உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
மாயா

ஊழிப் பெரு வெள்ளம் எப்படி இருக்கும் என்று காட்டுவது போல் பீகாரைத் தாக்கியிருக்கிறது இமய மலையிலிருந்து கிளம்பிய ஒரு நதியின் பிரவாகம். வழக்கமாக வருடா வருடம் தனது ஆக்ரோஷமான பருவக் கால ஓட்டத்தால் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் கோஸி நதி இந்த வருடம் ஏற்படுத்திய அழிவை, துயரம் என்று சாதாரணமாக வகைப்படுத்த முடியாது. இமய மலையிலிருந்து வட இந்தியாவின் சமவெளிக்குக் கிழக்கு பீகார் வழியாகச் செல்லும் தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி சற்றும் சம்பந்தமில்லாத மேற்கு பீகாரில் புகுந்து, வீடுகள், வயல்கள் வழியாக தனக்குப் புதிய பாதை அமைத்துக்கொண்டு கடலைத் தேடி ஓடுகிறது கோஸி. அதன் பாதையிலிருந்து பெரும்பாலான மனித நாகரிகத்தின் தடங்கள் துடைத்தகற்றப்பட்டுவிட்டன.

இது என் வீடு, உன் வீடு என்ற அத்தனை அடையாளங்களும் ஆவணங்களும் பல இடங்களில் அழிக்கப்பட்டுவிட்டதால் நோவாவின் காலத்தில் எஞ்சியவர்களைப் போல அந்தப் பகுதி மக்களின் வாழ்வு மனித நாகரிகத்தின் துவக்க காலத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இயற்கை சார்ந்த அத்தனை விஷயங்கள் குறித்த அலட்சியம், அக்கறையின்மையைக் கொண்ட மனிதனுக்கு இயற்கை தனது சக்தியை உணர்த்தும் மற்றொரு தருணம் போல் இந்தச் சம்பவம் தெரிகிறது. தனது பாதையை மாற்றிக்கொள்வதற்குப் பேர் போன இந்த நதி, 200 வருடங்களுக்கு முன்பு இன்று பிரவாகமெடுத்த பகுதியின் வழியாக ஓடிக்கொண்டிருந்தது. இதன் பாதையால் இவ்வளவு பேரழிவுகள் ஏற்படுவதையடுத்து 1950களில் இமய மலையில் இதன் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் ஆற்றின் திசையைத் தீர்மானிக்கும் பிரமாண்டமான தடுப்புச் சுவர்கள் எழுப்பும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ராட்சத பாறைகளை நதி உடைப்பெடுக்கும் பகுதிகளில் போட்டு நதி ஊருக்குள் புகுந்து அழிவு ஏற்படுத்தாமலிருக்க இயற்கைக்கு அணை போடப்பட்டது. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த அணை மீறப்படும் என்ற உண்மை அந்த அணையை ஏற்படுத்திய மனித மூளைக்கு எட்டாமலில்லை. அதனால் அந்நதியின் ஓட்டத்தை ஆராயவும் கரை உடையும் வாய்ப்புகள் உருவாகும் போது அதைத் தடுக்கவும் கோஸித் திட்டம் என்ற பெயரில் தனி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற வாக்கிற்கேற்ப அணையை உருவாக்கிய அதே மனிதர்களின் அலட்சியத்தால் கோஸியின் மனித அணைகளும் இயற்கையான கரைகளும் இந்த முறை உடைப்பெடுத்து ஊருக்குள் ஊழித் தாண்டவம் ஆடி வருகிறது கோஸி நதி.

