உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
ந. முருகேசபாண்டியன்

சின்னப் பிள்ளைகள் குறும்பு செய்யும்போது, 'பூச்சாண்டி' கிட்டே பிடிச்சுக் கொடுத்துடுவேன் என மிரட்டுற குரலை கிராமங்களில் அடிக்கடி கேட்கலாம். யார் அந்தப் பூச்சாண்டி? ஆள் எப்படி இருக்கும்? என்று யோசிப்பதைவிட அரூபமாக மனத்தில் தோன்றும் பயம்தான் குழந்தையைப் பாடாய்ப் படுத்தும். அப்படி இன்னொரு பெயர்தான் 'பள்ளிக்கூடம்'. ஐந்து வயது வரை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் குறும்புகள் எல்லை மீறும்போது, 'பார் உன்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டால் அப்பத் தெரியும்' என்ற குரலைக் கேட்டவுடன் பள்ளிக்கூடம் என்றால் பூதம் மாதிரி விநோதமான வஸ்துவாக மனதுக்குள் உருவெடுத்துவிடும்.

வெயில் காலம் முடிந்தவுடன் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளின் முன்னால் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கூடியிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான மிரட்சியுடன் மௌனத்தில் உறைந்திருக்கும் குழந்தைகள். தலைமை ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையையும் அழைத்துக் குழந்தையின் வலது கையினால் தலையின் உச்சி வழியாக இடது காதினைத் தொடச் சொல்லுவார். அப்படித் தொடும் குழந்தைக்கு ஐந்து வயதாகிவிட்டது என்று அர்த்தம். பெரும்பாலான  தலைமை ஆசிரியர்களின் தலைக்குப் பின்னர் சுவரில் நேரு, காந்தி படங்கள் தொங்கும்;  மேசையில் உலக உருண்டை இருக்கும். குழந்தைகளுக்கு உலக உருண்டையைத் தொட்டுப்பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் அருகிலிருக்கும் மூங்கில் பிரம்பு எல்லாவற்றையும் அடக்கிவிடும்.

பள்ளிக்கூடங்கள் தென்னங்கீற்றுகள் வேய்ந்த கொட்டகைகளில் நடைபெற்றன. சில வகுப்புகள் நிரந்தரமாகப் பள்ளி வளாகத்தினுள் உள்ள அரச மரத்தடியில் நடைபெறும். நான் மூன்றாம் வகுப்பினை முழுக்க மரத்தடியில் படித்தேன். வகுப்பு நடக்கும்போது அங்குமிங்கும் வேடிக்கை பார்க்கும் சௌகரியமிருந்தது. மழைக்காலம் முழுக்க ஒரே கொண்டாட்டம்தான்; நிரந்தரமான விடுமுறைதான். மாலையில் மூன்று மணியின்போது வானம் கருங்கும்மென்று மேகமாக இருந்தால் 'ஓவர் பெல்' அடிக்கும். எல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு உற்சாகமாக ஓடியது இப்பொழுது நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.

நான் படித்த பள்ளிக் கூடத்திலிருந்து ஒரே கெட்டிக் கட்டடம் முன்பு ராணிமங்கம்மாள் காலத்தில் வழிப்போக்கர்களுக்கான சத்திரமாக இருந்தது. மாட்டுவண்டியில் பயணிக்கும் வெளியூர்க்காரர்கள் பள்ளிக்கூட வளாகத்திலிருந்த புளிய மரத்தடியில் தங்கிச் சோறு பொங்கிச் சாப்பிடுவார்கள். 'எங்கே படிக்கிறே' என்ற கேள்விக்குச் 'சத்திரத்தில் படிக்கிறோம்' என்று மாணவர்கள் பதில் சொல்லுவார்கள்.

  'அருள் புரிவாய் கருணைக் கடலே!
  
  ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வுபெற
  
  அருள் புரிவாய் கருணைக் கடலே!
  
  பரிபூரண சதா நந்த வாணியே!

என்ற பாடலுடன் தொடங்கும் காலை பிரேயரில் வாலை சுருட்டிக்கொண்டு மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள்.

