உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
தற்கொலைகளும் கொலைகளும்
ந. முருகேசபாண்டியன்

 

காண்பதற்கு எதுவுமில்லை என்றால் விளக்கை அணைத்துவிடலாம்என்ற எளிய தர்க்கம் மனித வாழ்க்கைக்குப் பொருந்துமா என்பது நுட்பமான கேள்வி. மனித இருப்பினுக்கும் இறத்தலுக்குமிடையிலான ஊசலாட்டம் காலங்காலமாக இலக்கியப் படைப்புகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. மரணம் குறித்த கேள்விகள் தொடர்ந்து மனிதர்களை விரட்டிக்கொண்டே இருக்கின்றன. மரணத்திற்கப்பால் என்ன நிகழுகிறது என்பது குறித்துப் பல்வேறு புனைவுகள் காலந்தோறும் கற்பிதமாகிக் கொண்டிருக்கின்றன. மனிதனைத் தவிர்த்து வேறு உயிரினங்கள் மரணம் குறித்து ஆழமாகச் சிந்திக்குமா என்பது தெரியவில்லை. வயது முதிர்ந்த நிலையில் சாவு என்பது உடலுக்கு விடுவிப்பு என்பது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. சமூக இருப்பில் தாக்குப் பிடிக்க இயலாமல் தற்கொலை என்ற பெயரில் உடலை அழித்திட முயலுவது தொடர்ந்து நடைபெறுகிறது. அதுபோல சக மனிதர்களின் உடல்களைச் சிதைத்து உயிரைப் போக்குவதும் பெரிய அளவில் நிகழ்த்தப்படுகின்றன. ஏதோ தனது உடலுக்கு அழிவென்பது கிடையவே கிடையாது போல, அதிகாரத்தின் பெயரில் பிற உடல்களைக் கொன்று குவிக்கும் சர்வாதிகாரிகள் எல்லாக் காலகட்டங்களிலும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக மனித உடல்கள் இறப்பின் மூலம், செயலற்று ஒரேநாளில் அழுகித் துர்நாற்றம் வீசுவது குறித்து ஏதோ ஒருநிலையில் எல்லோரும் அஞ்சுகின்றனர். அன்றாட வாழ்வில் மனித உடல் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களின் இழப்புக் குறித்து துக்கம் ஏற்படுகின்றது. மரணத்தைப் பொறுத்தவரையில் இறந்து போனவருக்கு எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால் அவரைச் சுற்றி வாழ்கின்ற, அவரைச் சார்ந்து வாழ்கின்றவர்களுக்கு இனிமேல் அந்த உடலுடன் எவ்விதமான சொல்லாடலும் உறவும் கிடையாது என்பது மனதுக்குத் துக்கத்தை ஏற்படுத்துகின்றது. சென்றதினி திரும்பாதுஎன்று முழுமையாக அறிந்திருந்தும் அழுது அரற்றும் மனத்தைச் சமாதானப்படுத்த காலம்தான் பெரிய மருந்து.

 தற்கொலை என்ற சுய விடுவிப்பு அல்லது தனது உடலின் இயக்கத்தை நிறுத்திவிட முயலுவது எங்கும் நடைபெறுகின்றது. சமூக வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படும் மனித மனம் சோர்ந்து போகின்றது. அடுத்தடுத்து சோதனைகள் நிகழ்ந்திடும்போது ஏற்படும் இழப்புகள், மன வேதனைகள் சிலரை போதும் இந்த வாழ்க்கைஎன்ற முடிவுக்குத் தள்ளுகின்றது. சாதாரணமான பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கியவர்கள் பலருண்டு. மிகப் பலவீனமான மனம் தனக்குள்ளாகக் குழம்புகிறது. அற்பமான பிரச்சினையை மீண்டும் மீண்டும் எண்ணி தனக்குள்ளாக மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயலும் பெரும்பாலான மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள்; தன்னைச் சுற்றியிருக்கும் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் புறக்கணித்து, தன்னால் இனிமேல் உயிருடன் வாழமுடியாது என்ற முடிவுக்கு வருவது சுயநலத்தின் உச்சமன்றி வேறு என்ன?

