
ஈரானை நினைக்கும்போது மஜித் மஜிதியின் `சுவர்க்கத்தின் குழந்தைகள்`தான் நினைவுக்கு வருகிறது. தங்கையின் காலணியைத் தொலைத்துவிட்டு அண்ணன் அலி படும்பாடுதான் கதை. அதே கதையை வைத்து சிங்கப்பூரிலும் ஓர் உன்னதமான, ஒரிஜினலான படம் எடுத்து நிறைய பாராட்டையும் விருதுகளையும் பெற்றது. இன்னும் பல நாடுகளில் அந்தக் கதை வெவ்வேறு மொழிகளில் படமாகி பாராட்டையும் புகழையும் பெற்றிருக்கலாம்.
எனக்கு அந்தப் படத்தில் பிடித்தது அண்ணன், தங்கை கதையல்ல. அந்த அப்பாவின் கதை. பையனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடு வீடாகச் செல்வார். ஒரு வீட்டில் நாய் இருக்கும். உடனே மகனை விட்டுவிட்டு அவர் சைக்கிளோடு ஓடிவிடுவார்.
என்னைப் பொறுத்தவரை சுவர்க்கத்தின் குழந்தைகள் படத்தில் மிகவும் பிடித்தது அந்த சுவர்க்கம்தான். சுவர்க்கத்துக்கும் அவருடைய மனைவிக்கும் பிறந்த குழந்தைகள்தானே இரண்டும்.
நான் செய்தித் துறையில் கொஞ்சம் இருப்பவன், இருபது வயதில் இருந்து. பெரிய ஈடுபாடு என்று சொல்ல முடியாது. அவ்வப்போது அந்த வேலையைச் செய்திருக்கிறேன். நிறைய செய்திகளைப் படித்து, நிறைய செய்திகளை எழுத வேண்டியிருக்கும். பெரும்பாலும் நமக்குத் தொடர்பே இல்லாத செய்திகளாக இருக்கும்.
என்னுடைய மொத்த அனுபவம் மிகவும் குறைவு. மாணவனாக இருக்கும்போது தமிழ் நேசனில்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று மாத விடுமுறை வருமே அப்போது.
ஒரு மாதம்தான் இருந்தேன். அங்கே இருந்தவர்கள் எல்லாமே மூத்தவர்கள். அவர்களுக்கு இரண்டு செய்தி இருந்தது. ஒன்று சாமிவேலு செய்தி. இன்னொன்று தமிழ்நாட்டுச் செய்தி. ஓசையில் இருந்த என் நண்பர் ஏன் அங்கு போனீர்கள் இங்கு வந்துவிடுங்கள் என்றார். எனவே ஓசையில் இரண்டு மாதம் இருந்துவிட்டு மீண்டும் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டேன். ஓசையில் கொஞ்சம் இளைஞர்களாக இருந்தார்கள். கவிஞர் அக்கினி அங்கு செய்திப் பிரிவு ஆசிரியராக இருந்தார். அவருக்குத் தென் ஆப்பிரிக்காதான் பிடித்தமான நாடு. அங்கு நடப்பதை உணர்ச்சிகரமாக எழுதுவார்.
சிங்கப்பூரில் தமிழ் முரசுக்கு வந்தபோது மெய்தீன் செய்தி ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பாலஸ்தீனச் செய்திதான் மிகவும் பிடிக்கும். அக்கினி ஓர் இயந்திரம். காற்றும் நெருப்பும் சேர்ந்து கொண்டதுபோல் மிகவேகமாக எழுதித் தள்ளிவிடுவார். மெய்தீனும் அப்படி எழுதியிருக்கலாம். ஆனால் நான் பார்த்தபோது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். வலது கை பாதிக்கப்பட்டுவிட்டது. இடது கையால் எழுதப் பழகி மிகவும் சிரமப்பட்டு எழுதுவார். அக்கினிக்கு செய்தி தவிர கவிதையும் இருந்தது. ஆனால் மெய்தீனுக்கு வேறு எதுவும் இல்லை. எனவே அவருடைய செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். செய்தி நிறுவனங்களில் இருந்து வரும் ஆங்கிலச் செய்திகளை ரத்தமும் சதையும் சேர்த்து அவர் எழுதி, புதிதாக நடமாடவிடுவார்.
தமிழவேள்களான கோ சாரங்கபாணி, திருநாவுக்கரசு, ஆதி குமணன் போன்றவர்கள் ஒரு பருந்துப் பார்வையோடு பத்திரிகையைப் பார்த்தனர். விற்பனை, விளம்பரம், பத்திரிகை போகும் பாதை என்று அவர்களுக்கு வேறு பல விஷயங்கள் இருந்தன. அவர்களைப் பொறுத்தவரை செய்தி என்பது பத்திரிகையில் இடம்பெற வேண்டிய முக்கியமான ஒன்று. செய்தி இல்லாவிட்டால் எப்படி அது பத்திரிகையாகும்? அதனால் பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால் செய்தி ஆசிரியர்கள் அப்படி அல்ல. அவர்கள் செய்தியோடு மாரடித்து வாழ்வார்கள். ஒவ்வொரு செய்தியும் அவர்களைப் பாதிக்கும். எந்தச் செய்தி அவர்களைப் பாதிக்கும் என்பது அவர்களுடைய பெற்றோர் அவர்களை எப்படி வளர்த்தார்கள் என்பதைப் பொறுத்தது. அல்லது அவர்களுடைய ஆர்வங்கள், பாசங்கள் போன்றவற்றைப் பொறுத்தது. ஆனால் செய்தி வெறும் செய்தி அல்ல. அது உயிருள்ள ஒன்று. வளைந்து வளைந்து துடித்துத் துடித்து எழுதுவார்கள். செய்தி சாயும்போது அவர்களும் சாய்வார்கள். செய்தி நிமிரும்போது அவர்களும் நிமிர்வார்கள். `ஈராக் மீது அமெரிக்கா போர்நாயை ஏவிவிட்டது!` என்றுதான் அவர்களுக்கு எழுத வரும்.
