உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
இலவசங்கள் தரும் இழிவுகள்
அ.ராமசாமி

இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர்கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

காலையில்  திருநெல்வேலியிலிருந்து கிளம்பும் போது இப்படியொரு அவசரம் எனக்கு இல்லை.  பன்னிரண்டு மணிக்கு நாகர்கோவிலில் இருந்தால் போதும். வீட்டை விட்டுக் கிளம்பிய போது  காலை ஆறு. காலை நேரப் பயணத்தின் மீது கொண்ட விருப்பம் தான் அப்படிக் கிளம்ப வைத்தது. சூரியனின் கதிர்கள் நேரடியாகத் தாக்காத இடத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோடி மறையும் மரங்களையும் மனிதர்களையும்  பார்த்துக் கொண்டே செல்லும் சின்னச் சின்னப் பயணங்கள் இனிமையான  பயணங்கள். சின்னச் சின்னப் பயணங்களின் போது எப்பொழுதும் எனக்குச் சவால் விடுபவைகளாக இருக்கின்றன பறவைகள். நான் செல்லும் பேருந்தைக் கடந்து முன்னோடிப் போய் ஒரு மரத்தில் உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கெக்கொலி கொட்டிச் சிரிக்கும் போது உன்னிடம் இறக்கைகள் இல்லை என்று  அவை சொல்வதாக நினைத்துக் கொள்வேன். பறப்பதற்குச் சிறகிருக்கின்றன என்பதில் பறவைகள் கொள்ளும் பெருமை கொஞ்சம் அதிகம்தான்.

ஒன்றரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்று சொன்ன எனது மனம் தான் காலையில் ஐந்து மணி நேரப் பயணத்தைத் தேர்வு செய்தது. நாங்குநேரியில் இறங்கித் தேநீர் குடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த உடனேயே நாகர்கோவில் செல்லும் பேருந்தை விட்டுவிட்டு நாங்குநேரி வரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டேன். அடுத்த இறக்கம் ஆரல்வாய்மொழியில். திரும்பவும் வேறு ஒரு பஸ் ஏறி நாகர்கோவில் போய் இறங்கிய போது மணி பதினொன்று இருக்கும். அப்படியும் ஒரு மணிநேரம் மிச்சமிருந்தது.

சேர வேண்டிய இலக்குகளை மட்டுமே முன் நிறுத்திச் செய்யும் பயணங்கள் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மனம் முழுக்க அடைய வேண்டிய இடத்தையும், சந்திக்க வேண்டிய  முகங்களையும், பேச வேண்டிய வார்த்தைகளையும் நிரப்பிக் கொண்டு செய்யும் பயணத்தில் பதித்து வைக்க என்ன கிடைத்து விடும். எதுவும் கிடைப்பதில்லை. ஆனால் அன்றைய காலைப் பயணம் அப்படி இருக்கவில்லை.

நாங்குநேரியிலிருந்து கிளம்பும் போதே பேருந்தின் இருக்கைகள் நிரம்பிவிட்டன. அடுத்து வரும் ஒவ்வொரு ஊரிலும் ஏறுபவர்கள்  நின்றுதான் பயணம் செய்ய வேண்டும்.. கிராமங்களிலேயே தங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் நகரங்களில் சென்று கட்டட வேலைகள், கடைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் எனப்பலவற்றில்  எடுபிடி வேலைகள்,  சில்லறை வேலைகள், சித்தாள் வேலைகள் எனப் பலவித வேலைகளைச் செய்யவும், சிறு சிறு வியாபாரங்களை மேற்கொள்ளவும் எனக் கிராமத்து மனிதர்கள் நகரத்தை நோக்கி நகரும் காட்சிகளைக் காண விருப்பம் இருந்தால் நகர்ப் பேருந்துகளில் காலைப் பயணங்களை மேற்கொள்ளலாம். இருட்டுக் களைவதற்கு முன்பே உறுமிக் கொண்டு கிராமங்களுக்குள் நுழையும் நகர்ப் பேருந்துகளும் சிற்றுந்துகளும் அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் பக்கத்தில் உள்ள சிறுநகரங்களிலும் நகரங்களிலும் இறக்கி விட்டுவிடுகின்றன. 

வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் கொத்துவான்களோடும் மண்வெட்டிகளோடும் வரப்புகளில் நடந்து போய்  பணிகளை முடித்துச் சூரியன் மறையும் போது வீடு திரும்பிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை பெருமளவு மாறிப் போய்விட்டது. தான் உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எப்பொழுதும் தன்னிடம் வைத்திருக்காமல் விட்டுவிட்ட விவசாயிகளால் வேளாண்மைத் தொழிலைக் காப்பாற்ற முடியவில்லை. முதலீட்டுக்கும் வருவாய்க்கும் இடையில் பெரிய இடைவெளி இல்லாமல் போன நிலையில் விவசாயிகளால் கூலியாட்களின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. விவசாயத்தின் ஆதாரம் குறைந்து போன நிலையில் விவசாயக் கூலிகள் தினந்தோறும் நகரங்களை நோக்கி நகர்ந்து நகரத்துச் சேரிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து மனிதர்களின் வருகையால் தமிழகத்து சிறு நகரங்கள் நகரங்களாகவும் , நகரங்கள் பெருநகரங்களாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன.

நான் ஓட்டுநரின் இருக்கையிலிருந்து மூன்று வரிசைகள் தள்ளிப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அடுத்து அடுத்து என ஒவ்வொரு கிராமத்திலும் மனிதர்களை ஏற்றிக் கொண்டு நிதானமாகப் போய்க் கொண்டிருந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கினார். அவர் இறங்கிய இடத்தைப் பார்த்தால் வீடுகள் இருப்பதாகவோ, பஸ் நிறுத்தம் என்பதாகவோ தெரியவில்லை. அப்புறம் ஏன் நிறுத்த வேண்டும் என்ற கேள்வியுடன் கவனித்த போது அவரது பொறுப்புணர்வு என்னை ஆச்சரியப்பட வைத்தது.

தனது இருக்கையிலிருந்து இறங்கியவர் முன்புறம் சுற்றிச் சென்று படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவர்களை உள்ளே தள்ளிப் போகும்படி சொல்லி அனுப்பிவிட்டு வந்து திரும்பவும் வண்டியெடுத்தார். அடுத்து இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வண்டி நின்ற போது நிறைய பேர் இறங்கிக் கொண்டனர். நிறுத்தத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலை ஒரு தொழில் நிறுவனத்தை நோக்கிப் போனது. அந்த நிறுத்தத்தில் மூன்று சீருடை மாணவிகள் ஏறி எனது இருக்கைக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்தனர். பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தந்தபடி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்த நடத்துநர், அந்த மாணவிகள் நீட்டிய பஸ் பாஸை வாங்கிப் பார்க்காமல் பின்னால் போய்விட்டார். அடுத்த நிறுத்தம் வந்த போது ஏறிய பயணிகளில் பாதிப்பேர் பள்ளிக்கூடம் போகும் மாணவ, மாணவிகளாக இருந்தனர்.

திரும்பவும் தங்கள் அருகே வந்த நடத்துநரிடம் அந்த மாணவிகள் பாஸை நீட்டினர். இந்த முறையும் வாங்கிப் பார்த்துக் கொள்ளவில்லை; போய்விட்டார். அடுத்த நிறுத்தம் தூரத்தில் தெரிந்தது. அதிலும் பள்ளிச் சீருடைகளுடன் மாணாக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். வந்து நின்றவுடன் ஏறி இடம் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் ஓட்டுநர் வண்டியை நிறுத்தத்திற்கு  முன்பே நிறுத்திவிட்டார்.  நடத்துநர் பயணிகளை அங்கேயே இறங்கிக் கொள்ளும்படி சொல்ல, பலர் இறங்கிக் கொண்டனர். தாங்கள் ஏற வேண்டிய பேருந்து முன்னாலேயே நின்று விட்டதால் மாணாக்கர்கள் ஓடிவந்து ஏற முயன்றனர். ஏற முயன்ற மாணாக்கர்களை இடமில்லை என்று சொல்லி ஏற்றிக் கொள்ள மறுத்தார் நடத்துநர். அவர் தடுப்பதையும் தாண்டி நாலைந்து பேர் முன்புறம் ஏற, பின்புறம் ஏழெட்டுப் பேர் ஏறிவிட்டனர். இன்னும் ஏறுவதற்கு மாணவர்கள் இருந்த போதும் ஓட்டுநர் வண்டியை நகர்த்தி வேகம் பிடித்து விட்டார்.

