உயிர்மை - January
 
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
- மனுஷ்ய புத்திரன்
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
- ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
- லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
- மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
- யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
- அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
- ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
- அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
- இளைய அப்துல்லாஹ்
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
- பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
- ஷாஜி
ஊடலில்....
- றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
- ஆர். கார்த்திகா
இரவு
- யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
- த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
- ரவிஉதயன்
என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
- சமயவேல்
கடிதங்கள்
- கடிதங்கள்
click here
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
எஸ்.ராமகிருஷ்ணன்

நிஷம் இசக்கியேல், கெய்கி தாருவாலா என இங்கிலத்தில் எழுதும் இந்திய கவிஞர்களின் கவிதைகள் ஏன் கல்லூரிப் பாடமாக இருந்தது. அதில் தான் ஏ.கே.ராமானுஜத்தின் பெயரை முதன்முறையாகக்  கேள்விப்பட்டேன். அவரது கவிதை மதுரையின் வைகை ஆற்றைப்பற்றியது. வைகையைப் பற்றிய மதுரைகாஞ்சியின் பாடல்களை வாசித்திருந்த எனக்கு ராமானுஜம் காட்டிய ஆற்றின் படிமம் முற்றிலும் புதிய அனுபவம் தருவதாக இருந்தது.

நான் மதுரையின் வீதிவீதியாகச் சுற்றியலைந்து திரிந்த நாட்கள் அவை என்பதால் அந்தக் கவிதை தரும் அனுபவத்தின் பெரும்பகுதி நான் கண்ணால் கண்டதாகவே இருந்தது. அது ராமானுஜத்தின் மீதான என் விருப்பத்தினை அதிகப்படுத்தியது. யார் ஏ.கே.ராமானுஜன் அவர் எப்படி வைகை பற்றி எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர்  மதுரைக்காரர்  என்று  விசாரிக்க  ஆரம்பித்தேன்.

ஆங்கிலப் பேராசிரியர்களில் பலருக்கும் இந்திய ஆங்கில கவிகளைப்  பிடிக்காது.  சாசர்,  ஸ்பென்சர், ஸ்காட், டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர், விட்மன் என்று அவரவருக்கு ஒரு வட்டம் உண்டு. ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் சமகால நவீனப் படைப்புகளைப் பற்றிய அறிமுகங்கள் மிகக் குறைவே.

நான் ஆங்கில இலக்கியம் கற்றபோது சாமுவேல் பெக்கட்டின் நாடகம் பாடமாக இருந்தது. அதை வகுப்பு எடுப்பதற்கு எந்தப் பேராசிரியருக்கும் விருப்பமிருக்காது. ஒரேயொரு கட்டுரையைத் தயாரித்து பல வருடமாக அதைப்பிரதி எடுக்கச் சொல்லித் தந்துவிட்டு கடந்து போய் விடுவார்கள். நானோ பெக்கட்டின் நாவல்களைப் படித்திருந்தேன். பெக் கட்டை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விடுவதை மனம் ஒப்பாமல் சண்டை போட்டிருக்கிறேன்.

நவீனத் தமிழ் இலக்கியம் வகுப்பறைகளுக்கு அறிமுகமானதில் பாதியளவுகூட நவீன ஆங்கில இலக்கியம் வகுப்பறைகளுக்கு இன்னும் வரவில்லை. ஆகவே ராமானுஜத்தைப் பற்றிய நாலு வரிக் குறிப்புகளைத் தவிர வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறிப்பில் ராமானுஜம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் என்ற விபரம் மட்டுமே பேராசிரியர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

நான் நூலகத்தில் ராமானுஜத்தின் புத்தகங்களைத் தேடியபோது The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology, Speaking of Siva, Hymns for the Drowning,  A Flowering Tree and Other Oral Tales from India , Poems of Love and War.   போன்ற தமிழ் செவ்வியல் இலக்கியம் மற்றும் நாட்டார்கதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் Relations என்ற அவரது கவிதைத் தொகுப்பையும்  எடுத்து வந்து வாசிக்கத் துவங்கினேன்.
தனித்துவமிக்க கவிதைகளும் கவனப்படுத்தும் விஷயமும் ராமானுஜன் மிக முக்கியமான சமகாலக் கவிஞர் என்ற உள்ளுணர்வை உருவாக்கியது. இன்னொரு பக்கம் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் வாசித்த போது அவர்  மொழிபெயர்த்துள்ள விதம் அந்தக் கவிதைகளின் மூலத்திற்கு  மிக  நெருக்கமாக இருந்தன.