நான் சிங்கப்பூரில் மிகவும் சுவாரஸ்யமாகப் படித்தது மெய்தீன் எழுதிய செய்திகளைத்தான். கதை, கவிதைகள் எல்லாம் ரத்தம் வற்றிப் போய்ச் சப்பென்று இருக்க, சப்பென்ற செய்திகளை உயிர்கொடுத்து வளர்த்தார் மெய்தீன். அவர் மட்டும் அல்ல. அவர் போல் நிறைய பேர் அந்தந்த ஊர்களில் இருப்பார்கள். அன்பாகப் பழகுவார்கள். எனக்கும் மெய்தீனுக்கும் கிட்டத்தட்ட நாற்பது வயது வித்தியாசம் இருக்கும். `வாங்க பிரதர்!` என்பார்.
மெய்தீன் போன்றவர்களை யாருக்கும் தெரியாது. அவர் எழுதியது எதற்குமே அவர் பேர் போட்டதில்லை. தலையங்கம், செய்தி எதற்கும் பெயர் போட முடியாது. தமிழ் முரசில்கூட அந்தக் காலத்தில் இரண்டு மெய்தீன் இருந்ததாகச் சொல்கிறார்கள். இன்னொரு மெய்தீன்தான் பிரபலமானவராம். அவரை எனக்குத் தெரியாது. பழைய ஆட்கள் இதைப் படிக்க நேர்ந்தால் அந்த இன்னொரு மெய்தீனைப் பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தவறாக நினைத்துவிடுவார்கள்.
நான் சொல்லும் மெய்தீன் என்னுடைய நினைவில்தான் இருக்கிறார். மனதில் அவரைப் பற்றிய புகைப்படங்களும், வீடியோ படங்களும் உள்ளன. அவற்றை `பாரம்-இறக்கி` மின்-அஞ்சலில் அனுப்ப முடியாது.
நேரில் பார்த்ததால்தான் எனக்கு மெய்தீனைத் தெரிகிறது.
செய்திகளைப் போல்தான் செய்தி ஆசிரியர்களும். அவர்களை யாருக்குமே தெரியாது. சிங்கப்பூரில் உண்மையான தமிழவேள் மெய்தீன்தான். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? அவர்களுக்குத் தெரிந்தவர்கள்தான் அவர்களுடைய தமிழவேள்கள்.
பத்திரிகையை வாங்கி ஆர்வமாகச் செய்திகளைப் படிப்பவர்கள் அதை யார் எழுதி இருப்பார் என்று யோசிப்பதே இல்லை.
செய்தி ஆசிரியரே இப்படி என்றால் செய்தியின் நிலைமை என்ன? ஈரானைப் பற்றி இப்போது வரும் செய்திகளை வைத்து ஈரான் என்பவர் யார் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? அதிபர் அஹ்மெடினிஜாட் நல்லவரா கெட்டரா? எதை வைத்துச் சொல்வது? செய்திகளை வைத்தா? நல்ல வேடிக்கையாக இருக்கிறதே.
செய்தியின் செய்தி என்னவென்று தெரிந்தவர்கள் செய்தியை ஒரு செய்தியாக நினைக்கவே மாட்டார்கள்.
அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 27 வயது நேடா ஆகா சுல்தான் மரணம் அடைந்த செய்தி உலகெங்கும் பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. யூடியூப்பில் கோரக்காட்சியாக வந்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. அதை ஒருவர் எழுதியிருப்பார். நிச்சயம் அன்று அவர் மனம் உடைந்திருக்கும். உலகெங்கும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, அவரவர் பத்திரிகைக்கு அதே செய்தியை எழுதும்போது மனம் உடைந்திருப்பார்கள்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்தப் படமும் செய்தியும் நெஞ்சைப் பிழிவதாகச் சொல்லியிருக்கிறார்.
நெஞ்சைப் பிழிவது என்றால் என்ன? ஒரு நெஞ்சை எத்தனை முறை பிழிய முடியும்? பிழிந்த பிறகு அதனால் உயிருக்கு ஏதும் ஆபத்து வருமா?
செய்திகள் எழுதிய அனுபவத்தால்தான் எனக்கு இந்த ஐயங்கள் வருகின்றன. இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் இறந்தபோது நெஞ்சு என்ன செய்து கொண்டிருந்தது?
வயர் பிடுங்கிக் கொண்டிருந்ததா?
என்ன இப்படிச் சொல்லிவிட்டானே என்று நெஞ்சு துடிக்கிறதா? அந்த நெஞ்சை என்ன செய்யலாம்? தக்காஷிமாயாவில் வயர் மாட்டிய பழுப்பு நிறக் காலணி வாங்கி அடிக்கலாமா?
இதை நான் எழுதுவதாலும், நீங்கள் படிப்பதாலும் ஏற்படும் பதற்றங்கள் உண்மையானவை.
ஆனால் செய்திகளில் வரும் பதற்றம், சினிமாவில் வரும் பதற்றத்தைப் போல் போன காட்சி, அடுத்த காட்சி ஆகியவற்றுக்கு இடையே வரும் ஒரு காட்சி.
சிலர் கண்விழித்ததும் காலைக் காட்சி சினிமா பார்க்கிறார்கள். சிலர் பத்திரிகை படிக்கிறார்கள்.