக்கல் நாம் மீண்டும் சோதனை நடத்தினால் மட்டுமே. அப்போது நம்மிடமே தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்திருக்க வேண்டும். போதுமான அணு எரிபொருளை நாமே உருவாக்கும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். அதனால் பிரச்சினை இருக்காது. ஒரு வேளை அமெரிக்கா தனது உதவியை நிறுத்திக் கொண்டாலும் தற்போதுள்ள நிலைமையை விட மோசமாக இருக்காது. இப்போதும் கூட NSG நமக்கு எரிபொருள் தருவதில்லையே!

இரண்டு நாடுகளும் விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. இரு தரப்பிலும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடு உண்மையிலேயே பாரட்டத் தக்கது. இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்திருப்பதாகச் சொல்வது சரியாகப் படவில்லை. அதே நேரம் நமது மின் தேவைக்காக மேற்கத்திய நாடுகளில் உதவியைப் பெருமளவு சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தியாவோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த நாடு தனது மொத்த மின் உற்பத்தியில் 87.5 சதவீதம் அணு சக்தி மூலம் தயாரிக்கிறது. அணு சக்தி ஒப்பந்தம் போட்ட உடனேயே நமது மின் தேவையை நிறைவு செய்து விடுவோம் என்று பொருளல்ல. நாம் இப்போதுதான் 2.9 சதவீதத்தில் உள்ளோம். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


kuppusamy18@gmail.com

click here

click here
click here