திரும்பவும் அடுத்த பேருந்து நிறுத்தம். இந்த நிறுத்தத்தில் வண்டி நிறுத்தத்தைத் தாண்டி வந்து நின்றது. பள்ளிக்கூடப் பைகளுடன் சிறுவர்களும் சிறுமிகளும் ஓடி வந்து ஏறும் போது நடத்துநரின் தடைகள் தொடர்ந்தன. உள்ளே டிக்கட் கேட்டு வாங்கும்படி கூறும் போது இரண்டு வித உணர்வுகளை அவர் வெளிப்படுத்துவது தெளிவாகத் தெரிந்தது. பணம் தரும் பயணிகளிடம் அதை  வாங்கிப் போட்டுக் கொண்டு டிக்கெட் தரும் போது அவரது முகத்தில் தளர்வும், பாஸ் நீட்டும் மாணாக்கர்களிடம் ஓர் இறுக்கத்தையும் முகம் வெளிப்படுத்தியது. பஸ்பாஸைக் காட்டி  பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் அவர்களை மனதிற்குள் திட்டியபடியே நகர்ந்து கொண்டிருந்தார் நடத்துநர். சில நேரங்களில் கோபமான வார்த்தைகளும் கை ஓங்கல்களும்கூட வெளிப்பட்டது. 

அந்த இறுக்கமும் முணுமுணுப்பும் தன்னிடம் பிச்சை கேட்கும் ஒருவனிடம் காட்டும் உணர்வாக எனக்குத் தோன்றியது. மாணவர்களுக்காக ஒட்டு மொத்தமாகப் பணத்தைச் செலுத்தி அரசாங்கம் டிக்கெட் வாங்கித் தருகிறது என்பதுதானே இலவசப் பஸ் பாஸ் திட்டத்தின் அர்த்தம். அந்த அரசாங்கத்திற்குச் செலுத்தப்படும் வரிப் பணத்தில் இந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் செலுத்தும் வரியும் ஒரு துளிதானே, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளிகள் கட்டும் வரியில் அவர்களின் பங்கும் இருக்கத்தானே செய்கிறது,  அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் செலுத்தப்படும் உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி என எல்லாவற்றிலிருந்தும் எடுத்துத்தானே அரசாங்கம் மானியமாகக் கொடுக்கிறது. இந்தப் பயணம் ஒன்றும் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயலா..

இதை அரசுத்துறை சார்ந்த போக்குவரத்து ஊழியர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு போக்குவரத்தில் லாபம் வரவில்லையென்றாலும் வேறு போக்குவரத்தில் வந்த லாபத்தில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைப்பதில் நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லும் தொழிற்சங்கங்கள் , தன் உறுப்பினர்களுக்கு மனித உறவுகள் சார்ந்த நியாயங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது எப்படி ¢

அரசாங்க மானியத்தில் வழங்கப்படும் திட்டங்களோடு ‘இலவசம்’ என்ற பெயர் சேர்க்கப்படுவதனாலேயே அத்தகைய திட்டங்களில் பயன் பெறுபவர்களைப் பிச்சைக்காரர்களாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது புரிய வைக்கும்படியான பாடத்திட்டத்தை நடத்துவதை தொழிற்சங்கங்கள் வேலையாகக் கொள்ள வேண்டும். அவற்றின் பாடத்திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் சொத்துகளையும் தங்கள் நிறுவனமாகவும், தங்களின் சொத்துகளாகவும் கருதிப் பாதுக்காக்க வேண்டும் என்பதும், அவற்றின்  நுகர்வோர் ஒவ்வொருவரும் தனது கவனத்துக்குரிய மனிதர்கள் எனக் கருதிச் செயல்பட வேண்டும் என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும்.

