உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
தமிழவன்

தமிழில் நடக்கும் இலக்கிய விவாதங்கள் அதன் இலக்கியச் சிந்தனையின் தரத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும். நிறைய விவாதங்கள் நடக்க வேண்டும்.

 தற்காலத் தமிழிலக்கியம், அதுபோல் உலக இலக்கியம் பற்றி எல்லாம் பொதுவாக யாரும் கருத்துத் தெரிவிப்பதில்லை. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கருத்துத் தெரிவிக்க முன்வந்திருப்பது என்னைப் பொறுத்த வரையில் வரவேற்புக்கு உரியதாகும்.

வெள்ளைப்புலிஎன்ற அரவிந்த் அடிகாவின் நாவல் சுமார் 87 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசைப் பெற்றுள்ளது. அந்நாவல் பற்றி அகில உலக இலக்கியக் களத்தில் சர்ச்சைகள் நடக்கின்றன.

 வெள்ளைப்புலி பற்றிய சர்ச்சை தமிழுக்கு அதன் இலக்கிய அளவு கோல்கள் பற்றிய சர்ச்சையாக மாறவேண்டும் என்று ஆசை. தமிழில் நாவலே இல்லை என்று ஒருவரும், தமிழில் இருப்பதெல்லாம் நாவல்தான் என்று இன்னொருவரும் கூறும்போது தமிழிலக்கிய நாவல் சர்ச்சை மீண்டும் தோன்றவேண்டும். எண்பதுகளிலிருந்து தமிழ் நாவல்களில் இன்னொரு அனைத்துலக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

 இன்னொரு விஷயம், வலைப்பூக்களைப் படிக்கும்போது, பெரிய பெரிய படிப்பாளி

இளைஞர்கள் எல்லாம் பலநாடுகளில் பரவியுள்ளது தெரிகிறது. ஆனால் அவர்களின் நாவல் இலக்கிய அறிவு அதலபாதாளத்தில் உள்ளது. பொதுவாய் தமிழ்த்துறைகளில் நாவல் இலக்கிய அறிவு இல்லை. அந்தத் தமிழ்த் துறைகள் மூலம் தமிழ் படித்தவர்கள் தான் இன்று உலகமெங்கும் பரவியிருப்பவர்கள். ஒரு சிலருக்கு இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், மு., மற்றும் சாண்டில்யன், நா. பார்த்தசாரதியும் தான் நாவலிலக்கியத்தின் உச்சம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் நாவலில் ஏற்பட்டுள்ள வீச்சு அதுவரை இல்லை. இது பற்றிய விரிவான சர்ச்சை தமிழில் இல்லை.

 

 இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. ஈழத் தமிழில் நாவல்மரபு இன்னும் வேர் கொள்ளவில்லை. அதனால் தமிழை அக்கறையாய் அணுகும் அவர்களிடமும் தமிழ் நாவல் அறிவு இல்லை என்றே கருதுகிறேன். அவர்களுடைய பேராசிரியர்கள் நடத்தும் தமிழ்த்துறைகளிலும் தமிழ் நாவல் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் இல்லை. கன்னடத் துறைகளில் கன்னட நாவல்கள் பற்றி காட்டும் அக்கறையில் பாதி அக்கறை கூட அகில உலக மொழியான நம் தமிழில் இல்லை. தமிழக அரசோ, வேறு எந்தப் பொது நிறுவனமோ தற்காலத் தமிழ் இலக்கிய அறிவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. டெல்லியில் இருக்கும் சாகித்திய அக்காதமி போன்ற நிறுவனங்களை பிறமொழியினர் தங்கள் இலக்கிய அறிவு விருத்திக்காகப் பயன்படுத்துகின்றனர். நம்நிலை வேறு.

 இந்தச் சூழலில் வெள்ளைப்புலி நாவல் எழுத்துமுறை பற்றி எனக்கும் கொஞ்சம் வாசக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். அகில உலக அளவில் உள்ள நாவல் இலக்கியச்சர்ச்சை ஏதும் காத்திரமாக தமிழில் நடந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. நானும் இ.பா. அவர்களும் முன்வைக்கும் கருத்துகள் பிறரின் கருத்துகளையும் சீண்டி களத்துக்குக் கொண்டு வரட்டுமே.

