உயிர்மை - January
 
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
- மனுஷ்ய புத்திரன்
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
- ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
- லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
- மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
- யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
- அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
- ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
- அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
- இளைய அப்துல்லாஹ்
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
- பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
- ஷாஜி
ஊடலில்....
- றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
- ஆர். கார்த்திகா
இரவு
- யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
- த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
- ரவிஉதயன்
என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
- சமயவேல்
கடிதங்கள்
- கடிதங்கள்
click here
பச்சை மரகதக் கல்கிளி
சமயவேல்

டராஜன் எப்ப பார்த்தாலும் அந்தக் கண்மாய்க்கரை முக்கிலேயே நின்று கொண்டிருந்தான். மதிய வெயிலில் மட்டும் புளியமரத்துக்கு நகர்ந்து அதன் வெளித்தெரியும் வேர்களில் உட்கார்ந்து கொள்கிறான்.  இருட்டு மங்கலில் பெண்கள் ஒதுங்கத் தொடங்கியவுடன் வீட்டுக்கு வந்து அவனது பெரிய திண்ணையில் வழக்கம் போல படுத்துக் கொள்கிறான்.  அந்த முக்கில் இருந்ததென்னவோ ஒரு பெரிய ஆட்டுரலும் அதை ஒட்டி உட்கார்ந்து ஆட்டுவதற்குத் தோதுவான சதுரக்கல்லும் இன்னொரு பாசிபடிந்த கிளிக் கல்லும்தான். அநேகமாக ஒரு நூறாண்டுகளாக அந்த ஆட்டுரலை யாரும் உபயோகிப்பதில்லை. ஆட்டுரலை ஒட்டி இருந்த வேப்பமரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு முத்த மக்கா தூக்குப் போட்டு இறந்த பிறகு அந்த இடத்தை முத்தமக்கா ஆவியாய் இருந்து ஆட்சி செய்யத்  தொடங்கினாள். அந்த மரத்தைக் கூட  வெட்டிவிட்டார்கள். அமாவாசை இரவுகளில் பாடியபடியே முத்தமக்கா வெற்று ஆட்டுரலை ஆவேசமாக கடகடவென்று ஆட்டும் சப்தம் கேட்பதாகப் பலரும் கூறியதால் அந்த இடமே மனிதம் படாத பயம் கசியும் பீதிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.

நடராஜன் ஆட்டுரல் பக்கம் செல்வதே இல்லை.  அந்தக் கிளிக் கல்லுக்குப் பத்தடி தள்ளி இருக்கிற மாயகிட்ணன் வீட்டு பின் சுவரை ஒட்டித்தான் நின்று கொள்கிறான்.  முத்தமக்காவின் ஆவிக்குப் பயந்து மாயகிட்ணன் வீட்டு முன் வாசலில் ஓடி விரிகிற தெருவையே சுவர் எழுப்பி மறைத்துவிட்டார்கள். அந்தத் தெருவில் வசிப்பவர்களும் நடமாடுபவர்களும் முத்தமக்காவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கத் தொடங்கினார்கள்.  முக்கியமாக சங்கர லிங்காபுரத்து பாண்டிச் செல்வி மாயகிட்ணன் மனைவியாகி அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து முத்தமக்கா ஆவியின் அட்டூழியங்கள் குறையத் தொடங்கின. அதிலும் பாண்டிச் செல்விக்கு முதல் குழந்தை பிறந்து அதைத் தொட்டிலிட்டுத் தாலாட்டு பாடத் தொடங்கியதிலிருந்துதான் என்கிறார்கள். பாண்டிச்செல்வியின் தாலாட்டில் அவளது குழந்தை  மட்டுமல்ல அந்தத் தெருவின் எல்லாக் குழந்தைகளும் முதியவர்களும்கூடத் தூங்கிவிடுவார்களாம்.  முக்கியமாக புளியமரத்தில் ஓயாமல் கரைந்து கச்சாளம் அடிக்கிற காக்கைகள்கூட தூங்கிவிடுவதுதான் பெரிய ஆச்சரியம்.  ஏதோ  ஒரு  புதிர்ச்  சுழலில்  மாட்டிக் கொண்ட  நடராஜனும் பாண்டிச் செல்வியின் தாலாட்டைக் கேட்டுக் கொண்டு இங்கேயே நிற்கிறான்.  அவள் பாடாத சமயங்களிலும் கூட அவளது தாலாட்டு தொடர்ந்து கேட்கிறது என்று கண்மாயில் குளிக்கிறவர்கள் கூறுகிறார்கள்.  பாண்டிச் செல்வி ஏழு குழந்தைகள் பெற்று பேரிளம் பெண்ணாகிவிட்ட பிறகு முத்தமக்காவின் ஆவி அந்தத்  தாலாட்டுகளைப் பாடிக் கொண்டு ஆனந்தமாக  இருக்கிறதாம்.  ஆனால் நடராஜன் மட்டும் இப்படி நிற்பதும் புளியமர வேர்களில் போய் அமர்வதும் பிறகு வீட்டுக்கும் போய் திண்ணையில் தூங்குவதுமாக இருக்கிறான்.  ஏன் இப்படி ஆனது என்று ஒரு நாள் நான் நடராஜனைக் கேட்டேன்.

