உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
கே.பாலமுருகன்

சிறுகதை

1

 வெளி பரந்து விரிந்து கொண்டு எவ்வளவு தூரம்தான் போய்க் கொண்டிருக்கும்? வீட்டிற்கு முன் தாத்தா வந்து நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதும் திடீர் விழிப்பு. எழுந்து உட்கார வேண்டும். இல்லையேல் வெளியைப் பற்றிய ஞாபகம் பிசகிவிடும் என்பது போல் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வதே பெரிய சிரமமாகப் பழகிப் போயிருந்தது.

மீண்டும் ஜன்னலை நோக்கிப் பார்வையை நகர்த்தினேன். ஜன்னல் கதவு இலேசாகத் திறந்திருந்தது. வெளி சிறிய இடைவெளியில்தான் தெரிந்து கொண்டிருந்தது. வெளி முழுக்க இலேசான இருள் பரவியிருந்தது. அந்தி சாய்ந்து கொண்டிருக்கும் தருணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
 “ராத்திரி ஆச்சுனா நம்ப எஸ்டேட்ல கொள்ளிக் கட்டெ பிசாசு 2ஆம் நம்பர் காட்டுப் பாதைலெ நொழைஞ்சி மேட்டு லய மொகப்புலெ வந்து நிண்டுட்டு போயிறும் தெரியுமாடா?”

கீழ்க் கதவு இலேசாக அதிர்ந்தது. காற்றாக இருக்கலாம். மீண்டும் அதிர்ந்து கொண்டது. இருள். கண்களை மூடாமலே இருளை உணர முடிந்தது. மாரியாயி பாட்டி கூந்தலைச் சரிசெய்துவிட்டுக் கொண்டே மேட்டு லயத்தின் முகப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அந்தச் சாலையின் முகப்பில் ஒரு நெருப்புப் பந்தத்துடன் யாரோ ஓடிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. பிரமையின் ஆழ்ந்த கைகள் என் மீது கவிந்திருந்தன. . .

2

“எப்படிப் பாட்டி நம்பெ எஸ்டேட்ல மட்டும் இவ்ள பேய்ங்க நடமாடுது?”

“பாட்டி நம்பலெல்லாம் பயமுறுத்தி வைக்க அப்படிச் சொல்லுதுடா, நம்பாதே”
உமா அக்காள் குசுனி கதவோரமாக நின்று கொண்டு எங்களைப் பார்த்துக் கத்தினாள். பாட்டி என்னை மட்டும் விசித்திரமாக முகத்தைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள். புருவங்கள் உயர்ந்து எழுந்து வளைந்து நின்றன.

“ஒங்க அக்காவுக்கு ஒண்ணும் தெரியாதுடா, அதான். .  நான் சின்ன வயசுலேந்து இந்த எஸ்டேட்லதான் வாழ்ந்து பொழங்கிகிட்டுக் கெடக்குறேன், எனக்குத் தெரியாததா?”

பாட்டியின் கண்கள் அபூர்வமாக விரிந்து மொத்த ஆச்சர்யங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு மேலேயும் கீழேயும் அசைந்து கொண்டன. கூந்தலைச் சரிசெய்துவிட்டுக் கொண்டே மேட்டு லயத்தின் முகப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“அங்கனெ பாருடா, தெரியுதா? அதான் மேட்டு லயத்தோடெ முகப்பு. அங்க வரைக்கும்தான் அந்தக் கொள்ளிக் கட்டெ பேய் வந்துட்டுப் போவும்”

“யார் பாட்டி அந்தக் கொள்ளி கட்டெ பேய்? எப்படி இருக்கும்? யேன் நம்ப எஸ்டேட்ல தங்கியிருக்கு?”

பாட்டி மீண்டும் அதே பயமுறுத்தும் பாவனையில் என்னைப் பார்த்துவிட்டு மேட்டு லயத்தைப் பார்த்தாள். பாட்டியின் செய்கைகள் உண்மையிலேயே கொள்ளிக் கட்டைப் பேயைப் பற்றிக் கொண்டு மேட்டு லயத்தின் முகப்பில் ஓடிக் கொண்டிருப்பது போல இருந்தது.

