உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
காலணி கலாச்சாரம்
ஜெயந்தி சங்கர்

சீனத்தில் இன்றும் இருக்கக்கூடிய ஏராளமான காலணிகள் காலணிக் கலாசாரமாக தனியே ஆய்வுக்குரிய விஷயமாக விளங்குகிறது. கி.மு 10,000-4000, சீனர்கள் மூதாதையர் சணல், புல் குட்ஜு என்ற கொடி போன்றவற்றைத் தமது பாதங்களுக்குப் பயன்படுத்தினர். ஜி,லி,ஸி என்று பலவாறாக அழைக்கப்பட்ட காலணியின் பெயர் பிற்காலத்தில் ஸி என்றானது.

முற்காலக் காலணிகள் மூன்று வகைப்பட்டன. புல்லாலானது, துணியாலானது, தோலாலானது. துணியால் செய்தது என்றால் அது சணலாக இருக்கலாம். அல்லது பட்டாகவும் இருக்கலாம். அழகான வேலைப்பாட்டில் நெய்யப்பட்ட பட்டிலும் கூட இருக்கும்.

பழஞ்சீனர்கள் தம் ஆடையணிகளை மேலாடைகள், கீழாடைகள் மற்றும் பாத ஆடைகள் என்று மூன்றாகப் பிரித்தறிந்தார்கள். காலணி, காலுறை போன்றவற்றைச் சேர்த்துதான் 'பாத ஆடைகள்' என்றார்கள். காலுறையையும் காலணியையும் குறிக்கும் சீனச் சித்திர எழுத்து 'தோல்' எனும் சித்திர எழுத்துக்கு இணையாக விளங்கும். இதிலிருந்தே விலங்கின் தோல் பதப்படுத்தப்பட்டு காலணிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.

ஆமையோட்டில் எழுதப்பட்டுக் கிடைத்த பழம் சீனக் குறிப்புகளில் ஒரு விலங்கின் முழுத் தோலும் விரித்து உலர்த்தியிருக்கும் படங்கள் கிடைத்துள்ளன. இது, சீனத்தில் எழுத்து மொழி உருவான காலகட்டத்திலேயே காலுறையும் காலணியும் தோலினால் செய்யப்பட்டதற்கான ஆதாரமாகின்றது. முற்காலத்தில், காலுறைக்கும் காலணிக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. உலரவைத்த விலங்கின் தோலைக் காலில் கணுக்காலில் துவங்கி முழங்கால் வரையிலும் வசதியையும் தேவையையும் பொறுத்த அளவில் பொட்டலம் போலச் சுற்றிகட்டிக் கொண்டனர். அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இவ்வகையான தோலினால் காலைக் கட்டிக்கொள்வது முதன்முதலில் கற்காலத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது.

யின் மற்றும் ஷாங் முடியாட்சிகளின் (கி.மு 14-12 நூற்றாண்டுகள்) புதைபொருள் எச்சங்கள் பல்வேறு தருணங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஜோடி தோல் காலுறைகள், தலையற்ற ஒரு ஜேட் மனித உருவத்தின் காலுறைகள் கண்டெடுக்கப்பட்டன. வரலாற்றுப்பதிவுகளின்படி தோல் காலணிகள் உருவாவதற்கு முன்னர் போர் வீரர்கள் தோலைக் கொண்டு பாதங்களை வெறுமே சுற்றிக் கொண்டனர். அங்கிருந்துதான், முழங்கால் வரையிலும் இருக்கும் இராணுவக் காலணிகள் தோன்றியிருக்கக்கூடும் என்பார்கள் அறிஞர்கள்.