அன்றிலிருந்து ராமானுஜன் எழுதியதைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அவரைப்பற்றி ஆங்கிலப் பேராசிரியர்கள் அறிந்திராத பல தகவல்களை நவீனத் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியர்கள் அறிந்திருந்தார்கள். ராமானுஜன் சில வருசம் மதுரை தியாகராஜா கல்லூரியில் வேலை செய்திருக்கிறார். அவரது குடும்பம் கர்நாடகத்தில் வசிக்கின்ற தமிழ்க் குடும்பம் என்றதோடு ராமானுஜன் ஆண்டு தோறும் இந்தியாவிற்கு வருகை தருகிறார். நண்பர்களைச் சந்திக்கிறார் என்ற விபரங்களையும் சொன்னார்கள்.

எனக்கு அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால் அவரை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. ராமானுஜன் தொகுத்த நாட்டுப்புறக் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியான காலத்தில் அதைப் பாடப்புத்தகம் போல ஒவ்வொரு நாளும் படித்தேன். கதை சொல்லும் முறையைப் பற்றிய அவரது அவதானிப்புகளும் ஆர்வமும் என் ஊரைச்சுற்றிய கதைகளை நோக்கிய தேடுதலுக்குப் பெரிய உந்துதலாக இருந்தது. தமிழுக்கு என்றே தனித்துவமாக உள்ள கதை சொல்லும் முறைகளை நோக்கி என் கவனம் குவியத் துவங்கியது.

எண்ணிக்கையற்ற நாட்டார் கதைகளை வாசித்தும் தேடிக் கண்டு பிடித்து அறிந்து கொள்வதுமாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். ராமானுஜத்தைத் தொடர்ந்து வாசித்த காரணம் எனக்குள் தமிழ்க்கதைகளில் இடம்பெறும் மாயப்பொருட்கள், கதாபாத்திரங்கள். விலங்குகள். தாவரங்கள், நகரங்கள், நிலக்காட்சிகள், நம்பிக்கைகள் பற்றிய பெரிய கதைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பை உருவாக்கியது. அதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அந்தத் திட்டம் தனிநபர் சார்ந்த செயல்பாடு இல்லை என்று உணர்ந்து அதைக் கைவிட்டேன். அந்த நாட்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வெளியாகிக் கொண்டிருந்தது.

அப்போது ஒருநாள் என் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. காலட்படை பற்றிய குற்றப்பத்திரம் என்ற என்னுடைய சிறுகதை ஒன்றை தான் வாசித்திருப்பதாகவும் அந்தக் கதை தனக்குப் பிடித்துள்ளதால் அதைத் தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்புவதாக சொல்லி அதற்கான அனுமதியைக் கேட்டிருந்தார்.  என்னால்  நம்பவே  முடியவில்லை.

அந்தக் கடிதத்தை எழுதியவர் ஏ.கே.ராமானுஜன். நான் யாரைச் சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தேனோ அவர் என்னுடைய சிறுகதை ஒன்றை வாசித்திருக்கிறார். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்புகிறார் என்பது எனக்குப் பெருமையாக இருந்தது. ராமானுஜத்திற்கு என் கதை எப்படிக் கிடைத்தது. அவர் கதையைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

அந்தக் கடிதம் மைசூரில் உள்ள ஒரு முகவரியில் இருந்து வந்திருந்தது. பதில் எழுதும் நேரத்திற்குள் மைசூர் போய்வந்துவிடலாமே என்று தோன்றி அன்றிரவே ஏ.கே. ராமானுஜன் எழுதிய கடிதத்தைப் பையில் வைத்துக் கொண்டு இரவோடு மதுரையில் இருந்து கர்நாடக பேருந்து ஒன்றில் ஏறி மைசூர் போய் இறங்கினேன். நல்ல குளிர்காலமது. அதைப் பற்றிய பிரக்ஞையே எனக்கிருக்கவில்லை. ஒரு மப்ளர் கூட என்னிடமில்லை. மைசூரில் அதிகாலையில் இறங்கிய போது குளிர் தாங்க முடியவில்லை. நானோ குளிராடை அணிந்திருக்கவில்லை.

