உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
மாயா

உண்மைகள் புரளிகளாகவும் பொய்கள் செய்திகளாகவும் வலம் வருவதற்குப் பெயர்தான் அரசியல் உலகம். செய்திகளில் எத்தனை உண்மைகள் உள்ளன, புரளிகளில் எத்தனை பொய்கள் உள்ளன என்று பிரித்தறிவது அந்தச் செய்திகளின், புரளிகளின் ஆரம்பப் புள்ளிகளுக்கு மட்டுமே வெளிச்சம். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீயை நேரில் சென்று பெற முடியாத அளவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தோனிக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் என்ன முக்கியமான வேலை என்பது நிஜங்களுக்கும் கற்பனைக்குமான இடைவெளியைக் காட்டுகிறது.

ஏப்ரல் 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல் 20:20 போட்டி தொடங்குகிறது. அதில் கலந்துகொள்ள ஏப்ரல் 14ஆம் தேதி மாலை மும்பையிலிருந்து கிளம்புகிறார் தோனி. அதே நாளன்று காலையில் தில்லி ஜனாதிபதி மாளிகையில் பத்மஸ்ரீ விருது விழா நடக்கிறது. மும்பை கிளம்ப வேண்டிய நெருக்கடி இருந்ததால் விருது விழாவுக்கு தோனி வரவில்லை என்று அவர் வாயைத் திறக்காத நிலையிலும் அவரின் சார்பில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர்க்க முடியாத குடும்ப காரியங்கள் இருந்ததால் விருது விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக ஹர்பஜன் சிங் செய்தி வெளியிட்டிருக்கிறார். நியூசிலாந்து சுற்றுப் பயணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே ஐ.பி.எல் போட்டிக்காக தென்னாப்பிரிக்கா கிளம்ப வேண்டியிருந்ததால் குடும்பத்துடனான நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நேர்ந்ததாகக் கூறுகிறார் ஹர்பஜன். அப்படி என்ன குடும்ப விஷயம் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நம்ப முடியாத விளக்கங்கள். இதற்கு மாறாக இவர்களின் விருதுப் புறக்கணிப்பு குறித்த புரளிகள் சுவாரசியமானவை மட்டுமல்ல, நம்பும்படியாகவும் இருக்கின்றன.

விருது விழா நடந்த நாளில் ஹர்பஜன் தில்லியில்தான் இருந்தார். விளம்பரங்களுக்கான ஷூட்டிங்குகளில் இருந்தார் என்கின்றன புரளிகளின் அடிப்படையிலான தகவல்கள். குடும்பத்துடன் செலவிட ஓரிரு நாட்களே இருந்த நெருக்கடிக்கு நடுவில், விருது விழா முடிந்த பிறகான தினத்தில் தனது விளம்பர நிறுவனம் ஏற்பாடு செய்த இரண்டு விழாக்களில் ஹர்பஜன் சிங் கலந்துகொண்டார் என்பதும் அங்குதான் செய்தியாளர்களிடம் தனது விளக்கங்களைக் கூறினார் என்பதும் குடும்பத்திற்கும் பணத்திற்கும் விருதிற்குமான சமன்பாட்டைக் காட்டுகிறது. குடும்பத்துடன் இருக்க நினைப்பதாகக் கூறும் இந்த ஒன்றிரண்டு நாட்களில்கூட ஹர்பஜனால் தனது விளம்பர ஒப்பந்தக் கட்டாயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும், ஆனால் பெயர் குறிப்பிடாத குடும்ப நிகழ்வுக்காக ஒரு நாட்டின் உயரிய விருதைப் பெற நேரம் ஒதுக்க முடியாது.