“கொள்ளிக் கட்டெ பேய் பத்தி பேசினா, அது நம்ப வீட்டெ திரும்பிப் பாத்துரும், எப்படி? சொல்லட்டா?”

“ஐயோ என்னா பாட்டி இப்படிச் சொல்றெ?”

“பாட்டி சும்மா கதெ உடுதுடா, நீயும் நம்பிகிட்டு கேக்கறெ”

மறுபடியும் உமா அக்காள்தான். வெறும் குரல் மட்டும் கேட்டுவிட்டு சிறிது நேரத்தில் நிசப்தம் நிலவியது. பாட்டியை அந்த இருட்டு வெளியில் சரி செய்த கூந்தலுடன் பார்ப்பதற்குப் பயம் வந்த போதிலும் தாத்தா வீட்டின் கீழ்க் கதவிற்கு அருகாமையிலேயே அமர்ந்திருந்ததனால் கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது.

“அப்படித்தான் முன்னெ சிவகாமிக் கெழவியெ அந்தக் கொள்ளிக் கட்டெ பேய் அடிச்சிருச்சு தெரியுமா?”

“யார் பாட்டி அந்த சிவகாமிக் கெழவி?”

பாட்டி தனது முகத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு வானத்தையே மல்லாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் முகத்தில் தெளிவற்ற நிலை.

“நான் பாத்தெ ஆக கடசி வயசான கெழவி அதுதான். .  நம்ப செட்டி தாத்தா வீட்டுப் பக்கத்துலெதான் இருந்துச்சு. அவன் மயன் 4ஆம் நம்பர்லெ பால் பொறுக்கறெ பையன், திருட்டுப் பையன். அந்தக் கெழவியெதான் கொள்ளிக் கட்டெ பேய் அடிச்சிருச்சுனு சொல்லுவாங்கெ.”

“எப்படிப் பாட்டி ஒனக்குத் தெரியும்? எந்த எடத்துலெ? கொள்ளிக் கட்டெ பேய் எப்படி அடிக்கும்?”

பாட்டி சிறிது நேரம் எதையோ சுதாரித்துக் கொண்டு பிறகு ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். கூந்தல் இன்னமும் சரி செய்தபடியேதான் இருந்தது. பாட்டிக்கு இலேசான கூன் இருந்தது. உடல் தளர்ந்து போய் சரிந்திருந்தது. ஒருவேளை சிவகாமிப் பாட்டியும் இப்படித்தான் இருந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.

“ நாங்கெலாம் பக்கத்து எஸ்டேட்டுக்கு எம் ஜி ஆர் படம் பாக்கெ போய்ட்டு வந்த அன்னிக்கு ராவுலெதான் சிவகாமிக் கெழவி செத்துப் போச்சுனு தகவல் வந்துச்சுடா”

“படம் பாக்கெ போனிங்களா? எப்பெ பாட்டி?”

“இங்க திருவிழாக்குப் படம் கட்டி போட மாட்டாங்களா? அந்த மாதிரிதான். முன்னெ இந்த எஸ்டேட்ல படம் போட மாட்டாங்க, அதனால நாங்கலாம் சேந்து பக்கத்து எஸ்டேட்டுக்கு நடந்தே போய்ட்டு வருவோம். அந்தச் சமயத்துலலாம் எங்களுக்கு இருந்த ஒரே பயம் இந்தக் கொள்ளிக் கட்டெ பேய்தான். அப்படி ஒரு திருவிழாக்குப் போய்ட்டு வரும் போதுகூட அதெ பாத்துருக்கோம்”