ஊரில் எல்லோரும் என்னைக் கோட்டி பிடித்துக் கொண்டது என்கிறார்கள்.  பைத்தியம் என்றும் முத்தமக்காவின் ஆவி பிடித்துக் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.  ஆனால்  எல்லாருக்கும்  தெரியாத எல்லாரிடமும் சொல்ல முடியாத ஒரு ரகசிய முடிச்சுக்குள் என் உயிர் சிக்கி இருப்பதை நான் மட்டுமே அறிவேன்.  ஒரு நாள் ஒரு கனவில் என் காதுக்குள் ஒலித்த சில சொற்களே இந்த ரகசிய முடிச்சைப் போட்டன.  தூக்கத்திலிருந்து எழுப்பிய அந்தச் சொற்களை யார் உச்சரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அந்தக் குரலில் என்னைக் காப்பாற்றும் பிரயத்தனம்தான் இருந்ததே ஒழிய என்னை அழிக்கும் நோக்கம் இல்லை. நான் முற்றும் அழிந்துவிட்டதாக இந்த ஊரார்கள் முடிவு செய்துவிட்டார்கள். நான் கேட்ட அந்தச் சொற்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கொன்றும் பயம் இல்லை.

கிளி
கல்கிளி
மரகதக் கல்கிளி
பச்சை மரகதக் கல்கிளி
பறக்குதடா பிடி
விட்டுவிடாதே
பச்சை மரகதக் கல்கிளி
பிடி பிடி பிடி

அவ்வளவுதான். இந்தச் சொற்கள் என் தலைக்குள் புகுந்து சதா பிடி பிடி பிடி என்று என் நினைவைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதற்குப் பிறகு எனக்கு எது செய்யவும் பிடிக்க வில்லை. அந்தச் சொற்கள் என்னைச் சுற்றிக் கொண்டும் நான் அந்தச் சொற்களைச் சுற்றிக் கொண்டும் என, பொழுது கிறங்கலில் கழிய ஆரம்பித்தது.  எந்தக் கிளி? எந்தக்கல்? எந்த மரகதம்? எந்தப் பச்சை? எங்கே பறக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.  மரகதப் பச்சைக் கல்கிளி ஒன்று பறந்தால் நான் அதை விட்டு விடவா செய்வேன்? ஓடியோ பறந்தோ சிக்கெனப் பிடித்துவிடமாட்டேனா? எங்கு போய்த் தேடுவேன்? ஒன்றுமே புரியவில்லை. ஊரிலே மூத்த பெரியவரான ஆறு முகப் பாட்டையாவிடம் கேட்டேன். அவர் மற்றவர்களைப் போல சிரிக்காமல்  ஏலேய்  ராசு  நீ  ஏன் கீழ்நாட்டுக் குறிச்சி அய்யரைப் பார்க்கக் கூடாது என்று ஒரு அருமையான யோசனை கூறினார். பாட்டையா 100 வயதைத் தாண்டிவிட்டவர். அவரால் மட்டுமே தெரியாததையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கீழ்நாட்டுக்குறிச்சி அய்யர் எங்கள் பகுதியில் மிகப் பிரபலமான சோதிடர். ஆனால் அவரைப் பார்க்கவே இப்பகுதி மக்கள் யாவரும் அஞ்சுவது அவரது வாக்கைக் கண்டுதான்.  அவரது நாக்கிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு போதும் பொய்த்ததே இல்லை. குளித்து பூஜை முடித்து வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு வந்திருக்கிற ஒவ் வொருவரையும் ஒரு விளிச்சொல்லால் அழைத்து ஒரு வரி ரெண்டு வரி மிஞ்சினால் மூணு வரிக்கு மேல் சொல்லமாட்டார். உன் ஆயுள் இன்னும் ஒன்பது நாழிகை மட்டுமே பாக்கி இருக்கிறது. இப்ப பெண் பார்ப்பது அவசியமா? என்பார்.  வந்தவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவான். போய் தோட்டம் முழுதும் வாழை நடு.  தூத்துக்குடி வியாபாரி லாரியோடு வந்து உன் வீட்டில் தவம் கிடப்பான் என்பார்.  ஒருவனை போய்ட்டு அடுத்த வருஷம் வாப்பா என்பார். அந்த மனிதன் இருட்டுக் கிணற்றுக்குள் விழுந்து விட்டவன் மாதிரி முழிக்க வேண்டியதுதான் அடுத்த வருஷம் வரை.  சொல் சோதிடம் என்பது சாதாரண காரியம் இல்லை என்பதை அந்தப் பகுதி மக்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தார்கள்.  எனவேதான் பெரும்பாலான காலைப் பொழுதுகளில் அய்யர் வீட்டு வாசலில் ஒரு வரும் நிற்பதில்லை. சொல் வீரர் வில்வண்டியில் ஏறித் தோப்புக்குப் போய்விடுவார். பேரப்பிள்ளைகளோடு சேர்ந்து கிட்டிப்புள் ஆடிக் கொண்டிருப்பார். அல்லது தார்ப்பாச்சு கட்டிக் கொண்டு மம்பட்டியைத் தூக்கி வேர்க்க வேர்க்க தென்னைகளுக்கு  மண்  அணைக்கத் தொடங்கி விடுவார்.