இந்த சர்ச்சை குறித்து தோனி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், இது போல விருது அறிவிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து விருது பெறாதது பெரிய விஷயம் அல்ல என்று சமாதானம் சொல்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அரசியல்வாதிகள் அலட்டிக்கொள்ளாதது போல் காட்டிக்கொள்ளும் போது உள்ளுக்குள் மிகுந்த பதற்றம் இருக்கிறது என்று அர்த்தம். உள்ளுணர்வின் அடிப்படையில் இதுதான் நடந்திருக்கும் என நான் கருதுகிறேன்: தோனிக்கு இந்த விருதைக் கொடுக்கத் தீர்மானித்ததற்கு அரசியல் நோக்கங்கள் இல்லாமல் இருக்காது. இந்தியாவின் 124 தொகுதிகளில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்த தருணத்தில் இந்த விருது தரப்பட முடிவெடுக்கப்பட்டதில் பிற யதார்த்த நெருக்கடிகள் போக அரசியல் நோக்கங்களும் இருக்கக்கூடும். ஏற்கனவே ராகுல் காந்தியை இந்திய அரசியலின் தோனி என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் புகழ்ந்ததை இங்கு மறக்கக்கூடாது. ஹர்பஜனுக்கு இந்தச் சமயத்தில் ஏன் விருது கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஒரு சீக்கிய பிரதமரைக் கொண்டிருக்கும் காங்கிரஸ், 1984 சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இப்போது கணிசமான நிவாரணத் தொகை கொடுத்திருக்கிறது. அந்த இனப் படுகொலைக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது. சீக்கிய ஓட்டு பறி போகக்கூடாது என்பதற்காக பலம் வாய்ந்த தற்போதைய எம்.பியான ஜக்தீஷ் டைட்லரை தேர்தலிலிருந்து ஓரம் கட்டியிருக்கிறது. இதெல்லாம் உண்மையாக இருக்கும் போது சீக்கிய ஓட்டுக்காகத்தான் ஹர்பஜனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கிறார்கள் என்ற புரளியும் எவ்வாறு தவறாக இருக்கும்? ஒரு நிஜத் தகவல்: வி.வி.எஸ்.லட்சுமண் பெயரைத்தான் பி.சி.பி.ஐ இந்த விருதுக்குப் பரிந்துரைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு தேர்ந்தெடுத்ததோ ஹர்பஜன் சிங்கை. சினிமா நட்சத்திரங்களுக்கு மக்களிடம் இருக்கும் ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள் கிரிக்கெட் வீரர்களை மட்டும் விட்டு வைக்கும் என்று சொல்ல முடியாது. அசாருதீன் ஏற்கனவே காங்கிரசின் வேட்பாளராக்கப்பட்டுவிட்டார்.

காங்கிரசுக்கு எதிரானவராக மாறி வரும் ஷரத் பவாரின் பி.சி.சி.ஐக்கும் காங்கிரஸ் அரசுக்குமான நிழல் மோதல் என்றுகூட இந்த விருதுப் புறக்கணிப்பிற்கு அர்த்தம் கொடுக்கலாம். .பி.எல் இந்தியாவிலிருந்து வெளியேறியதற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசும் அதன் உள்துறை அமைச்சர் சிதம்பரமும்தான் காரணம் என்று பவார் தலைவராக இருக்கும் பி.சி.சி.ஐ அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். அதற்கான பழிவாங்கலாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை வைத்து காங்கிரஸ் அரசின் கைப்பாவையான ஒரு ஊழல் கறைபடிந்த ஜனாதிபதி வழங்கிய விருதைப் புறக்கணிக்க வைத்துவிட்டார்கள் என்று கூறுவதை ஹேஷ்யம் என்று புறக்கணித்துவிட முடியாது. பணம், செல்வாக்கு, குண்டர்கள் ராஜ்ஜியம் என இந்தியாவின் இணை அரசியல் உலகமாகத் திகழும் பி.சி.சி.ஐயின் செயல்பாடுகள், அதன் தேர்தல்கள், அதிகாரச் சண்டைகளை அறிந்தவர்கள் இத்தகைய அரசியல் பின்னணியை முற்றிலும் நிராகரிக்க மாட்டார்கள்.

அரசியல் சர்ச்சைகளில் என்ன தகவல்கள் நமக்குத் தெரிகின்றன என்பதைத் தாண்டி, என்ன நடந்திருக்கும் என்று யூகித்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி யூகிக்காமல் முழுமையான சித்திரத்தை உருவாக்கவே முடியாது. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள், எப்படிச் செய்வார்கள் என்று யூகிப்பது கடினமல்ல. ஆனால் அந்தக் கணிப்புகளும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளைப் போலவே நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததாக இருக்கும். இந்த விருது விவகாரம் போலவே.

கிரிக்கெட் வீரர்களுக்கான விருது, அதை அவர்கள் புறக்கணிப்பது தேசிய அவமானம் என்ற பேச்சுகளுக்கு நடுவில் இவ்வளவு விருதுகளுக்கு இவர்கள் தகுதியானவர்கள்தானா என்ற கேள்வியை அதிகம் பேர் கேட்பதில்லை. இந்தியாவில் எத்தனையோ விளையாட்டுகளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை, முக்கியத்துவத்தை, கவனத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கிரிக்கெட், தின்று கொளுத்த பணக்கார வீட்டுப் பையனைப் போல திமிர், அலட்சியம், சொகுசு ஆகியவற்றின் சின்னமாக மாறிவிட்டது. இன்றைய இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் விருது இல்லாவிட்டால் செத்துவிட மாட்டார்கள். ஆனால் செத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளின் வீரர்கள் பலருக்கு, கவுரவமாக உயிர் வாழ்வதற்கான கடைசி வாய்ப்பே இது போன்ற விருதுகள்தான்.