ஷான்ஸி மாநிலத்தின் ஹோவ்மா நகரில் அகழ்ந்தெடுக்கப்பெற்ற ஜோவ் முடியாட்சியின் (கி.மு 1100-256) டெரக்கோட்டாச் சிலைகளை ஆராய்ந்த போது, அவற்றின் காலணிகளின் கீழ்ப்பகுதியில் இருந்த நுட்பமான தையல்கள் இன்றைய கையால் உருவாகும் காலணிகளில் இருப்பதைப் போன்றே இருக்கின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். தைக்கப்பட்ட இராணுவக் காலணிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் என்று இதன் மூலம் நாம் அறியலாம். ஆனாலும், பருத்தி அறிமுகமானது மிகவும் பிற்காலத்தில்தான். ஆகவே, சணல் போன்ற இழைகளையே தைக்கப் பயன்படுத்திருக்க வேண்டும் என்பதே ஊகம். ச்சின் முடியாட்சியின் (கி.மு 211-206) போது கிடைத்த டெரக்கோட்டாக்களின்படி தளபதிகளும் போர் வீரர்களும் தோல் காலணிகளை அணிந்தனர். வில் வீரர்கள் துணியால் தைக்கப்பட்ட சதுர மேற்புறம் கொண்ட இழுத்துக் கட்டும் காலணிகளை அணிந்தனர். அந்தக் காலகட்டத்திலேயே இராணுவப் பதவிக்கேற்ற உடைகள் வழக்கில் வந்துவிட்டிருந்தன என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது.

பின்வந்த காலங்களில் பழஞ்சீனர்கள் எலும்புகளைக் கொண்டு ஊசி செய்தனர். இறந்த விலங்குகளின் உடலிலிருந்து நரம்புகளை வெயிலில் காயவைத்து நூலாக்கி காலணி தைத்தார்கள். பிறகு, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கைச் சாயங்களைக் கொண்டு தோலுக்கு வண்ணமேற்றினர். தோலைத் தேய்த்துத்தேய்த்து மிருதுவாக்கியுமுள்ளார்கள். இவையே பிற்காலத் தோல் காலணிகளின் முன்னோடியாகின.

ஸின்ஜியாங் எனும் பாலைவன வட்டாரத்தில் இருக்கும் பழம் சீன நாடான லௌலானில் 'மம்மி'யாகப் பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரேதம் கிடைத்தது. அதன் பாதத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒரு ஜோடிக் காலணி 4000 வருடப்பழமையைக் கொண்டதென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக்காலணியின் கீழ்ப்பகுதியும் மேல்பகுதியும் தோலினாலான இழைகளைக் கொண்டு சேர்த்துத் தைக்கப்பட்டிருந்தன.

முற்கால வட சீனப்பகுதியின் நாடோடிகள் அணிந்த காலணிகள் சவாரிக்குரிய காலணி, உயர்குதிக் காலணி, உலர்நிலத்துக்குரிய ஹான்ஸ்வே, வண்ணத்துடனான ஹுவாஸ்வே, தோல் காலணி, பருத்தியிலான காலணி, வாத்தைப் போன்ற முன்பகுதி கொண்ட எடிங்ஸ்வே, முன்பக்கம் மேகக்கூட்டம் வரையப்பட்டிருக்கும் யுந்தோஸ்வே என்று ஏராளமான வகைகளுண்டு. வடசீனத்தின் இந்த நாடோடிகள் அணிந்த காலணிகள் பல்வேறு மூலப்பொருட்களினால் செய்யப்பட்டிருக்கின்றன. திபெத்தியர்களின் காலணிகள் காட்டெருமையின் தோலினால் செய்யப்பட்டிருந்தன. இது தவிர மான் தோலிலும் செய்திருக்கிறார்கள். ஹ்ஹன் மக்களின் காலணிகள் செம்மறியாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற கம்பளி நூலினாலானவை.

வாரிங் காலத்திலேயே (கி.மு 475-221) தோல் காலணிகள் சீனத்தின் மத்தியச் சமவெளிப்பகுதிகளில் அறிமுகமானதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கி.மு 325ல், வூலிங் மன்னர் எதிரிகளுக்கு பயந்து பாதுகாப்பிற்காகத் தன் தேரில் வில் விற்பன்னர்களை அமர்ந்தினார். அப்போது அவர் அவர்களின் பழைய பணியிலான தொளதொள ஆடைகளையும் மரப்பாதணிகளையும் முற்றிலும் நிராகரித்தார். போரில் வீரர்கள் அணிவதைப் போல ஆடைகளை அணியச் செய்தார். முக்கியமாக, வட சீன நாடோடிகளைப் போல முழங்காலை எட்டிடும் தோல் காலணிகளை வலியுறுத்தினார். அவரது படை வீரர்களையும் இவ்வாறான மாற்றங்களுக்குட்படுத்தியதில் அவரது இராணுவம் மேலும் பலமடைந்தது என்பது அன்றைய நம்பிக்கை.

