உயிர்மை - செப்டம்பர் 2008
 
வெற்றிகள் காட்டும் திசைகள்
- மனுஷ்ய புத்திரன்
ரெட்டணை துப்பாக்கிச் சூடும் ஆறாவது ஊதியக் குழுவும்
- ச.தமிழ்ச் செல்வன்
அலெக்சாந்தர் சோல்செனித்சின் : இருளைக் கடந்த கலைஞன்
- சுகுமாரன்
ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்
- சாரு நிவேதிதா
மஹ்முத் தர்வீஸ் : காத்திருத்தல் எனக்கு பிடிக்காது
- யமுனா ராஜேந்திரன்
-
- -
குமுதத்தின் கதை
- பிரபஞ்சன்
பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு
- எஸ்.ராமகிருஷ்ணன்
சிங் இஸ் கிங்
- பாரதி மணி
மறையும் உயிரினங்கள்
- சு.தியடோர் பாஸ்கரன்
மறக்கப்பட்ட தாமிரபரணிப் படுகொலை
- மாயா
புத்தொளியின் வெளி
- இசை
கருணை
- கணேசகுமாரன்
அவர் வந்துகொண்டிருக்கிறார்
- மா.காளிதாஸ்
நரன் கவிதைகள்
- -
பிரபஞ்சம் தோன்றிய போது
- எஸ்.பஞ்சலிங்கம்
அம்மாவின் இசை
- ரவி உதயன்
கடவுளைக் கொலை செய்தவர்கள்
- சலனி
சிறுகதை:இரண்டு நபர்களைப் பற்றிய ஒரு செய்தி
- எஸ்.செந்தில்குமார்
சின்னப்பாப்பா: பாலியல் தொழிலாளியின் குட்டி சரிதை
- வா.மு.கோமு
கதீட்ரல்
- ரேமண்ட் கார்வெர்
யாமம்: இரவால் கோர்க்கப்பட்ட கதைகள்
- சமயவேல்
கடிதங்கள்
- -
click here
கடிதங்கள்
-

உயிர்மை ஆகஸ்ட்-2008- சுப்ரமணிய புரம் துரோகத்தின் காவியம்-சாருநிவேதிதா. குறிஞ்சி மலர் போன்று தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சில படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடமும், வணிக ரீதியில் வெற்றியும், திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு முக்கியமானதும், ரசிப்புத் தன்மையுடனும் மலரும் நினைவுகளாய் அமைந்துவிடுகின்றன. இப்போது அது சுப்ரமணியபுரம் 'காலமுறை' படங்கள் ஆன இருவர், சிறைச்சாலை, வரிசையில் அமைந்துள்ள இப்படத்தின் இயக்குனர் சசிக்குமாரின் அனைத்துச் செயல்பாடுகளும் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான ஒன்று.

சி.எஸ்.
திருநெல்வேலி

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஈழத்தமிழர் அனுபவித்து வரும் சட்ட ரீதியான உச்சக்கட்ட அவஸ்தையை இளைய அப்துல்லாஹ் லண்டன் விசா மூலம் விவரித்துள்ளார், பாராட்டுகள்.   

அணுசக்தி உடன்படிக்கை பற்றி மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்து விளக்கியுள்ளார் யமுனா ராஜேந்திரன்   இந்தக் கட்டுரையைத் துண்டுப் பிரசுரமாகப் பொதுமக்களிடம் வினியோகம் செய்தால் மக்களின் ஒத்துழைப்பினையும் பெறமுடியும் என்பது தெளிவு.

குடந்தை பரிபூரணன்

சுப்ரமணியபுரம் படத்தின் விமர்சனம் படித்தேன். சாருநிவேதிதாவின் நேர்த்தியான விமர்சனத்திற்குப் பாராட்டுகள். அழகான விமர்சனம். மனம் திறந்து எழுதியுள்ளார். வெல்டன்! அது சரி, எத்தனை நாட்களுக்குத்தான் மதுரையைச் சுற்றியே படம் எடுப்பீர்கள் அதைவிட்டு கீழத் தஞ்சைக்கு வாருங்கள் அங்கே உங்களுக்கு அழகழகான கதைகள் கிடைக்கும் என்று அழகாக அழைப்பு விடுத்து முடித்துள்ளார் எழுத்தாளர் சாருநிவேதிதா. அதை முடித்த விதமே அழகுதான். 