பேருந்து நிலையத்தை விட்டு இறங்கி நடக்கும் போது காதின் மடல்கள் நடுங்குகின்றன. நுரையீரலில் குளிர் நிரம்புகிறது. கைகள் என்னை அறியாமல் முகத்தைத் தடவியபடியே வருகின்றன. எங்காவது ஒரு தலைக்குல்லா மட்டுமாவது கிடைக்காதா என்று சாலையோரம் பார்த்தபடியே பெருமூச்சிட்டபடியே நடந்து கொண்டிருந்தேன். பனியில் நகரம் நனைந்து கிடந்தது. பெரிய சாலைகளில் அதிக வாகன  நெருக்கடியில்லை. சிலைகள்கூட குளிரில் ஒடுங்கிப்போயிருந்தன. யானைகளும் குதிரைகளும் பரிவாரமாக சென்ற ராஜபாட்டைகள் கால மாற்றத்தில் நவீனச் சாலைகளாகி அதிகாலைப் பனியில் வாகன நெருக்கடியின்றிக் காலியாக நீண்டு கிடந்தன.

அவரது வீட்டின் முகவரியைத் தேடிப்போன போது ஆரஞ்சு நிற ஸ்வெட்டர் அணிந்திருந்த நடுத்தர வயது நபர், ராமானுஜன் பெங்களூர் சென்றிருப்பதாகவும் வருவதற்கு ஒரு வாரகாலம் ஆகும் என்றார். இவ்வளவு தூரம் தேடி வந்தும் அவரைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் மைசூரின் அரண்மனைப் பூங்காவில் பகல் முழுவதும் அந்த கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த  தபால்  நிலையம்  ஒன்றில்  போஸ்ட் கார்ட் வாங்கி அவரைச் சந்திக்க வந்த  விபரத்தை  எழுதி நான் சென்று பார்த்த வீட்டு முகவரிக்கே அனுப்பி வைத்தேன். அது அவர் கைக்குக் கிடைத்ததா அவர் பார்த்தாரா என்று  அதன் பிறகு தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவரது கடிதம் தந்த உத்வேகம் என் வாசிப்பையும் எழுத்தையும் தீவிரப்படுத்தியது. சங்கக் கவிதைகளைத் தமிழில் படிப்பது தரும் அனுபவத்திலிருந்து ஆங்கிலத்தில் படிக்கும் போது ஏற்படும் அனுபவம் முற்றிலும் புதியதாக இருந்தது. முக்கியமாக நாம் நிலப்பகுதி சார்ந்த கலாச்சாரக் கூறுகளை முதன்மைபடுத்தியே அந்தக் கவிதைகளை வாசித்திருக்கிறோம். ஆங்கிலத்தில் வாசிக்கின்ற ஒருவர் அதன் கலாச்சாரப் பதிவுகளை விட பிரதான உணர்ச்சிகளை மட்டுமே முன்வைத்து வாசிக்கிறார். ஆகவே அவரது அனுபவம் புதியதாக அமைந்திருந்தது.

இன்னொரு பக்கம் கிரேக்கக் கவிதைகளோடு ஒப்பிடும் போது தமிழ்க் கவிதையின் தரமும் பாடு பொருள்களும் கவித்துவ நுட்பமும் பன்மடங்கு உயர்வாக இருந்தது. கிரேக்கக் கவிதைகளின் அடிநாதமாக சூப்பர்நேச்சரல் எனப்படும் மீமாயக்கூறுகள் அமைந்துள்ளன. ஆனால் சங்கக் கவிதைகளோ மீமாயத்தை அதிகம் முன்வைக்கவில்லை. அத்தோடு அன்றாட நிகழ்வுகளையே மாயத்தன்மை கொண்டதாக உருவாக்கிக் காட்டுகிறது. குறிப்பாக தமிழ்க்கவிதையின் குரல் அதுவரை நான் வாசித்திருந்த ஆங்கில கவிதைகளில் இல்லாத நெருக்கத்தைக் கொண்டிருந்தது. அதற்காக ராமானுஜத்தின் மொழிபெயர்ப்புகளையும் தமிழ்ச் சங்கக் கவிதைகளையும் அருகருகே வைத்துப் பார்ப்பேன்.