 இலக்கியச்சுவை, இலக்கியத்தரம் என்று ஒன்று தனியாக நாம் போடுகின்ற சட்டை, பனியன், உள்ளாடைகள் போன்று இல்லை என்பது என் எண்ணம். சொல்லப்படும் விஷயத்துடன், அதன் தொனிகளுடன், அதன் மொழிநடையுடன் என்று பல்வேறு விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து பிரதியாய்க் காட்சி தருவதுதான் நாவல் இலக்கியம். நாவல் பற்றிய சிந்தனை காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. இது வெளிநாட்டு, உள்நாட்டு, சமூகச்சிந்தனைகளாலும், இலக்கியச்சிந்தனைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. அகில உலக நாவல் எழுத்து பற்றிய அறிவும் கோட்பாடுகளின் அறிவும் முக்கியம். நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம் கலந்துவருவதுதான் இன்றைய நாவல் இலக்கியச் சிந்தனை. பழைய மன இறுக்கங்களின் வழி மட்டும் புதிய சமூகத்தையோ, புதிய இலக்கியத்தையோ பார்க்க முடியாது. நமக்கெல்லாம் வயதாகிவிட்டது என்பதாலேயே நாம் சொல்வதுதான் இறுதி முடிவு என்று வாதாட முடியாது.

வெள்ளைப்புலி நாவலின் மூலமாக மொத்த தமிழ் புனைகதை மரபை அலச எனக்குப் போதிய வாய்ப்பும் அறிவும் இல்லை. என்றாலும் எனக்கு ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளேயில் வரும் கந்தனோடு முன்னாவை ஒப்பிட விருப்பம். இருவரும் வேறுபட்ட பாத்திரங்கள். ஜி.நாகராஜனின் கந்தன் இந்தியாவின் விழுமியங்களைப் புறக்கணித்து வாழ்பவன்; ஆனால் முன்னா, நாவலின் இறுதிப்பகுதியில், பெங்களூரில் அவனுடைய டாக்ஸி ஓட்டுநரால் கொல்லப்பட்டவனின் குடும்பத்தைப் போய்ப் பார்த்து 25,000 ரூபாய் கொடுக்கிறான். இதனை மேற்கத்திய வெள்ளைக்காரர்களுக்காக எழுதப்படும் exotic நாவலின் சம்பவம் என்று கூறமுடியுமா? வெள்ளைப்புலி நாவலில் வரும் அசோக்கின் கொலை முக்கியமான ஒரு சம்பவம். எனக்கு எழுபதுகளின் இறுதியில் (என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட பூமணியின் ஒரு சிறு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு இளைஞன் ரயில்பாதையில் நண்பன்போல் பேசிக்கொண்டு வருபவனைத் தள்ளிவிட்டு அவன் கொலைக்குக் காரணமாகிறான். நாக்சல்பாரி இயக்கம் தனிமனிதக் கொலையை ஆதரித்த அக்காலத்தில் அந்த அரசியலை எதிர்த்த சி.பி.. கட்சியின் அதிகாரபூர்வமான இலக்கிய இதழ் தாமரையில் இக்கதை வந்ததென்று ஞாபகம். முன்னா செய்யும் கொலையுடன் இதை இங்கு ஒப்பிடலாம்.

 வெள்ளைப்புலி நாவல் பற்றி இன்று அனைத்துலக வரலாற்று நிபுணராகக் கருதப்படும் சஞ்சய் சுப்பிரமணியம் என்பவரும் எழுதியிருக்கிறார். அதிகம் பொறுப்புடன் கருத்துச் சொல்லியிருக்கிறார். வரலாற்றாசிரியர் என்பதால் தற்கால இந்தியாவின் வரலாறு இந்த நாவலில் எப்படிச் சொல்லப்படுகிறது என்று யோசித்துப் பார்க்கிறார் சஞ்சய் சுப்பிரமணியம். இன்று பல நகரங்களில், வேலைக்காரர்களால் நகரங்களில் வாழும் மத்தியதர வர்க்கத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் இரண்டு சம்பந்தப்படும் கொலையை அடிப்படையாக வைத்துப் பார்ப்பதானால் கிராமம் X நகரம் என்ற முரண்பாட்டை இந்த நாவலில் காணலாம். வெளிநாடுகளில் இன்று பரவும் ஒரே பேச்சு, இந்தியாவும் சைனாவும் மிக வேகமாக வளரும் இரண்டு நாடுகள் என்பது. ஓபாமாகூட அவரது நாட்டுப்பிள்ளைகள் இந்தியப்பள்ளிச் சிறுவர்களைப் போல உயர்ந்த கல்வி பெறுவதற்கு, தான் முயற்சி செய்யப் போவதாக வாக்காளர்களுக்கு உறுதி கொடுத்ததைப் பலர் தினத்தாள்களில் படித்திருக்கலாம்.