நானும் ஒரு அதிகாலையில் பயந்து பயந்து அவர் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்தேன்.  பூஜை முடிந்து வெளியே வந்தவர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். என்னடே கிளி பறக்கா? என்றார். எனக்கானால் தூக்கிப் போட்டது. மனுசனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது.  அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து நின்றேன். தம்பி ஒன்று செய். உங்க ஊர் கண்மாய்க் கரையில் ஒரு புளியமரமும் ஆட்டுரலும் கிளிக் கல்லும் உண்டும்.  உண்டா?  ஆமா சாமி. அங்க தாலாட்டு கேட்கிற இடத்தில் போய் நின்று கொள். முக் காலமும் அழிகிற ஒரு மாயப்பொழுதில் கிளி பறக்கும். பிடித்துக் கொள்.  போ. போய்ட்டு வா தம்பி என்று என் முதுகைத் தட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். அப்பாடா என்று மூச்சு விட்டேன். அவர் கை பட்ட முதுகினுள்  அவரது சொற்கள் புகுந்து கொண்டது போல இருந்தது.  ஒருவகையான போதை போன்ற ஆனந்தம் உடல் முழுதும் மனம் முழுதும் நிறைந்து வழியத் தொடங்கிவிட்டது. அய்யர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ பயல் கோட்டி பிடித்து சிரித்துக் கொண்டே அலைகிறான் என்றார்கள் ஊர்க்காரர்கள். இதற்குப் பிறகு நடந்தவைகளை நீங்கள் அந்தப் புளியமரம் அல்லது ஆட்டுரலிடம் தான் கேட்க வேண்டும். அவைகளுக்குத் தான் நடந்தது முழுக்கத் தெரியும்.

நான் புளியமரம்.  இந்தக் கண்மாய்க் கரையின் முதல் புளியமரம் நான். பூர்வீக மரம். உங்கள் கணக்குப்படி என் வயது நூறு இருநூறு இருக்கலாம். எனது பல கிளைகளில் வைரம் பாய்ந்துவிட்டது. பாம்பு கடித்து இறந்த பிரசெண்டுக் கவுண்டரை எரிப்பதற்காக எனது மேற்குக் கிளையை வெட்டிவிட்டார்கள் என்ற ஒரு வருத்தம் தவிர எனக்கு வேறு வருத்தம் கிடையாது.  எனக்கும் பத்தடி தள்ளி நிற்கிற மொட்டை இருளப்பருக்கு வணக்கம் சொல்வது மாதிரி என் வடகிழக்குக் கிளையை ஓட விட்டிருப்பதே என் பிறவிப் பயன். அருமையான பயல் இந்த மொட்டை இருளப்பன்.  கண்மாய் உடைந்து ஊரை அழித்துவிடாமல் மடைக்கார இருளப்பன் ரத்தம் பீரிட தன் தலையைக் கொடுத்துக் காப்பாற்றினான். ஒரு கல்லை நட்டி ஒரு கதையைச் சொல்லி பயலை சாமி ஆக்கிவிட்டார்கள்.  அவனும் துடியான சாமி ஆகிவிட்டான்.  எனக் கும் இந்த ஊருக்கும் இருளப்பன் ஊர்க்காவலன் ஆகிவிட்டது நல்லதுக்குத் தான். கொக்குகள், காக்கைகள், மைனாக்கள், கிளிகள், பாம்புகள், அணில்கள், ஓந்திகள் என்று என் சாம்ராஜ்யம் பெரிதாகிக் கொண்டே போகிறது.  கண்மாயடி நீர்ப்பிடிப்பு என் வேர்களைத் தொட்டபடி இருப்பதால் எனக்கு வறட்சி என்பதே கிடையாது.  தாது வருஷப் பஞ்சத்தில் கூட நான் வாடியதில்லை. மன்னிக்கவும் எனது பிரலாபத்தைப் பிறகொரு நாள் பேசிக் கொள்ளலாம். நீங்கள் அந்தப்பையன் நடராஜைப் பற்றிக் கேட்டீர்களே. மறந்தேவிட்டேன். நடராஜன் ஏதோ கனாக் கண்டதெல்லாம் கூறுவது உண்மையே இல்லை. அவனது பதினாறு ஏக்கர் தெக்குத் தோட்டத்தை எப்படி இழந்தான் என்பதை மட்டும் கேளுங்கள். உங்களுக்கு எல்லாம் புரிந்துவிடும்.