இந்தியக்கதை மரபு குறித்து ராமானுஜம் அளவிற்கு நுட்பமாக அறிந்தவர்கள் இல்லை. கதைகேட்பது அவரது பால்யநாட்களில் குடும்பத்திலிருந்து துவங்கியிருந்தது. அத்திபட்டு கிருஷ்ணசாமி ராமானுஜன் எனப்படும் ஏ.கே. ராமானுஜத்தின் குடும்பம் மைசூரில் வசித்த தமிழ்க் குடும்பம். அவரது அப்பா அத்திபட்டு  அரசூரி  கிருஷ்ணசாமி  மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். வானவியலில் ஈடுபாடு கொண்டவர். தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், ஆங்கிலம் நான்கிலும் புலமை பெற்றவர். அவர்களது வீடு நிறைய புத்தகங்கள் இருந்தன.

வீட்டின் சமையல் அறையில் தமிழும் வரவேற்பு அறையில் கன்னடமும் பூஜை அறையில் சமஸ்கிருதமும் சிந்தனையில்ல ஆங்கிலமும் இருந்தன என்று ராமானுஜமே ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். வைதீகமான பிராமணக் குடும்பம் என்ற போதும் அவர் வீட்டில் மாறி வரும் கலாச்சாரச் சூழல்கள் குறித்தும் புதிய சமூக மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு இருந்தது.

ராமானுஜத்தின் அம்மா தமிழிலும்  கன்னடத்திலும்  நிறைய  புத்தகங்களை வாசித்திருக்கிறார். அதைக் கதையாக தன் பிள்ளைகளுக்கு அவர் சொல்வது வழக்கம். இருபத்தைந்து வயதில் ராமானுஜத்தின் அப்பா இறந்து போகவே குடும்பச்சுமைகளை ஏற்று வேலைக்குப் போக வேண்டிய நிலை உண்டானது.

மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த ராமானுஜன் கேரளாவில் ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சென்றார். அதன் பிறகு கர்நாடகாவில் உள்ள தார்வாரில் சில ஆண்டுகள் வேலை செய்தார். அங்கிருந்து பூனா சென்று டெக்கான் கல்லூரியில் ராக்பெல்லர் ஆய்வுத் திட்டத்தின் உதவியோடு ஆய்வுகளை மேற்கொண்டார். 1958இல் அமெரிக்கா சென்ற ராமானுஜன் அங்கே கன்னடத்துறையிலும், தென்கிழக்கு ஆசியத்துறையிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1967இல் அவரது சங்கக் கவிதைகளின்  ஆங்கில மொழியாக்கம்  வெளியானது. அது தமிழ்க் கவிதைகள் குறித்து  அது வரையிருந்த மேலைப் பார்வையை முற்றிலுமாக மாற்றியமைத்தது. தமிழ்க் கவிதையின் தொன்மை குறித்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அப்போதுதான் கவனம் கொள்ளத் துவங்கின.  சங்கத்தமிழ்க் கவிதைகள் மட்டுமின்றி கன்னட பக்திப் பாடல்களையும், ஆழ்வார் பாசுரங்களையும், யு.ஆர். அனந்த மூர்த்தியின் கன்னட நாவலான சமஸ்காராவையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ராமானுஜத்தின் முன்முயற்சிகள் காரணமாகவே தமிழின் செவ்வியல் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் பெரிதாகக் கவனம் கொள்ளப்பட்டன.

ராமாயணப் பாடபேதங்கள் கதைமரபுகள் குறித்தும், நாட்டார் கதைகளின் வகைப்படுத்துதல் குறித்தும் வெளியான ராமானுஜத்தின் கட்டுரைகளைத் தீவிரமாக வாசித்து உள்வாங்கியிருந்தேன்.