பாட்டி மீண்டும் மேட்டு லயத்தின் முகப்பைப் பார்த்தாள். பழைய ஞாபகங்களின் சரடுகள் மனதிலிருந்து எழும்பி விகாரமடைந்து கொண்டிருந்தது போலும். முகத்தைச் சுருக்கிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“எல்லாம் போய் மேட்டு லயத்து ரோட்டுலெ செவகாமிக் கெழவியோடெ பொணத்தெ பாத்தோம். வாய் தெறந்து கெடந்துச்சு, பல்லுலேந்து ரத்தமா கொட்டிக்கிட்டு கெடந்துச்சு, எல்லாம் சொன்னாங்க.. . கொள்ளிக் கட்டெ பேய் வெளியாவற நேரம் பாத்து கெழவி அங்குட்டு போயிறுச்சுனு, செல பேரு சொன்னாங்க கெழவி அன்னாடம் கொள்ளிக் கட்டெ பேய பத்தி பேசிகிட்டெ இருக்குமாம் அதனாலதான்னு”

“அந்தப் பேயு இப்பலாம் யாரையும் கொன்னு நான் பாத்ததே இல்லயே பாட்டி”

“இப்பலாம் அது வர்றதுகூட கொறவுதான் போல, முன்னலாம் நாங்க அடிக்கடி பாப்பம்டா”

“எப்படிப் பாட்டி இருக்கும் அது? நீ பாத்துருக்கியா?”

“ராத்திரி 10 மணிக்கி மேல எஸ்டேட்ல எல்லாம் அடங்கிப் போயிரும், அப்பெல்லாம் அத்தன மணிக்கு மேல யாரும் வெளில ரொம்ப சுத்த மாட்டாங்கெ. அந்தச் சயத்துலதான் மேட்டு லயத்து பக்கத்துலே 3ஆம் நம்பர் காடு, அடத்தியா கெடக்கும். கும்மிருட்டுடா அங்கலாம். அங்கனதான் திடிர்னு ஒரு நெருப்புப் பந்தம் மாதிரி ஒண்ணு வேகமா ஓடிப் பாயும், அது மேட்டு லயத்து ரோட்டுலெ கடசிவரிக்கும் வந்துட்டு காணமெ போயிறும்டா, அந்த நெருப்புப் பந்தம்தான் கொள்ளிக் கட்டனு சொல்லுவாங்க, அது கையில பிடிச்சிக்கிட்டு அந்தப் பேய்தான் வேகமா ஓடுதான், காலுலாம் இருக்காதாம்”

பயத்தில் கால்களிரண்டும் சுருண்டு கொண்டன. பாட்டியின் முகம் இப்பொழுது பொழிவற்று ஒரு மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. தாத்தா கீழ்க் கதவிற்குப் பக்கத்தில் இன்னமும் அமர்ந்து கொண்டுதான் இருந்தார். ஒருவேளை உறங்கிப் போயிருக்கலாம். கொள்ளிக் கட்டைப் பேயைப் பற்றி பாட்டியிடம் கேட்டது தவறாகிப் போனது போல மனதில் பட்டது. நானும் மேட்டு லயத்தின் முகப்பு வாயிலை நோக்கிப் பார்த்தேன். வெறும் கும்மிருட்டுதான் நிலவியிருந்தது.

“அதனாலதான் இன்னும்கூட 10மணிக்கு மேல யாரும் அவ்ளவா அந்தப் பக்கம் நடமாட மாட்டாங்கடா. .  எல்லாருக்கும் பயம்”

“அது யேன் பாட்டி அப்படி ஓடியாந்து அங்க நிக்குது? கைலெவேற கொள்ளிக் கட்டெ?”

“அதும் ஒரு பெரிய கததாண்டா, இப்ப மணியாச்சு, வா உள்ளெ போயிறலாம் நாளைக்கு ராவுலெ கேளு சொல்றென்”

பாட்டி கூறியதிலும் உண்மை இருந்தது. மணி 10க்குக் கூட ஆகியிருந்தது. இருவரும் எழுந்து உள்ளே போய்க் கொண்டிருக்கும் போது, காற்று திடீரென்று பலமாக வீசியது. தென்னை மரங்களின் அசைவுகள் வினோதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டே போனது. தாத்தா குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார். பாட்டி வாங்கின் மீது ஏறி அமர்ந்து கொண்டே தாத்தாவைப் பார்த்தாள்.