வட சீனத்திலும் வடமேற்கு சீனத்திலும் தோலை எலும்பு ஊசிகள் கொண்டு தைத்து காலணிகளை உருவாக்கிய நேரத்தில் கிழக்குச் சீனத்தில் வைக்கோல், மூங்கில் ஊசிகள் மற்றும் சணல் இழைகளைக் கொண்டு பாதணிகள் உருவாகின. தாவர நார்களைக் கொண்டு 7000 ஆண்டுகளுக்கு முன்னரே அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களைச் செய்திருக்கிறார்கள் என்று அகழ்வாய்வுகள் சொல்கின்றன. சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி மூங்கில் மற்றும் சணலின் காலம் தோல் மற்றும் எலும்பு ஊசிக்கும் மிகவும் முற்பட்டது.

வைக்கோல் காலணி எப்படிப் பயன்பாட்டுக்கு வந்தது என்பதற்கு சீனப் புராணக்கதையொன்று சொல்வார்கள். ஒரு ஏழை முதியவர் தன் அன்றாட வாழ்வியல் செலவுகளுக்கு விறகு வெட்டிப் பிழைத்தார். தினமும் மலையிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். அப்போதெல்லாம் அவர், கூர்மையான கற்கள் முட்கள் போன்றவற்றில் தன் பாதங்களைக் காயப்படுத்திக் கொண்டார். அவர் காட்டுப்புற்களை எடுத்து தன் பாதங்களைச் சுற்றிப் பாதுகாப்பாகக் கட்டிக் கொண்டார். இருந்தாலும், அந்தப் புற்கள் நடக்கும் போது அவிழ்ந்து விலகி விழுந்தன. அப்போது அவர் புற்களைத் திரித்து நீண்ட தடித்த இழைகளாக்கினார். அதைச் சீராகத் தன் பாதங்களில், குறிப்பாக கீழ்ப்பாதங்களை மறைத்துச் சுற்றிக் கொண்டார். பின்னர், வேண்டிய நேரத்தில் கழற்றவும் மீண்டும் பாதங்களை நுழைத்துக் கட்டிக் கொள்ளவும் ஏற்ற வகையில் சில மாற்றங்களைச் செய்தார்.

பல்வேறு புற்கள் காலணிகள் செய்யப் பயன்பட்டிருக்கின்றன. முற்காலத்தில் வடக்கு தவிர கிட்டத்தட்ட சீனத்தின் எல்லாப் பகுதிகளிலும் இவ்வகைக் காலணிகள் அணியப் பட்டிருக்கின்றன. குளிர்பிரதேசங்களில் கணுக்கால்களை மறைக்கும் காலணிகளாகவும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களில் செருப்புகளாகவும் அணியப்பட்டன. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற எந்தப்பாகுபாடும் அந்நாளில் இருக்கவில்லை. எல்லோருமே இவ்வகைக் காலணிகளை அணிந்தனர். கிழக்கு மாநிலமான ஷான்தோங்கில் வைக்கோல் கூடுகளை அணிந்ததாகச் சொல்வார்கள். அதாவது, இலை தழைகளையெல்லாம் சேர்த்து மெத்தென்று கட்டியிருக்கும் 'பறவைக்கூடு' போன்ற காலணிகளை அணிந்திருக்கிறார்கள். இது பனிக்காலங்களில் குளிருக்கு ஏற்றதாக இருந்தது. இன்றும் இப்பகுதிகளில் சீன விவசாயிகள் இவ்வகைக் காலணிகளைச் செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

வாரிங் காலத்தில் (கி.மு 475-221) ஷான்தொங் மாநிலத்தின் இந்த வைக்கோல் காலணிகளில் கீழ்ப் பகுதியில் மரச்சட்டத்தைச் சேர்த்துச் செய்தார்கள். இவ்வகையான காலணிகள் தட்டையாகவும் உயர்குதியுடனும் செய்யப்பட்டன. பிற்காலத்தில் ஸீ லிங்குவன் என்ற கவிஞர் (கி.பி 385-433) கழற்றும் வகையிலான கீழ்ப்பகுதியை அறிமுகப்படுத்தினார். இவர் ஒரு மலையேறும் வீரரும் கூட. ஆகவே, மலையேற்றத்துக்கேற்ப வேறு பல மாற்றங்களையும் அவர் கொணர்ந்தார்.