இது இரண்டு நாள் பயணம்

அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி தமிழ் நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி ஊரான திருப்பத்தூர் போய்ச் சேர்ந்த போது இரவு எட்டு மணி. பழங்குடியினரின் கலை, பண்பாடு, வாழ்வு என்பதான அந்த விழாவில் பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுவர மலைப்பிரதேசத்து வேட்டைக் கருவிகளும் கலயங்களும்  கிழங்கு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பண்பாட்டு அடையாளங்களைப் பற்றிய விவாதங்களில் இப்போதெல்லாம் உணவுப் பொருட்களும் முக்கிய இடம் பெற்று வருகின்றன. உலகமயமாதலை விரும்பும் மனம் சொந்த அடையாளத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற தவிப்போடும் இருக்கிறது. இந்தத் தவிப்பு தமிழர்களின் தவிப்பு மட்டும் அல்ல. காலனிய ஆட்சியிலிருந்து மீண்டு வந்த நாடுகளின் பின் காலனியத் தவிப்பு.

சாம்பார் தமிழ் நாட்டின் பொது அடையாளம். சோறுடன் சேர்த்துக் குழைத்து தமிழ் நாட்டின் எல்லாப் பகுதி மக்களும் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டின் பொது அடையாளத்தைவிடவும் சிறப்பு அடையாளங்களின் நினைவுகள் சுவாரசியமானவை. பல ஊர்களுக்குச் சுற்றுலா சார்ந்த தனித்த அடையாளங்கள் இருப்பது போல உணவுப் பண்டங்கள் சார்ந்த அடையாளங்களும் இருக்கின்றன. சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ரயிலில் ஒரு முறை பயணம் செய்து பாருங்கள். அப்போது இந்த அடையாளங்களைச் சுலபமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

வடக்கே இருந்து தெற்கே போகப் போக ஊருக்கொரு தின்பண்டமாக ரயிலில் ஏறிக் கொண்டே இருக்கும்.  விழுப்புரத்தில் மூக்கைத் துளைக்கும் பலாப்பழம் விருத்தாசலம் வரை தொடரும். ஆனால் விற்கிறவர்கள் பலாப்பழத்தைப் பண்ருட்டியோடு சேர்த்துத்தான் சொல்வார்கள். திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரை மணப்பாறை முறுக்கின் வாசமும் மொறுமொறுப்பும் கேட்டுக் கொண்டே வரும். ஆனால் மதுரையில் தின்பண்டத்தின் வாசத்தைவிட மல்லிகைப் பூவாசம்தான் மூக்கைத் துளைக்கும். மதுரை மல்லிகை வாங்காவிட்டால் வறுத்த மல்லாக்கொட்டையை வாங்கிச் சாப்பிடலாம். ஆவி பறக்க அவித்த நிலக் கடலையும் அங்கே கிடைக்கும்.

விருதுநகரில் இனிப்பும் கூடவே காரமும் கிடைக்கும். ஆனால் அந்த இரண்டுமே விருதுநகருக்குச் சொந்தம் இல்லை. இனிப்புப் பண்டமான பால்கோவா சூடிக் கொடுத்த மங்கை ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சொந்தம்; காரச்சேவு சாத்தூருக்குச் சொந்தம். சாத்தூரைத் தாண்டி அரைமணி நேரப் பயணத்தில் கோயில்பட்டியில் கடலை மிட்டாயும் கடம்பூரில் போளியும் வாங்கிக் கொள்ளலாம். எதுவுமே வாங்க வில்லையென்றாலும் பரவாயில்லை திருநெல்வேலி அல்வாவை மட்டும் வாங்க மறந்து விடாதீர்கள்.

