உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
சுகுமாரன்

எட்வர்ட் செய்தின் 'அறிவுஜீவியின் பிரதிநிதித்துவங்கள்' புத்தகத்தில் ஆழ்ந்திருந்தபோது செய்தின் கருத்துகளிருந்து விலகி சிந்தனை வேறு கோணத்தில் கிளை பிரிந்துகொண்டிருந்தது. கலை இலக்கியம் பற்றிய மேற்கத்திய கருத்துகளுக்கும் கீழைத் திசைக் கருத்துகளுக்கும் சில எல்லைகளில் இட்டு நிரப்பமுடியாத இடைவெளியிருப்பதாகத் தோன்றியது. மேற்கத்திய  வாழ்க்கைப் பின்னணியில் இலக்கியம் ஒரு வெளிப்பாட்டுமுறை; சமயங்களில்தொழில். கீழைத் திசையில் அதுவே வாழ்க்கை. அழகியல் மதிப்பும் பயன்பாட்டு மதிப்பும் இங்கே  ஒன்று சேர்ந்தே காணப்படுகிறது. எனவேதான் எழுத்துக்கு மாறாக இயங்கும் எழுத்தாளன் இங்கே நம்பத்தகாதவனாகத் தெரிகிறான். எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற அசாத்தியமான தர்க்கம் நியாயமானதாகக் கருதப்பட இந்த மனப்பாங்குதான் காரணம் என்று படுகிறது. சல்மான் ருஷ்டியின் அண்மைக்காலப் பேட்டியொன்றைப் படித்தபோது இந்த உதிரிச் சிந்தனைகள் மறுபடியும் மேலெழுந்தன.

'சாத்தானின் செய்யுள்கள்' எழுதி முஸ்லிம்களின் மனவுணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரைத் தொலைத்துக் கட்டும்படி இமாம் கொமேனி பத்வா பிறப்பித்தார். கிட்டத்தட்ட அதே ஆவேசத்துடன் ஒரு கற்றுக்குட்டி எழுத்தாளரைத் தொலைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தியிருக்கிறார் ருஷ்டி. அந்தக் கற்றுக்குட்டி செய்த காரியம்  புத்தகம் எழுதியதுதான். 'மாட்சிமை தங்கிய அரசியாரின் சேவையில் - உலகின் மிக அபாயகரமான பாதுகாப்புப் படையில் எனது அற்புதமான வாழ்க்கை' என்பது புத்தகத்தின் தலைப்பு. எழுதியவர் ரான் இவான்ஸ் என்ற காவல்துறை அதிகாரி.

பிரித்தனில் புகலிடம் தேடிய சல்மான் ருஷ்டியின் பாதுகாப்புக்காக பிரித்தானிய அரசு நியமித்த பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்  இவான்ஸ். அந்த அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் தன்னைப் பற்றி எழுதியிருப்பவை அவதூறுகள்; தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கமேற்படுத்தும் நோக்கத்தில் இட்டுக்கட்டியவை. தன்னுடைய ஆளுமையை அவமதிக்கும் வகையில் கற்பனையான தகவல்களால் திணிக்கப் பட்டவை. இது ருஷ்டியின் வாதம். தன்னுடைய பணிக்காலத்தில் நேர்ந்த அனுபங்களைத்தான் புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும் அப்படி எழுதுவதற்கான கருத்துச் சுதந்திரம் தனக்கு உண்டு என்பது ரான் இவான்சின் எதிர்வாதம்.

"இதில் கருத்துச் சுதந்திரத்தின் பிரச்சினையே இல்லை. இது முழுக்கத் தனிநபர் அவதூறு. இரண்டும் வேறு. என்னை அற்பன்; கஞ்சன்; தலைக்கனம் பிடித்தவன் என்றெல்லாம் ஒருவர் எழுதியிருப்பது கருத்துச் சுதந்திரம் சார்ந்ததா? இப்படிப்பட்ட எழுத்து அனுமதிக்கப்படக் கூடாது. தண்டிக்கப் படவேண்டும். அதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தப் போலீஸ்காரனைச் சும்மா விடப்போவதில்லை" என்கிறார் ருஷ்டி. தன்னைப் பற்றிய பகுதிகளை நீக்காமல் புத்தகத்தை விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று அச்சுறுத்தியுமிருக்கிறார். கொமேனிபோல போலீஸ்காரரின் தலைக்கு விலை நிர்ணயிக்கவில்லையே தவிர அவருடைய வாசகங்களில் ஒரு கொமேனியன் ஸ்பரிசம் இருக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தின் பேரால் கொலை மிரட்டலை எதிர்கொள்ள நேர்ந்தவர் சல்மான் ருஷ்டி. அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் ரான் இவான்ஸ். வருடக் கணக்காக ஓர் எழுத்தாளரைக் காவல் காத்திருக்கிறோமே என்ற முன் அனுபவத்தில் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  ருஷ்டி ஏற்படுத்தும் இலக்கியப் பரபரப்பைத் தானும் உருவாக்க முயற்சி செய்து பார்த்திருக்கிறார். ருஷ்டிக்கு இருக்கும் இலக்கிய அதிகாரம் தனக்கில்லை என்பதை இவான்ஸ் கணக்கில் கொள்ளவில்லை. அவருக்கு இருப்பது போலீஸ் அதிகாரம். 'கொமேனிக்கிருந்த அதே சகிப்பின்மைதான் ருஷ்டியிடமும் வெளிப்படுகிறது என்பது என்னை அதிர்ச்சியடையச் செய்கிறது. அறிவுஜீவிதமும் ஒருவகை அதிகாரம்தானா?' என்று கேட்கிறார் இவான்ஸ்.