“ஒங்க தாத்தா இருக்காறெ அவருகூட கொள்ளிக் கட்டெ பேய்க்குப் பயப்படுவாருடா. .  முன்னலாம் சாய்ங்க¡லம் ஆயிரும் இவுரு வர மரத்துலேந்து, அங்கனெ 2ஆம் நம்பர் காட்டுலெ மரக் கொட்டாய்லெ இருந்துட்டுதான் வருவாரு, செல சமயம் ஆலக்கரைக்குப் போய்ட்டு லேட்டாதான் வருவாரு, அப்பலாம் எங்கடா கொள்ளிக் கட்டெ பேயெ பாத்துறெ போறேனு பயந்துகிட்டுக் கெடப்பாரு”

பாட்டி வாங்கின் மீது படுத்துக் கொண்டே என்னைப் பார்த்தார். நானும் மீண்டும் தலையாட்டிக் கொண்டே பாட்டியின் அருகில் போய்ப் படுத்துக் கொண்டேன். வாங்கு நீளமாக வசதியாகத்தான் இருக்கும். தாத்தா உறக்கத்தில் மெய்யிழந்து போயிருந்தார். நானும் பாட்டியும் தாத்தாவைப் பார்த்தோம்.

“தாத்தா காட்டுலேதான் கெடப்பாரா பாட்டி?”

“அவருக்கு அதான் பொழப்பெ, மரத்துலெ ஏணி கோடு போட்டுட்டுப் பெறகு ஆலக்கரைக்குப் போய்ட்டு வருவாரு, அந்தச் சமயத்துலெலாம் வந்து சேர நேரம் ஆயிறும், நேரம் ஆயிட்டா மேட்டு லயத்துப் பாதையிலெ வர மாட்டாரு, எங்கடா கொள்ளிக் கட்டெ பேய பாத்துருவோம்னு அந்தக் காலத்துலெ ஒங்க தாத்தாவுக்குப் பயம்”

தாத்தாவின் தேகம் மெலிந்து போய் ஒரு தேரையைப் போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தார். சாய்வு நாற்காலியில் தாத்தா படுத்திருப்பதுகூட, ஏதோ ஒரு மரக் குச்சியை எடுத்து அந்த நாற்காலியில் சாத்தியது போலத்தான் இருந்தது.

“அந்தக் கொள்ளிக் கட்டெ பேய் 10மணிக்குதானே அந்தப் பக்கம் வரும்?”

“வரும்டா, இருந்தாலும் மனுசாளுங்க மனசு அதெலாம் பாக்குமா? வயித்த கலக்கும் யாரா இருந்தாலும், எப்பயா இருந்தாலும் அந்தப் பக்கம் போனாலே. ஒங்க தாத்தா ஒரு நாளு அந்த மேட்டு லயத்துலெ நடந்து வந்துகிட்டு இருக்கும் போது, சாய்ங்காலம் ஒரு 5.30 மணிதான் இருக்கும், 2ஆம் நம்பர் காட்டுலேந்து ஒரே கொலுசு சத்தமா கேட்டுச்சான்”

“ஐயோ ஆமாவா? அப்பறம் என்னாச்சு பாட்டி?”

“ஒங்க தாத்தா வேட்டியெ மடிச்சு கட்டிக்கிட்டு விறுவிறுனு நடந்து வந்துட்டாரு மனுசன், சாய்ங்காலமே அந்த ரோடு சுடுகாடு மாதிரி அமைதியாதான் கெடக்கும்டா”

வாங்கின் மீது படுத்துக் கொண்டே ஜன்னலைப் பார்த்தேன். இந்த மாதிரி பேய்க் கதைகள் பேசும் போது அடிக்கடி ஜன்னலைப் பார்த்துக் கொள்வது என் சுபாவம். ஏதாவது சலனங்கள் ஏற்படுகிறதா என்ற எச்சரிக்கையில்தான் இப்படிப் பார்த்துக் கொள்வதுண்டு.

