உயிர்மை - January
 
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
- மனுஷ்ய புத்திரன்
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
- ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
- லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
- மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
- யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
- அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
- ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
- அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
- இளைய அப்துல்லாஹ்
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
- பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
- ஷாஜி
ஊடலில்....
- றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
- ஆர். கார்த்திகா
இரவு
- யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
- த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
- ரவிஉதயன்
என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
- சமயவேல்
கடிதங்கள்
- கடிதங்கள்
click here
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
லக்ஷ்மி சரவணக்குமார்

நல்ல இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணங்கள் வெகு சொற்பமே. மற்ற மொழிப்படங்களில் இருக்கிற 'திரைக் கதையாளனுக்கான' தனித்துவமான இடங்களெல்லாம் நம் இயக்குநர்கள் பெரும்பாலானவர்களுக்கும் ஆகாத விஷயங்கள். இதனாலேயேதான் சினிமாக்காரர்களுக்கும், எழுத்தாளர்களுக்குமான இடைவெளி இங்கு மிகப் பெரியதாக இருக்கிறது. இவற்றிற்கு மாறாக ஒரு ஆறு பக்க சிறு கதையைப் படமாக்க வேண்டும் என்கிற தைரியத்தோடு முடிந்த வரையிலும் அதனை உயிர்ப்போடும் பதிவு செய்திருக்கிற 'சசி' ஆச்சரியப்படுத்துகிறார். ச.தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதைதான் திரையில் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. 'நிபந்தனைகள் அற்ற அன்பு' என்கிற ஒரே விஷயந்தான் இந்தக் கதையில் வரும் மாரியம்மாளை ஒருபோதும் மறக்கமுடியாதவளாய் மனதிற்குள் நிறுத்திவிட்டுச் செல்கிறது. இருபத்தைந்து வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட கதையை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைத் திரைக்கதையில் செய்திருக்கிற பொழுதும் மூலக் கதையினை அது எந்த விதத்திலும் சிதைத்துவிடவில்லை.

வெயில் மட்டுமே நிரம்பிக் கிடக்கும் கரிசல் காட்டுப்பூமி எப்படி இருக்கும் என்பதையும், அம்மக்களின் வாழ்வினையும் எளிதான  விவரணைகளோ,  பிரச்சாரத்  தன்மையோ இன்றி கலாப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார். கதை எனத் தனித்து எடுத்துப் பார்த்தால் ஒரு பஸ் டிக்கெட்டில் எழுதிவிடுகிற அளவிற்கு மிகமிகச் சிறியதுதான். ஆனால் அதற்குள்  ஒளிந்திருக்கும் மனிதர்களின் வாழ்வுதான் பிரமாண்டமானது. சராசரி மனிதர்களின் வாழ்வில் வில்லன்கள், வில்லிகள் எனத் தனியாக ஒருவர் இருப்பதில்லை. வாழும் சூழலும், வாழ்க்கையும்தான் அவர்களின் பிரச்சினைகள்.

தான் விரும்பியவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் இன்னொருவனைக் கட்டிக் கொண்டாலும் மாரி சந்தோசமாகவே இருக்கிறாளென்பதை துவக்கத்தில் வரும் ஒரு பாடலிலேயே உணர்த்தி விடுகிறார். ஊர்க்கொடைக்கு அவள் மச்சான்  வந்திருக்கிற  சேதியைக்  கேள்விப்பட்டதும் அப்பொழுதே ஊருக்குப் போக வேண்டுமெனப் புருஷனிடம் மன்றாடுகிறாள். பழகிப்போன கரிசல்காட்டுப் புழுதியும் வெக்கை படிந்த உடலோடும் தாய் வீட்டிற்கு வருகிறவளின் விசாரிப்புகளெல்லாம் தங்கராசு மச்சானைப் பற்றித்தான். மச்சானைப் பார்த்து வரவேண்டுமென அங்கிருந்து கிளம்பிப் போகிறவளின் பார்வையிலிருந்து பின்னோக்கிச் செல்கிறது படம்.

பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மாரியம்மாளின் அந்தரங்கமான உலகம், கனவுகள் எல்லாம் மிக மிகச் சிறியவை. ஆனால் அதில் ஊற்றெடுக்கும் அன்பினை எந்தச் சட்டகத்திற்குள்ளும் அடைத்து விட முடியாது. அவள் வளர்ந்து  ஆளாகியிருப்பதே தன் மச்சானைக் கட்டிக் கொள்வதற்காகத்தான். அவனுக்காக என்ன செய்தாலும் சரி, அப்படிச் செய்வதுதான் சரி என மனதளவில் அவனோடு கலந்துபோனவள். பட்டாசுச் சிதறல்களுக்கு மத்தியிலும் அவள் மனம் மட்டும் தங்கராசுவோடுதான் சுற்றித் திரியும். சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வளர்ந்து என்னவாகப் போகிறீர்கள் எனக் கேட்கிற வாத்தியாரிடம் அந்தக்  குழந்தைகள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே சிந்திக்கமுடியாமல் ட்ரக்கர் வண்டி டிரைவராகவும், தேனீ வளர்க்கப்போவதாகவும் சொல்கிறார்கள். அப்பொழுதும்கூட இவள் மட்டும் தங்கராசுவிற்குப் பொண்டாட்டியாகப் போகிறேன் எனத் தயங்காமல் சொல்கிறாள். தூங்கும்போது அவள் பாயில் ஒண்ணுக்கு விட்டதை அண்ணங்காரன் சாரிடம் சொன்னாலும் அவளுக்குக் கவலையில்லை, சாமியிடம் சொன்னாலுங்கூட.  ஆனால் தங்கராசுவிடம் மட்டும் சொல்லிவிட வேண்டாமெனக் காலைப் பிடித்துக் கெஞ்சுவது அச்சு அசலான கிராமத்துப் பதிவு.