'புலி'க் காலணிகள் இன்றும் சீனத்தில் கிராமப்பகுதிகளில் பிஞ்சுக் குழந்தைகளின் கால்களில் காணக்கூடிவை. இவை முற்றிலும் துணியால் செய்யப்பட்டவை. அந்தக் காலணிகளின் விரல்பகுதி புலியின் தலைப்போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் பின்னணியில் சுவாரஸியமான கதை ஒன்று உண்டு.

முற்காலத்தில் பழம் ஊரான யாங்ஜோவ்வில் ஒரு படகோட்டி வசித்தார். இவர் பெயர் யாங். இவர் மிகவும் பெருந்தன்மையும் உதவும் இதயமும் கொண்டவர். இவர் செய்த உதவிக்கு நன்றி பாராட்டும் விதமாக படகுப்பயணியாக வந்த ஒரு பெண்மணி இவருக்கு அழகிய ஓர் ஓவியத்தைப் பரிசளித்தார். அந்தப் படத்தில் ஓர் அழகி ஒரு ஜோடிப் புலிக்காலணியைத் தைத்துக் கொண்டிருந்தாள். அந்தப்படம் படகோட்டிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அவர் மிகவும் விரும்பியதால், வீடு திரும்பியதுமே தன் படுக்கைக்கு அருகில் கண்ணில் படுமாறு மாட்டி வைத்தார்.

மாலையில், ஓவியத்திலிருந்து வெளியேறி வந்த அந்த அழகி யாங்குடன் உல்லாசமாக  இருந்தாள். அதே போல ஒவ்வொரு நாளும் ஓவியத்திலிருந்து வெளியேறி வந்து படகோட்டிக்கு உற்சாகமளித்தாள். வருடங்கள் போனதும், ஒரு மகன் பிறந்தான். இருவரும் மிகவும் மகிழ்ந்தனர். துரதிருஷ்டவசமாக அந்த ஓவியத்தின் மாயம் குறித்து அறிந்த அந்த ஊரின் அதிகாரி ஓவியத்தைப் பறித்துக் கொண்டு போய்விட்டார். யாங்கிற்குக் கோபம் வந்தது. இருப்பினும், ஒன்றும் செய்யமுடியாதிருந்தது. அந்த அதிகாரி தன் படுக்கையறையில் ஓவியத்தை மாட்டி வைத்தார் அழகி வெளியாவாள் என்று காத்திருந்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

மகன் அப்பாவிடம் தன் அம்மாவைக் கேட்டு அழுதான். மேற்கே வெகுதூரம் போயிருப்பதாகச் சொல்லி யாங் தன் மகனை ஏமாற்றப் பார்த்தார். மகனோ அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தான். மகன் தன் அம்மாவைத் தேடிக் கொண்டு மேற்கு நோக்கிப் பயணப்பட்டான். இரவும் பகலும் நடந்து பிறகு ஒரு குளத்தங்கரையில் மற்றச் சில தேவதைகளுடன் அம்மா குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அம்மா, மகனின் கண்ணீரைத் துடைத்து விட்டு, "என்னைத் தேடி இத்தனை தூரம் வந்திருக்கிறாயே மகனே, நானும் உன்னைக் காணாதுதான் தவித்திருந்தேன். நான் உனக்குத் தைத்த புலிக் காலணியை எடுத்து நீ அணிந்து கொண்டு அதிகாரி வீட்டிற்குப் போய் ஓவியத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வா. அப்போதுதான் நாம் சேர்ந்து வாழலாம். இப்போது நீ கண்ணை மூடிக்கொள். நான் உன்னை கிராமத்துக்கு அனுப்புகிறேன்" என்றாள்.