“யேன் பாட்டி மேட்டு லயத்து ஓரமாலாம் வீடுலாம் இருக்குதானெ?”

“மேட்டு லயத்த பாத்த மாதிரி எங்கடா வீடுலாம் இருக்கு, அதத் தாண்டி அந்தப் பக்கம் போனாதானே வீடுலாம் வருது, அதும் 5-6 வீடுதான், முகப்பு கிட்டெ பாத்தனா வெறும் காடுதானெ, முன்ன காலத்துலெ நான் இந்த எஸ்டேட்டுக்கு வரும் போது அங்கன வீடுலாம் இருந்துச்சாம், வெள்ளக்காரனுங்க நம்ப ஆளுங்களுக்கு இந்த எஸ்டேட்டெ ரெடியாக்கும் போது செல வீடுங்களெ ஒடைச்சிட்டாங்களாம், அப்படித்தான் சொல்லிக்குறாங்கெ”

நாளை காலையில் எப்படியாவது மேட்டு லயத்துப் பாதையின் சூன்யத்தையும் கொள்ளிக் கட்டைப் பேய் வந்து புழங்கிய சுவடுகளையும் வெறுமனே தேடி அலைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பாட்டி தூக்கத்தில் தொலைந்து போயிருந்தாள். மீண்டும் ஜன்னலைப் பார்த்தேன். எந்தவித சலனமும் இல்லைதான். உறக்கம்.

காலையில் எழுந்ததும் பாட்டி வானீர் ஒழுக அசதியில் படுத்துக் கிடந்தார். கொள்ளிக் கட்டைப் பேய் வந்து பாட்டியின் மீது இவ்வளவு நேரம் படுத்துக் கிடந்துவிட்டு இப்பொழுதுதான் எழுந்து போனது போல இருந்தது. குளித்துவிட்டு முதல் வேலையாக மேட்டு லயத்துப் பாதையை நோக்கி நடந்தேன். உமா அக்காள் குசுனியில் ஏதோ வேலையாக இருந்தாள். அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் ஓரமாக நின்று கொண்டு முதலில் பாதையை உற்று நோக்கினேன். மேட்டு லயத்துப் பாதை அகலமாக விரிந்து காட்டுக்குள்ளும் ஏதோ ஒரு வளைவை நோக்கியும் போய்க் கொண்டிருந்தது. அசூரத்தனமான அமைதி.

தாத்தா இங்குதானே நடந்து வந்திருப்பார், இதே பாதையில்தானே கொள்ளிக் கட்டைப் பேயும் நடந்து வந்திருக்கும் என்று பாதையையே வெறித்துக் கொண்டிருந்தேன். பாதையின் முக வாயிலில் யாரோ நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. யாராக இருக்க வேண்டும் என்ற அனுமானம் எனக்குள் ஏற்பட்டது. ஒருவேளை கொள்ளிக் கட்டைப் பேய் மாற்று ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறதோ? அந்த உருவம் அருகாமையில் நெருங்கியது அது சிவகாமி அக்காவுடைய தம்பி ராஜகண்ணன்  என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“என்னாயா, இங்க என்னா பண்ணிகிட்டு இருக்கெ? தாத்தா வீட்டுலெ இருக்காறா?”

“இருக்காருணெ, சும்மா இங்கன நடந்து போலாம்னு வந்தென்”

“இங்குட்டு நடெ அந்தப் பக்கம் போயிறாதெ, மலப் பாம்பு ஏதாச்சம் வந்துற போது, பாத்து”

“மலப் பாம்பா? எங்கணெ இருக்கு?”

“அந்தப் பக்கம்லாம் காடுதான்யா, எல்லாத்தயும் வெட்டி அப்படியெ போட்டு வச்சிருக்கானுங்கெ, கண்டதுலாம் வந்து அண்டும்”

“அண்ணெ இங்க கொள்ளிக் கட்டெ பேய் வருமா?”