எல்லா ஆசிரியர்களும் கையில் பிரம்புடன்தானிருப்பார்கள். மாணவர்களின் பிஞ்சுமனம்  குறித்து அக்கறையற்று வன்முறையைப் பிரயோகிப்பதில் நம் கல்விமுறை முக்கிய இடம் வகிக்கிறது. களிமண்ணைப் பிசைந்து பொம்மை செய்வதுபோல, குழந்தைகளை உருவாக்கிட நினைக்கும் வாத்தியார்களின் மூடத்தனம் மோசமானது. அடி, உதை, கொட்டு, கிள்ளுதல், மண்டியிட வைத்தல் என வகுப்பறை சித்திரவதைக் கூடமாவது சரியல்ல. எனவேதான் பட்டாம்பூச்சிகளும் பொன்வண்டுகளும் தண்ணீர்ப் பாம்புகளும் எங்களுக்குக் கவர்ச்சிகரமாக விளங்கின.

நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது காலையில் ஆசிரியரின் முதல் வேலை, அன்று வகுப்பிற்கு யார்யார் வரவில்லை என்று பட்டியலிடுவதுதான். ஒரு பையனைப் பிடித்து வர இருவர் ஏவப்படுவார்கள். அந்த ஒரு மணிநேரம் வெளியே சுற்றலாம் என்று குதியாட்டம் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். எங்களைப் பார்த்தவுடன் ஓடி ஒளியும் வகுப்பறைத் தோழர்களை விரட்டிப் பிடித்துப் பள்ளிக்கு இழுத்து வருவோம். சில மாணவர்கள் கடித்து வைத்துவிடுவார்கள்; சிலர் நகத்தில் பிறாண்டி வைப்பார்கள். ஆனால் பிடிக்கப் போன மாணவர்கள் வீரதீர சாகச மனநிலையில் இருப்பார்கள். ஏதோ புலியைப் பிடித்துக் கட்டித் தூக்கிவருவது போன்ற மனநிலையிலிருப்போம்.

வீட்டில் குறும்புகள் செய்யும் சிறுவர்களைப் பள்ளிக்கு இழுத்துவரும் பெற்றோர், 'இவன் கண்ணைத் தவிர அடிச்சுத் தோலை உரியுங்க' என்று தலைமை ஆசிரியரிடம் அனுமதி வழங்குவார்கள். சிறுவனின் உடல் நடுங்கும். பள்ளிக்கு ஒழுங்காக வராமல் 'டிமிக்கி' கொடுக்கும் மாணவர்களுக்குக் காலில் கட்டை மாட்டிவிடும் பழக்கம் அப்பொழுது இருந்தது. ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் அரை அடி கனமுமுள்ள மரக்கட்டையின் நடுவில் இரும்புக் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். அக்கொக்கியிலிருந்து மூன்றடி நீளமுள்ள இரும்புச் சங்கிலியின் மறுமுனை மாணவனின் காலில் மாட்டப்பட்டுப் பூட்டுப் பூட்டப்படும். பூட்டின் சாவி தலைமை ஆசிரியர் வசமிருக்கும். காலுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கிலியைத் தூக்கிக்கொண்டு மாணவர் நடந்து வருவது அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர். நடப்பது போலிருக்கும். குளிக்கும்போது, பம்பரம் விடும்போது, உறங்கும்போது எனக் கட்டையுடன் அலையும் மாணவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

முதல் வகுப்பு மாணவர்கள் கையிலுள்ள மஞ்சள் துணிப்பையில் கல்சிலேட், அ,ஆ...வன்னா அட்டை, தமிழ்ப்பாட நூல் இருக்கும். ஹோம் ஒர்க் எல்லாம் சிலேட்டில்தான் எழுதுவோம். ஐந்தாம் வகுப்பு வரை வாய்பாடு சொல்லுவதுதான் பெரிய சோதனை. 1/8, 1/4, 1/2 வாய்பாடுகளைச் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். தினமும் மதியம் கடைசி பீரியட் விளையாட்டுத்தான். மூன்றாம் வகுப்பில்  A,B,C,D,.... அறிமுகம். முழு ஆண்டுத் தேர்வில் கல்லைக் காட்டி இது என்ன என்ற கேள்விக்கு 'ஸ்டோன்' என்று பதில் சொன்னேன். ஆங்கிலப் பாடத்தில் தேர்வானேன்.