அதில் அஸ்ஸாமில் உள்ள ராமாயணத்தில் சீதையும் சூர்ப்பநகையும் தேர்ந்த நெசவாளிகள். அவர்கள் மிக நுட்பமாக நெசவு நெய்யக்கூடியவர்கள் என்ற தகவல் இருப்பதைச் சுட்டிக்காட்டி இன்றும் அஸ்ஸாமியப் பெண்களுக்கு நெசவு நெய்யும் நுட்பம் இருப்பதைச் சான்றாகக் காட்டியதும் தமிழகத்தில் காணப்படும் ராமாயண நாட்டார்கதைகளில் தசரதன் மனைவியர் மசக்கையாக இருந்த நாட்களில் முறுக்கு  இட்லி வடை தோசை சாப்பிட ஏங்கினார்கள் என்றும் அதை அரசன்  தீர்த்து  வைத்ததாகவும்  வரும்  குறிப்புகளை  வேடிக்கையாக அடையாளம் காட்டியதும் முக்கியமான பதிவுகளாகும்

ஏ.கே. ராமானுஜத்தின் அன்னய்யாவின் மானுடவியல் என்றொரு சிறுகதை மிக முக்கியமானது. இந்தக்கதை அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வுகளைக் கேலி செய்யக்கூடியது. மைசூரில் உள்ள பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அன்னய்யா குடும்ப ஒழுங்குகள் எதற்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இருந்து வருபவன். அவனது ஒரே ஆசை அமெரிக்கா போக வேண்டும் என்பதே. ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு  செய்வதற்காக அமெரிக்கா போக நினைக்கிறான்.  இன்னொரு  பக்கம் அமெரிக்கா போய்வந்த பிறகு தான் விவேகானந்தர்  உலகம்  அறியும்  மனிதர் ஆனார். காந்தி லண்டன் போனது தான் அவரது வாழ்வின் முக்கிய திருப்பு முனை.  ஆகவே  தானும் இந்தியாவை விட்டு  வெளியே போய் தனது அடையாளத்தை உருவாக்க ஆசைப்படுகிறான். அப்படியே போராடி அமெரிக்கா போய் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுமாணவராகச் சேர்கிறான்.

அமெரிக்கா போகும் வரை ஆங்கில மோகம் கொண்டிருந்த அவன் அங்கே சென்றதும் சமஸ்கிருத மோகம் கொள்ளத் துவங்குகிறான். இங்கிருந்த வரை அமெரிக்கா பற்றியே வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவன் அங்கே போனதும் இந்தியாவை பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அப்பா சொல்லி கீதை படிக்க மறுத்த அவன் சகமாணவிக்குப் புரிய வைக்க கீதையை ஆழ்ந்து படிக்கிறான். மானுடவியல் துறை ஆய்வு மாணவராக தீவிரமாகப் படிக்கிறான். அப்போது ஒரு நாள் இந்தியக் குடும்பங்களின் சடங்குகள் பற்றிய ஒரு ஆய்வு நூலைப் படிக்கிறான். அதில் பிறப்பு, இறப்பு, வளைகாப்பு, திருமண, சடங்குகள் குறித்து விரிவாகப் பதிவுகள் உள்ளன. ஆச்சரியத்துடன் அதை வாசிக்கிறான். அதில் ஒரு புகைப்படம் இருப்பதைக் காண்கிறான்.

அவனுக்கு ஆச்சரியமாக உள்ளது. அது அவனது மாமாவின் புகைப்படம். அவசரமாக அடிக்குறிப்பைப் படித்துப் பார்த்தால் அவன் அக்ரஹாரத்தைச் சேர்ந்த மாமா ஒருவர் உதவி செய்த குறிப்பு இருக்கிறது. அடுத்த சில அத்யாயங்களை வாசித்துப் பார்த்தால் அவன் அப்பா இறந்து போன போது நடந்த சடங்குகள் புகைப்படங்களுடன் காணப்படுகின்றன. தானே அப்பா செத்ததிற்கு ஊருக்குப் போகவில்லை ஆனால் எங்கோ ஒரு ஆய்வாளன் அதைப் படமாக்கித் தன் புத்தகத்தில் போட்டிருக்கிறானே என்ற ஆதங்கத்துடன், விதவை என்ற பிரிவைத் தேடிப் பார்க்க அங்கே அவனது அம்மாவின் விதவைக் கோலம் புகைப்படமாக உள்ளது.