நமது அரசு நிர்வாகத்தின் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் நோவாவின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால் பீகாரின் ஐந்து மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் முழுமையான உதவி அவர்களை எட்டத் தொடங்கியது. பைபிள் கூறும் ஊழிப் பெரு வெள்ளம் போலவே காட்சியளிக்கும் பீகாரின் ஐந்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒரு படகுதான். அதுகூட மக்களுக்குப் போதுமான அளவில் இது வரை கிடைக்கவில்லை. அரசின் உதவியும் இல்லாத நிலையில் இந்த ஊழித் தாண்டவம் மனிதனின் பலவித முகங்களை அம்பலமாக்குகிறது. இரவில் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்த போது சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்த நதி வெள்ளம் ஏற்படுத்திய பீதியில் பிள்ளை குட்டிகளுக்கு என்னவானாலும் பரவாயில்லை என்று தன் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ளத் தப்பிப் பிழைத்து ஓடிய அப்பா. ஒரு குழந்தையை முதுகிலும் மற்றொரு குழந்தையைத் தலையிலும் தூக்கிக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்லும் ஒரு தந்தை. கால் நடைகளை விட்டுச் செல்ல மனமின்றி வெள்ளத்திற்கும் அதனால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களுக்கும் நடுவில் வசிக்கும் சில கிராமத்தவர்கள் என இந்த மாபெரும் துயரம் பல்வேறு மனித உணர்வுகளையும் வெளிக்கொண்டு வருகிறது.

கத்ரீனா புயல் தாக்கிய போது பட்டினியில் தவித்த மக்கள் வால்மார்ட்டின் கடைகளில் புகுந்து அத்தியாவசியப் பொருட்களை எடுப்பதைத் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தடுத்தார்களாம். இந்த தேசம் உனக்கு உணவு தரும் நிலையில் இல்லை. ஆனாலும்கூட நீ பட்டினியில் செத்தாலும் சாகலாமே தவிர சட்டம் ஒழுங்கை மீறக்கூடாது. ஆனால் இந்தியக் காவல் துறையினர் யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் போல் தெரிகிறது. பீகாரில் பெயரளவுக்கு மட்டுமே அரசு நிவாரணம் மக்களைச் சென்றடையும் நிலையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக 'கொள்ளையடிக்கப்படுவதை' காவல் துறையினர் கருணை உள்ளத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.

இது ஒரு மாபெரும் துயரச் சம்பவமென்றாலும் இதில் தெரியும் இயற்கையின் பிரமாண்டம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பிரதான சாலை செப்பனிடப்படுவதால் நமது வீடு அமைந்திருக்கும் வாகன இரைச்சலற்ற சிறிய சந்தில் பேருந்து ஓடும் காட்சியே நமக்கு ஒரு மாபெரும் அற்புதம் போல் காட்சியளிக்கும். வேளாண்மை செய்யும் வறண்ட பாத்திகளில் வாய்க்கால் வழியாக பூமி குடிக்கக் குடிக்க நீர் பாய்ந்தோடுவதைப் பார்க்க அழகாக இருக்கும். அதே போல முற்றிலும் புதிய பாதையில் ஒரு நதி ஓடியது எப்படிப்பட்ட காட்சியாக இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. தனது வழக்கமான பாதையில் ஓடும் நதி ஆற்றுப் பாலத்தைத் தொட்டுக்கொண்டு ஓடுவதே மாபெரும் நிகழ்வாகத் தெரிந்தவர்களுக்கு நதி ஒரு முற்றிலும் புதிய பாதையில் ஓடுவது என்பது நிச்சயம் ஒரு கண் கொள்ளாக் காட்சி. அத்தகைய அரிய நிகழ்வு நடக்கவிருக்கிறது என்பதை இரு வாரங்களுக்கு முன்பே அறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மனித நிர்வாகத்தின் அலட்சியம்தான் இந்த மாபெரும் துயரம். அதனால் நாம் யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றால் அது அந்த அலட்சியம் காட்டிய மனிதர்களைத்தான், நதியை அல்ல. நதி ஓடிக்கொண்டே இருக்கிறது, தனது    வேகமும் தான் சார்ந்த பூகோளமும் விதித்த பாதைகளில். அதற்கு பீகாரின் படிப்பறிவற்ற, ஏழை கிராமவாசிகளும் பொருட்டல்ல, உயர் கல்வி பெற்ற பொறியாளர்கள் அமைத்த அணைகளும் பொருட்டல்ல. தனக்குப் புதிய பாதை அமைவதற்கான அத்தனை சூழல்களும் பொருந்தி வந்த போது இயற்கையின் பிரவாகம் அணைகளையும் அழித்தது; அப்பாவிகளையும் அழித்தது.

click here

click here
click here