அண்ணன் ஏதோ அவசரத்தில் என் கேள்வியைக் கேட்டு கேட்காததைப் போல நகர்ந்துவிட்டார். மீண்டும் அந்த முக வாயிலைப் பார்த்தேன். அது அங்கேயே முடிவடையவில்லை, வேறு ஏதோ பாதை அங்கிருந்து கிளைவிட்டு வேறு எங்கோ போவது போல இருந்தது. கண்டிப்பாக அதுதான் கொள்ளிக் கட்டைப் பேயின் வீடாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கும் போது, காட்டிலிருந்து பயங்கர சத்தம். ஓர் அமைதியைத் திடீரென்று உடைத்துக் கொண்டு வரும் மிருகங்களின் ஓசைகளைப் போல இருந்தது. வேகமாக ஓடத் துவங்கும் போது மனதில் அபாரமான பயங்கள் கொள்ளிக் கட்டைகளுடன் விரட்டுவது போன்ற பிரமை. வீடு சேரும்வரை யாரோ பின்னால் வருவது போலத் தோன்றியது.

“எங்கடா போய்ட்டு வரெ?”

பாட்டி வீட்டுக்கு வெளியிலுள்ள வாங்கில் கால்முட்டிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பாட்டியின் அருகே அமர்ந்து கொண்டு மேட்டு லயத்துப் பாதையைக் காட்டினேன்.

“ நீ யேண்டா அங்க போயிட்டு வந்தே? போய் கால மொதல்லெ கழுவுடா, கேக்காமெ கொள்ளாமெ அங்கனெ போய்ட்டு மேஞ்சிட்டு வரியா?”

பாட்டி கோபமாகக் கத்தினாள். தாத்தாவுடைய பழைய வாளியில் சேகரித்து வைத்திருந்த மழை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டே பாட்டியைப் பார்த்தேன். கோபம் களைந்து போய் சாவகாசமாகக் கால்களைக் கீழே இறக்கி நீட்டிக் கொண்டிருந்தாள்.

“பாட்டி அந்தக் கொள்ளிக் கட்டெ பேய் எங்கேந்து வந்துச்சு, எப்படி வந்துச்சு எல்லாம் சொல்றெனு சொன்னெ? இப்பெ சொல்லு பாட்டி”

“இவன் ஒருத்தன் ஒண்ணு சொல்லிட்டா உசுரு போற வரைக்கும் தொல்லெ பண்ணிகிட்டு இருப்பான்”
 பாட்டி கதை சொல்வதற்குத் தயாராகிவிட்டது போன்ற பாவனையில் அமர்ந்து கொண்டாள். நானும் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அப்பொழுதுதான் அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கும் சன்னாசித் தாத்தாவையும் அஞ்சலை அக்காவையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“தோ போறான் பாரு சன்னாசி, இவனுக்குக்கூட கொள்ளிக் கட்டெ பேய் பத்தி நெறைய தெரியும்டா. .  ரெண்டு தடவெ பாத்துருக்கான் போல, பாவம் பேய் அறைஞ்ச மாதிரி கெடந்தான் மூனு நாளு”

“அப்பனா நம்ப எஸ்டேட்ல நெறைய பேரு பாத்துருக்காங்க போல பாட்டி?”

“ஆமாம்டா. .  இப்பத்தான் அந்தக் கொள்ளி கட்டெ பேயு எதுகாகவோ அடங்கிப் போயிருக்கு, எப்ப வேணும்னாலும் வரலாம்டா. .”

பாட்டி எச்சரிக்கை உணர்வோடு ஆள்காட்டி விரலை என்னை நோக்கிக் காட்டினாள். எந்த விஷயத்தையும் சாதரணமாகச் சொல்ல முடிவதில்லைதான். கொள்ளிக் கட்டைப் பேய் இங்கு வாழ்ந்த மனிதர்களின் கற்பனையிலோ நிஜத்திலோ ஆழமாக நினைவுகளையும் பயங்களையும் ஊன்றிவிட்டதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