தனது குடும்பம் தான் மானுடவியல் ஆய்வின் காட்சிப்பொருளாக மாறியிருக்கிறது என்பதை அன்னய்யா உணர்வதோடு கதை முடிகிறது. அங்கதமும் ஆழமான விமர்சனமும் கொண்ட கதையது. ஏன் ராமானுஜம் அதிகம் சிறுகதைகள் எழுதமால் போனார் என்ற ஏக்கம் என்னைப் போன்றவர்களுக்கு இன்றுமிருக்கிறது.

அதன் ஒரு வருசத்தின் பிறகு எனது நண்பரும் ஆங்கிலப்  பத்திரிகையாளருமான அனந்த சங்கரைப் பார்ப்பதற்காக பெங்களூர் சென்றிருந்த போது அவர் வீட்டில் இல்லை. அவரது துணைவியார் அனந்த் நண்பர் வீட்டில் நடைபெறும் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கே உங்களை இறக்கிவிடட்டுமா என்று கேட்டார். சரி என்றதும் தன்னுடைய காரில் பெங்களூரின் ரேஸ் கோர்ஸ் சாலை அருகில் உள்ள ஒரு வீட்டின் முன்னால் இறக்கிவிட்டார்.

அழைப்பு மணியை அழுத்தி உள்ளே போனபோது உள்ளே ஆறேழு பேர் இருந்தார்கள். அனந்தசங்கர் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு சோபாவில் சாய்ந்த படியே கையில் ஒரு புத்தகத்தைப்பாதி பிரித்தபடியே விஸ்கி அருந்திக் கொண்ருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு என்னிடம் இவர்தான் ஏ.கே.ராமானுஜன் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று நண்பர் கேட்டார்.

என்னால் நம்பவே முடியவில்லை. நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த ராமானுஜன் இவர்தானா என்ற வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றத்திலே அவர்  அமெரிக்காவிலிருந்து வந்திருப்பவர் என்பது தெரிந்தது. அவரது பேசும் முறை மற்றும் ஆங்கில உச்சரிப்பில் அதிகப்பட்ட அமெரிக்கத்தன்மையிருந்தது.  அறுபது வயதை ஒத்த தோற்றம். தடித்த புருவங்கள், மீசையில்லாத முகம், ஆடைகளில் அதிக கவனம் கொண்டவரில்லை என்பது உடையில் தெரிந்தது. அவர் விஸ்கி கிளாஸைக் கையில் வைத்தபடியே தமிழா என்று கேட்டார். ஆமாம் என்றேன். எந்த ஊர் என்றபடியே அருகில் வந்து உட்காரச் சொன்னார். நான் மதுரை என்றதும் அவர் முகத்தில் சிறிய வெளிச்சம் தோன்றி மறைந்தது. அவர் என் கதையொன்றை வாசித்திருப்பதைப் பற்றி நினைவுபடுத்தினேன்.

ராமானுஜன் என்ன கதை என்று சில நிமிசம் யோசித்துக் கொண்டிருந்தார். கதையை நினைவுபடுத்திச் சொன்னதும், ஆங்கிலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவரலாம் என்று தனக்கு ஒரு யோசனை உண்டானது என்றும் அதற்காக நண்பர்களிடம் சிபாரிசு செய்யச் சொன்ன போது உங்கள் கதை என் கண்ணில் பட்டது. அந்தக் கதையில் சொல் முறை எனக்குப் பிடித்திருந்தது. தமிழில் நிறைய புதிய சிறுகதையாசிரியர்கள் வந்திருக்கிறார்கள் என்று பாராட்டிய படியே,  தொடர்ந்த பல்கலைக்கழக வேலைகள், ஆய்வுகள். அந்தத் தொகை நூலைத் தொடர முடியவில்லை என்றார். 

நான் ராமானுஜத்திடம் அவர் தொகுத்த நாட்டார் கதைகளைப் பற்றி வியந்து சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் சிரித்தபடியே ஆயிரத்தொரு இரவு கதைகளை விடவும் நம்மிடமே அதிக கதைகள் உள்ளன. அவை தொகுக்கப்பட்டால் மிகப் பெரிய கதைத்தொகுதியாக இருக்கக் கூடும் என்றபடியே நீங்கள் அப்படி ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் ஒரு ஊர்ல ஒரு நரி அத்தோடு கதை சரி என்று தமிழில் ஒரு கதையிருக்கிறது என்று சொன்னேன்.