ஜி.குப்புசுவாமி
சங்கராபுரம்

தலையங்கத்தில் கூறியது போல் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்தியாவை ஆளும் தகுதி சிபி சோரன்களுக்கும் பப்புயாதவ்களுக்கும் மட்டுமே உள்ளது என்று எழுதும்போது ஆசிரியருக்கு மனம் எப்படி வலித்திருக்கும் என்று படித்து முடித்த போது அறிய முடிந்தது.

எஸ்.ராமகிருஷ்ணனின் வலி தரும் பரிகாசம். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. கோபி கிருஷ்ணனின் கடைசி காலம் வலி தருவதாக இருந்தது என்பதைப் படித்தபோது ஒரு படைப்பாளியின் வாழ்க்கை இப்படியா அமைய வேண்டும் என்று விரக்தியே மேலிட்டது.

ச.தமிழ்ச்செல்வனின் பண்பாடு படும் பாடு அவர் சார்ந்த இயக்கத்தின் கருத்தாக இருந்தது.

அ. அப்துல் காதர்
சென்னை

ஐந்தாவது ஆண்டுநிறைவு இதழாக உயிர்மை வெளிவந்துள்ளது. தமிழ் எழுத்துத் தடத்தில் உயிர்மை இதழ் பதித்துள்ள விஷய ஞானமுள்ள படைப்புகள் ஏராளம். பொருள் பொதிந்த கட்டுரைகள், சிறுகதைகள், இசை மேதைகள் குறித்த தகவல்கள், அனுபவச் சிதறல்கள் என ஏராளமானவற்றைச் சொல்லிக்கொண்டே போகமுடியும்.

சாரு நிவேதிதாவின் திரைவிமர்சனம் (சுப்ரமணியபுரம்) தமிழ்ச் சினிமாவுக்குப் புதுரத்தம் பாய்ச்சியுள்ள திரைப்படத்தினைச் சிலாகித்துப் பேசுகின்றது. இப்படி எழுதுவதும், பாராட்டுவதும் இன்றைய சூழலில் முக்கியமானவையென்றே தோன்றுகின்றது. சாரு குறிப்பிடுகின்ற மேற்கோள்களும் புகழுரைகளும் வெளிப்பார்வைக்கு, அதிகப்படியான புகழ்ச்சியாகத் தோன்றும். ஆனால் ஆழமாகக் கூர்ந்து நோக்கின் அந்தப் புகழுரைகள் பொறுத்தமானவையென்றே விளங்கும்.

திரும்ப முடியாத பாதைகள். பிரபஞ்சனின் கட்டுரை (பகவத் கீதை பாடமும், பலான படங்களும்) ஆரம்பத்திலேயே அப்பட்டமாக உண்மையைப் பேசுகின்றது. இப்படிப் பேசியே, எதிர்ப்புகளைச் சம்பாதித்துக்கொண்ட படைப்பாளிகளில் பிரபஞ்சன் முதன்மையானவர். துணிவும் நெஞ்சுரமும் கொண்ட குணங்களினால், பல இதழ்களில் தொடர்ந்து பொறுப்பில் இருக்க முடியாமல் விலகினார். பாரதி மணி கட்டுரை-ரயில்வே துறையில் கடந்த அய்ம்பது ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள வசதிகளை இவ்வளவு சுவாரசியமாக வேறு எவரும் எழுத முடியாது என்று எண்ணுகிறேன். பல உண்மைகளை வெளிப்படுத்தும்போதுகூட அதில் நகைச்சுவை இழையோடுகின்றது. பாலமுருகனின் கவிதை இறந்தவர்களின் கைகள் - வாசிக்கும் போது மனதை என்னமோ செய்கின்றது.

கே.ரவிச்சந்திரன்
ஈரோடு

இந்திய அரசியலில் ஏற்பட்ட விரும்பத்தகாத மாறுதல்களால் ஜனநாயகம் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறது. மக்களாகவே மக்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மக்களாட்சி கிரிமினல்களுக்கான கிரிமினல் ஆட்சியாக சிபு சோரன்களாலும் பப்புயாதவ்களாலும் மாறியதோடு மட்டுமல்லாமல் இன்னும் எவ்வளவு மோசமாகுமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் மிகுந்துவிட்டதையும் அது திடீரென்று முடிந்துவிடாதென்றும் ஒரு ஆட்டம் போட்டுவிட்டுதான் ஓயும் என்றும் 'உயிர்மை' தலையங்கம் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.

