உயிர்மை - செப்டம்பர் 2008
 
வெற்றிகள் காட்டும் திசைகள்
- மனுஷ்ய புத்திரன்
ரெட்டணை துப்பாக்கிச் சூடும் ஆறாவது ஊதியக் குழுவும்
- ச.தமிழ்ச் செல்வன்
அலெக்சாந்தர் சோல்செனித்சின் : இருளைக் கடந்த கலைஞன்
- சுகுமாரன்
ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்
- சாரு நிவேதிதா
மஹ்முத் தர்வீஸ் : காத்திருத்தல் எனக்கு பிடிக்காது
- யமுனா ராஜேந்திரன்
-
- -
குமுதத்தின் கதை
- பிரபஞ்சன்
பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு
- எஸ்.ராமகிருஷ்ணன்
சிங் இஸ் கிங்
- பாரதி மணி
மறையும் உயிரினங்கள்
- சு.தியடோர் பாஸ்கரன்
மறக்கப்பட்ட தாமிரபரணிப் படுகொலை
- மாயா
புத்தொளியின் வெளி
- இசை
கருணை
- கணேசகுமாரன்
அவர் வந்துகொண்டிருக்கிறார்
- மா.காளிதாஸ்
நரன் கவிதைகள்
- -
பிரபஞ்சம் தோன்றிய போது
- எஸ்.பஞ்சலிங்கம்
அம்மாவின் இசை
- ரவி உதயன்
கடவுளைக் கொலை செய்தவர்கள்
- சலனி
சிறுகதை:இரண்டு நபர்களைப் பற்றிய ஒரு செய்தி
- எஸ்.செந்தில்குமார்
சின்னப்பாப்பா: பாலியல் தொழிலாளியின் குட்டி சரிதை
- வா.மு.கோமு
கதீட்ரல்
- ரேமண்ட் கார்வெர்
யாமம்: இரவால் கோர்க்கப்பட்ட கதைகள்
- சமயவேல்
கடிதங்கள்
- -
click here
குமுதத்தின் கதை
பிரபஞ்சன்

குமுதம், வானத்திலிருந்து உடைந்து வீழ்ந்த நட்சத்திரத் துண்டு அல்ல. தமிழ் மண் உருவாக்கி வைத்திருந்த அத்தனை கரடு கட்டிகளையும் தட்டிப் பிசைந்து தன்னை உருவாக்கிக் கொண்டது அது. இந்தியச் சுதந்திர ஆண்டை ஒட்டி அது பிறந்தபோது, அதன்முன் ராட்சசச் செடியாக நின்ற பத்திரிகைகள் விகடனும் கல்கியும். இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் பிறந்த விகடன் தனக்கென்று அழுத்தமானதும் கலைக்க முடியாததுமான வாசகர்களால் முன்னணியில் நின்றது. சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த பட்டதாரிகளும் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பாளிகளும், உயர் சாதிப் பெண்களுமாக அதன் வாசகர் பரப்பை நிரப்பி இருந்தார்கள். விகடனிலிருந்து பிரிந்த கல்கி, தன் சொந்தப் பெயரில் கல்கியைத் தொடங்கி, நாற்பதுகளில் வாசகர் அரங்கத்துக்கு வந்தார். விகடனின் வாசகத் தொகுதியில் இருந்தே, கல்கி தன் வாசகர்களைப் பிய்த்து எடுத்தார். கல்கிக்கு உருவாகி இருந்த எழுத்தாளர் என்ற புகழ், கல்கிக்குப் பெரிதும் உதவியது. தவிரவும், கல்கியின் சரித்திர நாவல்கள் என்று புனையப்பட்டவை, மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தி, கல்கியை நிலை பெற வைத்தது. மிக முக்கிய அம்சம், இந்த விகடன், கல்கி இரண்டுமே பிராமண ஆசிரியத்துவங்களைப்   பெற்றவை. இந்த இரு பத்திரிகைகளுக்குமே காஞ்சிப் பெரியவாள் என்று சொல்லப்படும் சந்திரசேகரர், தன் அருளாசிகளைப் பண்டிகைகள் தோறும் அள்ளி வழங்கிக் கொண்டே இருந்தார். கல்கிக்கு விசேஷமாக மேற்படி ஆசியோடு, ராஜாஜி, என்கிற மிகப்பெரிய அரசியல் ஆகிருதியின் துணை வாய்த்தது. ஒரு மிகப் பெரிய வியக்தியாக வளர்ந்து வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கியாதியும், வசதியும் கல்கிக்குப் பெரும் துணை செய்து அதன் இடத்தை நிர்ணயம் செய்தது. அடிப்படையில் இரண்டு பத்திரிகைகளுமே காங்கிரஸ் கட்சியையும், அதன் அரசியல் செயல்பாடுகளையும் ஆதரித்தவை. வாசன் நேரிடையாகக் காங்கிரஸ் தியாகி இல்லை எனினும், அதாவது சிறை ஏகியவர் அல்லர் எனினும், காங்கிரசுக்குப் பெரும் பொருள் உதவியவர். கல்கியும் ராஜாஜியும் சதாசிவமும் சிறைசென்ற அசல் காங்கிரசினர். பிற்காலத்தில் கல்கி, ராஜாஜியின் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது, சுதந்திராக் கட்சியின் பிரச்சார பீரங்கியாகத் தன்னை வெளிக்காட்டியது எனினும், தமிழர்கள் சுதந்திராக் கட்சியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதே இல்லை. அது, பதவி சுகம் கண்ட ஒரு அரசியல் பெருச்சாளியின் வயிற்றெரிச்சலின் பௌதிக விளைவு என்றே கருதினர். பிராமண வட்டத்தைக்     கடந்து ராஜாஜிக்குத் தமிழ் நாட்டில், ஒரு தம்பிடி அளவுக்கும் செல்வாக்கு இல்லை என்பது தமிழர் மகிழ வேண்டிய விஷயம். முதலில் சதாசிவம் அப்புறம் கல்கி ஆகியோரின் ராஜாஜி விசுவாசம், கல்கி என்கிற பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவும் படியாக இருக்கவில்லை. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்பும் இவ்விரு பத்திரிகைகளும் தேசியப் பத்திரிகைகள் எனவே கருதப்பட்டன.