“முன்னெ அந்த மேட்டு லயத்து பாதைலே நேரா உள்ளுக்குக் காட்டுள்ளெ நொழைஞ்சி போனா ஒரு பெரிய ஆறு வரும்டா, அந்த ஆத்தெ வலப்பக்கமா தாண்டிப் போனா பழைய பங்களா ஒண்ணு கெடக்கும், இப்பெ அது இல்லெ, முன்னெ லேசா இடிஞ்சி கெடந்துச்சு. . அங்கனதான் வெள்ளக்காரனுங்க ரெண்டு மூனு வேர நாட்டுப் பொம்பளைங்களெ வேலைக்கும் ஒத்தாசைக்கும் வச்சிருந்தானுங்கெ”

“அவுங்க யாரு பாட்டி?”

“சொல்றென் கேளுடா. அந்தப் பொம்பளைங்கெ எஸ்டேட்டுக்குள்ளெ வராதுங்க. ரெண்டு மூனு தடவெ இந்தப் பக்கமா வெள்ளக்காரன் ஜீப்லெ ஒக்காந்து வருவதெ பாத்துருக்கோம். .  அதுங்கலெதான் அவனுங்கெ ஒரு நாளு கொன்னு ஆத்துலெ போட்டுட்டானுங்கெ போலெ, பெரிய போலிஸ் கேசு ஆச்சு, மலாயா போலிஸ்காரனுங்கெ அப்பெதான் நம்ப எஸ்டேட்டுக்கு வந்தானுங்கெ. .  அந்தப் பொம்பளைங்களுலெ ஒருத்திதான் அந்தக் கொள்ளிக் கட்டெ பேயுடா, புரியிதா?”

பாட்டி என் பதிலுக்காகச் சிறிது நேரம் நின்றுவிட்டாள்.

“அதுக்கப்பறம்தான் இந்தக் கொள்ளிக் கட்டெ பேய் கொள்ளிக் கட்டையெ தூக்கிகிட்டு இங்கனெ ஓடியாருது, அந்த வெள்ளக்காரனுங்களெ தேடிகிட்டு ஓடுதுனு சொல்றாங்கடா”

பாட்டி சொல்லி முடித்ததும் நிதானமாக அமர்ந்து கொண்டு மீண்டும் மேட்டு லயத்தை நோக்கிப் பார்த்தாள். பாதை எந்தவித சலனமுமின்றி காட்டுக்கு நடுவில் கிடந்தது. நான் வாங்கிலிருந்து இறங்கி வீட்டினுள்ளே எக்கினேன். உமா அக்காள் ஏன் திடீரென்று குசுனிக் கதவோரமாக நின்று கொண்டு எங்களின் உரையாடலையே கேட்டுக் கொண்டிருந்தாள் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் மீண்டும் குசுனியில் போய் மறைந்து கொண்டாள்.

“பாட்டி அந்தெ ஆறு இன்னும் இருக்கா?”

“அங்கலாம் போயி எத்தனையோ வருசக் கணக்கா ஆச்சுடா, அது இங்கிருந்தெ தூரம்தான்,. எவன் போவான் அந்தக் காட்டுக்குள்ளெ”

என்றாவது அந்தக் கொள்ளிக் கட்டைப் பெண் இந்தப் பாதையை நோக்கி ஓடி வருவதைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவள் நியாயம் கேட்டு நெருப்பை ஓர் அடையாளமாகத் தூக்கிக் கொண்டுதான் ஓடி வருகிறாள் என நினைத்துக் கொண்டேன். அந்தக் கொள்ளிக் கட்டையைப் பற்றி மேலும் நிறைய பேர் சொல்லிக் கதை கதையாகக் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரின் நினைவிலும் அனுபவத்திலும் அந்தக் கொள்ளிக் கட்டைப் பேய் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர முடிந்தது.

“மேட்டு லயத்துலெ இன்னிக்காவது அந்தக் கொள்ளிக் கட்டெ பேய பாக்க முடியுமா?”

தலைக்கு மேல் வழக்கமான அனலின் தெறிப்பு.

        bala_barathi@hotmail.com


click here

click here
click here