தோட்டத்துக்கே போகாமல் அவனது அய்யாவிடம் ஏச்சு வாங்கிக் கொண்டு விருதுநகர், மதுரை என்று எல்லாவூர் சினிமாக் கொட்டகைகளிலும் சிகரட் பிடித்து அலைந்த பயல் திடீரென்று தோட்டத்திலேயே குடியிருக்க ஆரம்பித்துவிட்டான். மாட்டுப்பண்ணை கோழிப் பண்ணை என்று ஆரம்பித்து புதுவகை நெல்களைப் பயிரிட்டு மளமளவென்று முன்னேற ஆரம்பித்தான்.  எல்லாவற்றுக்கும் அடியில் இவனது தோட்டத்துக்கு அடுத்த பொழி புஞ்சைக்காரர் பிரமநாயகம் பிள்ளையின் மகள் மரகதம் இருந்தாள் என்பது பலர் அறியாத புதிர். அவளைத்தான் அவன் கிளி, மரகதக்கிளி, பச்சைக்கிளி என்று கொஞ்சிக் கொண்டு அலைந்தான்.  மரகதம் கல்யாணமாகி சீவிலிபுத்தூர் போனதும் அவனது ஆளுயர பருத்திச் செடிகளில் பத்து ஏக்கர் முழுதும் ஒரு காய் கூடக் காய்க்காமல் அழிந்ததும் அவனது ஒரே மகள் அமுதா ரெட்டியார் வீட்டுப் பையனோடு ஓடிப் போனதும் ஒரே சமயத்தில் நடந்தன.  மெட்டில்பட்டி நாயக்கரிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் நெளிந்தான். திருநவேலி  பேங்குக்காரர்கள் தோட்டத்தை ஏலம் போடப் போவதாக மிரட்டினார்கள். அவசரம் அவசரமாக தோட்டத்தை ரெங்கூன் செட்டியாருக்குக் கையடித்துவிட்டு எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு அக்கடா என்று திண்ணையில் படுத்தவன் தான்.  மறுநாள் காலையிலிருந்து கல்லு, கிளி, மரகதக்கிளி என்று புலம்பத் தொடங்கிவிட்டான்.  எங்கோ சோதிடம் கேட்டுவிட்டு வந்தவன் மாயகிட்ணன் வீட்டு பின் புறச் சுவரில் சதாநேரமும் சாய்ந்து நிற்கிறான். ஆட்டுரல் பக்கம் கிடக்கிற பாசி படர்ந்த கிளிக்கல்லையே சதா நேரமும் பார்த்துக் கொண்டே நிற்கிறான். பச்சைக் கல்லுக்குள் மரகதக்கிளி இருப்பது போலவும் ஏதேனும் ஒரு சமயத்தில் அது கல்லைக் கிழித்துக் கொண்டு பறக்கும் பொழுது எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்பது போலவும் அவனுக்குள் நினைப்பு ஓடிக் கொண்டிருந்தது.  மடப்பயல். கல்லுக்குள் எப்படி கிளி இருக்கும்? அதுவும் மரகதக் கிளியாம். மண்ணாங்கட்டி.  

அந்த மரகதப் பெண்ணை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அது ஒரு பொய் சொல்லத் தெரியாத அருமையான பெண் என்பது தான் என் அபிப்பிராயம்.