விகடன், கல்கி, இடையில் ஒரு சிறு வட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்த கலைமகள் ஆகிய பத்திரிகைகள் வீறு பெற்றிருந்த காலத்தில் அவைகளின் செல்வாக்குப் பின்னணி எதுவும் இல்லாத, பிராமணர் அல்லாதார் ஒருவரிடமிருந்து தோன்றிய பத்திரிகையாகக் குமுதம் பிறந்தது. அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கிய எஸ்.ஏ.பி.க்குத் தெருவடைச்சான் சந்துகளாக விகடனும் கல்கியுமே இருந்தன, அவருக்கு முன்னால்.

குமுதத்தின் ஐம்பதுகள் கால இதழ்களைப் பார்க்கிற எவரும் ஆச்சரியப்படுவார்கள். ஏதோ இலக்கியப் பத்திரிகையைப் படிக்கிற எண்ணத்தைத் தோற்றுவிப்பன அவ்விதழ்கள். வையாபுரிப் பிள்ளை முதலான அக்காலத் தமிழ் அறிஞர்கள் குமுதத்தில் எழுதினார்கள்.

அரசியலில், குமுதம் எடுத்த மிக முக்கிய நிலைப்பாடு, அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் விஷயமாக மாறியது. விகடனும் கல்கியும் காங்கிரஸ் மற்றும் தேசிய இயக்கங்களை ஆதரிக்கும் வேளையில் குமுதம், 1949ல் அரும்பி வளர்ந்து வந்த திராவிட இயக்கச் சாயலுடன் இணைந்துகொண்டது. என்றாலும் கடவுள் மறுப்பு போன்ற பிரச்சினைகளில் குமுதம் தலையிடாது. வாசகர்கள் கடவுள் மறுப்பாளர் அல்லவே. அந்த வகையில் தினத்தந்தியின் ஆசிரியக் கொள்கையையே குமுதமும் மேற்கொண்டது எனலாம். வெகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ, அக்கட்சியைச் சார்ந்ததாகத் தினத்தந்தி தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். குமுதம், பெருகி வந்த திராவிட இயக்க ஆதரவுக் குரலை, சுமார் 1955-வாக்கிலிருந்தே நுணுக்கமாகக் கேட்கத் தொடங்கியது. வெளிப்படையாகப் பிராமண எதிர்ப்பு என்பது குமுதத்துக்கு இல்லை. உள்ளேயும் இல்லை. என்றாலும், அப்பிராமணர்களிடம் இருந்து வெளிப்படும் பத்திரிகை என்கிற ஒரு பெயரையும் பார்வையையும் அது பெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தேய்வும், தி.மு.கழக வளர்ச்சியும் அரங்கேறிய காலகட்டத்தில் குமுதம் வளர்ச்சியோடு தன்னை இனம் கண்டது. 1957, 1962, 1967-ல் தி.மு.க.வின் வளர்ச்சி  உச்சத்தை நோக்கியது போல, மிகவும் சிரமதசையிலிருந்து (விற்பனையில் மட்டும்) குமுதம், கழக வளர்ச்சி போலத் தன்னை வளர்த்துக் கொண்டது.