அறுபதுகளில் எங்கள் ஊரில் நிரம்ப தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் நடைபெற்றன. ஏன் இப்பவும் உண்டு. யாராவது ஒருவர் தனது உயிரைப் போக்கிக் கொள்ள விஷத்தைக் குடித்துவிட்டால் அச்செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுக்கப் பரவிவிடும். எங்கள் ஊரான சமயநல்லூர், மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து பத்து மைல் தொலைவிலிருந்தது. அங்கிருந்துதான் ஆம்புலன்ஸ் வர வேண்டும். அந்தக் காலத்தில் தொலைபேசி என்பது காவல்நிலையத்திலும் அஞ்சல் நிலையத்திலும்தான் இருந்தது. யாராவது ஒருவர் தொலைபேசி மூலம் ஆம்புலன்சை வரவழைக்க சைக்கிளை வேகம் வேகமாக மிதிப்பார். ஆம்புலன்ஸ் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகும். விஷம் குடித்தவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் முக்கால் மணி நேரமாகிவிடும். விஷம் குடித்தவர் உயிர் பிழைப்பது என்பது அவருடைய ஆயுள் கெட்டியா இல்லையா என்பதைப் பொறுத்தது.

 அந்தக் காலகட்டத்தில் கிராமத்து வீடுகளில் மூட்டைப்பூச்சிகள் நிரம்ப இருக்கும். திரையரங்குகளில் படம்பார்த்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது மூட்டைப்பூச்சிகள் ஆடைகளில் ஒட்டிக் கொண்டு வீட்டிற்குள் குடியேறிவிடும். இரவில் தூங்கவிடாமல் தொல்லை கொடுக்கும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்ல கிராமத்தில் ஓரிரு கடைகளில் மூட்டைப்பூச்சி பவுடர் அல்லது திரவ வடிவிலான மூட்டைப்பூச்சிக் கொல்லிகள் விற்கப்பட்டன. இத்தகைய பொருட்கள்தான் உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றவர்களுக்குக் கை கொடுத்தன. மூட்டைப்பூச்சிக் கொல்லி என்பது விஷம்என்றாலும் அதை ஏன் மருந்து என்றனர் என்பது புலப்படவில்லை. அதுபோல விஷம்குடித்துச் செத்தவனை மருந்தைக் குடிச்சு செத்துவிட்டான் என்று சொல்வது கிராமத்து வழக்கம்.

 கில் பக்’, ‘பக்டோன்போன்ற பெயர்களில் விற்கப்பட்ட மூட்டைப்பூச்சிக் கொல்லிகளை வெறும் வயிற்றில் யாராவது குடித்தால், அவை குடல் தொண்டைக்குழாய் போன்ற மெல்லிய பாகங்களை அரித்து ஆளைக் கொன்றுவிடும். யாராவது மூட்டைப் பூச்சிக் கொல்லியைக் குடித்துவிட்டனர் என்றால், அவரை வீட்டிற்கு வெளியே தூக்கிவந்து வைத்து, உப்பைத் தண்ணீரில் கலக்கி குடித்தவரின் வாயைப் பிளந்து ஊற்றுவார்கள். உப்பு நீரைக் குடிக்க மறுத்தால், வாய்க்குள் கையைக் கொடுத்து மேல்த்தாடையையும் கீழ்த்தாடையையும் பிளந்து வலிந்து நீரை உள்ளே ஊற்றுவார்கள். முட்டையை உப்பு நீரில் கலந்து தொடர்ந்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். விஷத்தைக் குடித்தவர் உமட்டல்தாங்காமல் வென வாந்தியெடுப்பார். அவரைப் பிடித்திருக்கிறவர்கள் மீதெல்லாம் பக்டோன் கலந்த வாந்தி படும் கெட்ட வீச்சமடிக்கும். அதையாரும் பொருட்படுத்துவதில்லை. விஷத்தைக் குடித்தவரின் நெருங்கிய உறவினர்கள் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘ஐயோஎன அழுவது பார்க்கத் துயரமாக இருக்கும். இந்த ஆம்புலன்ஸ் காரனுகளே இப்படித்தான். ஆள் மண்டையைப் போட்டபிறகுதான் வருவானுகஎன்று கூட்டத்தினர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

 பெரும்பாலும் விஷத்தைக் குடிக்கிறவர்கள் உணர்ச்சி வயப்படுகிறவர்களாக இருப்பார்கள். புருஷன் - பெண்டாட்டி தகராறுக்குக் கூட விஷத்தைக் குடித்த பெண்கள் எங்கள் ஊரில் உண்டு. தான் விரும்பிய பெண்ணை மணம் முடித்து வைக்க மறுத்த காரணத்திற்காக விஷம் குடித்த வாலிபர்கள் இருந்தனர். வீட்டில் இருந்த பழைய பித்தளைச் சட்டியைப் பேரிச்சம் பழத்திற்காகப் போட்டுவிட்டு, அதைப் பெற்றோர் அறிந்தால் அடிப்பார்கள் எனப் பயந்து விஷத்தைக் குடித்துச் செத்துப்போன பதினாறு வயதுப் பையனுடன் சிறு வயதில் நான் விளையாடி இருக்கிறேன். மாமியார் மருமகள் வாய்த் தகராறு தற்கொலை வரை போய் விடுவதுண்டு.