நான் மரகதம். நான் கல்யாணமாகி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு புதிய முற்றிலும்  கதையில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  இங்கே என் கணவர், பிள்ளைகள், மாமனார், நாத்தனார் என என் நிகழ்காலம்.  இங்கிருந்து நழுவி கடந்த காலத்திற்குள் போக என் மனம் ஒப்புவதே இல்லை. என்ன சொல்ல? எனக்கும் நடராஜனுக்கும் இருபது வயது வித்தியாசம்.  சோற்றுக்கே வழியில்லாத எங்கள் குடும்பத்தில் நான் திருமணமே ஆகாமல் முதிர்கன்னி ஆகி விடுவேனோ என்ற அச்சம் எங்கள் எல்லாரையும் அரித்துத்தின்று கொண்டிருந்தது. புஞ்சையில் நிற்கும் போது ஒருநாள் தற்செயலாக மோகவெறி மிளிர்ந்த நடராஜனின் கண்களை சந்திக்க நேர்ந்தது. அந்தக் கொடிய பார்வை நிறைய நாட்கள் ஒரு பூனையைப் போல என்னைச் சுற்றி சுற்றி வந்தது. கொஞ்சம் யோசித்தேன். ஒரு முடிவுடன் நானும் அந்த மோக விளையாட்டில் என் சோழிகளை உருட்டிவிட்டேன்.  வளையல், சங்கிலி, அட்டியல் என்று எனக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்தார். எங்கள் உறவை வளர்த்துக் கொண்டே போக முடியாத ஒரு தருணத்தில் எங்கள் வயது வித்தியாசம் ஒரு முடிவு எடுத்தது.  ஒரு நாள் அவரது கழுத்தில் ஒரு சிறிய முத்தம் கொடுத்து விடை பெற்றுக் கொண்டேன்.  எனது திருமணம் நடந்த தினத்திலிருந்து ஏதோ கிளி, மரகதக்கிளி அது இது என்று பிதற்றிக் கொண்டு திரிவதாகக் கேள்விப்பட்டேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் சரியானபடி  ஒரு  இயல்பான  தளத்தில்தான் நடந்திருக்கின்றன.  குறைகூறுவதற்கோ வருத்தப்படுவதற்கோ என்ன இருக்கிறது?

இந்த இடத்தில் நான் பேசியே ஆக வேண்டும். நான் ஒரு புறக்கணிக்கப்பட்ட  ஆட்டுக்கல். காலமும் மனிதர்களும் புறக்கணித்தார்கள்.  முத்த மக்கா என் தோழி. அவள் மனம் வெந்து துடிதுடித்து உயிரைவிட்டதும் நானும் இறந்துவிட்டேன்.  என்னை மீண்டும் உயிர்ப்பித்தது பாண்டிச்செல்விதான். அவள் குரலில் பட்டுத் தேனமிர்தம் வழிந்து கண்மாய் மேல் நீலச்சிட்டுகளாகப் பறந்தன. உயிர்களின் மையத்தைத் தொட்டுவருடி கண்களை மூடச் செய்கிற அந்தத் தாலாட்டு எனக்குள் ஒரு இருதயத்தைச் செதுக்கியது.  இந்தக் கிளிக்கல்லுக்குள் உறங்கிய மரகதக்கிளியை மெல்ல அசைத்தது. பாண்டிச்செல்வி தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்தாள். பையன்களும் பெண்பிள்ளைகளும் கீழத் தெரு முழுதும் விளையாடினார்கள்.  அவளது தாலாட்டு மேலும் மேலும் மெருகேறி பொற்கீற்றுகளாக அடிவானத்தைத் தொட்டன.  உதயத்தில் எழுந்த சூரியன் மேலேற மனமின்றி கிழக்கிலேயே நின்று கொண்டிருந்தான். பூமியின் பொய்க்கடவுள்கள் எல்லாரும் பயந்து நடுங்கினார்கள்.  மாயகிட்ணன் நாயக்கர் கிணற்றில் பிணமாய் மிதந்தான். நீச்சல் தெரிந்த மாயகிட்ணன் நீரில் மிதப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று ஊரே புலம்பியது.  எவரும் அறியாத மாயம் பாண்டிச்செல்வியின் தாலாட்டை நிறுத்தியது.  கல் கிளி மீண்டும் மரண உறக்கத்தில் மூழ்கியது.  நடராஜன் பாடப்படாத பாடலைக் கேட்டபடி பச்சை மரகதக் கல்கிளி பறக்கக் கூடும் என்று நின்று கொண்டே இருக்கிறான்.  நிற்கட்டுமே. 

ஓவியங்கள் : ஆர்.விஜயகுமார்

click here

click here
click here