பள்ளிக்கூடத்துக்குப் பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவுக்காகத்தான் வந்தனர். அம்மாவும் அப்பாவும் வயல் வேலைக்குப் போனபிறகு, மதியம் வீட்டில் குடிக்கக் கூழ் இருக்காது. மதியம் உணவு சாப்பிடும் மாணவர்கள் தட்டுகள் கொண்டு வரவேண்டும். அமெரிக்காவிலிருந்து வந்த மக்காச் சோள ரவை உப்புமா, கோதுமை ரவா உப்புமா கிண்டிப் போடுவார்கள். சில நாட்களில் பால் பவுடரைக் கரைத்துக் காய்ச்சிய பாலைக் குடிப்பதற்காக ஈய டம்ளர்களில் கொடுப்பார்கள்.

பள்ளிக்கூடம் என்பது படிப்பது என்பதற்காக மட்டுமிருந்ததாக எனக்கு நினைவில்லை. வகுப்பறையிலுள்ள கரும்பலகைக்குக் கரி தடவுவதுகூட மாணவர்களின் வேலைதான். நான்கைந்து மாணவர்கள் மதியம் சாப்பிட்டவுடன் பள்ளியை விட்டுக் கிளம்புவோம். ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்து பள்ளிக்குக் கொண்டுவந்து, கிணற்றடியில் வைத்துக் கரியுடன் சேர்த்துக் கல்லினால் தட்டிச் சாந்தாக்குவோம். பின்னர் அச்சாந்தினைக் கரும்பலகையில் தடவுவோம். டிராயர், சட்டை எல்லாம் கரி படிந்துவிடும். வீட்டுக்குப் போனால் திட்டுக் கிடைக்கும். மறுநாள் பள்ளிக்கூடம் போனால் கரும்பலகை கன்னங்கருப்பாக மின்னும்.

பள்ளிக்கூடத்தில் பெரிய பரபரப்பான விஷயம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வரும் நாள்தான். நான்கைந்து நாட்களாகவே பள்ளிக்கூடம் பரபரக்கும். புல்லைவெட்டி, தரையைச் சுத்தப்படுத்தி எங்கும் பளபளப்பாக இருக்கும். வகுப்பறைச் சுவரில் திடீரெனப் படங்கள் தொங்கும். இன்ஸ்பெக்ஷன் அன்று யாராச்சும் லீவு போட்டால் கண்ணைத் தோண்டிவிடுவதாக ஆசிரியர் மிரட்டுவார். மாணவர்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருந்தாலும் ஏதோ நடக்கப் போகிற மனநிலையில் பயந்து போய் இருப்பார்கள். பூச்சாண்டிக்கும் ஸ்கூல் இன்ஸ்பெக்டருக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. வகுப்பறைக்குள் இன்ஸ்பெக்டர் நுழையுறப்ப 'வணக்கம் ஸார்' எனக் கோரஸாகக் கத்துவோம். அவர் கெத்தாக ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது கேள்வி கேட்பார். வகுப்பாசிரியர் கலவரமான முகத்துடன் பதறிப்போய் இருப்பதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

பள்ளிக்கூட வராண்டாவில் தொங்கும் பெரிய தண்டவாளத் துண்டில் பெரிய கம்பியினால் அடித்து மணியடிப்பது பெரும்பாலான பள்ளிகளில் வழக்கிலிருந்தது. எங்கள் பள்ளியில் அம்மா முத்துப்பிள்ளை என்ற அடிப்படை அலுவலர் மணி அடிப்பார். அவர் இல்லாதபோது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மணியடிப்பார்கள். சின்ன வகுப்பு மாணவர்களுக்கு மணியடிப்பது என்பது எதிர்காலக் கனவு. நான் நான்காம் வகுப்புப் படிக்கும்பொழுது, என்னைக் கூப்பிட்டு தலைமை ஆசிரியர் மணியடிக்கச் சொன்னார். என்னுடைய கையிலிருந்த கம்பியிலிருந்து எழும்பிய ஒலி காற்றில் பரவிட, என் மனம் உற்சாகத்தில் கொப்பளித்தது. அன்று என் வகுப்பறைத் தோழர்களிடம் நான்தான் மணியடித்தேன் என்று பெருமை பீற்றினேன். அவர்கள் கண்களில் பொறாமை பொங்கியது.