ஒரு நொடியில் கிராமத்தில் தன் வீட்டில் இருப்பதை உணர்ந்தான். தன்னால் ஓவியத்திலிருக்கும் அழகியை வெளியே கூப்பிட முடியும் என்று அதிகாரியிடம்  போய்ச் சொன்னான். இதைக் கேட்ட அதிகாரி பேராசையுடன் சம்மதித்தார். அவனைத் தன் படுக்கையறைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அம்மாவைக் கண்டதுமே, "அம்மா, வாங்க ஓடிடுவோம்" என்று உரக்க அழைத்தான். இருவரும் சேர்ந்து வெளியேறினர். ஆனால், அதிகாரி இருவரையும் தடுத்து நிறுத்திவிட்டார். அவ்வழகியைத் தன் ஆசைநாயகியாக்கிக் கொண்டுவிட நினைத்தார். ஆனால், அவள் சம்மதிக்கவில்லை. கோபமுற்ற அதிகாரி இருவரையும் தாக்கமுற்பட்டார். மகன் துணிச்சலாகச் சண்டையிட்டான்.  சண்டை நடந்து கொண்டிருந்த தருணத்தில் புலிக்காலணிகள் அவனுடைய பாதத்திலிருந்து அவிழ்ந்து விழுந்ததால் அவன் ஒரு பெரிய புலியாக மாறிவிட்டான். புலி கோபத்துடன் அதிகாரியின் மீது பாய்ந்தது. அதிகாரி உதவிகேட்டு அலறியதும் புலியின் உறுமலும் சேர்ந்து அவ்வட்டாரத்தில் கேட்டது. அந்தப் புலிக்காலணி தான் தாயையும் மகனையும் அன்று காப்பாற்றியது. அவர்களது குடும்பமும் ஒன்று சேர்ந்தது. அப்போதிலிருந்து, குடும்பமும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் சீனமக்கள்          புலிக்காலணிகளைச் செய்து தம் குழந்தைகளுக்கு அணிவித்தனர். இன்றும் பிறந்த ஒருமாதக் குழந்தைக்குக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் சட்டையிலும் பரிசுப்பொருட்களிலும் புலி உருவம் வரைந்திருக்க வேண்டுமெனத் தீவிரமாக நினைக்கிறார்கள்.

பட்டிழை 5000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, பட்டுத் துணி வண்ணமேற்றப்பட்டது. அதன் பிறகு, பட்டு, பாதணி மற்றும் காலணிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டது. சீனக்காலணிகளின் மேம்பாட்டிற்கும் புதுமைக்கும் பட்டு துணைபோயிருக்கிறது. மெதுவாக வைக்கோல், சணல் பாதணிகளின் இடத்தை பட்டுப்பாதணிகள் பிடித்துக் கொண்டன.

ஜோவ் முடியாட்சிக்காலத்தில் (கி.மு 1100-256) சில விதிமுறைகள் வழக்கிற்கு வந்தன. வீட்டிற்குள் நுழையும் முன்னர் காலணிகளைக் கழற்றுதல் வேண்டும். விருந்துகளில் காலுறை மற்றும் காலணிகளைக் கழற்றிவிடுதல் வேண்டும். அரசர்களைச் சந்திக்கும் அமைச்சர்களும் தம் காலுறை மற்றும் காலணிகளைக் கழற்றிவிடுதல் வேண்டும். சடங்குகளுடன் கூடிய வழிபாட்டு வைபவங்களில் வெழ்ம் காலுடன் இருத்தல் கூடவே கூடாது.

பழஞ்சீனத்தில் திருமணங்களின் போது இளஞ்சிவப்பு அல்லது சிவப்புக் காலணிகளே வழக்கில் இருந்தன. அதில் அழகிய பறவை அல்லது பூக்கள் கைவேலைப்பாடு செய்திருக்கும். ஹ்ஹன் முடியாட்சியின்போது (கி.மு 206-கி.பி 220) மணப்பெண் மரத்தாலான வண்ணச் செருப்பணிவாள். அதில் பூக்கள் வரையப்பட்டிருக்கும். ஐந்து வண்ணப்பட்டிழைகளும் கட்டியிருக்கும். ச்சிங் முடியாட்சியின் மன்சூரிய மணப்பெண் நீலநிறத் துணியாலான காலணியையே அணிந்தாள். அதில் சிவப்பில் 'இரட்டை மகிழ்ச்சி' சித்திர எழுத்துகள் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.