 தமிழின் முக்கிய நாவல்களில், நான் படித்த அளவில், எந்த நாவலில் கிராம, நகர முரண்பாடு கையாளப்பட்டிருக்கிறதென்று யோசித்தால் எந்த நாவலும் ஞாபகத்துக்கு வரவில்லை. குரும்பூர் குப்புசாமி போன்ற எழுத்தாளர்களின்நீளமான கதைகளில் எப்போதும் கிராமத்துப் பெண்ணுக்கும் நகரத்திலிருந்து கறுப்புக்கண்ணாடி அணிந்தபடி வரும் இளைஞனுக்கும் காதல் நடக்கும். இந்த மாதிரி குப்பைகள் எதார்த்தத்தை வேறுமுறையில் சொல்கின்றனவா? தெரியவில்லை.

 இங்கிலாந்தில் இருந்துகொண்டு வெள்ளைப்புலி நாவல் வழியாக இந்தியாவைப் பார்க்கும் பரிசுக்குழுவினருக்கு இன்றைய இந்தியாவின் இன்னொரு முகம் தெரிய நிறையவே வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் இருக்கிற நம்மில் பலருக்கு எதையும் பற்றி தீர்ப்பு சொல்வதற்கு அரிப்பு எடுத்துக்கொண்டேதான் இருக்கும். அப்படி தீர்ப்பு சொல்வதன் முன் பல விஷயங்கள் யோசிக்க வேண்டும். முக்கியமாய் நம் தாய்மொழியான தமிழில் வந்துகொண்டிருக்கிற நாவல்களின் வரலாறு, விமர்சனங்கள் மேற்கொள்ளும் பாதை மாற்றங்கள், போன்றன பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப்பின்னணிதான் ஒரு தமிழ் எழுத்தாளரின் கருத்தைத் தீர்மானிக்கும். அது ஆங்கில நாவலாக இருந்தாலும் நம் அபிப்பிராயம் நம் சூழலில் இருந்து உருவாவதுதான். வெள்ளைப்புலி, நாவலே அல்ல, இலக்கியத்தரம் இந்த நாவலில் இருந்து வீசவில்லை என்பவர்கள் தமிழ் நாவல் வரலாறு பற்றிய ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டை மனதில் வைத்திருப்பவர்கள்தாம் என்பதை மறக்கக்கூடாது.

புதிய தலைமுறையிலிருந்து வாசகர்களாக நிறையபேர் வந்துள்ளார்கள். சென்னை புத்தகச் சந்தையில் இவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். இவர்கள் காய்கறிக்கூடைக்குப் பக்கத்தில் தங்கள் கார்களின் டிக்கியில் வாங்கிக் குவிக்கும் நாவல்கள் எப்படிப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் பலர் வாங்கிச் சென்ற வெள்ளைப்புலி பற்றி ஓர் அபிப்பிராயம் சொல்வதற்குக் கூட அறிவில்லாத தமிழ்த்தனமான மத்தியதரங்கள். இதுகளில் சில சமீபநாட்களில் பீர் குடிக்கிற தமிழ் எழுத்தாளர்கள் பற்றி ஆலோசிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். இன்னொரு விஷயம், எந்த நாவலையும் படிக்காமல் கணினியில் தகவல்களைப் பார்த்து அகில உலக நாவல்கள் பற்றிக் கதைவிடுகிற அதர்மர்களான எழுத்தாளர்கள். இவர்கள் வெள்ளைப்புலி என்ற, அகில உலக அளவில் பேசப்படும் புக்கர் பரிசு நாவல் பற்றி வாய்திறக்க மாட்டார்கள். வாய்திறந்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.

 அனைத்துலக நாவல் வடிவம்தான் வேத நாயகம் பிள்ளையால் தமிழில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றுவிக்கப்பட்டது. அடுத்து அனைத்துலகத் தாக்கம் பாதைமாறிய போது ராஜம்ஐயராலும் மாதவையாவாலும் இன்னொருவித தமிழ் நாவல் தோன்றுகிறது. இப்படித் தமிழ் நாவல் தொடர்ந்து பாதைமாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனால், முற்போக்கு எழுத்தாளர்களால் ஊர் ஊராகப் புகழ்பாடப்படும் ஒரு தமிழ் நாவலைப்பற்றிய கருத்துமுன் வைக்கப்பட்டது. அதற்குப் பதில் சொல்லிய தமிழ்ச்செல்வன் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வயிற்றெரிச்சல் என்பது போல் பதில் கொடுத்திருந்தார். (தீராநதி). ஒருவர் கட்சியில் இருப்பதால் அவரின் நாவலை ஊர் ஊராக எடுத்துச்சென்று புகழ்பாடுவதைவிட, முக்கியமான எல்லாத் தமிழ் நாவலையும் பலர் மத்தியில் அறிமுகப்படுத்தியிருக்கலாமே தமிழ்ச்செல்வன் என்று பட்டது. அதாவது சி.பி.எம். கட்சியினர் நடுநிலையான இலக்கிய அறிமுகம் பெறுவதைத் தடுப்பதுதான் த.மு...வின் பணி என்பதுபோல் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். [ஈழப்பிரச்சினை பற்றி மௌனம் சாதிக்கும் ஒரு கட்சியின் அனுதாபிகள் வேறு எப்படியிருப்பார்கள்?]