புன்சிரிப்புடன் அதைத் தானும் கேட்டிருப்பதாகச் சொல்லி, இப்படி வாசகனை கதை சொல்லத் தூண்டும் கதைகள் பிறமரபுகளில் அதிகமில்லை என்று வியந்தபடியே தான் மதுரையில் ஒரு முறை மல்லிகைப் பெண் என்ற கதையைக் கேட்டதாகவும் அந்தக் கதையில் ஒரு பெண் சிரிக்கும் போது மல்லிக்கைப் பூ வாசனை அடிக்கும் என்று சொன்னார். அத்தோடு அதே கதை வேறு வடிவத்தில் மல்லிகைப் பூ வாசனையுள்ள சிரிக்கும் இளவரசி பற்றி கர்நாடகாவில் கதையிருக்கிறது என்று அதன் மாற்றுவடிவத்தைச் சொன்னார்.

அவரிடம் சொல்லித் தீராத கதைகள் மனதில் இருந்ததை அந்தச் சந்திப்பு உறுதி செய்தது. தன்னுடைய வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண் சொல்லியகதைகளுக்கும். அம்மா சொன்ன கதைகளுக்கும் அடிப்படையிலே வேறுபாடு இருந்ததை  உணர முடிவதாகக் கூறினார். ஒரே கதையை சில நேரம் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். வேலைக்காரப் பெண் சொல்லிய கதைதான் இன்றும் நினைவில் இருக்கிறது. உலகிலே சிறந்த கதை சொல்லிகள் பெண்களே என்றார்.

சில நிமிசங்களில் பேச்சு இலக்கியத்திலிருந்து திரும்பி தினசரி நாளிதழ்களில் வரும் கொலைச்  செய்திகளைப் பற்றியதாக மாறியது. தனக்கு அது போன்ற செய்திகளில் ஆர்வம் உண்டு. அந்தச் செய்திகளும்கூட கதை சொல்லும் முறைகளே.

ஒரு செய்தியைப் படித்துப் பாருங்கள் என்று அங்கிருந்த கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியொன்றை வாசித்துக் காட்டினார். அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். பேச்சு அதிலிருந்து மாறி அக்கமகாதேவியின் கவிதைகள் பற்றியதாக மாறியது. இரண்டு மணிநேரம் அந்த அறையில் அவர் பேசுவதும் குடிப்பதுமாக இருந்தார். அவரது நுண்மையான  பார்வைகள்  எனக்குள்  வியப்பை அதிகப்படுத்தியபடியே இருந்தன.

அந்த விருந்து மாலையே துவங்கியிருந்தது. எனவே நான் சென்ற இரண்டுமணி நேரத்தில் அனைவரும் விடைபெற்றுக் கொள்ளத் துவங்கினார்கள். ஏ.கே.ராமானுஜம் கூடவே போய்விடமாட்டோமா என்று நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். அவர் தன்னுடைய நண்பர் காரில் அழைத்து கொண்டு விடுவதாகச் சொல்லியதை  மறுத்து,  தான்  நடந்து  போவதில் எப்போதுமே ஆர்வம் கொண்டவன் என்று தனியாக நடந்து செல்லத் துவங்கினார். இன்னொரு நாள் அவரைச் சந்திக்கலாம் என்று நண்பர் சொன்னார். ஆனால் அதன் பிறகு அவரைச் சந்திக்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் ஏ.கே. ராமானுஜன் இறந்து போய்விட்டதாகச் செய்தியைப் படித்த போது கலங்கிப் போய் விட்டேன். என்ன உறவு அது. ஒரேயொரு முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரது கட்டுரைகளை, கவிதைகளை படித்திருக்கிறேன். மற்றபடி அவரோடு நெருக்கமாகப் பழகியதில்லை. ஆனால் அந்த இழப்பு நெருக்கமான ஒரு நண்பரின் இழப்பைப் போலவே மனதில் நெடுநாள் வலியோடு இருந்தது.