மற்றவர்களைப் பொறுத்து வேண்டுமானால் அவள் வெளியூரில் படிக்கலாம். அவளைப் பொறுத்தவரை அவள் எங்கும் போயிருக்கவில்லை. தன்கையைப் பிடித்துக் கொள்ளும் தோழியின் ஸ்பரிசத்தில் மச்சானை நினைவுபடுத்திக் கொள்ளமுடியும். தன் தங்கச்சியின் திருமண வேலைகளைப் பார்ப்பதற்கு ஊருக்கு வந்திருப்பவனைக்கண்டு அவளைவிட தான் சற்றுக் குள்ளம் என்பதற்காக விசனப்படுவதும், ஆசை முத்தம் தர முடியாவிட்டாலும், தோசை முத்தமாவது தரலாமென தோசையை முத்தமிட்டு உதட்டைச் சுட்டுக் கொள்வதும் அத்தனை அழகான விஷயங்கள். அவன் ஊருக்குக் கிளம்புகிற நாளில் கள்ளிப் பழம் கொடுப்பதற்காக முள்ளுக் காட்டிலும், புழுதியிலும் ஓடுகிறவள் கொடுக்க முடியாமல் போய் வரப்பில் சறுக்கி விழுந்தாலும் வலிமட்டும் ஏற்படுவதில்லை.

ஊர்க்காரர்களுக்கும்கூட அவளைத் தெரிந்திருப்பது தங்கராசுவின் அடையாளத்தில்தான். அவன் நினைப்பிலேயே திரிபவள் என்ன வாங்க வேண்டுமென மறந்துபோய் பெட்டிக்கடைக்காரரிடம் தங்கராசு வேண்டுமெனக் கேட்பது, மனதில் உள்ளதை எல்லாம் கடிதமாக எழுதச் சொல்லி தோழி சொன்னபிறகு எவ்வளவு முயன்றும் அவளால் அன்புள்ள என்கிற வார்த்தைக்குமேல் அவளால் எதுவும் எழுதமுடியவில்லை. திரைக்கதையின் அழுத்தமான இடங்களுக்கு இவை மிக அழகான உதாரணங்கள். தவிர்க்கவே  முடியாமல் அப்பாவின் முதலாளி வீட்டிலேயே சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டுமென்கிற நிலையில் அவனுக்குக் கல்யாணமும் ஆகிவிட, இன்னொரு புறத்தில் இவளும் ஒரு பெட்டிக் கடைக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போகிறாள். அப்பொழுதும் கூட  அவன்  கல்யாணத்திற்கு வீட்டிலிருந்து யாராவது போகாவிட்டால் தூக்குமாட்டிக் கொள்வேன் எனப் பிடிவாதமாய் நிற்கிறாள். திருமணம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகுமச்சானைப் பார்க்கப் போகிறவள், அவன் தன் மனைவியோடு சந்தோசமாக இருப்பான் என்கிற நினைப்பெல்லாம் தளர்ந்துபோய் குமுறியபடி வீடு திரும்புகிறாள்.

உணர்வுபூர்வமான இந்தக் கதையினை இழை இழையாய்ச் செதுக்கியிருக்கிறார் சசி. மாரியம்மாளின் பாத்திரத்திற்கு இணையான கதையின் இன்னொரு மையப் பாத்திரம் நாயகனின் அப்பாவான பேனாக்காரர். இயல்பாக தனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போகிற இடத்தில் பார்த்த வேலையைக் கூட உதறிவிட்டுச் செல்வதற்குத் தயங்காதவர். என்னதான் உழைத்தாலும் பணம் இல்லாதவர்களுக்கு மரியாதையில்லை என்பதைக் கண்டு கலங்குவதும், 'மெக்கானிக் இன்ஜினியரிங் படிச்சா ஆரம்பத்தில் ஆறாயிரம் ரூபாதாம்பா சம்பளமா வரும்!' எனச் சொல்லும் மகனின் யதார்த்தத்தில் நொறுங்கிப்போவதுமாய் கதைக்கு வலு சேர்க்கக் கூடிய பாத்திரம். இருக்கும் நிலையிலிருந்து கொஞ்சமாவது மேலே வர வேண்டும் என்கிற மனோபாவம் சராசரி மனிதன் அத்தனை பேருக்கும் உண்டானதுதான். மிக யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் அந்தப் பாத்திரத்திற்கு  உயிர் கொடுத்திருக்கிறார் 'ராமு'.