 குடித்த விஷத்தைக் கக்கச் செய்துவிட்டால், ஆள் உயிர் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மனித மலம், நாய் மலம் போன்றவற்றை நீரில் கரைத்து, விஷங் குடித்தவரின் வாயில் ஊற்றுவது கிராமங்களில் சாதாரணம். ஒருகால் அத்தகையவர் விஷங்குடித்துப் பிழைத்து மீண்டும், ஊருக்குள் நடந்து போகும்போது, அந்த ஆளைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்.

 புருஷனை மிரட்டுவதற்காக விஷத்தைக் குடித்து விட்டு ஐயோ! என் பிள்ளையை விட்டுப் போகப்போகிறேனே என்னைக் காப்பாற்றுங்களேன்என்று கதறிய பெண்கள் உண்டு. கண்டிப்பான அப்பாவுக்குப் பயந்து விஷங்குடித்த பதினெட்டு வயசுப் பையன், "ஐயையோ! தெரியாமல் பக்டோனைக் குடிச்சிட்டேன் என்னைக் காப்பாத்துங்க" என்று சுத்தி நின்றவர்களைப் பார்த்துக் கதறியதை நேரில் நான் பார்த்திருக்கிறேன். அவன் வெறும் வயிற்றில் விஷத்தைக் குடிச்சிருந்ததால், மருத்துவமனைக்குப் போய் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பிரேதப் பரிசோதனை முடித்து, அவனுடைய உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த போது, அந்தத் தெருவில் நின்று அழாதவர் யாருமில்லை அவசர புத்தியினால் சட்டென முடிவெடுத்து, உடன் தற்கொலைக்கு முயலும் ஆணோ பெண்ணோ, மீண்டும் உயிர் வாழ ஆசைப்பட்டுக் கெஞ்சும்போது, பரிதாபகரமான கண்களைப் பார்க்க முடியாது.

 தற்கொலை முயற்சியில் மிகவும் கொடூரமானது, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொள்வதுதான். தீயிலிட்டுத் தற்கொலைக்கு முயலுவது பெரும்பாலும் பெண்கள்தான். மதுரை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு தீயில் கருகிய நான்கைந்து உடல்களைச் சேர்ப்பதும், அவை சில நாட்களில் விரைத்த உடல்களாக வெளியே கொண்டு செல்வதும் நடைபெறுகின்றன. உடலில் பரவியிருக்கும் தீக்காயங்களைப் பார்த்த, அந்த வார்டில் பணியாற்றும் அடிப்படை ஊழியர்கூடச் சொல்லிவிடுவார், ‘இந்தக் கேஸ் தேராது. 40% தீக்காயம்என்று. உடலில் தீயைப் பற்ற வைத்துக்கொண்டு, ‘ஐயோ!.. எரியுதே!என்று கத்தியவாறு தெருவில் ஓடிவந்த பெண்ணைப் பார்த்துத் திடுக்கிட்டிருக்கிறேன். கணவனுடன் ஏற்பட்ட சிறிய மனமுரணில், ‘செத்துப் போவேன்என மிரட்டியவளை, ‘ம்... செய்என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போனவன், தெரு முக்கைக் கடப்பதற்குள், உடலில் லேசாக மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்ற வைத்துக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்துவிட்டார். கழுத்துக்கு கீழே தொடை வரை தீக்காயங்களுடன் இருந்த பெண் தொடக்கப்பள்ளி ஆசிரியை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவள் ஒருவாரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவசரப் புத்தியினால் தீயை வைச்சுக்கிட்டேன். சீக்கிரம் குணமாகி வீட்டுக்குப் போகணும். இரண்டு பிள்ளைகளையும் பார்க்கணும்என்று பார்க்க வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஏழுநாட்களுக்குப் பிறகு அவளது மூச்சு நின்றது. குடிக்கத் தண்ணீர் வேணும்... எரியுதுஎன்று தீக்காயத்துடன் கதறும் நோயாளியின் குரல் நாள் முழுக்கக் கேட்கும். சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டார்கள். எப்படியிருந்தாலும் உயிர் உடலிலிருந்து பிரிந்துவிடும்.