கி.மு 206 முதல் கி.பி 420 வரையிலான காலம் முதல் இறந்த மன்னர்கள் அனைவருக்கும் ஜேட் காலணியையே அணிவித்தனர். ச்சிங் முடியாட்சியில் மன்னர்கள் இறந்ததுமே அவரின் அனைத்துக் காலணிகளும் எரிக்கப்படும். பேரரசர் குவாங்ஸு (1875-1909) இறந்தபோது அவரின் 104 ஜோடிக் காலணிகளும் அவருடனே எரிக்கப்பட்டன.

இறந்தவருக்கு அணிவிக்கப்படும் காலணி 'அமரக் காலணி'யாகும். இது அவரின் மேலுலக வாழ்க்கைக்கானது. எளிய மக்களுக்கான இந்த 'அமரக் காலணி'கள் நீலம், கருப்பு, பழுப்பு என்று பல்வேறு நிறங்களில் கிடைத்தன. மேலுலகை அடையவிருப்பதைக் குறிக்கும் விதத்தில் கீழ்ப்பகுதியில் தாமரை, ஏணி போன்ற உருவங்கள் வரையப்பட்டிருக்கும். இருந்தாலும், பழுத்த வயாதாகியிருக்கும் முதியோர் அந்த வயதிலேயே 'மகிழ்ச்சி' சித்திர எழுத்து பொறிக்கப்பட்ட இவ்வாறான காலணிகளை அணிவதுமுண்டு.

சீனாவில், ஒருவர் அணிந்திருக்கும் காலணியை வைத்து அவரின் சமூக அந்தஸ்தைக் கணித்துவிடுவர். தெற்கு முடியாட்சிக் காலத்தில் (420-589) எளியோர் நீலம், பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் வைக்கோல் அல்லது புற்களாலான காலணிகளையே அணியவேண்டியிருந்தது. உயர்குடியினர் மட்டுமே பட்டாலான அல்லது தோலாலான காலணிகளை அணிந்தனர்.

மேற்கு ஜின் காலத்தில் (265-317), அரசருக்கு வணிகர்களின் மீது வெறுப்பு இருந்தது. ஆகவே, அவர் எல்லா வணிகர்களையும் சட்டென்று அடையாளம் காண அவர்கள் ஒரு காலில் கருப்பும் இன்னொரு காலில் வெள்ளையும் அணிதல் வேண்டும் என்று விதித்தார். வேய் மற்றும் ஜின் முடியாட்சிகளின் போது (கி.பி 220-316) பாத நுனிகள் மிக அழகான வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தன. வண்ணம் மிகவும் இதமாக இருந்ததால் பாதணிகள் நளினமாகத் தோற்றமளித்தன.

டாங் முடியாட்சியின் போது (618-907) முழங்கால் வரைக்குமிருக்கும் பெரியளவிலான தோல் (பூட்ஸ் வகை) காலணிகள் எல்லோராலும் அணியப்பட்டன. ஸோங் முடியாட்சியின் போது பெண்களுக்கான காலணிகளும் தோன்றின. யுவன் முடியாட்சியின் போது கொரியநாட்டுக் காலணிகளைப் போன்றவை சீனாவில் புழக்கத்திற்கு வந்தன. மிங் முடியாட்சியின் போது எளியோருக்குக் காலணிகள் மறுக்கப்பட்டபோதிலும் சில குட்டையான செருப்பைப் போன்றிருந்த காலணிகளை அணியவே செய்தனர். ஆண்கள் மிங் முடியாட்சிக் காலத்தில் பெரும்பாலும் எளிய காலணிகளோ செருப்போதான் அணிந்தனர். பெரிய தோல் காலணிகள் (பூட்ஸ் வகை) பெரும்பாலும் இராணுவ உடையணிவோருக்குரியதானது.

டாங் காலத்தில் (937-976) பெண்களின் பாதங்களைக்கட்டும் வழக்கம் தோன்றியது. மூன்றங்குலப்பாதம்தான் பெண்ணுக்குச் சிறந்தது என்று கருதப்பட்டது. அப்போது பெண்களின் அவ்வகையான பாதங்களுக்கேற்ற மிகச்சிறிய காலணிகளும் பாதணிகளும் தயாராகின. யுவான் மற்றும் மிங் முடியாட்சிகளின் போது பாதத்தைக்கட்டும் வழக்கம் தடைசெய்யப்பட்டது. அது உயர்குடியினருக்கு மட்டுமேயானது என்று சொல்லப்பட்டது. ஆகவே, பெண்களுக்கான விலையுயர்ந்த ஐந்தங்குலக் குதியுயர் காலணிகள் தயார் செய்தனர்.