வகுப்பறைகளில் ஆசிரியருக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்க ஆள் 'கிளாஸ் லீடர்'தான். பக்கத்து வகுப்பறையிலிருக்கும் டீச்சருடன் ஆசிரியர் அரட்டை அடிக்கப் போயிருப்பார். எல்லா மாணவர்களும் கையைக் கட்டி வலதுகை ஆள்காட்டி விரலால் உதட்டின் குறுக்காக விரலை வைத்து அமைதியாக இருப்போம். எவ்வளவு நேரம் தான் ஆடாமல் அசையாமல் இருப்பது? யாராவது ஒரு வாலுப் பையன் மெல்ல அடுத்தவனின் இடுப்பில், இடது கை விரலால் நிமிண்ட, கூச்சம் தாளாமல் நெளிய அப்புறம் ஒரே தமாஷ்தான். லீடர் ஆசிரியரிடம் மேற்படி விஷயத்தைப் போட்டுக் கொடுத்துவிடுவான். இரு மாணவர்களும் ஒருவர் காதை இன்னொருவர் கையினால் பிடித்துக்கொண்டு, 'உன்னாலே நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்' என்று சொல்லியவாறு 'உக்கி' போடுவார்கள்.

ஆசிரியர்களின் சித்ரவதை தாங்காமல் பள்ளிக்கு வராமல் இருந்துவிட்ட என் நண்பர்களை ஏக்கத்துடன் பார்ப்பேன். சில மாணவர்கள் திடீரெனப் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். அத்தகைய மாணவரைத் தற்செயலாகத் தெருவில் பார்த்துக் கேட்டால், 'எங்கம்மாவுக்குப் பிள்ளை பிறந்திருக்கு. அதனால் சின்னப்பிள்ளையாக இருக்கிற தங்கச்சியைத் தூக்கி வைச்சிருப்பதற்காகப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்' என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போன்ற நிம்மதியுடன் சொல்லுவது எனக்குப் பொறாமையைத் தரும்.

பெரும்பாலான ஆசிரியர்கள் மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு மர நாற்காலியில் உட்கார்ந்தவாறு தூங்குவார்கள். மாணவர்கள் 'குசுகுசு'வெனப் பேசிக் கொண்டிருப்பார்கள். சத்தம் அதிகமானவுடன் தூக்கம் கெட்டு விழிக்கும் ஆசிரியர், பிரம்பை எடுத்துக் கண்ணில் தென்படும் மாணவர்கள் மீது விளாசுவார். ஆடு மாடுகளைக்கூட அப்படி அடிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்வேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தினமும் மாணவர்கள் ஒரு வரிசையாகவும் மாணவிகள் ஒரு வரிசையாகவும் எதிரெதிராக நிறுத்தப்படுவார்கள். யாராவது ஒரு மாணவன் முன்னே வந்து, அவனுக்குப் பிடிக்காத அல்லது மக்கு என்று கருதும் மாணவியிடம் 'எட்டேழா' என்று வாய்பாட்டில் ஒரு வரியைக் கேட்பான். பதில் சொல்லாத மாணவியின் தலையில் 'குட்டு' வைக்க வேண்டும். இதில் மாணவியினால் குட்டுப்பெற்ற மாணவர்கள் அதை மிகக் கேவலமாகக் கருதுவார்கள்.

வகுப்புக்கு ஓரிரு மாணவர்கள் கதை சொல்லுவதில் கில்லாடியாக இருப்பார்கள். ஓய்வு நேரத்தில் அவர்களைச் சுற்றிக் கூட்டமிருக்கும். மதுரையில் போய்ப் பார்த்த புதிய திரைப்படக் கதையை மணிக்கணக்கில் ஒவ்வொரு காட்சியாக விவரிக்கும்போது, பிறர் ஆவென வாயைத் திறந்து கொண்டு கதை கேட்பார்கள். காமெடிக் காட்சிகளைக் கேட்டு கொண்டாட்டமாகச் சிரிப்பார்கள். காட்சி ஊடகமான திரைப்படம் கேட்பு ஊடகமாக மாற்றம் பெறுவது வேடிக்கைதான்.