 ஒடுவன்செடியின் இலை, அரளி விதை, ஊமத்தங்காயின் விதை எனக் கிராமப்புறங்களில் விஷச் செடிகள் இருந்தன. பள்ளிக்கூடச் சிறுவர்களுக்குக்கூடத் தெரியும், விஷமான செடிகள் எதுவென. ஒடுவன் செடியின் இலையைச் சாப்பிடும் வெள்ளாட்டிற்கு ஒன்றும் ஆகாது. மனுஷன் அதே இலையைத் தின்றால், கதை முடிந்து விடும். இயற்கையில் முளைத்த விஷச் செடிகளைத் தின்று சாகின்றவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலையினராக இருப்பார்கள்.

 எங்கள் ஊரின் வடக்கே இருப்புப் பாதையில் ஓடிய ரயில்களும் தற்கொலை செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பயன்பட்டன. போதும் இந்த வாழ்க்கைஎன்று முடிவெடுத்த மனம், உடலை ஓடுகின்ற ரயிலின் முன்னே பாய்ந்திட உந்தியது. கால், கை, தலை வேறு எனச் சிதலமாகி தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் உடலை அடையாளம் கண்டு பிடிப்பது சிரமம். முகச் சாயல், உடை, மோதிரம் போன்றவற்றை வைத்துத்தான் செத்தது இன்னார்என்று முடிவெடுக்க முடியும். ரயிலில் அடிபட்ட உடல் சற்று நேரத்தில் கறுத்துவிடும்.

 திரைப்பட நடிகைகளே தூக்கில் தொங்கிவிட முடிவெடுத்து, அதை அமல்படுத்தும்போது, கிராமத்தினர் மட்டும் விதிவிலக்கா என்ன? விழிகள் பிதுங்கிட, நாக்குத் தள்ள கோரமான முகத்துடன் கயிற்றில் ஆடும் உடலைப் பார்க்கவே பயப்படுகிறவர்கள் பலர் உண்டு. நாண்டுக்கிட்டுச் செத்தா தெரியும்என்று பிறரை மிரட்டும் குரலைக் கிராமத்தில் கேட்கமுடியும். யாராவது தூக்கில் தொங்க முயற்சி செய்யும்போது, அதைப் பார்த்தவர்கள் காப்பாற்றிவிடுவார்கள். அந்த நேரத்தில் தூக்குப் போட முயன்றபோது பயன்பட்ட கயிற்றைத் தீயிலிட்டுக் கொளுத்திவிடுவார்கள். அக் கயிற்றை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தூக்குப் போட முயன்று தோற்றுப் போன ஆளை, அந்தக் கயிறு வா.... வாஎன மீண்டும் மீண்டும் அழைக்கும் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை.

 தற்கொலை செய்து கொள்ளக் கிணற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லதங்காள்காலத்திலிருந்தே தமிழகப் பெண்களிடையே வழக்கமாக உள்ளது. குடும்பம் என்ற நிறுவனம் தரும் அழுத்தம் தாங்க முடியாமலும், மீண்டும் தாய்வீட்டிற்கும் போகவியலாமலும் குழம்பிடும் பெண் மனம் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறது. பொருளாதார ரீதியில் சொந்தக் காலில் நிற்கவியலாத நிலை, குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய சூழல் போன்றன நிமிஷத்தில் மனத்தைக் கோழையாக்கி விடுகின்றன. இந்நிலையில் தற்கொலைதான் தேர்வாகின்றது. ஓரளவு நீச்சல் தெரிந்த பெண் வயிற்றில் பெரிய கல்லைக் கட்டிக் கொண்டு குதித்து தனது உயிரைப் போக்கிக் கொள்வார். அடிக்கடி குடும்பத்தில் சண்டைபோடும் புருஷனுடன் வாழ நேர்கின்ற பெண்ணைத் திடீரென ரொம்ப நேரமாகக் காணாவிட்டால், ஊருக்கு வெளியே இருக்கும் விவசாயத்திற்கான கிணறுகளை நோக்கிக் குழுக்களாகத் தேடிப்போவார்கள். நீரில் முதலில் மூழ்கிய உடல், நன்கு ஊறி உப்பிய பிறகு மறுநாள்தான் மிதக்கும். மீன்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் உடலைப் பார்க்கும் மாடுமேய்க்கும் சிறுவர்கள் தரும் தகவலைக் கேட்டவுடன் ஊரே திரண்டு கிணற்றுக்குப் போகும். சில பெண்கள் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு நீரில் குதிப்பார்கள். செத்த உடல் நீரில் மிதக்கும்போது சேலை விலகி, உடல் காட்சிப்பொருளாகிவிடக்கூடாது என்ற முன்யோசனைதான் அதற்குக் காரணம்.