*

தமிழ் மரபில் சுவை எட்டு. வட மொழியில் ரஸம் ஒன்பது. சாந்தி என்பதை ரஸமாகக் கொண்டார்கள் அவர்கள். தமிழ்ப் பத்திரிகைகள், நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் புதிதாக ஒரு ரஸத்தைக் கண்டு பிடித்தார்கள். 'புகழ்' பெற்ற கொலை வழக்குகளைப் புனைவுடன் சேர்த்து எழுதி, வாசகர்களுக்குக் கொலை, வதந்தி, காமம், பிறர் மறைபொருள் பற்றிய தூண்டுதல் மிகுந்த ஆர்வம், புகழ்பெற்ற மனிதர்களின் அந்தரங்கம் அறிதல் முதலான தாழ்ந்த இச்சைகளால், சில பத்திரிகைகளால் வடிவமைக்கப்பட்டன. முதலில் கொலை வழக்குகளே இந்த வகையான சுவைகளின்பால் தமிழர்களை ஈர்த்தன. இவைகளில் மிக முக்கியமான கொலை வழக்கு, மஞ்சள் பத்திரிகைக்காரர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. காரணம், குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சினிமாவில் புகழ் பெற்றவர்களாக இருந்த தியாகராஜபாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும், தயாரிப்பாளர் ஸ்ரீ  ராமுலு நாயுடுவும் ஆவர். லட்சுமி காந்தன், தான் நடத்திய சினிமா தூதன் மற்றும் இந்து நேசன் என்ற பத்திரிகைகளில் சினிமா நடிக, நடிகையரின் அந்தரங்கம் என்ற பெயரில் அவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் எழுதி, பிளாக் மெயிலும் செய்து பணம் பறித்து வாழ்ந்தவன். அவன் கொலை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மிகப்பிரபலமாக வெளியிடப்பட்டு, பத்திரிகைகளின் விற்பனை பெருகியது, தொழில் லாபம் பற்றிய நுணுக்கமான மற்றுமொரு தகவலையும் பத்திரிகை முதலாளிகளுக்கு உணர்த்தியது.

புகழ் பெற்றவர்களின் அந்தரங்கங்களை எழுதுவதன் மூலம், வாசகர் கற்பனையில் இணைகோடு போல மற்றுமொரு காம நாடகம் நிகழ்த்தப்பட்டு, அதன் மூலம் வாசகர்களின் ஈர்ப்பையும் ஆதரவையும் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாரதியும் பெரியாரும் சுப்ரமண்யசிவமும் திரு.வி.க.வும் ஆசிரியர்களாக இருந்து பத்திரிகை நடத்தியது போக, சுதந்திரத்துக்குப் பிறகு, முதலாளிகள் சம்பளத்துக்கு ஆசிரியர்களை அமர்த்திக் கொள்ளும் நிலை வந்தபிறகு, விற்பனை என்பதே வெற்றி என்றாகியது. ஆசிரியர்கள் விபசாரம் செய்வதில்லை. ஆனால் விபசாரத்துக்குத் துணை செய்யும் செய்திகளைப் போடலாம் என்றாகியது. ஆசிரியர்கள் கொலை செய்வது இல்லை. ஆனால் கொலை, வல்லாங்கு (ரேப்) பற்றி எழுதலாம். இது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் எனலாம். ஆக, பத்திரிகைகளின் உள்ளடக்கத் தோரணைகள் மாறின.