சாமி
திருவண்ணாமலை

பிரபஞ்சனின் 'திரும்பமுடியாத பாதைகள்' வெகுஜனப் பத்திரிகைகளின் மற்றும் அதன் ஆசிரியர்களுடைய மறுபக்கத்தைப் புரட்டிப் போட்டது. இம்மாதத் திரை விமரிசனம் சாரு நிவேதிதாவால் சிறப்பாக எழுதப்பட்டது இம்மாத உயிர்மையின் ஆகச்சிறந்த படைப்பாக அ.முத்துக்கிருஷ்ணனின் 'மலத்தில் தோய்ந்த மானுடம்' அமைந்தது. இம்மாதத்தின் மற்றொரு புதிய  பத்தியான ச.தமிழ்ச்செல்வனின் 'பண்பாடு படும் பாடு' மேட்டுக்குடி மக்களின் பண்பாட்டு ஆர்வத்தைத் தோலுரித்துக்காட்டியது. மாயா-வின் 'ஜெனரல் ராணியின் சாகசங்கள்' ஒரு வித ஆர்வத்தையும் இறுதியில் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

தென்றல்.கோ. சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்.

'ஒரு அரசு இந்தக் குறுகிய காலத்தில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டுகிறது என்பதுதான் அடிப்படையான கேள்வி. சிந்திக்க வைக்கும் தலையங்கம் 'அதிகாரத்தின் விலை' அதிகாரம் அம்பானிகளின் கைகளில் இருக்கிறது.

சுவர்களுடன் பேசும் மனிதர் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை படித்தேன். ஆதிகாவியமான கில்காமேஷ் இலக்கியமும், களிமண் தட்டைகளில் பாதுகாக்கப்படும் சுமேரிய எழுத்து முதலிய செய்திகளோடு தான் சந்திக்கும் நபர்களின் உள்ளங்களைப் பதிவு செய்வது அவருக்கே உரித்தான பணி. அதுவும் யேசு பேசிய மொழி 'அராமிக்' என்பது படித்த போதுதான் தெரிந்தது.

'சொல்லில் அடங்காத இசை' 'என் அப்பாவின் ரேடியோ ஷாஜி' தனது கட்டுரையில் பால்ய பருவத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி இசையின் ஆர்வம் தான் வளர்ந்த கிராமத்தில், அப்பாவின் ரேடியோவில் தொடங்கி கட்டுரை வரை அழகாகப் பதிவு செய்துள்ளார். இறந்த காலங்களை நிகழ்காலங்களில் நிறுத்திப் பார்க்கும் ஷாஜி மனதில் நிற்கிறார்.

எம்.சிவபாரதி
தென்காசி

அணுசக்தி ஒப்பந்தம்குறித்து விரிவாக விளக்கியிருந்தார் யமுனா ராஜேந்திரன். அணுசக்தி தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்தும், நிறுவனங்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. இறுதியில் கட்டுரையை இடது சாரித் தோழர்களுக்கு வீர வணக்கத்துடன் முடிந்திருந்தது. நெஞ்சை நெகிழ வைத்தது. எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை அருமை. அவரது வாழ்க்கைப் பயணத்திலிருந்து நாமறிந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் அதிகம் என அறியமுடிந்தது. மலம் அள்ளும் மனிதர்கள் குறித்தும் அவர்களின் துயரங்கள் குறித்தும் அ.முத்துகிருஷ்ணன் நன்கு விளக்கியிருந்தார். ஏன் அவர்களுக்குக் கழிவு நீர்க்குட்டைகளுக்கு அருகில்தான் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டுமா? என்ற நிலைமை சிந்தனையைத் தூண்டுகிறது. மொழி பாதுகாப்பு குறித்து அ.முத்துலிங்கம் கட்டுரை மூலம் விரிவாக அறியமுடிந்தது. மேலை நாட்டின் பண்பாடு குறித்து நமது இந்தியப் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருக்கிற புத்தியைப் பற்றி நன்கு விவரித்திருந்தார், ச.தமிழ்ச் செல்வன். பாராட்டுகள்.