 தற்கொலை செய்யும்போதுகூட தனது உடல் பற்றிய கவனத்துடன் செயற்படும் பெண், பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் நிர்வாணமாகக் கிடத்தப்படும் உடல் பிளேடினால் கிழிக்கப்படுவதை நினைத்தால் நிச்சயம் அந்த முடிவுக்கு வரமாட்டாள். வாழும் காலத்தில் கௌரவத்துடன் வாழ்ந்து தற்கொலை செய்துகொண்ட பேரழகியின் பொன்னிற அழகிய உடல், துர்நாற்றமடிக்கும் சவக்கூட மேசையில் நிர்வாணமாகக் கிடத்தப்பட்டு, ஆண்களால் கிழிக்கப்பட உள்ளது என்பதுதான் யதார்த்தம்.

 கிராமத்தினரைப் பொறுத்தவரையில் எத்தகைய இடையூறுகள், பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அவற்றுடன் முட்டி மோதி வெளியே வரவேண்டும். அவன்தான் மனுஷன், மனுஷி என்று நம்பிக்கை கொண்டவர்கள். எனவே தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசுவார்கள். மனைவி, நாலைந்து பிள்ளைகளைத் தவிக்கவிட்டு விஷத்தைக் குடித்துச் செத்துப் போனவனுடைய பிணத்துக் காலில் வைக்கோல் பிரியைக் கட்டிச் சுடுகாட்டுக்கு இழுத்துட்டுப் போகணும் என்று பேசிய பெரிசுகளின் குரலைக் கேட்டிருக்கிறேன். தற்கொலை செய்து கொண்ட ஆளைப் பற்றிக் கேள்விப்பட்டு, திடுக்கிடும் ஊர்க்காரர்கள், ஆளைக் காப்பாற்ற முடிந்த அளவு முயலுவார்கள். ஊரே பதற்றமாக இயங்கும். எல்லா முயற்சிகளும் வீணாகி, ஆள் செத்துவிட்டால், அவனுடைய குடும்பத்தாருக்கு, எல்லோரும் தேறுதல் சொல்வார்கள். ஆனால் ஊர் மந்தையில் அல்லது கடைவீதியில் பேசும்போது, தற்கொலை முயற்சியையும், தற்கொலை செய்து கொண்டவனையும் தூற்றுவார்கள்.

 கிராமங்களில் யாராவது தற்கொலை செய்து கொண்டால், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர், பெரிய மனிதர்களை வைத்து, காவல்துறையினர் முன்னிலையில் ஏதோ எழுதி வாங்கிக் கொண்டு, சடலத்தைத் தூக்கிக் கொண்டுபோய் சுடுகாட்டில் எரித்துவிடுவார்கள். தற்கொலை செய்து கொண்டவனின் உடலை எவ்வளவு சீக்கிரம் எடுத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தூக்கிவிடுவார்கள். தொலைவில் இருக்கும் நெருங்கிய சொந்தக்காரர் வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். யாராவது ஏதாவது காவல்துறையில் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் கொடுத்துவிட்டால் பிரச்சினையாகிவிடும் எனப் பயப்பட்டனர்.

 தற்கொலைக்கு முயன்றவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கேயே இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர்தான் சடலம் கிடைக்கும். பெருங்கும்பல் சவக்கிடங்கு வாசலில் காத்துக்கிடக்கும். செத்த உடலைக் கீறி, மீண்டும் தைத்துக் கொடுப்பதை மோசமானதாகக் கருதினர். ஆனால் வேறு வழி? மருத்துவமனையில் செத்தவரின் பிணத்தைப் பெரும்பாலும் வீட்டிற்குள் கொண்டு செல்ல மாட்டார்கள். ஊருக்கு வெளியே இருக்கும் புளிய மரத்தடி அல்லது ஊர் மந்தையில் புதிதாகப் போடப்பட்டிருக்கும் கீற்றுக் கொட்டகை, அல்லது வீட்டின் முன்னர் போட்டிருக்கும் கீற்றுக்கொட்டகை போன்றவற்றில் ஏதாவது ஓர் இடத்தில் பிணம் வைக்கப்படும். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிணத்தை எடுத்துச் செல்வார்கள். வெளியில் இறந்தவர் அல்லது தற்கொலை செய்து கொண்டவரின் உடலை வீட்டுக்குக் கொண்டுவரும்போது, இறந்தவரின் ஆவி, பேய் வடிவில் கூடவே வரும் என்று பலரும் நம்பினர். பிணத்தை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டால், பேய் வீட்டிற்குள் வராது.