உண்மையில் ராமானுஜத்தின் மறைவிற்குப் பிறகு அவரது அத்தனை படைப்புகளையும் வாசித்து விட வேண்டும் என்ற உத்வேகம் அதிகமானது. ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள அவரது மொத்தக் கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைத் தொகுப்பு. மொழியாக்கங்கள் என்று தொடர்ச்சியாக வாங்கிப் படித்தேன்.

ராமானுஜம் தமிழ் இலக்கியத்தின் மீது கொண்டிருந்த விருப்பமும் பங்களிப்பும் அளப்பறியது. அவர் தமிழின் தொன்மையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தார். தமிழின் கவித்துவமரபானது உலகின் முன்னோடி மரபு என்பதில் அவருக்கு நம்பிக்கையிருந்தது. அது போலவே நாட்டார்கதைகளின் வழியே நமது மரபான மனதின் கற்பனைகளும் நம் நினைவுகளும் பதிவாகி உள்ளன என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் சுட்டிக்காட்டிய தொகுத்த கதைகள் அத்தனையும் முக்கியமானவை.  அந்தக் கதைகளின் ஊடாக வெளிப்படும் நவீன உளவியல் தன்மைகளை அவரே ஆராய்ந்திருக்கிறார்.

உதாரணத்திற்கு ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் எனப்படும் தாய் மகனுக்குமான பாலிச்சை தொடர்பான உளச்சிக்கல் கொண்ட கதை தமிழிலும்  கன்னடத்திலும்  என்ன விதமான மாறுபாடுகளுடன் உள்ளது என்பதைப் பற்றிய அவரது கட்டுரை மிக முக்கியமானது. அது இந்திய மனதில் பால் உணர்ச்சிகள் எது போன்ற பிம்பங்களை  உருவாக்குகின்றன.  எப்படியானதொரு வெளிப்பாட்டை அவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதை நுட்பமாக விவரிக்கின்றன.

இது போலவே ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் குறித்த நாட்டார்கதைகளையும், கதை எப்படிச் சொல்லப்படுகின்றன என்பதைப் பற்றிய கதைகளையும், முட்டாள்கள் திருடர்கள் அரசர்கள் பற்றிய கதைகளையும் அவர் சிறப்பாக ஆராய்ந்து தொகுத்திருக்கிறார்.

எழுத்தின் வழியாக மக்கள் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டதை விடவும் சொல்கதைகள், பாடல்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டவை ஏராளம். அதை முறையாக நாம் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்பதே ராமானுஜத்தின் ஆதாரக் குரல்.

தமிழில் நாட்டார்கதைகள் பலராலும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக ஒன்று சேர்க்கப்படவில்லை. கல்விப்புல ஆய்வுகளுக்கு வெளியே நாட்டார்கதை மரபுகள் குறித்த கவனம் இன்னமும் உருவாக வில்லை. ராமானுஜம் அதைச் செய்யத் தீவிரமாக முயற்சி செய்தார். அழிந்து வரும் மரபுசார் அறிவை சேமிக்க வேண் டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்தது.

 அவரது பெருமுயற்சி ஒன்று இன்று தமிழகத்தில் சிறந்த ஆய்வு நிறுவனமாக உருவாகி உள்ளது. அது கோட்டையூரில் வசித்த ரோஜா முத்தையா சேகரித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகத்தை சிகாகோ பல்கலைக்கழகம் விலைக்கு வாங்கி அதை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து இன்று சென்னையில் நவீன ஆய்வு நூலகமாக மாற்றியுள்ளது. ரோஜா முத்தையா ஆய்வு நிறுவனம் என்ற ஆவணக்காப்பகம் இன்று பலருக்கும் பயன்படுகிறது என்றால் அதற்கான முன்னோடி கர்த்தா ஏ.கே. ராமானுஜமே.

ஏ.கே. ராமானுஜத்தின் முக்கிய கட்டுரைகள் பல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டு இதுவரை தனிநூலாக வெளி வரவில்லை. அதன் தேவை இன்று அதிகமாக உள்ளது. ராமானுஜத்தின் அக்கறையை முன்னெடுத்துச் செல்வதற்கு இதுவே முதல்படி.

click here

click here
click here