வெ.கிருஷ்ணவேணி
மதுரை

காசி ஆனந்தனைப் பற்றி தமிழ்ச் செல்வனின் எழுத்தில் எனக்கு உடன்பாடில்லை.  "தமிழன் செத்துக் கிடக்கிறான். உணர்ச்சியற்றுக் கிடக்கிறான்" என்ற காசிஆனந்தனின் வார்த்தைகள் உண்மைதானே. என்ன இப்போது தமிழ்ச் சமூகம் அப்படி மேம்பாடு அடைந்துவிட்டது? அடுத்ததாக நடிகையைப் பற்றியது. நடிகைகளின் சமூக சீர் திருத்தத்துக்காக அரிதாரம் பூசுகிறார்களா? நடிகைகளுக்காக இவர் ஏன் வக்காலத்து வாங்குகிறார் என்று புரியவில்லை.

இரா.இராஜேந்திரன்
மயிலாடுதுறை

இறந்தவர்களின் கைகள் கவிதை, கருப் பொருள் சார்ந்த முக்கியத்துவம் கொண்டதாகும். உயிர் பிழைப்பதற்கான பெரும் போராட்டம் அது. நீர் முகப்பின் மேற்பரப்பில்/அசைந்து அசைந்து/ எத்தனை பேர்களை/அழைத்திருக்கும். என்ற வரிகள் ஜலசமாதியின் கொடுமையைச் சொல்கிறது. அந்த அழைப்பு பதிலளிக்கப்படாமலே போய்விடுவது பெருஞ்சோகம். 'ஒரு வழிப்பயணம்' கவிதையில் வெளியீட்டு முறையில் அமைந்த நுணுக்கம் ரசிக்கத்தக்கது.

'காமரூபிணி' நீள் சிறுகதை பல தகவல்களை உள்ளடக்கி நிற்கிறது. யட்சி மகாத்மியம் என்றே இக்கதையைக் கூறலாம். கதாசிரியர் எழுத்தாளர் எல்லையைத் தாண்டி கவிதா மண்டலப் பிரவேசமும் செய்திருக்கிறார். (எ.கா.'அக்குரலையே கட்டிப்பிடித்து முத்தமிடத் தோன்றியது') 'மலைக்கிழங்குக்கு மலைத் தெய்வங்களின் ருசி உண்டு' என்பது நயமான வெளிப்பாடு, 'அண்ணன் அவள் கால்களைக் குனிந்து நோக்கினார். எருமைக் குளம்பு கொண்ட பாதங்கள்' என்னும் போது, அமானுஷ்யத் தோற்றம் காணப்படுகிறது. 'பூ மணம் நாற்றமாக மாறும்' என்பதில் ஒருவித கிலி ஏற்படுகிறது. 'வேர்கள் வீட்டுக்குள் நுழைந்து உள்ளன நகரில் எங்கும் பரவிப் பின்னி உறிஞ்சின' என்பதில் மிகை யதார்த்தப் பாங்கு தெரிகிறது. கேசினியின் அழகை வர்ணிப்பதில் கூறியது கூறல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். சரளமான தொடர் சிந்தனை ஓட்டம் இக்கதை ஒரு நாவலாசிரியர் எழுதியது என்ற குறிப்பை நமக்குக் காட்டுகிறது. பாரதியார் கதைகளிலும் இந்தக்குறிப்பு காணப்படும். கோழி அறுபடும் காட்சி கண்முன் நிற்கிறது. அந்த ரத்தச் சொட்டுகள் இன்னும் விழுந்து கொண்டே இருக்கின்றன. ஜெயமோகனின் சொற்களஞ்சியம் வளமானது என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சௌரிராஜன்
ஸ்ரீரங்கம்

அ.முத்துலிங்கம் அவர்களின் சுவர்களுடன் பேசும் மனிதர் கட்டுரை சிந்திக்க வைத்தது. சாருவின் சுப்ரமணியபுரம் கட்டுரையில் நிறைகள் மட்டுமே பேசப்பட்டது. கனகு என்னும் பாத்திரம் அவன் குடும்பம் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியில் கேமராவின் பார்வையில் படும் சுதந்திரப் போராட்ட தியாகியின் படம் சாதியின் குறியீடாக வருகிறது. அப்படியானால் அந்த சாதியினர் அனைவரும் துரோகிகளா? சாதிகளை அடையாளப்படுத்த தன்னல மற்ற தியாகிகளின் படங்களைப் பயன்படுத்துவதை இளைய தலைமுறை இயக்குநர்கள் தவிர்க்க வேண்டும். (சாதி வாரியாக தியாகிகளைப் பிரித்துவிடாதீர்கள்) இதுபோன்ற விஷயங்கள் சாருவின் கண்களில் படாதது வேதனைக்குரியதே.