 இறந்த சக மனிதர்கள் பற்றிய பயம் மனிதர்களை காலந்தோறும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. தந்தை இறந்தால்கூட, இரு உள்ளங்கைகளையும் பிளேடால் கீறிப் புதைக்கவோ எரிக்கவோ செய்வார்கள். இறந்தவர் தனது பிள்ளைகளின் மீதான பாசத்துடன் பேயாக வந்து, பிள்ளைகளைத் தூக்கிப் போவதைத் தடுக்கவே உள்ளங்கைக் கீறல். அற்ப ஆயுளில் அதாவது ஆண்டு அனுபவித்து முதுமையில் சாகாமல், இளவயதில் தற்கொலை செய்து கொண்டோ, அல்லது கொல்லப்பட்டோ நடக்கும் சாவு பலருக்கும் பீதியைக் கிளப்பியது. ஓர் உயிரின் முழுமையான வாழ்க்கை நிறைவடையாமல், இடையிலே உடலை விட்டுப் பிரியும்போது, அது விண்ணுலகம் போகாமல், குறிப்பிட்ட காலம்வரை ஆவியாகப் பூமியின் மீது சுற்றிவரும். அப்பொழுது அந்த ஆவியானது வாழும் மனிதர்களைப் பயமுறுத்தவும், தீங்கு செய்யவும் முயலும் என்ற பயமானது பலரையும் ஆட்டிப் படைத்தது. சாதல் என்பது மனித வாழ்க்கையில் பகுதியானது என்ற புரிதல் இல்லாமல், செத்தவரைக் கண்டு அஞ்சி நடுங்குவது விநோதமானது. அதிலும் தற்கொலை அல்லது கொலைக்குள்ளானவர் பேயாகி, ஊர்ப் பெண்களைப் பிடித்துச் சேட்டை செய்தலும், உச்சி வேளையில் சிலரை அடித்து ரத்தம் கக்கச் செய்வதும், சிலரைப் பயமுறுத்திக் காய்ச்சலுக்குள்ளாக்குவதும்... இப்படி எண்ணி எண்ணிப் பயந்தவர்கள் கிராமங்களில் அதிகம்.

 கொலை என்பது கிராமத்தினரையே உலுக்கும் விஷயம். தனது கணவனை விட்டு வேறு ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண், சொத்து விவகாரம் போன்றன கொலைக்கான காரணங்களாக பெரும்பாலும் இருந்தன. அறுபதுகளில் எங்கள் ஊரில் நடந்த இரட்டைக் கொலை ஊரையே உலுக்கியெடுத்துவிட்டது. பஞ்சாலையில் இரவு வேளைக்கு கணவர் போனவுடன், தனது உறவினருடன் உடலுறவுத் தொடர்பு வைத்திருந்த பெண்ணையும், அந்த ஆணையும் தனது வீட்டுக்குள்ளே வைத்து வெட்டிக் கொன்ற கணவனின் செயல் ஆண்மைக்கு எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டது. தனது மனைவியையும், அவளுடன் இருந்த ஆளையும் வெட்டிக் கொன்ற பின்னர், அரிவாளைக் கழுவிக் கையில் எடுத்துக்கொண்டு, நேரே காவல்நிலையம் சென்று சரண்அடைந்தவருக்கு ஏட்டையா தேநீர் வாங்கிக் கொடுத்தார் என்று பள்ளிக்கூட மாணவர்கள் பேசிக் கொண்டோம். அந்த வீட்டில் சாக்கடைக்குழாய் வழியாக ரத்தம் குபுகுபுவென வந்தது என்று திகிலுடன் சிறுவர்கள் பேசினர்.

 இரு மனித உடல்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து வருத்தப்பட அன்றைய சூழலில் யாருக்கும் தோன்றவில்லை. அவர்களை வெட்டியவரும் ஏழெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்தார்.

பொதுவாகக் கொலை என்பது கிராமத்து வாழ்க்கையில் நடைபெறாது. வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பு, அடிதடி, வெட்டுக் குத்து என்ற அளவில் போகுமே தவிர, யாரையும் கொல்லவேண்டும் என்று யாரும் கருதுவதில்லை. கொலைப் பழி குறித்தும் கிராமத்தினருக்கு அச்சமிருந்தது.