அரவிந்த் அடிகாவின் நாவல் வடிவம் இன்றைய அகில உலக நாவல்களின் தொடர்ச்சியாகவே எனக்குப்படுகிறது. அதற்கு மேல் ஒருவித இந்திய மத்தியதரவர்க்கத்தின் எழுச்சியின் இலக்கியப் படப்பிடிப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய சமூக அமைப்பில் மத்திய தரவர்க்கம் என்பது ஒருவகை மாய்மாலமான வர்க்கம். தனது பழைய கிராமத்து நாட்களை மறக்கமுடியாமலும் புதிய நகரத்தையும் அது தரும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியையும் விடமுடியாமலும் அல்லாட்டத்தில் இருக்கும் வர்க்கம். எதற்கெடுத்தாலும் எப்போதும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் கொண்டே, லஞ்ச லாவண்யங்களைப் பற்றி ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் வர்க்கம். இந்த வர்க்கம்தான் இன்றைய சிபுசோரன்களையும் ஸஹாப்புதின்களையும் உருவாக்கும் வர்க்கம். இந்த வர்க்கம் பழைய நம்பியார் போன்றும் எம்.ஜி.ஆர் போன்றும் உள்ள எதிர்வுகளை உருவாக்காது. அசோக் மற்றும் முன்னா போன்ற அமுங்கிய எதிர்வுகளைத்தான் முன் வைக்கும். வாசிக்கிறவர்களுக்கு முன்னா இப்படிப்பட்ட கோபம் ஒன்றை தன் பவ்வியமான நடவடிக்கைகளின் பின்னேயும் நாகரிகமான வார்த்தைகளுக்குப் பின்னேயும் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை நம்பவே முடியாது. (மெதுமெதுவாகப் பாத்திரவார்ப்பு வளரவேண்டும் என விவாதித்திடும் நவீன நாவல் வாசிப்பாளர்கள் சிலரை எனக்குத் தெரியும்). மொத்தம் 321 பக்கங்கள் கொண்ட ஹார்ப்பா காலின்ஸ் மற்றும் இண்டியாடுடே இணைந்து 2008-இல் வெளியிட்ட இந்த நாவலில் அசோக்கின் கொலை 285-ஆம் பக்கத்தில் நடக்கிறது. முன்னா திடீரென கொலைகாரனாக மாறுகிறான். இங்குதான் நூல் எதார்த்தமற்ற நாவலாக மாறுகிறது. ஒரு பின் நவீனத்துவ நாவல்தொனியை இந்நாவல் மேற்கொள்கிறது. இதன்மூலம் முன்னா உருவான, இனிப்புப்பொருள்கள் செய்யும் குடும்பத்தின், கிராமத்தின், முன்கூட்டி எதிர்பார்க்க முடியா வன்முறையின் வேர் சுட்டிக்காட்டப்படுகிறது. அரவிந்த் அடிகாவின் நகைச்சுவையான நடைக்குப் பின்புறம் உள்ள கோபம் வெளிப்படுகிறது.

 என் நாவல் அணுகுமுறை இன்னும் நுட்பமானது. என் வாசிப்பில் நாவலில் பிரதியியல் தளத்துக்கு உள்ளே இயங்கும் உப-பிரதியியல் தளமே முக்கியம். இனிப்பு உற்பத்தி செய்யும் சாதியைச் சேர்ந்தவனின் கசப்பான கொலையும், நாவலின் முழுக்க "இருட்டிலிருந்து வந்தவர்கள்" என்ற புதிர்மை வாக்கியமும் வேறொரு அர்த்ததளத்தை நாவலுக்கு தொடர்ந்து வழங்குகின்றன. அந்த நூலிழை வழி ஏற்படும், இடைவெளி வழியே உருவாகும் ambiquity (இருள்மை) புதிய நாவல்களின் கதை சொல்லலை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன. அந்தத் தளத்தை இந்தியாவின் மத்தியதரவர்க்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியிலும் ஒரு மத்தியதர வர்க்கம் வந்துள்ளது.

click here

click here
click here