புதிய ஊர்களுக்குப் போகும் போது அந்த ஊரின் சிறப்பு உணவு எது என்று கேட்டுச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருப்பதில்லை. புதிதாக எதையாவது சாப்பிட்டு வயிற்றுக்கோளாறுகள் வந்து அவதிப்படும் நிலை ஏற்படக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம். பாதுகாப்பு உணர்வின் உச்சத்தினால்தான்  தமிழ் நாடெங்கும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

திருப்பத்தூரில் இரவு உணவுக்குச் சென்ற போது பணியாளர் உணவு விடுதியில் கிடைக்கும் பண்டங்களைப் பட்டியல் இட்டார். பட்டியலில் இருந்தவை பிரியாணிகளின் வகைகளும் பரோட்டாக்களின் வகைகளுமாக இருந்தன. வழக்கமாகச் சொல்லப்படும் சிக்கன், மட்டன், பிரியாணிகளோடு மூன்றாவதாக பீப் பிரியாணி என ஒன்றையும் சொன்னார். உடன் வந்திருந்த நண்பர் இந்தப் பகுதியில் பீப் பிரியாணிதான் சிறப்பு; சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொன்னார். மட்டன், சிக்கன் பிரியாணிகளின் விலையை விட பீப் பிரியாணியின் விலை குறைவாக இருந்தது. என்றாலும் என் மனம் கொத்துப் பரோட்டாவைத்தான் நாடியது.

பரோட்டாக்களில் கொத்துப் பரோட்டாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, முட்டை ஆகியவற்றிற்காகப் பிடிக்கும் என்பதைவிட, அதைக் கொத்தும் ஒலி தரும் அதிர்வுக்காகவே எனக்குப் பிடிக்கும். பரோட்டா தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பண்டம் கிடையாது என்பதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டியதில்லை.  வீடுகளில் தயார் செய்யும் உணவுப் பண்டமாக பரோட்டா இன்றும் இடம் பெறவில்லை என்ற ஒரு ஆதாரம் மட்டுமே போதும்.  மாவைப் பிசைந்து ஊற வைத்துத் தட்டி உருட்டி வைக்க வேண்டும். பிறகு அதை மெல்லிதாக வீச வேண்டும். அதன் பிறகு அதைச் சுருட்டி வைக்க வேண்டும். செய்வதற்காகச் செலவழிக்க நேரம் அதிகம் என்று கருதித் தான் அதில் ஈடுபடுவதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த முறை சென்னைக்குப் போன போது நெரிசல் மிகுந்த தி. நகர் ஓட்டல் ஒன்றில் மாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட நுழைந்தேன். பண்டங்களின் பட்டியலில் குழிப் பணியாரம் என்ற பெயரைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது. எனது சின்ன வயது முதல் எனது கிராமத்துக்குப் போனால் விரும்பிச் சாப்பிடுவது பணியாரம். வீட்டில் செய்யவில்லை என்றாலும் பணியாரக்கார வீடு என்று ஒன்று இருக்கிறது. பணியாரம் செய்து விற்பதைப் பரம்பரைத் தொழிலாகவே அவர்கள் செய்து வருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு நாலு பணியாரம் இப்போதும் தருகிறார்கள்.

அந்த ஓட்டல் பணியாளரிடம் குழிப்பணியாரம் கேட்ட போது ஒரு தட்டில் நான்கு பணியாரங்கள் கொண்டு வந்து வைத்தார். இரண்டு பணியாரம் இனிப்பாக இருந்தன. மற்ற இரண்டும் காரப் பணியாரங்கள்.  எங்கள் கிராமத்தில் ஒரு ரூபாய்க்கு நான்கு பணியாரம்; இங்கே நான்கு பணியாரம் பதினைந்து ரூபாய். அவ்வளவுதான் வித்தியாசம். பணியாரம் எனது அடையாளம்; எங்களூர்ப் பாரம்பரிய உணவு தக்க வைக்கப்பட்டுள்ளதில் ஒரு புறம் மகிழ்ச்சி.  அதிக விலைக்கான பண்டமாகிவிட்டதில்  மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.

click here

click here
click here