 தாழ்த்தப்பட்ட இளைஞருடன் ஓடிப்போன இடைநிலைச் சாதியைச் சார்ந்த, இளம்பெண், வேறு சாதியினருடன் உடலுறவு கொண்டு திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற இளம்பெண் போன்றவர்களை அவளுடைய பெற்றோரும் உறவினர்களும் மன்னிக்கத் தயாராக இல்லை. அத்தகைய நிலைக்குள்ளான பெண்கள் அடித்து உதைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். சிலவேளைகளில் விஷம் குடித்துச் சாகுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தனர். சமூகக் கேவலம், குடும்ப வன்முறை காரணமாக விஷத்தைக் குடித்துச் சாக நேரிடும் பெண்ணுடல்களும் அன்றைய காலகட்டத்தில் இருந்தன. குடும்பம் அல்லது சாதியின் தூய்மை என்பது பெண்களின் யோனித் தூய்மையில் இருக்கிறது என்று பலரும் தீவிரமாக நம்பினர். பெண்கள் சற்று வழிமாறினால் போதும், உடல்கள் மீதான ஒடுக்குமுறையுடன் மரணத்தையும் எதிர் கொள்ள வேண்டிய கொடூரமான சூழல் நிலவியது. ஆனால் ஆண்களில் 80% பேர் பெண்கள் விஷயத்தில் கண்டபடிதிரிந்தனர்.

 கொலைக்குள்ளானவர் அல்லது இறந்தவரின் உடல்களை எடுத்துச் செல்வது என்பது அப்பொழுது பெரும் பிரச்சினை. இரட்டைக் கொலையின்போது, பிணங்களைக் குப்பை வண்டியில் போட்டு கிராமத்துத் தோட்டி போன்றோர்தான் மதுரை மருத்துவமனைக்கு இழுத்துக் கொண்டு போயினர். மாட்டு வண்டியில் பிணத்தைக் கொண்டு போனால், மாடுகள் நுரை தள்ளிச் செத்துவிடும் என்ற நம்பிக்கை நிலவியது. மதுரை மருத்துவமனைக்கு வெளியே பிணங்களைக் கொண்டு வருவதற்கெனத் தனிப்பட்ட டாக்ஸிகள் இருந்தன. வழக்கமான கட்டணத்தைவிட நான்கைந்து மடங்குகள் கூடுதல் கட்டணம் கேட்டனர். எனவே சைக்கிள் ரிக்ஷாவில் வைத்துப் பிணத்தைக் கொண்டு போகிறவர்கள் சிலர் இருந்தனர்.

 தற்கொலை செய்யப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகின்றவர்கள், பத்தாண்டுகளுக்குப் பிறகுகூட தற்கொலை செய்து கொள்வார்கள். எனக்குத் தெரிந்தவர் எங்கள் கடையின் வாடிக்கையாளர் - ஒருவித மனச் சோர்வுக்குள்ளாகி இருந்தார். அவருக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்தது. அழகான குழந்தைகள் இருந்தன. அவர் அவ்வப்போது செத்துப்போவேன் என்று சொல்வார். யாரும் அதை நம்புவதில்லை. திடீரென அவர் ஓடும் ரயிலின் குறுக்கே பாய்ந்து சிதலமாகிப் போனார். சிதைந்து துண்டான உடலை அள்ளி ஓலைப்பாயில் வைத்துப் பொட்டலமாகக் கட்டி சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டிக் கொண்டு போனார் மதுரையிலிருந்து வந்த குண்டான ஆள். அவருடைய வேலையே ரயிலில் அடிபட்ட பிணத்தை அள்ளியெடுத்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதுதான். ஆம்புலன்சில் கொண்டு செல்வதைவிட சைக்கிளில் பிணத்தைக் கொண்டு போவது மலிவானது. சைக்கிளின் பின் கேரியரில் பிணத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுபோன அந்த ஆளைச் சில தடவைகள் மதுரையில் பார்த்திருக்கிறேன். செத்துப் போனவரின் உடலைக் கண்டு நெருங்கிய உறவினர்களே பயந்து அருகில் செல்லப் பயப்படுகின்ற நிலையில், தற்கொலை செய்து கொண்ட உடலை ஒற்றை ஆளாகத் தூக்கிப் போனவரின் மனம் கெட்டியானதுதான்.