*

'கிசு கிசு' என்ற அரிய சொல்லாக்கத்தைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்த சிறப்பு குமுதத்துக்கு உரியது என்றால், இந்தப் புகழைப் பங்கு கொள்ள யாரும் வரமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 60-களின் தொடக்கத்தில் இது தமிழுலகுக்கு வந்தது. என் செவிக்கு வந்த, இதன் வரலாற்றுச் செய்தியின்படி முதல் கிசு கிசுவில் சிக்கியது ஏ.வி.எம். ராஜனும் புஷ்பலதாவும் என்று அறிகிறேன். குமுதத்துக்கு நெருக்கமான சிலரே இந்த வரலாற்றுக் கல்வெட்டுகளை எனக்கு அறிவித்தார்கள். கிசு கிசு, நேரிடையாகச் சொல்லாமல், சுற்றிச் சுற்றி ஆனால் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கும். உதாரணத்துக்கு அரசர் எனும் சொல்லுக்கு வடமொழியில் என்ன பெயரோ அந்தப் பெயரைக் கொண்ட நடிகருக்கும், பூவுக்கு வழங்கும் வேறு பெயரைக்கொண்ட நடிகைக்கும் ஒரு இதுவாம் - என்பதுபோல அச்செய்தி வந்திருக்கும் என்று நினைக்கிறேன். செய்தி வந்த அன்று காலையே நடிகை, எஸ்.ஏ.பி. வீட்டுக்கு வந்து தன் கௌரவம் பாதிக்கப்பட்டதாக வருந்தினார் என்றும், அதன் காரணமாக கிசு கிசு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் எனக்குச் சொன்னார், அந்த சரித்திராசிரியர்.  சொற்ப காலத்துக்குள், நடிகர் நடிகையும் திருமணம் செய்து கொள்ளவே, தம் செய்தி உண்மை  தான் என்ற நிரூபணம் கிடைத்ததன் பேரில், கிசு கிசு வெளியிடும் ஒரு தார்மீக உரிமையைக் குமுதம் பெற்று, அதைத் தொடர்ந்தது. அனேகமாக எல்லா ரஞ்சகப் பத்திரிகைகளும் ஒன்று கிசு கிசுவையோ, அல்லது நடிக நடிகையரின் வாழ்க்கையையோ - அல்லது அவர்களைப் பற்றிய கற்பனையையோ எழுதித் தீர்த்துக் கொண்டிருப்பதற்கு மூல முதற் காரணமாகச் சொல்லலாம். இன்றுவரை இது தொடர்கிறது. நடிகைகள், நம் வீட்டுப் பெண்கள் இல்லை. நடிகர்கள் நம் சகோதரர்கள் இல்லை. எனவே, அவர்களைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதலாம். எழுதிவிட்டு, மரியாதைக்குரிய வாழ்க்கையைச் சகல வசதியோடு, எந்த உறுத்தலும் இன்றி வாழலாம். பல லட்சங்கள் விற்றுப் பிழைக்கலாம்.

*

சுப்ரமண்ய ராஜு, சாவியால் நிறைய பயன்படுத்தப்பட்ட எழுத்தாளர். சாவி, சுஜாதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தையே ஏற்படுத்திக் கொடுத்தார். சாவியே, அடுத்த தலைமுறையினராகக் கருதப்பட்ட பாலகுமாரன், மற்றும் மாலன் முதலான பலருக்கும் பல வாய்ப்புகள் வழங்கிப் பிரபலம் பெறத் துணையாக நின்றார். அவர் நடத்திய சாவியின் அட்டைப்படத்தில் ஒரு கார்ட்டூன் வந்தது. அனேகமாக இப்படி இருந்தது அது.

முதல் இரவு போன்று அலங்கரிக்கப்பட்ட ஒரு அறைக்குள் மணப்பெண் ஆடை இன்றி நுழைகிறாள். பதறிப்போகிறான் மணமகன். 'ஆடை இல்லாமல் பால் கொண்டு போகச் சொன்னார்களாம். அதனால் இப்படியாம்' என்பதுபோல் அவள் பேசுவதாகக் கார்ட்டூன் பேசியது. பெண்கள் இயக்கம் போராட்டம் செய்து சாவியைச் சிறைக்கு அனுப்பியது என்று நினைவு. சூழல், ஆபாசத்தின் உச்சிக்குக் கொண்டு போகப்படுகிறது, பத்திரிகைகளில் என்பது மட்டுமல்ல, அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பத்திரிகை வளர்ச்சி எந்தத் திக்கில் என்பதை அறியவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

ராஜு, சாவியில் சினிமா விமர்சனமும் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு சினிமா விமர்சனம் இப்படி இருந்தது.

படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்?