எளிய செருப்புகளும் வாருடனான செருப்புகளும் ஹ்ஹன் முடியாட்சியில் (கி.மு 206- கி.பி 23) தோன்றியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. செருப்புகளை 'ஜிஸி' என்றழைத்தார்கள். பிறகு, சணல் செருப்பு, துணிக்காலணி, தோல்காலணி என்று வரிசையாகத் தோன்றியிருக்கின்றன. முற்காலத்தில் ஃபீனிக்ஸ், டிராகன் போன்ற உருவங்களை அழகிய வேலைப்பாடுகள் செய்த செருப்புகளும் இருந்தன. சிலர் விலையுயர் ஆபரணங்கள் போலவும் தயாரித்திருக்கின்றனர். 

ஹ்ஹன் முடியாட்சியின் போதெல்லாம் (கி.மு 206-கிபி 23) காலணிகள் பாதத்தின் விரல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டன. பெருவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் தனித்தனியாகப் பகுதிகள் இருக்கும். லினென்னில் உருவாகும். இவ்வாறான காலணி 'இரண்டு நுனிகளுடன் உயர் சதுரக்காலணி' என்ற பொருளில் 'ஷுவாங்ஜியன் ச்சியோதோவ் ஃபங்க்லி' என்றழைக்கப்படுகிறது.

வட ஸோங் முடியாட்சியில் (கி.பி 550-577) பேரரசர் முதல் எளியோர் வரை அனைத்து மக்களிடமும் காலணி பிரபலமாகியிருந்தது. ஜி என்றறியப்பட்ட பாதணி மரத்தால் செய்யப்பட்டது. பாதணியின் முதன்மை உடற்பகுதி பியன், விரல்களின் பகுதி ச்சி, பக்கவாட்டின் அழகுவேலைப் பகுதி ஸி என்றழைக்கப்பட்டன.

ஸோங் முடியாட்சிக் காலத்தில் (கி.பி 960-1297) ஆண்கள் கூர்மையான குறுகிய முன்பகுதியைக் கொண்ட தோல் பாதணிகளை அணிந்தனர். பெண்கள் உருண்டையான அல்லது தட்டையான முன்பகுதியைக் கொண்ட பூக்கள், பறவைகள் போன்ற மிக அழகிய வேலைப்பாடுகளுடனான காலணிகளை அணிந்தனர்.

மிங் முடியாட்சியில் (கி.பி 1368-1644), ஆண்களின் பாதணிகள் முரட்டுத்தன்மையுடனும் உறுதியுடனுமான மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டன. மோஸ்தர்கள் பலவும் தோன்றின. பொதுவாக வட சீனத்தில் மக்கள் அணிந்த பாதணிகள் மிகவும் நேர்த்தியாகவும் காண்பதற்கு அழகாகவும் இருந்தன. யுவான் முடியாட்சியிலோ (கி.பி 1271-1368) துணியாலான பெண்களின் பாதணிகள் மிகப்பிரபலமாகின. கால்விரல் பகுதி சற்றே உயர்ந்திருந்தது. இது அணிபவர்களை ஒல்லியாக்கியது என்ற நம்பிக்கையும் வேறு நிலவி வந்தது.

ச்சிங் முடியாட்சியில் (கி.பி 1644-1911) ஆண்களின் காலணி முன்பக்கம் கூர்மையாகவும் சாட்டின் போன்ற துணி வகைகளாலும் உருவாகின. இவை கோடைக்கும் இலையுதிர்காலத்துக்கும் ஏற்றதாக இருந்தன. எனினும், பனிக்காலத்திற்கு இவை ஏற்றதல்ல. காலணியின் உள்வளைவு தடிமனாகவோ மெல்லியதாகவோ இருக்கும். மேல் பகுதியில் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கால்விரல் பகுதியில் மேகக்கூட்ட உருவம் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முடியாட்சியின் பெண்களின் காலணி தனித்துவமானது. பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் கீழ்ப்பகுதி சுமார் ஐந்தங்குலம் வரை உயரமாக, குதிரைக் குளம்பைப்போன்ற வடிவில் இருக்கும். குதிரைக்குளம்பு வடிவக் காலணி என்ற பொருளில் 'மட்டிடி' என்றழைக்கப்பட்டது. உட்பகுதில் பெரும்பாலும் பட்டுத்துணியை வைத்துத் தைத்தார்கள். உயர்குடிப்பெண்கள் அணிந்த காலணிகளின் மீது விலையுயர் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த பெண்கள் அணிந்த காலணிகள் பெரும்பாலும் உயரமில்லாத தட்டையான மரத்தால் செய்யப்பட்டிருக்கும்.