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், அதற்கான ஊக்கம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. விளையாட்டை வெட்டி வேலை என்று கருதும் மதிப்பீடுகள் அகலாத நமது சமூகத்தில் பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் டென்னிஸ், பணக்கார நட்சத்திரங்களை உருவாக்கும் செலவு பிடிக்கும் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகள் செத்து வருகின்றன. பள்ளிப் பருவத்தில் படிப்புக்கு பதில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கு குழந்தைகளின் குடும்பத்தில் மட்டுமின்றி அரசு அமைப்பிலும் ஊக்கங்கள் இல்லை. கல்லூரி வரை ஏதாவது ஒரு விளையாட்டில் திறமையும் வளர்ச்சியும் பெற்ற பல வீரர்கள் படிப்பையும் எதிர்காலத்தையும் சேர்த்தே தொலைத்தவர்களாக நடுத் தெருவில் நிற்கிறார்கள். அரசு வேலை என்ற பெயரில் இந்த அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதுதான் அதிகம் நிகழ்கிறது. விளையாட்டு பற்றிய அறிவில்லாத அரசின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு கூடைப் பந்து வீரரை எவ்வாறு கோப்புகளுக்குள் காணாமலடிப்பது என்பதில் குரூர சுகம் கிடைக்கிறது. அரசு வேலையில் சேராமல் விளையாட்டைத் தொடர நினைக்கும் வீரர்களுக்கு போதிய ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதில்லை. முன்பைவிட நிலைமை மேம்பட்டிருக்கிறது என்றாலும் நிலைமை முற்றிலும் மாறிவிடவில்லை. இத்தனை அவநம்பிக்கைகளுக்கும் நடுவில் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள், விளையாட்டுக்கு சரியான ஊக்கம் கொடுக்காத இந்த அரசின் பிச்சைகளை (விருதுகளை) புறக்கணிக்க முடியாத அளவுக்கு பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள் அல்லது இந்தச் சின்ன அங்கீகாரம்கூட அவர்களின் ஏமாற்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் மருந்து போடுகிறது.

நாம் நடந்து வந்த பாதை தவறானது என்று இந்தப் பூமியில் வந்து விழுந்து 40 வருடங்களுக்குப் பிறகு தெரிவது ஒரு பெரிய கையறு நிலை. தங்களின் அரைக் கிழப் பருவத்தில் பல விளையாட்டு வீரர்கள் அதைத்தான் உணர்கிறார்கள். இவ்வளவு காலம் தங்கள் வாழ்வை ஒரு விளையாட்டிற்கே அர்ப்பணித்த பிறகு அதில் பணமும் கிடைக்கவில்லை, மரியாதையும் கிடைக்கவில்லை என்ற உண்மை தெரியும் போது அவர்களின் மாற்று வாழ்வுக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கும். சொற்ப வருவாயுடன் அல்லது அதுகூட இல்லாமல் குடுப்பத்தாரின் திட்டுகளுக்கு நடுவில் வாழ்பவர்கள் தங்களின் இத்தனை ஆண்டுக் கால உழைப்பு பொய்யல்ல என்று காட்டுவதற்கான ஒரே வாய்ப்பு விருதுகளும் கவுரவங்களும்தான். ஆனால் சமீபத்திய பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அரிதாகப் பதக்கம் வாங்கிக் கொடுத்த விஜேந்தர், அகில் குமார் போன்ற கவனிக்கப்படாத விளையாட்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது பத்மஸ்ரீ விருது கொடுக்காவிட்டால், இன்னும் ஒரு சில வருடங்களில் சாவை நோக்கி நடக்கும் நடைப்பிணமாக அவர்கள் மாறிவிடுவார்கள். இப்போது அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப விளம்பர வாய்ப்புகளும் மக்கள் அவர்களை மறந்த பிறகு காணாமல் போகும்.

கிரிக்கெட் வீரர்களுக்கு விருதே கொடுக்கக்கூடாது என்பதல்ல வாதம். ஊடகங்கள், விளம்பர நிறுவனங்கள், பொது மக்களின் கவனத்தை அதிகம் பெறாத விளையாட்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விருதுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் வாதம். கடந்த வருடம் சச்சின் தெண்டுல்கருக்கு இந்தியாவின் இரண்டாவது அதிக மதிப்புமிக்க பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்டது. அதை அவர் நேரில் வந்து பெற்றுக்கொண்டார். இப்போது தோனிக்கு நாட்டின் 4வது அதிக முக்கியத்துவம் வாய்ந்த பத்மஸ்ரீ தரப்பட்டுள்ளது. அதைவிட உயரிய விருதுக்குரியவர் என தோனி தன்னைக் கருதியிருக்கலாம் என்று அவரின் புறக்கணிப்புப் பற்றிக் கூறுகிறார்கள். தோனிக்குத்தான் கடந்த வருடம் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் அரசியல்வாதிகளும் பி.சி.சி.ஐயின் அரசியல்வாதிகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு சலுகைகளை வாரி இறைத்தால் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜனைப் போலத்தான் காமெடி செய்வார்கள்: "அடுத்த முறை எனக்கு விருது கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே ஆஜராகிவிடுகிறேன்."

maya.flowerpower@gmail.com

click here

click here
click here