சமீபமாய் சில நாட்களாகவே தொடர்ச்சியாக 'ஷோபா' நடித்த பழைய படங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரியான வெள்ளந்திச்சிரிப்பும், கறுப்புத் தோலுமாய் நடிக்கத் தெரிந்த நடிகையுமாய் யார் வரப் போகிறார்கள் எனத் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தப் படத்தைப் பார்த்தபொழுது பெரும் ஆறுதல் கிடைத்தது. சபாஷ் பார்வதி! படத்தின் எந்தவொரு காட்சியிலும் தேவைக்கு அதிகமாக நடிக்கவில்லை என்பதே அந்தப் பெண்ணிற்குப் பெரிய பலமாய் இருக்கிறது. சின்ன, சின்ன கதை மாந்தர்களின் தேர்வுகூட ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. மாரியின் தோழியாக வருகிற சீனியம்மாள் பாத்திரமும் அற்புதமான பதிவு. எனக்குத் தெரிந்து விளிம்பு நிலையில் வாழும் உழைக்கும் பெண்களுக்கிடையில் இருக்கும் தோழமையை மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் படம் இது.

மனதை நிறைக்கும் இவ்வளவு விஷயங்களிருக்கிற அதே நேரத்தில் குறைகளும் இல்லாமலில்லை. குறிப்பாக, டீக்கடை காமெடி காட்சிகள். கதையோட்டத்தோடு பிணைந்து கிடக்கிற பார்வையாளர்கள் பெரும்பாலானவர்களையும் எரிச்சலாக்கின இந்தக் காட்சிகள். மிக முக்கியமான திருப்பத்தைச் சொல்லப் போகிற 'அலோ' பாத்திரம் அதற்கு முந்தின காட்சிகளில் ஏனோ தானோவென்று பதிவு செய்யப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட அந்தக் காட்சி எதிர்பார்த்த அழுத்தத்தினைத் தரத் தவறிவிடுகிறது. இன்னொரு குறையாகப் பட்டது இசை, பாடல்களில் கூட கொஞ்சம் மனதில் நின்றாலும் பின்னணி இசைதான் கர்ண கொடூரமாய் இருக்கிறது.  மிக மென்மையான ஓர் கதைக்கு 'த்ரில்லர்' படத்திற்கு இணையான வாத்தியங்களைப் பயன்படுத்தி அதிர விட்டிருப்பது கொஞ்சம் ஒட்டா மலேயே தனித்துக் கிடக்கிறது. அதேபோல் படத்தின் துவக்கக் காட்சியில் வருகிற அந்த இசைக் கோர்வையினை சில 'சீனப்படங்களில்' பார்த்த ஞாபகம்.

இன்னொரு புறத்தில் P.G.  முத்தையாவின் அற்புதமான ஒளிப்பதிவு கதையின் ஒரு பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறது. கரிசல் காட்டின் வாசனையையும், பட்டாசு மருந்தின் வாசனையையும் மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறார்.

இறுதியாக, படத்தில் என்னை அதிகம் பாதித்த காட்சி ஒன்று, தங்கராசுவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பும் மாரி அவன்மீது  கொண்டிருக்கிற அளவு கடந்த அன்பைப் பற்றி சீனி கேட்கிறாள். எந்த பதிலும் சொல்லாமல் ஆட்டு மந்தையில் தான் முன்பு விற்றுவிட்ட ஆட்டுக் குட்டியின் மணிச்சப்தம் கேட்டு  தேடிப்பிடித்து தூக்கிக் கொஞ்சுகிறாள். ஆட்டுக்காரன், 'அதான் வித்திட்டில்ல,  அப்புறமென்ன?. . .' எனக் கேட்க, 'ஏன், வித்திட்டா பாசம் வெக்கக்கூடாதா?' எனக் கேட்கிறாள். ஒரு கதையை உச்சபட்சமான அழகியலோடு உருவாக்க வேண்டுமானால் நேரடியாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் குறைவாக இருக்கவேண்டும். நிச்சயமாக இந்தப்படம் 'சசிக்கு' ஒரு மிகப் பெரிய அடையாளமாக இருக்கும். ஆனால் இது துவக்கம்தான். எவ்வளவோ நல்ல படைப்புகள் இன்னும் காத்துக் கிடக்கின்றன.

சமீப காலமாய் தமிழ் ரசிகர்களின், இயக்குநர்களின் ரசனைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் தான் புதிய புதிய முயற்சிகள் நிறைய வருவதற்குக் காரணமாய் இருக்கின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களுக்கு மத்தியில் கம்பீரமாக 'சசி'க்கும் ஒரு இடம் கொடுக்கலாம். 

click here

click here
click here