சு.சுந்தர பாண்டி
கீழையூர்

அ.முத்துகிருஷ்ணனின் கட்டுரை படித்தேன். போகிற போக்கில் காந்தி மலம் அள்ளுவதைப் புனிதம் எனச் சொன்னார் என்று நரேந்திர மோடியுடன் சேர்த்து நிறுத்தியுள்ளார். பொதுவாக யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்லர். ஆனால் விமர்சிக்க வருபவர்கள் தாங்கள் முன் வைக்கும் கருத்துகள் மற்றும் அதைச் சொல்ல நேர்ந்ததற்கான காரணங்களையும், சரியான ஆதாரங்களையும் பதிவு செய்வதே நேர்மையாகும்.

நானறிய கழிவறை குறித்து முதன்முதலாகப் பேசியவரும் தனது கழிவறையைத் தானே சுத்தம் செய்வதை அடிப்படை மனிதாயப் பணியாக வலியுறுத்துயவரும் காந்தி மட்டுமே. இவ்வகையில் பலசாத்தியங்கள் மனிதர் மலத்தை மனிதர் அள்ளுவதற்கெதிரான நடவடிக்கைகளில் முனைப்புடன் பணியாற்றுவதை பாவம் முத்துகிருஷ்ணன் அறியமாட்டார். ஏனெனில் காந்தியை அம்பேத்கரின், பெரியாரின் கண்களிலிருந்து பார்த்தால் வரும் கோளாறு இது. தயவுசெய்து உங்கள் கண்களால் பாருங்கள் தோழரே.

இரா.முருகானந்தம்
தாராபுரம்

'அதிகாரத்தின் விலை' தலையங்கத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கள்ளத்தனத்தைத் துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளீர்கள். அந்தக் கட்சியினருக்கு ஒரு தலித்தைப் பிரதமராக ஏற்பது என்பது ஓர் அன்னியரைப் பிரதமராக அங்கீகரிப்பதை விடவும் ஒவ்வாதது. ஆகவே மன்மோகன் அரசை விழாமல் நிலைநிறுத்தியதில் பா.ஜ.கக்கு முக்கியப் பங்குண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்தி, இந்த அரசியல் கலாச்சாரத்தில் இந்தியாவை ஆளும் தகுதி சிபுசோரன்களுக்கும் பப்பு யாதவ்களுக்குமே உள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். இந்திய அரசியலின் இந்த விபரீதப்போக்கைத் தடுத்து நிறுத்துவது எப்படி?

ச.தமிழ்ச்செல்வன், அமெரிக்காவிலுள்ள குடும்ப உறவுநிலையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ளது 'கேடுகெட்ட' பண்பாடு என்று சொல்லி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். குஷ்பு கலாச்சாரத்தை இவர் உயர்த்திப் பிடிக்கிறார். தாராளமயமாக்குதலில் இடதுசாரிகள் மற்றவர்களை முந்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நடிகைகள் அரைகுறை ஆடை உடுத்துவது அவர்களின் விருப்பத்தாலா என்றொரு கேள்வி வேறு. பணம் பண்ணுவதில் உள்ள அவர்களின் ஆசைதான் காரணம் என்பதை இவர் அறியமாட்டாரா?

க.சி.அகமுடைநம்பி
மதுரை

கோபிகிருஷ்ணன் பற்றிய நினைவுகளை எஸ்.ரா. எழுதியது நெஞ்சைக் கனக்கச் செய்த சோகம்.

மதுரைசோமு அவர்களின் அழியாத பாடல்கள் குறித்தும் அவருடனான சந்திப்பும் சுகுமாரன் விரும்பியதற்காகப் பாடிய சூழலும் ஆச்சர்யப்பட வைத்தது. மதுரை சோமுவின் தோற்றமும் உள்ளக்கிடங்கும் கணிவும் உண்மையானது. எங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருநீலக்கண்டேஸ்வரர் கோவில் விழாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து கச்சேரி செய்தார். ஆர்க்கெஸ்ட்ரா வந்து பிரபலமாகாத காலமது. அவருடைய 'மருதமலை மாமணியே முருகையா'-வின் இறுதி ஸ்வரங்களும் பாவமும் சரியாக அமையவில்லை. ரசிகர்களுக்கான ஏமாற்றத்தை உணர்ந்து கொண்டார். அவர்கள் திறந்தவெளி இலவச சாதாரண ரசிகர்களாக இருந்தாலும் அடுத்தும் அப்பாடலையே பாடினார். ரசிகர்களுக்கு இசைத்தட்டுகளில்  கேட்ட மகிழ்ச்சி. பலத்த கைத்தட்டல். மைக்செட். ஹார்ன், ஆம்ப்ளிப்ளேயர் கூட சரியான ஏற்பாடாக இருக்கவில்லை. சில தடவை மைக் செட்காரருக்கு ஆலோசனைகூட மேடையிலுருந்த படியே சரிசெய்த நினைவுகள் வந்து போயின.