 கிராமங்களில் யாராவது திடீரெனச் செத்துப்போனால் பலரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஆள் திடகாத்திரமாக நன்றாக இருந்தாரே... அவர் எப்படிச் செத்தார் என்று ஆளாளுக்கு ஊகித்து ஏதாவது சொல்வார்கள். அதிலும் சில சமயங்களில் தற்கொலை நடந்துவிட்டது என்று உறவினர்களும் காவல்துறையும் சொல்வார்கள். ஆனால் ஊரார் நம்பமாட்டார்கள். பெரிய நோட்டுகளாகக் கொடுத்துப் போலீசைச் சரிக்கட்டி விட்டார்கள். உண்மையில் ஆளை வைத்துப் போட்டுத் தள்ளிட்டு தற்கொலை என்று சம்பவத்தை ஜோடித்துவிட்டதாகச் சொல்வார்கள். முப்பது வயதான ஆண் ஒருவர் திடீரென இறந்து போனபோது, அவருடைய விதைகளைப் பிடித்துக் கைகளால் கசக்கியதால் செத்துப்போனார் என்று புரளி பேசினார்கள். சில வேளைகளில் இறந்தது இயற்கையான முறையிலா? தற்கொலையா? கொலையா என அறிய முடியாமல், மரணமே பூடகமான முறையில் இருக்கும். காவல்துறையினரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் எங்களுக்குச் சந்தேகம்இருக்கு என்பார்கள். வாழும் காலத்தில் சிலரைப் புரிந்து கொள்ள முடியாமல், அவரைச் சுற்றிப் புனைவுகள் பின்னப்பட்டிருக்கும். சிலரைப் பொறுத்தவரையில் மரணமே புதிராகிவிடும். எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் இடம் தரும் வகையில் மரணமிருக்கும். ஊரார் மரணத்தைப் பற்றிய சந்தேகங்களை இடைவிடாமல் ஆற்றங்கரை, மந்தை, கடைத்தெரு போன்ற இடங்களில் பேசிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய மரணங்களில் இறந்தவர், உயிருடன் வந்து, ‘நடந்தது என்ன?’ என்று சொன்னால்தான் உண்மை புலனாகும்.

 வயதான பிராயத்தில் முதுமையடைந்த நிலையில், பேரன் பேத்திகளுக்கும் வளமான வாழ்க்கை அமைந்து, கொள்ளுப் பேத்தியைக் கொஞ்சிப் பாராட்டும் நிலை வாய்க்கப் பெற்றவரின் மரணத்தை நல்ல சாவுஎன்று ஊரே போற்றும். பிறரைக் கொல்வது மிகக் கொடூரமானதாகக் கருதப்பட்டது. அதேவேளையில் வாழவேண்டிய வயதிலுள்ளவரோ அல்லது வயதானவரோ தற்கொலை செய்து கொண்டால், அந்நிகழ்வு கேவலமாகக் கருதப்பட்டது. உடலிலுள்ள உயிரைப் போக்கிக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை; எனவே தற்கொலையைப் பேடித்தனமாகவும் கையாலாகாத்தனமாகவும் கருதி வெறுத்து ஒதுக்குவதன் மூலம் நடப்பு வாழ்க்கையைக் கொண்டாடுவது முன்னிலைப்படுத்தப்பட்டது. கிராமமே ஒருங்கிணைந்து வாழ்ந்த அன்றைய வாழ்க்கையில் யாருக்கும் பெரிய அளவில் துக்கமோ அந்நியமாதலோ ஏற்பட வாய்ப்பில்லை. எல்லோருக்கும் சமூக இருப்பில் அடையாளம் இருந்தது. இருந்தாலும் சூழலின் வெக்கை தாங்காமலோ, மனப்பிறழ்வினாலோ, தன்னலத்தினாலோ தற்கொலை செய்து கொண்டவர்கள் இருந்தனர். இன்று நகரமயமாகிப்போன வாழ்க்கையில் யாருக்கும் எவ்விதமான அடையாளமோ, சமூகத்துடன் நெருக்கமான உறவோ இல்லாத நிலையில், தனித்தனித் தீவுகளாக வாழ நேரிட்டுள்ளது. கூட்டு வாழ்க்கை, பெரிய குடும்பம் போன்ற சொற்கள் அர்த்தம் இழந்த வாழ்க்கையில், பூமியில் மனித இருப்பு கசப்பு மிக்கதாக்கிவிட்டது. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்ட மனிதர்கள், எதன் மீது பற்றுக் கொண்டு கொண்டாட்டத்தை ஆரம்பிப்பது என்பது முக்கியமான கேள்வி. இந்நிலையில் மாலைவேளையில் அப்பும் இருள்போல, தற்கொலை பற்றிய எண்ணம் மனச்சோர்வாளர்களைப் பற்றிக் கொள்கின்றது. இதிலிருந்து மீள்வது என்பது முக்கியமானது. கடந்த நாற்பதாண்டுகளில் பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் மாறிவிட்டன; வெறும் வரலாற்றுப் பதிவுகளாக்கிவிட்டன. ஆனால் தற்கொலைகளும் கொலைகளும் பன்மடங்கு பெருகியிருக்கின்றன என்பது வருத்தத்தைத் தருகின்றன.

 

Mpandi2004@yahoo.com

click here

click here
click here