திரைப்படத்திற்குப் போவது என்பது அந்தக் காலகட்டத்தில் 'பஞ்சமா பாதகங்களில்' ஒன்று. சினிமா பார்த்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற பொதுப் புத்தி நிலவியது. என்றாலும் குடும்பத்தோடு சினிமா பார்க்கும் வழக்கம் வலுப்பெற்று வந்தது. திரையரங்கிற்குப் படம் பார்க்கப் போயிருக்கும்போது, இடைவேளையில் யாராவது ஆசிரியர்கள் வந்திருக்கின்றனரா? என்று நாற்காலிப் பக்கம் பார்ப்பேன். யாராவது வந்திருந்தால் போச்சு. தலையைக் குனிந்து கொள்வேன். அப்படியும் என்னைப் பார்த்துவிடுவார் ஆசிரியர். மறுநாள் பயந்து கொண்டே பள்ளிக்குப் போவேன். ஏதாச்சும் கேள்விகேட்டுப் பதில் சொல்ல முடியாத எனக்கு 'சினிமா' ஒரு கேடா என்று கேட்டு அடிவிழும். இன்னும் சில ஆசிரியர்கள் தெருவில் நுழைந்தாலே, விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் சிட்டாகப் பறந்துவிடுவார்கள். ஓரிருவர் 'படிக்கிற நேரத்தில என்னடா விளையாட்டு'? என்று திட்டுவார்கள்.

அறுபதுகளில் பள்ளிக் கூடங்களில் பெரும் பாடச்சுமை இல்லை என்பது முக்கியமான விஷயம். தினசரி படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்பவாச்சும் வீட்டுப் பாடம் எழுதும் வேலை. மாதத் தேர்வு கிடையாது. ஆனால் அடி உதைதான் நல்ல மாணவனை உருவாக்கும் என்ற நம்பிக்கைதான் கல்விமுறையில் பெரும் கோளாறு. அன்றைய சமுதாயத்தில் ஆசிரியர் என்றால் நாலு விஷயங்களைச் கற்றவர், நல்ல மனிதர், அப்பாவி, அவரை நம்பி வீட்டை வாடகைக்குக் கொடுக்கலாம் என்ற பொதுப்புத்தி நிலவியது. மிகக் குறைந்த அளவில் பாடங்களைப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் தமிழைப் பிழையறப் பேசவும் எழுதவும் அறிந்திருந்தனர் என்பது நிதர்சனமான உண்மை. ற, ர வேறுபாடு ழ, ள, ல வேறுபாடு குறித்து மாணவர்கள் குழம்பவில்லை. இன்று தமிழில் முதுகலை பயிலும் மாணவருக்குக்கூட எழுத்துப் பிழை ஏற்படுவது நமது கல்வி முறையின் கேவலமன்றி வேறு என்ன?

மாணவ மாணவியருக்குப் பட்டப் பெயர் சூட்டி அழைப்பது அன்று பொது வழக்காக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்களைப் பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைத்து ரகசியமாகப் பரிமாறிக் கொள்வார்கள்.

மாணவர்களின் ஆடைகள் தொளதொளவென்று இருக்கும். வளருகின்ற பிள்ளை என்று லூஸாகச் சட்டை, டிராயர் தைத்து மாட்டிவிடுவார்கள். இடுப்பில் பட்டன் போடமுடியாமல், இருமுனைகளையும் ஒன்றாக்கி முடிச்சுப்போட்டுக் கொள்ளுவார்கள். டவாலி பொருத்தப்பட்ட டிராயரை மாணவர்கள் அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் சீருடை (Uniform) கிடையாது. சில மாணவர்களின் உடைகள் தையல் பிரிந்திருக்கும். பொதுவாக மாணவ மாணவியர்களுக்கு உள்ளாடை அணியும் வழக்கம் எதுவுமில்லை. மாணவிகள் கவுன் அணிந்திருப்பார்கள்; சிலர் சீட்டித் துணியில் பூப்போட்ட பாவாடையும் சட்டையும் உடுத்தியிருப்பார்கள்.