ராஜுவுக்கு நல்ல கதைகள், நல்ல சினிமா பற்றிய புரிதலும் அவை பற்றிய நிறைய தகவலும் தெரிந்திருந்தன. நல்ல ரசிகர். ஆசிரியருக்கு நெருக்கமாகவும் இருந்தார். ஆசிரியர் விரும்பிச் சந்திக்கும் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். இருவரும், புதிய தலைமுறையினர் சிற்றிதழ்களிலும் இலக்கியப் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டு வரும், பல பரீட்சார்த்த கதைகள் பற்றிப் பேசுவார்கள். ஆசிரியருக்கு, புது இலக்கியப் பரிச்சயம் சிறப்பாகவே இருந்ததை நானும் அறிவேன். எண்பதுகளில் உரைநடையில் மிகவும் சிறப்பாக வெளிப்பட்ட வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயப்பிரகாசம், ராஜேந்திர சோழன், முதலான பலரின் மேலும் மிகுந்த அபிமானம் இருந்தது. எனக்குப் புரியாத விஷயம், இதில் என்னைச் சிரமப்படுத்திய விஷயமும் இதுதான். மிக நல்ல எழுத்தாளர்களின் எழுத்தை ரசிக்கும் ஆசிரியர் ஏன் அவர்களின் கதைகளை வாங்கிப் போடக்கூடாது. ஒரு நேர்ப் பேச்சில் ஆதவன், நாகராஜன் முதலிய சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களின் கதைகளை வாங்கிப் போடலாமே என்றேன். ஆசிரியர் சிரித்தபடி 'போடலாம்' என்றார். அத்துடன் அந்த உரையாடல் வேறு பக்கம் திரும்பியது.

இந்தச் சூழலில்தான் சோமனதுடி படம் பார்க்கக் கிடைத்தது. சென்னைக் கலைவாணர் அரங்கில் இந்தப் படத்தை ஆசிரியர் பார்த்திருக்கிறார். ராஜுவிடம் படம் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசி இருக்கிறார். மாலை நேரச் சந்திப்பில் ராஜு இதை என்னிடம் சொன்னார். குறிப்பாக, இசை அந்தப் படத்தில் உணர்ச்சிக்கு இசைவாக, நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதை அவர் பாராட்டியதையும் நான் அறிந்தேன். தமிழ் சினிமா செல்லவேண்டிய திசை, செய்ய வேண்டிய காரியம் பற்றி அவர் கொண்டிருக்கும் கருத்துகள் பற்றியும்கூடச் சொல்லி இருக்கிறார்.

சீக்கிரமே, குமுதத்தில் அரசு பதிலில் இது பற்றிய கேள்வி பதில் வெளிவந்தது. (அரசு என்பது ஆசிரியர் மட்டும்தான்.)

கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?

பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

திடுக்கிட்டுப் போனார் ராஜு. ஒரு நாள் ஆசிரியரைச் சந்தித்து, 'என்ன இப்படி எழுதி இருக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு, ஆசிரியர் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

'என் ரசனை வேறு. என் வாசகர்கள் ரசனை வேறு. என்ன நம் ஆசிரியர் இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் போகிறாரே என்று என் வாசகர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்கு நான் பார்க்கவில்லை என்பது பதில். என் வாசகர்களுக்கு, அவர்களில் சிலர் அதைப் பார்த்திருந்தால், துடி துடித்துப் போவார்கள். அவர்கள் இந்த பதிலைக் கண்டு மகிழ்ச்சியடையலாம், நம் ஆசிரியரும் நாமும் ஒரு மாதிரிதான் சிந்திக்கிறோம், என்பது அவர்களைச் சந்தோஷப்படுத்தும். நான் நன்றாக இருக்கிறது என்று எழுதப்போக, பிடிக்காத வாசகர்கள், என்ன இதுமாதிரி படத்தை எல்லாம் ரசிக்கிறார் நம் ஆசிரியர் என்று என்னோடு முரண்படுவார்கள். எனக்கும் வாசகர்களுக்கும் இடையே விலகல் ஏற்பட்டுவிடும். விரிசல் ஏற்படும். நம் ரசனை வேறு, பத்திரிகை வேறு, ராஜு.'

எனக்கு நேர் அனுபவம் ஒன்றைச் சொல்ல முடியும். ஆசிரியர் மகள் திருமணத்தை முன்னிட்டு, வருகிறவர்களுக்கு வழங்க 'பை' செய்யப்பட்டது. பிளாஸ்டிக்பைகள். அதில், குமுதம் பத்திரிகைச்சின்னம் அச்சேற்றப்பட்டது. ஆசிரியர், அப்பைகளை வழங்க மறுத்துவிட்டார். 'என் குடும்ப விஷயம்வேறு. பத்திரிகை வேறு' என்றார். சின்னம் இல்லாத பைகளே வழங்கப்பட்டன.

click here

click here
click here