இதே ச்சிங் முடியாட்சியின் போது இராணுவக் காலணிகளைப் போன்றே பொதுமக்களும் அணிய ஆரம்பித்தனர். அரசாங்க அதிகாரிகளின் உடையின் பகுதியானது அவ்வகைக் காலணிகள். கூர்மையான முன்புறமுடைய காலணிகளும் சதுர முன்நுனி கொண்ட காலணிகளும் நடைமுறைக்கு வந்தன. இதில் கூர்முனை கொண்ட காலணிகள் தினப்படி உபயோகத்திற்கும் சதுர முன்பகுதியுடைய காலணி முக்கிய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்பட்டன. அதேபோல, ச்சிங் முடியாட்சிக் காலத்தில் பளிச்சென்ற மஞ்சள் நிறக் காலணிகள் பேரரசர்களுக்கு மட்டும் உரியதாக இருந்தது. பொன்நிறக் காலணிகள் உயர்குடிக்கும் மென்மஞ்சள் நிறம் பொதுமக்களுக்குமானதாக இருந்ததிருக்கிறது.

எளிய மக்கள் அணியும் காலணிகள் 32 துணிகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு நுட்பமான தையலிட்டுச் செய்யப்பட்ட கீழ்ப்பகுதியைக் கொண்டிருக்கும். தைக்கப்பட்டபிறகு உயர் வெப்ப நீரில் ஊறவைத்து அடித்து, உலரவைத்துப் பண்படுத்தப்பட்ட துணியால் செய்யப்படும் இக்காலணிகள் 'ஆயிரம் அடுக்குகள் கொண்ட காலணி' என்றழைக்கப்படுகின்றன. இன்றும் இவ்வகைக் காலணிகள் சீனாவில் மிகவும் பிரபலம்.

இதே ச்சிங் முடியாட்சியின் போது இந்தச் சிறுபாதமும் பாதத்தைக்கட்டும் பழக்கமும் அதற்கான சிறு காலணிகளும் மன்சூஸ் பெண்களுக்கு மறுக்கப்பட்டன. மன்சூஸ் பெண்களுக்கு மிகவும் பிடித்த சிறு காலணிகள் பல்வேறு வகைப்படும். மாற்றம் கொள்ளும் காலின் அளவுக்கேற்ப அணியப்படும் ஹுவான்ஜியோஸி, 'உறங்கும் காலணி', கூடங்களில் நடக்கப்பயன்படும் தாதாங்ஸி, வலைக்காலணி, தாமரைக்காலணி, இரங்கல் காலணி என்று ஏராளமான வகைகள் இருக்கின்றன. பணக்காரப்பெண்கள் அணிந்த சிறுகாலணிகளில் முத்துகள் பதிக்கப்பட்டிருந்தன.

குதியுயர் காலணிகளும் செருப்புகளும் சீனத்தில்தான் தோன்றியதென்பார்கள். மூன்று அரசாட்சிகள் காலத்திலிருந்தே (கி.பி 220-280) உயர்குதி மரக் காலணிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. ச்சிஸி என்ற மன்சூஸ் பெண்கள் அணிந்த பழங்காலக் காலணிகளிலும் ஐந்தங்குலத்திற்கும் உயரமான குதிங்கால் பகுதி இருந்திருக்கிறது.

சீனாவின் காலணிக் கலாசாரம் இயற்கையுடனான மற்றும் பூகோளரீதியிலான தொடர்புடையதாகும். தவிர, சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களையும் கொண்டதாக இருந்திருக்கிறது. அத்துடன், நாட்டை ஆண்டவர்களின் மற்றும் பொதுமக்களின் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்துமிருந்திருக்கிறது.

click here

click here
click here