ஜெயமோகன் சிறுகதை 'காமரூபிணி' அவருடைய தலைசிறந்த ஆக்கங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. நவீனத்தமிழ்ச் சிறுகதையின் தேக்க காலமென்றும் தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்கள். மீண்டும் புதிய தத்துவத்திற்கான நீட்சியை ஜெயமோகன் துவக்கியுள்ளார்.

மலத்தில் தோயந்த மானுடம்-முக்கியமான கட்டுரை. அத்தொழில் சார்ந்த தொழிலார்களிடத்திலும் இந்நிலையைப் போக்குவதற்கான ஆர்வமின்மையாக இருக்கிறார்கள். தொடர்ந்த சமூக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் தயங்குகிறார்கள். அதிகத் தொகைக்கு ஆசைப்பட்டு தங்கள் உயிரைக் கூட மாய்த்துள்ளனர்.

                                                                                                                                                   இளஞ்சேரல்
                                                                                                                                                          கோவை

பிரபஞ்சனின் "பகவத் கீதையும் பலான படங்களும்" என்ற கட்டுரையைப் படித்தேன். அது எஸ் ஏ பி என்ற குமுதம் ஆசிரியரைக் காட்டிலும் பிரபஞ்சன் பற்றி நிறையவே தெரிவித்தது. முதலில் "பகவத் கீதையும் பலான படங்களும்" என்ற தலைப்பு ஏன்? எஸ் ஏ பிக்கு பகவத் கீதை மட்டுமல்ல திருக்குறளும் பிடிக்கும் என்று தெரிகிறது. "திருக்குறளும் திறந்த மார்பும்" என்று தலைப்பிடாமல் பகவத் கீதையை ஏன் தலைப்பிலிட வேண்டும்? தத்துவ மரபும், காப்பிய நலனும் கொண்ட பகவத் கீதையை ஹிந்து பிரதியாகவும், அறம்- பொருள்- இன்பம் என்ற ஹிந்து கருத்தாக்க அடிப்படையை வேராய்க் கொண்ட திருக்குறள் திராவிடப் பிரதியாகவும், இன்றைய தமிழக ஆளும் வர்க்கத்தினரால் கட்டமைக்கப் பட்டுவிட்டதல்லவா? திருக்குறளைத் தலைப்பில் இட்டால் என்ன ஆகியிருக்கும்?
 
எஸ் ஏ பி-யின் கீதை ஈடுபாடும், இலக்கிய ஈடுபாடும் ரகசியமான விஷயங்கள் அல்ல. குமுதத்தில் வேலைக்குச் சேரும்போது குமுதம் எப்படிப் பட்ட பத்திரிகை என்று பிரபஞ்சனுக்குத் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. பிரபஞ்சனின் வாழ்க்கையில் மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் குமுதம் அவருக்கு வேலை அளித்தது. அவர் மேற்கொண்ட சமரசங்கள் போன்றே தான் அநேகமாய் எல்லா தமிழ் எழுத்தாளர்களும் மேற்கொண்டுள்ளார்கள். தமிழின் பிரபல பத்திரிகைகளில் தேநீர் விநியோகிக்கும் சிறுவனுக்கு இருக்கும் மரியாதை கூட  எழுத்தாளனுக்குக் கிடையாது என்பதும் ரகசியம் அல்ல. சமரசங்களை மேற்கொண்டு , அதன் மூலம் பலன்களை அனுபவித்து விட்டு, பின்னோக்கில் அந்த சமரசங்களுக்குக் காரணமானவர்கள் மீது சேறு வாரி இறைக்கும் பிரபஞ்சனின் கட்டுரையினால் எஸ் ஏ பிக்கோ, குமுதத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் பிரபஞ்சனுடன் இணைந்திருந்த பிறர் தம்மைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ என்று அஞ்சி நிற்கும் காட்சி என் கண்முன் வந்து மறைகிறது.
 
                                                                                                                                      கோபால் ராஜாராம்

click here

click here
click here