நான் படித்த பள்ளியில் பெரிய ஆலமரமும் அதன் அடியிலுள்ள வட்ட மேடையில் பிள்ளையார் சிலை, நாகர் சிலை இருக்கும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கிராமத்துப் பெண்கள் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து, பிள்ளையாரைக் கழுவி விட்டு மாலைசார்த்திக் கும்பிடுவார்கள். மாணவர்கள் முழுப் பரீட்சையன்று முதல் நாளில் பிள்ளையாரை பக்தியுடன் கும்பிடுவார்கள். மற்ற நாட்களில் அரசமரத்தில் ஏற, பிள்ளையார் தோளின்மீது காலை வைத்து ஏற முயல்வார்கள். பிள்ளையார் என்ன நல்லதுதான் செய்வார்? ஆனால் பேய், பிசாசு, முனிகள்தான் பொல்லாதவை. ஆம்பளைப் பேய்கள் அம்மணமாகவும் பொம்பளைப் பேய்கள் வெள்ளைச் சேலை கட்டியுமிருக்கும் என்று பேய் பற்றிய விவரணையில் தொடங்கி, பேயை நேரில் பார்த்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் நிரம்ப இருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் புரியாத விஷயங்களில் ஒன்று, விழா நடத்தி உரையாற்றுவதுதான். நேருமாமா பிறந்தநாள் குழந்தைகள் நாள், விடுதலை நாள் விழா என யாராவது பேசுவது எங்களுக்குப் பெரிதும் இம்சையாக இருக்கும். சுதந்திர தின நாளில் மாணவர்கள் காகிதக் கொடியைக் குத்திக்கொண்டு, 'பாரத மாதாகி ஜே' என்று கோஷமிட்டு ஊரைச் சுற்றி ஊர்வலமாக வருவோம். மீண்டும் பள்ளிக்கூடம் வந்த மாணவர்களுக்குச் சிறிய சைஸ் ஆரஞ்சு மிட்டாய் இரு துண்டுகள் கிடைக்கும். அந்த மிட்டாய்களிலிருந்து கிளம்பும் வாசனையும் சப்பும்போது, நாக்கில் ஏற்படும் தித்திப்பும் இன்றும் மனத்தினுள் சித்திரமாகப் பதிந்துள்ளன.

பள்ளிக் கூடங்கள் என்று எளிமையாக அறியப்பட்ட கட்டடங்கள் இன்று மறைந்துவிட்டன. எந்தவிதமான அவசரமும் இல்லாமல், மெல்லக் கற்பித்த ஆசிரியர்களும், ஆறஅமரக் கற்ற மாணவர்களும் நினைவுகளாகிப் போய்விட்டனர். ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் யோகா, கணினி, அபாகஸ், சதுரங்கம், நாட்டியம், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி என்று சிறுவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமற்ற விஷயங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று சிறுவர்களின் மனப்பதற்றம் அளவுக்கதிகமாகிவிட்டது.  பிரமாண்டமான கட்டடங்களில் எல்.கே.ஜி. சேருவதற்குக்கூட முப்பதாயிரம் தரக் காத்திருப்புடனும் நேர்காணலுக்காகவும் தயாராக இருக்கும் சூழலின் வெக்கையுடன் ஒப்பிடும்போது, அறுபதுகளில் பள்ளிக் கூடங்கள் ஒருவகையில் நேசமாக இருந்தன என்றுதான் சொல்லவேண்டும். 'படி, படி, படி' என்ற நெருக்கடி எதுவுமில்லாமல், ஓடிப்பிடித்து விளையாண்டு, மல்லுக்கட்டிய மாணவர்கள், எப்பொழுதாவது படித்தார்கள் என்பதுதான் உண்மை. அன்றும் இன்றும் எனக்குப் புரியாத ஒரு விஷயம்:  'மாணவர்களுக்குக் கொண்டாட்ட ஸ்தலமாக விளங்கவேண்டிய பள்ளிக்கூடம் ஏன் அவர்களுக்கு அந்நியமாகிப் போய்விட்டது?'

click here

click here
click here