*

பஷீருக்கு முதலில்  பெயர் வாங்கிக் கொடுத்தவை  கதைகள் அல்ல;  கட்டுரைகள். அதுவும் அரசியல் கட்டுரைகள். திருவிதாங்கூர் அரசையும் அரசரையும்  அப்போதைய திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரையும் விமர்சித்து எழுதிய கட்டுரைகளை தேசபக்தர்கள்  வாசித்தார்கள். உற்சாகம் கொண்டார்கள்.
 
திவானும் அவருடைய போலீசும் வாசித்தார்கள். ஆத்திரப்பட்டார்கள். யாரிந்த முகம்மது பஷீர் என்று பல்லைக் கடித்தார்கள். பஷீர்  எர்ணாகுளத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். அப்படியே தெரிந்தாலும் திருவிதாங்கூர் போலீசால் அவரைக் கைது செய்ய முடியாது. அது வேறு நாடு. கொச்சி சமஸ்தானம்.

இந்தப் பாதுகாப்பின் தைரியத்தில் திருவிதாங்கூர் அரசைக் கடுமையாக விமர்சித்து 'தர்ம ராஜ்ஜியம்' என்று கட்டுரையை எழுதி பத்திரிகையில் வெளியிட்டார். திவானுக்கும் போலீசுக்கும் வெறிபிடித்தது. புத்தகத்துக்குத் தடை விதித்தார்கள். தீவிரமாகத் தேடி முகம்மது பஷீரைக் கைது செய்தார்கள்.

"நீ தானே முகம்மது பஷீர்".

''ஆமாம்''

''நீதானே தர்மராஜ்ஜியம் என்ற தேசவிரோதக் கட்டுரையை எழுதியவன்?''

''இல்லை''

"நீதான் முகம்மது பஷீர் என்றால் கட்டுரை நீ எழுதியதுதான்''

''என் பெயர் முகம்மது பஷீர்தான். கொல்லம், பரவூர் கே. முகம்மது பஷீர். ஆனால் கட்டுரை என்னுடையதல்ல''

'' அப்படியானால் கட்டுரை எழுதிய முகம்மது பஷீர் யார்?''

மறுநாள் நாளிதழ்களில் ஓர் அறிக்கை வெளியானது. 'தர்மராஜ்ஜியம்' என்ற சிலாக்கியமான புஸ்தகத்தை எழுதியவன் நானாகிறேன். என் பெயர் முகம்மது பஷீர். வைக்கம் முகம்மது பஷீர்.

தலையோலப்பறம்பு முகம்மது பஷீர் அன்று முதல் வைக்கம் முகம்மது பஷீர் ஆனார்.

*

பின்வரும் சூஃபி கதைக்கும் மேலே சொன்ன தகவல்களுக்கும் தொடர்பில்லை. அப்படியிருப்பதாகக் கருதினால் மெய்யான  பின் நவீனத்துவர் நீங்களே.

திருட வந்து மாட்டிக்கொண்ட திருடனை கிராமவாசிகள் மரத்தில் கட்டி வைத்தார்கள். அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று விவாதித்துத் தீர்மானமும் செய்தார்கள். பகலில் அன்றாட வேலைகளை முடிப்பது. மாலை திரும்பி வந்து திருடனைக் கடலில் வீசுவது  என்று பேசிப் பிரிந்தார்கள். அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் மந்தபுத்திக்காரனான ஓர் ஆட்டிடையன் வந்து சேர்ந்தான். மரத்தில் கட்டப்பட்டிருந்தவனைப் பார்த்துக் காரணம் கேட்டான். '' அற்பமான காரணம்தான்.  அவர்கள் பணத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அதனால் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்'' என்றான் திருடன். ''அவர்கள் எதற்காக உங்களுக்குப் பணம் கொடுக்க வந்தார்கள்? நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?'' இடையன் விசாரித்தான். '' நான் ஞானி. அவர்கள் நாத்திகர்கள். என்னை அவர்கள் ஊழல்பேர்வழியாக்க முயற்சி செய்தார்கள்'' என்றான் திருடன். '' கொடுமையே, ஒன்று செய்யுங்கள். நான் உங்கள் இடத்தில் நின்று கொள்கிறேன். நீங்கள் போய் நாத்திகர்களையெல்லாம் கண்டு பிடியுங்கள்'' என்றான் இடையன். இருவரும் இடம் மாறினார்கள். பொழுது இருட்டிய பிறகு கிராமவாசிகள் திரும்பி  வந்தார்கள். மரத்தில் கட்டப்பட்டிருந்தவனைக் கோணிப்பையில் போட்டு கடலில் வீசினார்கள். இருட்டில் அவர்களுக்கு ஆள் அடையாளம் தெரியவில்லை. மறு நாள் விடியற்காலையில் ஆட்டு மந்தையுடன் கிராமத்துக்குள் வந்து கொண்டிருந்த திருடனைப் பார்த்ததும் அவர்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது. ''உன்னைக் கடலில்தானே வீசினோம். இப்போது நீ எங்கேயிருந்து வருகிறாய்? '' என்று வியப்புடன் கேட்டார்கள். "கடலில் கருணைமிகுந்த ஜின்னுகள் இருக்கின்றன. கடலில் குதித்து மூழ்கியவர்களுக்கு அந்த தேவதைகள் பரிசளிக்கின்றன. அதுதான் இது'' என்றான் திருடன். அவன் சொல்லி முடிப்பதற்குள் எல்லாரும் கடற்கரைக்கு ஓடினார்கள். கடலில் தாவிக் குதித்தார்கள். அப்படியாக அந்தக் கிராமத்துக்கு அதிபனானான் திருடன்.

*

 

click here

click here
click here